Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளமைக் கால வேதனைக்கு நான் கண்ட மருந்து

இளமைக் கால வேதனைக்கு நான் கண்ட மருந்து

இளமைக் கால வேதனைக்கு நான் கண்ட மருந்து

ஏயுசேப்யோ மார்சீயோ சொன்னபடி

செப்டம்பர் 1993-ல் கடுங்காவல் சிறைச்சாலை ஒன்றில் நான். அதுவும், ஒரு கைதிக்கு முழுக்காட்டுதல் கொடுக்க! அது வேறு யாருமில்லை, என் தங்கை மாரீவீதான்! கைதிகள் சிலரும் சிறை அதிகாரிகளும் பணிவோடு பார்த்துக்கொண்டிருக்க, முழுக்காட்டுதல் பேச்சைக் கொடுத்துவிட்டு, அவளுக்கு முழுக்காட்டுதல் கொடுத்தேன். நாங்கள் இருவரும் சிறையில் சந்திக்கும் நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு முன், எங்களுடைய கடந்த காலத்தைப்பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

எங்கள் வீட்டில் மொத்தம் எட்டு பிள்ளைகள். மூத்தவனான நான் 1954, மே மாதம் 5-ஆம் தேதி ஸ்பெயினில் பிறந்தேன். மூன்றாவதாக மாரீவீ பிறந்தாள். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த எங்கள் பாட்டியம்மா, கடவுள் பக்தியுள்ள பிள்ளைகளாக எங்களை வளர்த்தார். அவருடன் இருந்தபோது நானும் ரொம்ப பக்தியுள்ள பிள்ளையாக இருந்தது எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது. ஆனால், எங்கள் வீட்டிலோ நிலைமை தலைகீழ்; கடவுள் பக்தி என்பது மருந்துக்கும் கிடையாது. அம்மாவும் நாங்களும் அப்பாவிடம் அடிவாங்காத நாளே கிடையாது. தினந்தினம் பயத்தில் செத்து செத்துப் பிழைத்தோம். அம்மா படும் வேதனையைப் பார்த்து நொந்துபோனேன்.

பள்ளியிலோ நிலைமை, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தது. ஆசிரியராகப் பணியாற்றிய பாதிரி ஒருவர், கேள்விக்கு நாங்கள் தவறான பதில் சொல்லிவிட்டால், எங்கள் தலையைச் சுவற்றில் மோதி அடிப்பார். இன்னொரு பாதிரி, வீட்டுப் பாடத்தை மாணவர்களோடு சேர்ந்து சரிபார்த்த சமயங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். இவை போதாதென்று, எரிநரகம் போன்ற கத்தோலிக்க போதனைகள் என்னைக் குழப்பியதோடு கதிகலங்கவும் வைத்தன. இதனால், கடவுள்மீது எனக்கிருந்த கொஞ்சநஞ்ச பக்தியும் காணாமல் போனது.

சிக்கி, சீரழிந்த வாழ்க்கை

கடவுளைப் பிரியப்படுத்தும் விதத்தில் எப்படி வாழ்வது என்பதை எனக்குச் சொல்லிக்கொடுக்க யாருமில்லை. ஆகவே, டிஸ்கோ கிளப்புகளே கதியெனக் கிடந்தேன். அங்கிருந்த ஒழுக்கங்கெட்ட, அடிதடி பேர்வழிகளுடன் நேரத்தைப் போக்கினேன். இங்கெல்லாம் சண்டைகள் ரொம்ப சகஜம். கத்திகள், சங்கிலிகள், கண்ணாடி கோப்பைகள், நாற்காலிகள் என கையில் கிடைப்பதை எடுத்து ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். இதுபோன்ற சண்டை சச்சரவுகளில் நானாகப் போய் தலையிட்டுக்கொள்ள மாட்டேன். அப்படியிருந்தும் ஒரு சமயம், வாங்கிய அடியில் மயங்கி சுருண்டுவிட்டேன்.

கொஞ்ச நாளில், எனக்கு அங்கு போகவே வெறுப்பாக இருந்தது; அடிதடிகள் இல்லாமல் ஓரளவு அமைதியாய் இருந்த டிஸ்கோ கிளப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். இங்கேயும்கூட போதைப் பொருள்கள் சர்வ சாதாரணம். ஆனால், இவை எனக்கு சந்தோஷத்தையும், மனசாந்தியையும் தரவில்லை, மாறாக மனபிரமையையும் கவலையையும்தான் தந்தன.

என்னுடைய போக்கு எனக்கே பிடிக்கவில்லை. ஆனாலும், நான் கெட்டது போதாதென்று என் தம்பி ஹோசே லூயீஸையும் என் உயிர் நண்பன் மீகலையும் இதே சேற்றில் தள்ளினேன். அந்தச் சமயத்தில் ஸ்பெயினிலிருந்த மற்ற அநேக இளைஞர்களைப் போலவே நாங்களும் சீர்கெட்ட உலகின் புதைமணலில் வசமாய் சிக்கிக்கொண்டோம். போதைப் பொருள்கள் வாங்க எனக்குப் பணம் தேவைப்பட்டபோது அதற்காக எதையும் செய்யத் துணிந்தேன். மானம் மரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டேன்.

யெகோவா உதவிக்கரம் நீட்டுகிறார்

இந்தச் சமயத்தில், கடவுள் ஒருவர் இருக்கிறாரா, நாம் எதற்காக வாழ்கிறோம் என்றெல்லாம் பலமுறை என் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். என்னைப் புரிந்துகொண்டு என் மனதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்க யாராவது கிடைக்க மாட்டார்களாவெனத் தேடினேன். இப்படியாக, கடவுளைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் வேலை பார்த்தவர்களுள் பிரான்தீஸ்கோ என்பவர் ரொம்பவே வித்தியாசமானவராய் இருந்தார். அவர் ஒரு நேர்மையான மனிதர், சந்தோஷமாக இருப்பார், கனிவாகவும் நடந்துகொள்வார். எனவே, நான் தேடிக்கொண்டிருந்த நபர் இவர்தான் என முடிவுசெய்து, அவரிடம் மனந்திறந்து பேச ஆரம்பித்தேன். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. போதைப் பொருள்களைப்பற்றி விவரிக்கும் கட்டுரையுள்ள காவற்கோபுர பத்திரிகை ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்.

அதைப் படித்த பிறகு, உதவிகேட்டு கடவுளிடம் மன்றாடினேன். “ஆண்டவரே, நீர் இருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும், உம்மைப்பற்றி அறிந்துகொள்ளவும் உமக்குப் பிரியமாக நடக்கவும் ஆசைப்படுகிறேன். தயவுசெய்து எனக்கு உதவும்” என்று வேண்டிக்கொண்டேன். பிரான்தீஸ்கோவும் மற்ற யெகோவாவின் சாட்சிகளும் பைபிளிலிருந்து வசனங்களைக் காட்டி உற்சாகப்படுத்தி, வாசிப்பதற்கு பைபிள் பிரசுரங்களையும் கொடுத்தார்கள். கடவுளிடம் நான் கேட்ட உதவியைத்தான் இவர்கள் எனக்குத் தருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் கற்ற விஷயங்களைப்பற்றி விரைவிலேயே என் நண்பர்களிடமும் ஹோசே லூயீஸிடமும் பேச ஆரம்பித்தேன்.

ஒருநாள் ராக் இசை நிகழ்ச்சி முடிந்து நண்பர்கள் சிலருடன் வெளியே வந்தேன். அவர்களைவிட்டு விலகி தனியாக நின்று அவர்களைக் கவனித்தேன். போதைப் பொருள்களின் பிடியில் சிக்கியதால், எங்கள் நடவடிக்கைகள் எந்தளவு கேடுகெட்டதாய் ஆகியிருந்தன என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. அந்த வாழ்க்கைப் பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு யெகோவாவின் சாட்சியாக வேண்டுமென்று அந்த நிமிடமே முடிவெடுத்தேன்.

எனக்கு ஒரு பைபிள் வேண்டுமென்று பிரான்தீஸ்கோவிடம் கேட்டேன். அவர் பைபிளோடு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தையும் சேர்த்துக்கொடுத்தார். a கண்ணீர் அனைத்தையும் துடைக்கப்போவதாகவும், சாவைக்கூட நீக்கப்போவதாகவும் கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதிகளைப் படித்தேன். மனிதரை விடுதலையாக்கும் சத்தியம் இதுதான் என்பதைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டேன். (யோவான் 8:32; வெளிப்படுத்துதல் 21:4) பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கே எல்லாரும் அன்போடும் கரிசனையோடும் பேசிப் பழகியது எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

ராஜ்ய மன்றத்தில் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் துடித்தேன்; எனவே, ஹோசே லூயீஸையும் என் நண்பர்களையும் உடனடியாக வரச் சொல்லி, ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவர்களிடம் தெரிவித்தேன். சில நாட்களுக்குப் பிறகு, நாங்கள் எல்லாருமே சபைக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களுக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் எங்களைத் திரும்பி பார்த்தாள். நீண்ட முடியுடன் ஹிப்பி கோலத்தில் எங்களைப் பார்த்ததும் அரண்டு போனாள். அதற்குப் பிறகு அவள் எங்கள் பக்கமே திரும்பவில்லை. மறுவாரம் கோட்டும் சூட்டும் டையுமாக நாங்கள் ராஜ்ய மன்றத்திற்குப் போனபோது, அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்திருக்கும்.

அதன் பிறகு விரைவிலேயே, நானும் மீகலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டிலும் கலந்துகொண்டோம். இளைஞர், பெரியோரென எல்லாரும் உண்மையான சகோதர பாசத்துடன் பழகியதைப் பார்த்தோம்; இது, நாங்கள் வாழ்க்கையில் அதுவரையில் பெற்றிராத ஆனந்த அனுபவம். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால், சமீபத்தில் நாங்கள் ராக் இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த அதே அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால், இந்தச் சமயத்தில் அங்கே நிலவிய சூழலும் இசையும் எங்கள் இதயத்தை இதமாய் வருடின.

நாங்கள் எல்லாருமே பைபிள் படிப்பில் கலந்துகொண்டோம். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு 1974, ஜூலை 26-ஆம் தேதி நானும் மீகலும் முழுக்காட்டுதல் பெற்றோம். அப்போது எங்கள் இருவருக்கும் 20 வயது. எங்கள் நண்பர்களில் இன்னும் நான்கு பேர் சில மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்றார்கள். பைபிளிலிருந்து பெற்ற பயிற்சி, பல்லைக் கடித்துக்கொண்டு பிரச்சினைகளைச் சமாளித்து வந்த என் அம்மாவுக்கு வீட்டுக் காரியங்களில் ஒத்தாசையாய் இருக்கவும், புதிதாகக் கற்ற சத்தியத்தை அவருடன் பகிர்ந்துகொள்ளவும் என்னைத் தூண்டியது. எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. என் தம்பி தங்கைகளுக்கு உதவுவதிலும் நான் அதிக நேரம் செலவிட்டேன்.

விரைவிலேயே, என் தம்பிகளில் ஒருவன் தவிர என் அம்மாவும் மற்றெல்லாரும் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். 1977-ல் சோலிடாட் என்ற பெண்ணை நான் மணந்துகொண்டேன். அவள் யார் தெரியுமா? முதன்முதலாக நாங்கள் ராஜ்ய மன்றத்துக்குச் சென்றபோது எங்களைப் பார்த்து அரண்டு போன அதே பெண்தான். சில மாதங்களுக்குள் நாங்கள் இருவரும் பயனியர்களாக, யெகோவாவின் சாட்சிகளில் நற்செய்தியை முழுநேரம் பிரசங்கிக்கிறவர்களாக ஆனோம்.

அருமை தங்கை மீட்கப்பட்டாள்

என் தங்கை மாரீவீ சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருந்தாள். அந்தக் கொடூர சம்பவம் அவள் வாழ்க்கையையே சிதைத்து சின்னாபின்னமாக்கியிருந்தது. பருவ வயதில் மனம்போல வாழ்ந்தாள், ஒழுக்கக்கேடெனும் சாக்கடையில் புரண்டாள்; போதைப் பொருளுக்கு அடிமையானாள், திருடினாள், விபசாரத்தில் ஈடுபட்டாள். 23 வயதில் சிறைக்கு அனுப்பப்பட்டாள்; அங்கும் திருந்தியபாடில்லை, தான்தோன்றித்தனமாய் வாழ்ந்தாள்.

அந்தச் சமயத்தில், நான் வட்டாரக் கண்காணியாக, அதாவது, யெகோவாவின் சாட்சிகளுடைய பயண ஊழியராக சேவை செய்து வந்தேன். 1989-ல், மாரீவீயின் சிறைச்சாலை இருந்த பகுதியில் ஊழியம் செய்ய நானும் சோலிடாடும் நியமிப்பைப் பெற்றோம். அதற்குச் சற்று முன்புதான் மாரீவீயுடைய மகனை சிறை அதிகாரிகள் அவளிடமிருந்து பிரித்திருந்தார்கள். எனவே, அவள் உள்ளூர நொறுங்கி, வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தாள். ஒருநாள் நான் அவளைச் சந்தித்தேன். அவளுக்கு பைபிள் படிப்பு நடத்த விரும்புவதாகச் சொன்னேன், அவளும் சம்மதித்தாள். ஒரு மாதம் படித்த பிறகு அவள் போதைப் பொருள்களையும் புகையிலையையும் பயன்படுத்துவதைச் சுத்தமாக நிறுத்திவிட்டாள். வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய அவளுக்கு யெகோவா பலத்தைத் தந்ததைப் பார்த்து பூரித்துப் போனேன்.—எபிரெயர் 4:12.

படிக்கத் துவங்கிய கொஞ்ச நாட்களுக்குள் தான் கற்ற பைபிள் சத்தியங்களைப்பற்றி சக கைதிகளிடமும் சிறை அதிகாரிகளிடமும் பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு சிறையாக அவள் பந்தாடப்பட்டாலும் பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை. ஒரு சிறைச்சாலையில் இருந்தபோது ஒவ்வொரு அறையாகச் சென்றுகூட பிரசங்கித்திருந்தாள். சிறையிலிருந்த அந்தச் சமயத்தில், அவள் பல்வேறு சிறைகளில் அநேக கைதிகளுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்திருந்தாள்.

யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற விரும்புவதாக ஒருநாள் என்னிடம் சொன்னாள். சிறையை விட்டு அவள் வெளியே செல்வதற்கோ யாரும் உள்ளே வந்து அவளுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. அந்தச் சிறைச்சாலையின் படுமோசமான சூழலில் அவள் நான்கு வருடங்கள் பொறுமையாய் சகித்திருந்தாள். இந்தச் சமயத்தில் அவள் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்கு எது உதவியது? அந்த ஊரிலிருந்த சபையில் கூட்டம் துவங்கும் அதே நேரத்தில் இவள் தன் சிறை அறையில் அந்த நிகழ்ச்சிகளைச் சிந்தித்தாள். தவறாமல் தனிப்பட்ட விதத்தில் பைபிளைப் படிப்பதற்கும் ஜெபம் செய்வதற்கும்கூட நேரத்தை ஒதுக்கியிருந்தாள்.

காலப்போக்கில், வேறொரு கடுங்காவல் சிறைச்சாலைக்கு அவள் மாற்றப்பட்டாள். அங்கு நீச்சல் குளம் இருந்தது. இந்தப் புதிய சூழ்நிலை முழுக்காட்டுதல் பெற தனக்கு வாய்ப்பளிக்குமென அவள் நினைத்தாள். இறுதியில், அவள் ஆசைப்பட்டபடி, முழுக்காட்டுதல் பெற அனுமதி கிடைத்தது. அதனால்தான் முழுக்காட்டுதல் பேச்சையும் அவளுக்கு முழுக்காட்டுதலையும் கொடுக்க நான் அங்கு சென்றிருந்தேன். அவளுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் அவளோடு நான் இருந்தேன்.

கறைபடிந்த அவளுடைய கடந்த கால வாழ்க்கை, எய்ட்ஸ் நோயை அவளுக்குப் பரிசளித்தது. ஆனால், நல்ல நடத்தையின் காரணமாக, மார்ச், 1994-ல் அவளுடைய தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டாள். அம்மாவுடன் அவள் வசித்து வந்தாள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்துவிட்டாள்; அதுவரை ஒரு கிறிஸ்தவளாக செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களிலும் ஊக்கமாய்ப் பங்கெடுத்தாள்.

மனப்போராட்டத்தைச் சமாளித்தல்

கசப்பான கடந்த கால பாதிப்புகளிலிருந்து என்னாலும் முழுமையாய் தப்பிக்க முடியவில்லை. என் அப்பாவிடம் பட்ட சித்திரவதையும், வாலிப வயதில் மனம்போல் வாழ்ந்ததும் அழியா வடுக்களை என் மனதில் ஏற்படுத்தின. பெரியவனான பிறகு, அடிக்கடி குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகிப் போனேன், எதற்குமே லாயக்கற்றவன் என்று உணர ஆரம்பித்தேன். சில சமயங்களில் மனதளவில் மிகவும் துவண்டு போயிருக்கிறேன். இந்தச் சமயங்களில் மனதை அலைக்கழிக்கும் எண்ணங்களோடு மல்லுக்கட்ட கடவுளுடைய வார்த்தை எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. கடந்து போன வருடங்களில், ஏசாயா 1:18, சங்கீதம் 103:8-13 போன்ற வசனங்களை அடிக்கடி தியானித்தேன். இது, குற்றவுணர்வு அடிக்கடி தலைதூக்காமல் தடுக்க உதவியது.

எதற்கும் லாயக்கற்றவன் என்ற எண்ணத்தைச் சமாளிக்க நான் கையாளும் மற்றொரு ஆன்மீக ஆயுதம் ஜெபமாகும். கண்களில் கண்ணீர் முட்டிநிற்க எத்தனையோ முறை நான் யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம், 1 யோவான் 3:19, 20-லுள்ள வார்த்தைகள் என்னைப் பலப்படுத்துகின்றன. அது சொல்வதாவது: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”

“நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான” இருதயத்துடன் உள்ளப்பூர்வமாய் கடவுளை அணுகுவதால், நான் நினைத்தளவுக்கு அப்படியொன்றும் மோசமானவன் அல்ல என்பதை உணருகிறேன். கடந்த கால வாழ்க்கையை எண்ணி உண்மையாய் மனம் வருந்தி, அவருக்குப் பிரியமாய் நடக்க தங்களை மாற்றிக்கொண்டிருக்கிற எவரையும் யெகோவா ஒதுக்கித் தள்ள மாட்டாரென பைபிள் உறுதி அளிக்கிறது.—சங்கீதம் 51:17.

என்மீது எனக்குள்ள நம்பிக்கை குறைவதைப் போல் தெரிகையில், பிலிப்பியர் 4:8-ல் குறிப்பிடப்பட்டதைப் போன்ற ஆன்மீக விஷயங்களால், நல்ல எண்ணங்களால் என் மனதை நிரப்புவதற்கு முயற்சி செய்கிறேன். சங்கீதம் 23-ஐயும் மலைப்பிரசங்கத்தையும் மனப்பாடம் செய்திருக்கிறேன். சோர்வூட்டும் எண்ணங்கள் தலைதூக்குகையில் இந்த பைபிள் பகுதிகளை மனதிற்குள் சொல்லிப் பார்க்கிறேன். இது, முக்கியமாய் தூக்கத்தைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிற இரவு வேளைகளில் துணைபுரிகிறது.

என் மனைவியும் முதிர்ச்சி வாய்ந்த மற்ற கிறிஸ்தவர்களும் வாயாரப் பாராட்டிச் சொல்லும் வார்த்தைகளும்கூட எனக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. ஊக்கம் தரும் அவர்களுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது ஆரம்பத்தில் எனக்குக் கடினமாய் இருந்தபோதிலும், அன்பு “சகலத்தையும் நம்பும்” என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் உதவியிருக்கிறது. (1 கொரிந்தியர் 13:7) என் பலவீனங்களையும் வரையறைகளையும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள படிப்படியாய்க் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இந்த மனப்போராட்டம் ஒரு நல்ல காரியத்தையும் செய்திருக்கிறது. அனுதாபமிக்க பயணக் கண்காணியாக என்னை ஆக்கியிருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முழுநேர ஊழியர்களாய் நானும் என் மனைவியும் கிட்டத்தட்ட தலா 30 வருடங்களைச் செலவழித்திருக்கிறோம். மற்றவர்களுக்குச் சேவை செய்கையில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது; இது, மனச்சோர்வையும் கடந்த கால கசப்பான நினைவுகளையும் தணிக்கிற அருமருந்தாய் இருக்கிறது.

கடந்து வந்த பாதையை இப்போது திரும்பிப் பார்த்து, எனக்கு யெகோவா அருளியிருக்கிற அளவிலா ஆசீர்வாதங்களை யோசித்தால், “கர்த்தரை ஸ்தோத்திரி; . . . அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்[டுகிறார்]” என்று புகழ்ந்த சங்கீதக்காரனைப் போல் துதிக்கவே நானும் விரும்புகிறேன்.—சங்கீதம் 103:1-4. (w08 1/1)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சிடப்படுவதில்லை.

[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]

குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகிப் போனேன், எதற்குமே லாயக்கற்றவன் என்று உணர ஆரம்பித்தேன். இந்தச் சமயங்களில் மனதை அலைக்கழிக்கும் எண்ணங்களோடு மல்லுக்கட்ட கடவுளுடைய வார்த்தை எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது

[பக்கம் 27-ன் படங்கள்]

கெட்ட விஷயத்திலும் நல்ல விஷயத்திலும் என்னைப் பின்பற்றிய தம்பி ஹோசே லூயீஸும் நண்பன் மீகலும்

[பக்கம் 28, 29-ன் படம்]

1973-ல் மார்சீயோவின் குடும்பம்

[பக்கம் 29-ன் படம்]

சிறையில் மாரீவீ

[பக்கம் 30-ன் படம்]

என் மனைவி சோலிடாட்டுடன்