படிப்புக் கட்டுரை 17
“நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்”
“நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”—யோவா. 15:15.
பாட்டு 5 ஏசு நமக்கு முன்மாதிரி
இந்தக் கட்டுரையில்... *
1. இரண்டு பேருக்கு இடையில் நட்பு உருவாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
இரண்டு பேருக்கு இடையில் நட்பு என்கிற மலர் பூத்துக் குலுங்க வேண்டுமென்றால், இரண்டு பேரும் சேர்ந்து நேரம் செலவிடுவது முக்கியம். அப்படி நேரம் எடுத்து பேசும்போது, தங்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும். அப்போது, இரண்டு பேராலும் நல்ல நண்பர்களாக ஆக முடியும். ஆனால், இயேசுவின் நண்பராக ஆவதில் சில சவால்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
2. நமக்கு இருக்கிற முதல் சவால் என்ன?
2 நாம் யாருமே இயேசுவைப் பார்த்ததில்லை. இதுதான் முதல் சவால். முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் நிறைய பேருக்கும் இதே சவால் இருந்தது. ஆனாலும், அப்போஸ்தலன் பேதுரு இப்படிச் சொன்னார்: “நீங்கள் அவரைப் பார்த்ததே இல்லையென்றாலும், அவர்மேல் அன்பு காட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், அவர்மேல் விசுவாசம் வைக்கிறீர்கள்.” (1 பே. 1:8) இயேசுவைப் பார்க்க முடியவில்லையென்றாலும், அவரோடு நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
3. நமக்கு இருக்கிற இரண்டாவது சவால் என்ன?
3 இயேசுவிடம் நம்மால் பேச முடியாது. இதுதான் இரண்டாவது சவால். இயேசு வழியாக நாம் ஜெபம் செய்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், இயேசுவிடம் நாம் பேசுவதில்லை; யெகோவாவிடம்தான் பேசுகிறோம். தன்னிடம் ஜெபம் செய்வதை இயேசுவும் விரும்புவதில்லை. ஏனென்றால், ஜெபம் என்பது வழிபாட்டின் ஒரு அம்சம். யெகோவாவை மட்டும்தான் நாம் வழிபட வேண்டும்! (மத். 4:10) இருந்தாலும், இயேசுமேல் நாம் வைத்திருக்கிற அன்பை நம்மால் காட்ட முடியும்.
4. நமக்கு இருக்கிற மூன்றாவது சவால் என்ன, இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 இயேசு பரலோகத்தில் வாழ்வதால், அவரிடம் நம்மால் நேரம் செலவிட முடியாது. இதுதான் மூன்றாவது சவால். அவருக்குப் பக்கத்தில் நாம்
இல்லையென்றாலும், அவரைப் பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். அவரிடம் இருக்கிற நட்பைப் பலப்படுத்த உதவுகிற நான்கு விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அதற்கு முன்பு, அவரிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.இயேசுவின் நண்பராவது ஏன் முக்கியம்?
5. நாம் ஏன் இயேசுவோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்? (“ இயேசுவுக்கு நண்பராகும்போது யெகோவாவுக்கு நண்பராக முடியும்” மற்றும் “ இயேசுவின் ஸ்தானத்தைப் பற்றிய சரியான எண்ணம்” என்ற பெட்டிகளையும் பாருங்கள்.)
5 யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், இயேசுவின் நண்பராவது முக்கியம். ஏன் அப்படி? இரண்டு காரணங்களை இப்போது பார்க்கலாம். முதல் காரணத்தைத் தெரிந்துகொள்ள இயேசு ஒருசமயம் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். ‘தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னார். (யோவா. 16:27) “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்றும் அவர் சொன்னார். (யோவா. 14:6) இயேசுவிடம் நல்ல நட்பை உருவாக்காமலேயே யெகோவாவின் நண்பராவதற்கு முயற்சி செய்வது, கதவைப் பயன்படுத்தாமலேயே ஒரு கட்டிடத்துக்குள் நுழைய முயற்சி செய்வதைப் போன்றது! “நான்தான் ஆட்டுத்தொழுவத்தின் கதவு” என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார். (யோவா. 10:7) இரண்டாவது காரணம்: தன் தந்தையிடம் இருக்கிற அருமையான குணங்களை அச்சுப்பிசகாமல் இயேசு காட்டினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 14:9) யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான முக்கிய வழியே இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதுதான்! இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது, அவர்மேல் இருக்கிற பாசம் அதிகமாகும். அப்போது, அவரிடம் இருக்கிற நட்பு வளரும்; யெகோவாமேல் இருக்கிற அன்பும் ஆழமாகும்.
6. இயேசுவின் நண்பராவதற்கான இன்னொரு காரணம் என்ன? விளக்குங்கள்.
6 நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால், இயேசுவின் நண்பராவது முக்கியம். அப்படியென்றால், ஜெபம் செய்யும்போது, யோவா. 14:13) ஜெபத்தைக் கேட்பதும், அதற்குப் பதில் தருவதும் யெகோவாதான். இருந்தாலும், தன்னுடைய முடிவுகளை செயல்படுத்துகிற அதிகாரத்தை அவர் இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:18) இப்படி, நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதற்கு முன்பு, நாம் இயேசுவின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கிறோமா என்று பார்க்கிறார். உதாரணத்துக்கு, “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்று இயேசு சொன்னார். (மத் 6:14, 15) அப்படியென்றால், யெகோவாவைப் போலவும் இயேசுவைப் போலவும் நாமும் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம்!
வெறுமனே “இயேசுவின் பெயரில் ஜெபம் செய்கிறோம்” என்று சொன்னால் மட்டும் போதுமா? இல்லை! நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க இயேசுவை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். “என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்” என்று இயேசு சொன்னார். (7. இயேசுவின் மீட்புப் பலியிலிருந்து யாரெல்லாம் பிரயோஜனமடைவார்கள்?
7 இயேசுவின் மீட்புப் பலியிலிருந்து நாம் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், அவரோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்வது முக்கியம். ‘தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதாக’ இயேசு சொன்னார். (யோவா 15:13) அவர் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு இங்கே வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள், எதிர்காலத்தில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆபிரகாம், சாராள், மோசே, ராகாப் போன்ற உண்மையுள்ள மனிதர்கள் எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஆனால், இவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டுமென்றால், இவர்கள் இயேசுவின் நண்பர்களாக ஆவது முக்கியம்.—யோவா. 17:3; அப். 24:15; எபி. 11:8-12, 24-26, 31.
8-9. யோவான் 15:4, 5-ன்படி, இயேசுவிடம் நமக்கு நல்ல பந்தம் இருந்தால் என்ன செய்வோம், இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது ஏன் முக்கியம்?
8 பிரசங்கித்து, கற்பிக்கிற வேலையை இயேசுவோடு சேர்ந்து சந்தோஷமாகச் செய்கிற வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, ஒரு போதகராக இருந்தார். பரலோகத்துக்குப் போன பிறகும், சபையின் தலைவராக, பிரசங்கித்து கற்பிக்கிற வேலையை வழிநடத்திக்கொண்டுவருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய தந்தையைப் பற்றியும் முடிந்தளவு நிறைய பேரிடம் சொல்வதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை அவர் பார்க்கிறார். அதை உயர்வாக மதிக்கிறார். சொல்லப்போனால், யெகோவா மற்றும் இயேசுவின் உதவி இருந்தால்தான் நாம் இந்த வேலையைச் செய்ய முடியும்.—யோவான் 15:4, 5-ஐ வாசியுங்கள்.
9 யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால், இயேசுமீது அன்பு காட்ட வேண்டும் என்றும் அந்த அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதனால், இயேசுவின் நண்பராவதற்கு உதவுகிற நான்கு வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
இயேசுவின் நண்பராவதற்கு என்ன செய்ய வேண்டும்?
10. இயேசுவோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன?
10 முதலாவது, இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்களைப் படிக்கும்போது இயேசுவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இதைப் படித்து ஆழமாக யோசிக்கும்போது, ஜனங்களிடம் அவர் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார் என்பது உங்களுக்குப் புரியவரும். அப்போது, அவர்மேல் அன்பும் மரியாதையும் வரும். உதாரணத்துக்கு, அவர் எஜமானாக இருந்தாலும், தன்னுடைய சீஷர்களை அடிமைகளைப் போல் நடத்தவில்லை. தன்னுடைய மனதிலிருக்கிற விஷயங்களை வெளிப்படையாக அவர்களிடம் சொன்னார். (யோவா. 15:15) அவர்களுடைய கஷ்டங்களை தனக்கு வந்த கஷ்டங்களாகப் பார்த்தார், அவர்களோடு சேர்ந்து கண்ணீர்விட்டார். (யோவா. 11:32-36) அவர் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொண்டவர்கள், அவருடைய நண்பர்களாக ஆனதை எதிரிகள்கூட ஒத்துக்கொண்டார்கள். (மத். 11:19) இயேசுவைப் போல் நாம் மற்றவர்களை நடத்தினால், அவர்களுக்கும் நமக்கும் இருக்கிற பாசப்பிணைப்பு பலமாகும். அதோடு, நாம் இன்னும் திருப்தியான, சந்தோஷமான ஆட்களாக ஆவோம். கிறிஸ்துமேல் இருக்கிற அன்பும் மரியாதையும் கூடும்.
11. இயேசுவோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய இரண்டாவது விஷயம் என்ன, அப்படிச் செய்வது ஏன் முக்கியம்?
11 இரண்டாவது, இயேசுவைப் போலவே யோசியுங்கள், அவரைப் போலவே நடந்துகொள்ளுங்கள். இதை எந்தளவுக்கு செய்கிறோமோ, அந்தளவுக்கு அவருக்கும் நமக்கும் இருக்கிற பிணைப்பு பலமாகும். (1 கொ. 2:16) அப்படியென்றால், இதை எப்படிச் செய்யலாம்? ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதைப் பற்றியே இயேசு அதிகமாக யோசித்தார். (மத். 20:28; ரோ. 15:1-3) அதனால், அவரால் தியாகங்கள் செய்ய முடிந்தது; மற்றவர்களை மன்னிக்க முடிந்தது. தன்னை மற்றவர்கள் விமர்சனம் செய்தபோது, அவர் புண்பட்டுவிடவில்லை. (யோவா. 1:46, 47) ரொம்ப நாளுக்கு முன்பு ஒருவர் செய்த தவறை மனதில் வைத்துக்கொண்டு, அவரை முத்திரை குத்திவிடவும் இல்லை. (1 தீ. 1:12-14) இயேசு மாதிரியே நாம் நடந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:35) உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “சகோதர சகோதரிகள்கிட்ட சமாதானமா இருக்குறதுக்கு என்னால முடிஞ்ச எல்லா முயற்சிகளயும் எடுக்குறது மூலமா இயேசு மாதிரியே நடந்துக்குறேனா?”
12. இயேசுவோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய மூன்றாவது விஷயம் என்ன, அதை எப்படிச் செய்யலாம்?
12 மூன்றாவது, கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு காட்டுங்கள். பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களுக்கு நாம் என்ன செய்கிறோமோ, அதைத் தனக்கே செய்ததாக இயேசு நினைக்கிறார். (மத். 25:34-40) இயேசு கொடுத்த கட்டளையின்படி, பிரசங்கித்து சீஷராக்குகிற வேலையை முழுமையாகச் செய்வதுதான் இவர்களை ஆதரிப்பதற்கான முக்கிய வழி! (மத். 28:19, 20; அப். 10:42) இன்று உலகம் முழுவதும் நடக்கிற பிரமாண்டமான இந்தப் பிரசங்க வேலையை ‘வேறே ஆடுகளின்’ உதவியோடுதான் கிறிஸ்துவின் சகோதரர்களால் செய்ய முடியும். (யோவா. 10:16) நீங்கள் வேறே ஆடுகளில் ஒருவரா? அப்படியென்றால், நீங்கள் ஒவ்வொரு தடவையும் இந்த வேலையைச் செய்யும்போது, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மீது மட்டுமல்ல, இயேசுமீதும் அன்பு காட்டுகிறீர்கள்.
13. லூக்கா 16:9-ல் இயேசு சொன்ன அறிவுரையின்படி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
13 யெகோவாவும் இயேசுவும் வழிநடத்திவருகிற வேலைகளுக்குப் பண உதவி செய்வதன் மூலம் நாம் இவர்களுடைய நண்பராக ஆகலாம். (லூக்கா 16:9-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, உலகளாவிய வேலைக்காக நாம் நன்கொடை கொடுக்கலாம். ஒதுக்குப்புறமான பகுதிகளில் நடக்கிற பிரசங்க வேலைக்கு... உண்மை வழிபாடு சம்பந்தப்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்கு... அவற்றைப் பராமரிப்பதற்கு... இயற்கைப் பேரழிவு அல்லது வேறெதாவது காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு... என்று நிறைய விஷயங்களுக்காக அந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது. சபையின் செலவுகளுக்கு உதவவும் நாம் நன்கொடை கொடுக்கலாம். நம் சபையில் யாராவது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் உதவி செய்யலாம். (நீதி. 19:17) இப்படியெல்லாம் செய்வதன் மூலம் கிறிஸ்துவின் சகோதரர்களை நாம் ஆதரிக்கலாம்.
14. எபேசியர் 4:15, 16-ன்படி, இயேசுவிடம் நட்பை வளர்த்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய நான்காவது விஷயம் என்ன?
14 நான்காவது, அமைப்பின் ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுங்கள். நம்மைக் கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர்களுக்கு ஒத்துழைப்பு தரும்போது, சபையின் தலைவரான இயேசுவிடம் இருக்கிற நட்பு பலப்படும். (எபேசியர் 4:15, 16-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்களை இன்னும் சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள் இப்போது நடந்துவருகின்றன. அதனால், சில சபைகள் மற்ற சபைகளோடு இணைக்கப்படுகின்றன; ஊழியப் பகுதியின் எல்லைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. இப்படியெல்லாம் செய்வதன் மூலம் நம்முடைய நன்கொடை கணிசமான அளவு சேமிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில், இதுபோன்ற புது சூழ்நிலைக்குத் தகுந்தபடி பிரஸ்தாபிகள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பிரஸ்தாபிகள் சிலர், நிறைய வருஷங்களாக ஒரே சபையில் இருந்திருப்பார்கள். அதனால், அந்தச் சபையிலிருப்பவர்களோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால் இப்போது, இவர்கள் இன்னொரு சபைக்குப் போக வேண்டியிருக்கலாம். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிற இந்த உண்மையுள்ள பிரஸ்தாபிகளைப் பார்த்து இயேசு ரொம்பச் சந்தோஷப்படுவார், இல்லையா?
என்றென்றும் இயேசுவின் நண்பராக இருங்கள்
15. நமக்கும் இயேசுவுக்கும் இருக்கிற நட்பு எதிர்காலத்தில் எப்படி இன்னும் உறுதியாகும்?
15 கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள். என்றென்றும் இயேசுவோடு இருக்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இயேசுவை அவர்கள் பார்ப்பார்கள், அவரோடு பேசுவார்கள், அவரோடு சேர்ந்து நேரம் செலவிடுவார்கள். (யோவா. 14:2, 3) பூமியில் வாழ்கிற நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கும் இயேசுவின் அன்பும் கவனிப்பும் கிடைக்கும். இயேசுவை அவர்களால் பார்க்க முடியவில்லையென்றாலும், யெகோவாவும் அவரும் கொடுக்கப்போகிற வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க, இயேசுவோடு இருக்கிற பந்தம் பலமாகும்.—ஏசா. 9:6, 7.
16. இயேசுவோடு நட்பை வளர்த்துக்கொள்ளும்போது என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்?
16 தன்னுடைய நண்பராகும்படி இயேசு நம்மை அழைக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும்போது, அளவில்லாத ஆசீர்வாதங்கள் வந்து குவியும். உதாரணத்துக்கு, இயேசுவின் அன்பையும் ஆதரவையும் இன்றே நாம் அனுபவித்துவருகிறோம். எதிர்காலத்திலோ முடிவில்லாத வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மிக முக்கியமான ஒரு சொத்து நமக்குக் கிடைக்கப்போகிறது. அவருடைய அப்பா யெகோவாவோடு அனுபவிக்கப்போகும் நெருக்கமான பந்தம்தான் அந்தச் சொத்து! அப்படியென்றால், இயேசுவின் நண்பர்கள் என்று அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
பாட்டு 84 ‘எனக்கு மனமுண்டு’
^ பாரா. 5 இயேசுவிடம் பேசுவதற்கும் அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்கும் அப்போஸ்தலர்களுக்கு சில வருஷங்கள் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அவர்கள் அவருடைய நல்ல நண்பர்களாக ஆனார்கள். நாமும் தன்னுடைய நண்பர்களாக ஆக வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார். ஆனால், அப்போஸ்தலர்கள் சந்திக்காத சில சவால்கள் நமக்கு இருக்கின்றன. அந்தச் சவால்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இயேசுவிடம் எப்படி ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ளலாம் என்றும், அதில் எப்படி நிலைத்திருக்கலாம் என்றும் பார்ப்போம்.
^ பாரா. 55 படங்களின் விளக்கம்: (1) குடும்ப வழிபாட்டில், இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றிப் படிக்கலாம். (2) சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருப்பதற்குக் கடின முயற்சி எடுக்கலாம். (3) ஊழியத்தை மும்முரமாகச் செய்வதன் மூலம் கிறிஸ்துவின் சகோதரர்களை ஆதரிக்கலாம். (4) சபைகள் ஒன்றாக இணைக்கப்படும்போது, மூப்பர்களின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம்.