Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘இதமான வார்த்தைகளால்’ உங்கள் குடும்பத்தை உற்சாகப்படுத்துங்கள்

‘இதமான வார்த்தைகளால்’ உங்கள் குடும்பத்தை உற்சாகப்படுத்துங்கள்

‘இதமான வார்த்தைகளால்’ உங்கள் குடும்பத்தை உற்சாகப்படுத்துங்கள்

ஒவ்வொரு நிமிடமும் மெதுவாக ஊர்ந்து செல்லச்செல்ல டேவிடுக்கு கோபம் தலைக்கு ஏறியது. மனைவிக்காக காரில் காத்திருந்த டேவிட் மணியைப் பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசியாக அவருடைய மனைவி டையன் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அவர் கோபத்தில் வெடித்து சிதறினார்.

“எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது? எப்போதுமே நீ இப்படித்தான்! ஒரு தடவையாவது நீ சரியான நேரத்திற்கு கிளம்பி வந்திருக்கிறாயா?” என்று கத்தினார்.

டையன் நொறுங்கிப்போனாள். கண்ணீர் மல்க மறுபடியும் வீட்டிற்குள் ஓடிப்போய்விட்டாள். யோசனையின்றி தான் செய்துவிட்ட தவறை அந்த நொடியில்தான் டேவிட் உணர்ந்தார். அவருடைய கோபாவேசம் நிலைமையை மோசமாக்கிவிட்டது. இப்போது என்ன செய்வது? வண்டியை நிறுத்தினார். பெருமூச்சுவிட்டுக்கொண்டு மனைவியின் பின்னால் மெதுவாக அவரும் வீட்டிற்குள் சென்றார்.

வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிஜ சம்பவத்தை இது படம்பிடித்துக் காட்டுகிறது அல்லவா? நீங்கள் எப்போதாவது தவறி சொன்ன வார்த்தைகளைத் திரும்பப்பெற வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்களா? யோசிக்காமல் பேசுகையில், பெரும்பாலும் வார்த்தைகளைக் கொட்டிவிட்ட பிறகே அதற்காக வருந்துகிறோம். எனவேதான், பைபிள் பின்வருமாறு சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது: “நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள்.”—நீதிமொழிகள் 15:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.

எனினும், தெளிவாகச் சிந்தித்துவிட்டு பின்னர் பேசுவது என்பது கடினமாக இருக்கலாம். அதுவும் கோபமாயிருக்கும்போது, பயந்திருக்கும்போது அல்லது மனமுடைந்திருக்கும்போது அப்படிச் செய்வது கடினமாகவே இருக்கலாம். முக்கியமாக நமக்கு நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பரிமாற முயற்சி செய்யும்போது மற்றவரைக் குற்றப்படுத்தும் அல்லது குறைகூறும் அளவுக்குச் சென்றுவிட வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக, மற்றவர்களுடைய உணர்ச்சிகள் புண்படலாம் அல்லது நம்முடைய உரையாடல் வாக்குவாதமாக வெடிக்கலாம்.

அப்படியென்றால் இந்த விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்கு நாம் என்ன செய்யலாம்? நம் உணர்ச்சிகள் மேலிடாதபடி எப்படிக் கட்டுப்படுத்தலாம்? நமக்கு உதவும் சில ஆலோசனைகளை பைபிள் எழுத்தாளராகிய சாலொமோனிடமிருந்து பெறலாம்.

என்ன சொல்வது, எப்படிச் சொல்வது

பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தை எழுதிய சாலொமோன், வாழ்வின் மாயையைக் குறித்து அதில் தெள்ளத்தெளிவாக எழுதினார். அந்த விஷயத்தைக் குறித்து அவருக்குப் பலமான உணர்ச்சிகள் இருந்தது என்னமோ உண்மைதான். “இந்த ஜீவனை வெறுத்தேன்” என்றார் அவர். அது “மாயையிலும் மாயை” என்றுகூட ஒரு சமயம் சொன்னார். (பிரசங்கி 2:17; 12:8, NW அடிக்குறிப்பு) ஆனாலும், பிரசங்கி புத்தகம் சாலொமோனின் ஏமாற்ற உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தும் புத்தகமாக இருக்கவில்லை. தன் உணர்ச்சிகளைத் தனக்குத் தோன்றியபடி அப்படியே கொட்டிவிட்டால் போதும் என்று அவர் நினைக்கவில்லை. ‘இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வகைதேடி, செவ்வையும் சத்தியமுமான வாக்கியங்களை’ தான் எழுதியதாக இந்தப் புத்தகத்தின் முடிவில் சாலொமோன் தெளிவுபடுத்துகிறார். (பிரசங்கி 12:10) அவர் “சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க . . . மிகக் கடுமையாக முயற்சி செய்தார். . . . உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதிவைத்தார்” என்பதாக ஈஸி டு ரீட் வர்ஷன் குறிப்பிடுகிறது.

தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதை சாலொமோன் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. அவர் தன்னைத்தானே பின்வருமாறு கேட்டுக்கொண்டிருக்கலாம்: ‘நான் சொல்ல நினைக்கும் விஷயங்கள் உண்மையில் சரியானவையா அல்லது சத்தியமானவையா? இந்த வார்த்தைகளை நான் பயன்படுத்தினால், அவை மற்றவர்களுக்கு இதமாகவும், ஏற்கத் தகுந்தவையாகவும் இருக்குமா?’ உண்மையான அதே சமயம் ‘இதமான வார்த்தைகளை’ அவர் தேடியதால் தன்னுடைய உணர்ச்சிகள் தனது கருத்துகளை மறைத்துவிடாதபடி பார்த்துக்கொண்டார்.

இத்தனை முயற்சிகளை அவர் எடுத்ததன் விளைவாக, பிரசங்கி புத்தகம் தலைசிறந்த ஓர் இலக்கிய படைப்பாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றி கடவுளுடைய ஞானத்தை வெளிப்படுத்தும் ஏகப்பட்ட தகவல்கள் நிறைந்திருக்கும் புத்தகமாகவும் உள்ளது. (2 தீமோத்தேயு 3:16, 17) உணர்ச்சிபொங்கும் ஒரு விஷயத்தைப்பற்றி கலந்துபேசுவதற்கு சாலொமோன் தெரிந்துகொண்ட அணுகுமுறையை, நாமும் நம் அன்பானவர்களிடம் பேசுகையில் பயன்படுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம், அல்லவா? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்

பள்ளியிலிருந்து தன்னுடைய மதிப்பெண் அட்டையை எடுத்துக்கொண்டு மகன் சோகமாக வீடு திரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பாடத்திலும் அவன் வாங்கியிருக்கும் மதிப்பெண்களை அப்பா பார்த்துக்கொண்டே வருகிறார். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருப்பதைக் கவனிக்கிறார். அவன் வீட்டுப் பாடத்தை உடனுக்குடன் செய்யாமல் இருந்ததையெல்லாம் நினைத்து அவருக்கு சட்டென கோபம் வருகிறது. “நீ ஒரு சோம்பேறி! இப்படியே இருந்தால் நீ வாழ்க்கையில் உருப்படவே மாட்டாய்!” என்று பொரிந்து தள்ளலாம்போல் அவருக்குத் தோன்றுகிறது.

ஆனால், இதுபோன்ற கோபாவேச உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, அந்தத் தந்தை நிதானமாக தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் நினைப்பதெல்லாம் உண்மையிலேயே நிஜம்தானா அல்லது சரிதானா?’ உணர்ச்சிகளையும் உண்மையையும் பிரித்தறிவதற்கு இந்தக் கேள்வி அவருக்கு உதவி செய்யும். (நீதிமொழிகள் 17:27) பள்ளியில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தான் என்பதற்காக அவனுடைய வாழ்க்கையே தோல்வியாகிவிடுமா? அவன் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலுமே சோம்பேறியாக இருக்கிறானா? அல்லது அந்தப் பாடத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள கஷ்டப்படுவதால் வீட்டுப்பாடம் செய்வதை தள்ளிப்போடுகிறானா? எதையுமே நியாயமாகவும், உள்ளதை உள்ளபடியும் பார்க்கவேண்டுமென பைபிள் அடிக்கடி வலியுறுத்துகிறது. (தீத்து 3:2; யாக்கோபு 3:17) ஒரு பிள்ளையை உற்சாகப்படுத்துவதற்கு பெற்றோர் சரியான வார்த்தைகளை, ‘செவ்வையும் சத்தியமுமான’ வார்த்தைகளைப் பேச வேண்டும்.

சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்

என்ன சொல்வது என்பதை அந்தத் தகப்பன் தீர்மானித்த பிறகு அவர் பின்வரும் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என் மகனுக்கு இதமானதாகவும், ஏற்கத்தக்கதாகவும் இருக்க நான் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்?’ சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல என்பது உண்மைதான். ஆனால், பருவ வயதினர் சிந்திக்கும் விதத்தை பெற்றோர் மனதில் வைத்திருக்க வேண்டும். செய்தால் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எதைச் செய்வதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற எண்ணமே பெரும்பாலும் பருவ வயதினரிடம் காணப்படுகிறது. எனவே, ஏதாவது ஒரு தோல்வியை அல்லது பலவீனத்தை எடுத்துக்கொண்டு அதை ஊதி பெரிதாக்கி, அதை வைத்து தங்களைக் குறித்து அவர்களே ஒரு கருத்தை வடித்துக்கொள்வார்கள். பெற்றோர் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படும்போது அந்தப் பிள்ளையின் மனதில் தன்னைக் குறித்து ஏற்கெனவே இருக்கும் இந்த எதிர்மறையான எண்ணம் மேன்மேலும் வலுப்பெறக்கூடும். கொலோசெயர் 3:21 இவ்வாறு குறிப்பிடுகிறது: “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.”

“ஒருபோதும்,” “எப்போதும்” போன்ற வார்த்தைகள் பெரும்பாலும் உண்மைகளை மிகைப்படுத்தி காட்டுகின்றன அல்லது ‘பொதுவாக அப்படித்தான்’ என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுகின்றன. “நீ ஒருபோதும் உருப்பட மாட்டாய்” என்று பெற்றோர் ஒருவர் சொல்லிவிட்டால், அந்தப் பிள்ளை தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள இனி வழியே இல்லை என நினைப்பான். வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் அவனைப்பற்றி தீர்மானமாகக் கூறும் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால், தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்றே அவன் தன்னைக் கருத தொடங்கிவிடுவான். இது அவன் மனதை நோகடிப்பதாக மட்டுமல்ல, பொய்யானதாகவும் இருக்கிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும், நல்ல அம்சங்களை வலியுறுத்திக்காட்டுவதே பொதுவாக மிகவும் பலன் தருவதாக இருக்கும். மேலே நாம் சிந்தித்த சூழ்நிலையில், அந்தத் தகப்பன் இதுபோல் எதையாவது சொல்லலாம்: “நீ ஒரு பாடத்தில் தோற்றுப்போனதற்கு கவலைப்படுகிறாய் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால், பொதுவாக நீ கடினமாக உழைப்பவன் என்று எனக்குத் தெரியும். கவலைப்படாதே, இந்தப் பாடத்தில் உனக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடித்து அதை எப்படியாவது சரிசெய்துவிடலாம், சரியா.” தன்னுடைய மகனுக்கு உதவிசெய்ய சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதற்கு, குறிப்பாக சில கேள்விகளைக் கேட்பதன்மூலம் வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

உணர்ச்சி வேகத்தில் கத்துவதைவிட, இப்படி நன்கு யோசித்து பக்குவமாக பேசுவது, பெரும்பாலும் அதிக பலன் தருவதாய் இருக்கும். “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” என்பதாக பைபிள் நமக்கு உறுதி அளிக்கிறது. (நீதிமொழிகள் 16:24) பிள்ளைகள் மட்டுமல்ல, சொல்லப்போனால், குடும்ப அங்கத்தினர் அனைவருமே அமைதியும் அன்பும் நிலவும் சூழலில் தழைத்தோங்குவார்கள்.

“இருதயத்தின் நிறைவினால்”

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்தக் கணவரைப்பற்றி சற்று சிந்தியுங்கள். அவர் தன்னுடைய ஏமாற்றத்தைக் கோபமான வார்த்தைகளில் கொட்டாமல் சற்று நிதானமாக யோசித்து, உண்மையைச் சொல்லும் ‘இதமான வார்த்தைகளை’ தேர்ந்தெடுத்து மனைவியிடம் பேசியிருந்தால் நிலைமை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு கணவன் தன்னைத் தானே பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘சொன்ன நேரத்திற்கு தவறாமல் வருவதில் என் மனைவி இன்னும் முயற்சி எடுக்க வேண்டும் என்றாலும், அவள் எப்போதுமே தாமதமாக வருகிறாள் என்பது உண்மைதானா? அவளுடைய குறையை சுட்டிக்காட்டுவதற்கு இதுதான் ஏற்ற சமயமா? கோபமான, குறைகூறும் வார்த்தைகள் அவள் தன்னை சரிசெய்து கொள்வதற்கு உந்துவிக்குமா?’ சற்று நிறுத்தி நிதானமாக, இதுபோன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டால், நம்மை அறியாமலேயே நம் அன்பானவர்களைப் புண்படுத்துவதைத் தவிர்க்கலாம்.—நீதிமொழிகள் 29:11.

குடும்பத்தில் நம் உரையாடல்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் போய் முடிகிறதென்றால் என்ன செய்வது? காரியங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், நம் வார்த்தைகளுக்கு அடியில் புதைந்துகிடக்கும் உணர்ச்சிகளைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கலாம். குறிப்பாக, நாம் வருத்தமாக இருக்கையில் அல்லது ஏதாவது நெருக்கடியில் சிக்கித் தவிக்கையில் என்ன சொல்கிறோம் என்பது நாம் உண்மையில் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதைப்பற்றி அதிகத்தைத் தெரிவிக்கக்கூடும். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 12:34) வேறுவிதமாகச் சொன்னால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம் உள்மனதின் எண்ணங்களையும் ஆசைகளையும் மனநிலைகளையும் பிரதிபலிக்கின்றன.

வாழ்க்கையைக் குறித்து யதார்த்தமான, நம்பிக்கையான, சாதகமான நோக்குநிலை நமக்கு இருக்கிறதா? அப்படியென்றால், நாம் பேசும் விஷயங்களும் அவற்றின் தொனியும் அதை காண்பிக்கும். விட்டுக்கொடுக்காத, நம்பிக்கையற்ற, குறைகூறுகிற மனநிலை நமக்கு இருக்கிறதா? அப்படியென்றால், நாம் பேசும் வார்த்தைகள் அல்லது பேசும் விதம் மற்றவர்களைச் சோர்வடையச் செய்துவிடக்கூடும். நம் சிந்தனையும் பேச்சும் எந்தளவுக்கு சோர்வளிப்பதாகவும் விரும்பத்தகாததாகவும் ஆகியிருக்கின்றன என்பதை நாம் அறியாமல் இருக்கலாம். காரியங்களை நாம் அணுகும் விதமே சரியானது என்றுகூட நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 14:12.

நம்மிடம் கடவுளுடைய வார்த்தை இருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், நம் எண்ணங்களைப் பரிசோதித்து, அவற்றில் சரியானவை எவை என்றும் சரி செய்யப்பட வேண்டியவை எவை என்றும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பைபிள் உதவி செய்யும். (எபிரெயர் 4:12; யாக்கோபு 1:25) இயல்பாக நம்முடைய சுபாவம் என்னவாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட பின்னணியில் நாம் வளர்க்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை; நம் சிந்தனையையும் செயலையும் மாற்றிக்கொள்ள உண்மையில் நாம் விரும்பினால் நம்மால் முடியும்.—எபேசியர் 4:23, 24.

நாம் பேசும் விதத்தைத் தெரிந்துகொள்வதற்கு பைபிளை பயன்படுத்துவதோடு வேறொரு வழியும் இருக்கிறது. அதுதான், மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வது. உதாரணமாக, நீங்கள் பேசும் விதம் எப்படி இருக்கிறது என்று உண்மையாகச் சொல்லும்படி உங்கள் மணத்துணையிடம் அல்லது பிள்ளையிடம் கேளுங்கள். உங்களை நன்கு அறிந்த முதிர்ச்சியுள்ள நண்பரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வதை ஏற்று, தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு மனத்தாழ்மை அவசியம்.

பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்!

மொத்தத்தில், நம் பேச்சால் மற்றவர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்று நாம் உண்மையிலே விரும்பினால், நீதிமொழிகள் 16:23 (ERV) சொல்வதைச் செய்ய வேண்டும். அது சொல்வதாவது: “அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.” நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்போதுமே சுலபமான விஷயம் அல்ல. இருந்தாலும், மற்றவர்களைக் குறைகூறுவதற்கோ சிறுமையாக உணர வைப்பதற்கோ பதிலாக அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தோமானால், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது அவ்வளவு கடினமாக இல்லாதிருக்கலாம்.

நம்மில் எவருமே பரிபூரணராக இல்லை என்பது உண்மைதான். (யாக்கோபு 3:2) நாம் எல்லாருமே அவ்வப்போது யோசிக்காமல் பேசிவிடுகிறோம். (நீதிமொழிகள் 12:18) ஆனாலும் கடவுளுடைய வார்த்தையின் உதவியோடு, பேசுவதற்கு முன் சிந்தித்துப்பார்க்கவும் நம்முடைய உணர்ச்சிகளையும் அக்கறைகளையும்விட மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் அக்கறைகளையும் பெரிதாக மதிக்கவும் கற்றுக்கொள்ளலாம். (பிலிப்பியர் 2:4) உண்மையைச் சொல்லும் “இதமான வார்த்தைகளை” தேடி பயன்படுத்த தீர்மானமாய் இருப்போமாக. அதுவும் குறிப்பாக, குடும்ப அங்கத்தினரிடம் பேசுகையில் அவ்வாறு செய்வோமாக. அப்போது நம் பேச்சு நம் அன்பானவர்களைப் புண்படுத்தி, சிதைத்து சின்னாபின்னமாக்காமல், அவர்களை ஆற்றித் தேற்றி உற்சாகப்படுத்தும்.—ரோமர் 14:19. (w08 1/1)

[பக்கம் 12-ன் படம்]

வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பின்னர் அதற்காக வருந்துவதை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்?