Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஈடிணையற்ற தகப்பன்

ஈடிணையற்ற தகப்பன்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

ஈடிணையற்ற தகப்பன்

மத்தேயு 3:16, 17

“அப்பா.” இதைப்போல, நம் மனதை ஆழமாகத் தொடும் வார்த்தைகள் வெகு சில மட்டுமே. தன் பிள்ளைகளை உண்மையில் நேசிக்கிற தகப்பன் அவர்கள் சிறப்பாய் வாழ உதவுகிறார். யெகோவா தேவனை நம்முடைய “பிதா” என்று பைபிள் குறிப்பிடுகிறது. இவ்வாறு அழைப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. (மத்தேயு 6:9) யெகோவா எப்படிப்பட்ட தகப்பன்? அதற்கான பதிலை அறிய, இயேசு முழுக்காட்டப்பட்டபோது அவரிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளை ஆராய்வோம். ஏனெனில், ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் பேசுகிற விதத்திலிருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பொ.ச. 29, அக்டோபர் மாத வாக்கில், இயேசு முழுக்காட்டுதல் பெற யோர்தான் நதிக்குச் சென்றார். அப்போது என்ன நடந்தது என்பதை பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் [“இவரை அங்கீகரித்திருக்கிறேன்,” NW] என்று உரைத்தது.” a (மத்தேயு 3:16, 17) யெகோவாவே நேரடியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார்; இந்தக் கனிவான வார்த்தைகளில் இருந்து அவர் எப்படிப்பட்ட தகப்பன் என்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். தம்முடைய மகனிடம் அவர் சொன்ன மூன்று விஷயங்களைக் கவனியுங்கள்.

முதலாவதாக, ‘இவர் என்னுடைய . . . குமாரன்’ என்ற வார்த்தைகளின்மூலம், ‘உன்னுடைய அப்பாவாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்றே ஒருவிதத்தில் யெகோவா சொன்னார். பெற்றோர் தங்களைப் பாராட்டவும், தங்கள்மீது கவனம் செலுத்தவும் வேண்டுமென்ற பிள்ளைகளின் ஏக்கத்தை விவேகமுள்ள ஒரு தகப்பன் தீர்த்து வைக்கிறார். யாரும் தங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று பிள்ளைகள் நினைத்துவிடக்கூடாது. ஆகவே, குடும்பத்தில் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். இயேசு வளர்ந்து பெரியவராகிவிட்டபோதிலும், தம்முடைய தகப்பனிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டைப் பெற்றபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

இரண்டாவதாக, “நேச” குமாரன் என தம்முடைய மகனைக் குறிப்பிடுவதன்மூலம், இயேசுவிடம் தாம் பிரியமாயிருப்பதை யெகோவா வெளிப்படையாய்த் தெரிவித்தார். சொல்லப்போனால், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று அவர் சொன்னார். அதுபோல, ஓர் அன்பான தகப்பன் தன் பிள்ளைகள்மீது உயிரையே வைத்திருப்பதை அவர்களிடம் சொல்கிறார். இத்தகைய நேசத்தைப் பொழியும் வார்த்தைகளோடு பாசத்தை வெளிக்காட்டும் செயல்களும் இருந்தால் அது பிள்ளைகள் சிறப்பாய் வளர்வதற்குத் துணைபுரிகிறது. தம்மை நேசிப்பதாகத் தம்முடைய தகப்பன் சொன்னதைக் கேட்டு இயேசு வெகுவாய் நெகிழ்ந்து போயிருப்பார், அல்லவா?

மூன்றாவதாக, “இவரை அங்கீகரித்திருக்கிறேன்” என்ற வார்த்தைகளின்மூலம், தம்முடைய மகனை ஆதரிப்பதை யெகோவா தெரிவித்தார். இது, ‘மகனே, நீ செய்திருக்கிற காரியத்தைப் பார்த்து நான் பூரித்துப்போயிருக்கிறேன்’ என யெகோவா சொன்னதைப் போன்றிருந்தது. அதுபோல, ஓர் அன்பான தகப்பன் தன்னுடைய பிள்ளைகள் சொல்கிற, செய்கிற நல்ல விஷயங்களைக் கவனித்து, தான் பூரித்துப்போவதைச் சொல்ல எப்போதும் தயாராயிருக்கிறார். இப்படித் தங்களுக்கு பெற்றோரின் ஆதரவு இருப்பதைப் பிள்ளைகள் அறியும்போது அவர்கள் தைரியத்தையும் மனவுறுதியையும் பெறுகிறார்கள். இயேசுவும்கூட, தம்முடைய தகப்பனின் ஆதரவு தமக்கிருப்பதைக் கேட்டபோது, நிச்சயமாகவே தைரியத்தைப் பெற்றிருந்திருப்பார்.

ஆம், யெகோவா ஈடிணையற்ற தகப்பன். இப்படிப்பட்ட தகப்பனுக்காக உங்கள் மனம் ஏங்குகிறதா? கவலைப்படாதீர்கள், யெகோவாவுடன் அன்பான பந்தத்தை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு எட்டாக்கனி அல்ல. விசுவாசத்தோடு அவரைப்பற்றிக் கற்றுக்கொண்டு, அவருக்குப் பிரியமாக வாழ முடிந்தவரை முயற்சி செய்கையில் அவர் உங்களுக்குப் பதில் அளிப்பார். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:8, NW) யெகோவா தேவனைப் போன்ற தலைசிறந்த தகப்பனுடன் நெருங்கிய பந்தம் வைத்திருப்பதைவிட வேறெது அதிக பாதுகாப்பு உணர்வை உங்களுக்கு அளிக்க முடியும்? (w08 1/1)

[அடிக்குறிப்பு]

a லூக்கா சுவிசேஷத்தில் உள்ள இதற்கு இணையான பதிவில், ‘நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்’ என்று யெகோவா சொன்னபோது, “நீர்,” “உம்மில்” என்ற சுட்டுப்பெயர்களை அவர் பயன்படுத்தினார்.—லூக்கா 3:22.