Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

சோதிடர்கள் இயேசுவைப் பார்க்க வந்தது எப்போது?

இயேசுவைப் பார்க்க “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” [‘சோதிட நூல் அறிஞர்,’ கத்தோலிக்க பைபிள் அடிக்குறிப்பு] வந்தார்கள் என்றும் அவருக்குப் பரிசுகளைக் கொடுத்தார்கள் என்றும் மத்தேயு சுவிசேஷம் சொல்கிறது. (மத்தேயு 2:1-12) ஆனால், குழந்தையாய் இருந்த இயேசுவைப் பார்க்க எத்தனை சாஸ்திரிகள், அதாவது சோதிடர்கள் வந்தார்கள் என்று அங்கு சொல்லப்படவில்லை. பாரம்பரிய கருத்தின்படி மூன்றுபேர் வந்தார்கள் என்று நம்புவதற்கு எந்தவொரு ஆணித்தரமான ஆதாரமும் இல்லை. அதோடு, பைபிளில் அவர்களுடைய பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.

மத்தேயு 2: 11-ஐப்பற்றி நியு இன்டர்நேஷனல் வர்ஷன் ஸ்டடி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பாரம்பரிய கருத்துக்கு முரணாக, இயேசு பிறந்த இரவன்று அவரை மாட்டு தொழுவத்தில் வந்து பார்த்தவர்கள் மேய்ப்பர்களே தவிர சோதிடர்கள் அல்ல. இயேசு பிறந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் சோதிடர்கள் சிறு ‘பிள்ளையாக’ இருந்த அவரை அவரது ‘வீட்டில்’ சந்தித்தார்கள்.” சிறு குழந்தையான இயேசுவைக் கொல்வதற்காக பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்யும்படி ஏரோது உத்தரவு போட்டதிலிருந்து இது ஊர்ஜிதமாகிறது. ‘சாஸ்திரிகளிடத்தில் [சோதிடர்களிடத்தில்] திட்டமாய் விசாரித்த காலத்தை’ கணக்கிட்டே இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொலை செய்யும்படி அவன் உத்தரவு போட்டான்.—மத்தேயு 2:16.

இயேசு பிறந்து நாற்பதாவது நாளில் மரியாள் அவரை எருசலேம் ஆலயத்திற்கு எடுத்து சென்றபோது வெறும் இரண்டு பறவைகளை மட்டுமே காணிக்கையாகக் கொடுத்ததாய் பைபிள் சொல்கிறது; இயேசு பிறந்த இரவன்று இந்த சோதிடர்கள் வந்து அவருக்கு பொன்னையும் விலையுயர்ந்த பிற பரிசுகளையும் அளித்திருந்தால் மரியாள் இந்த எளிய காணிக்கையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? (லூக்கா 2:22-24) ஆட்டுக்குட்டியை வழங்கும் அளவுக்கு வசதியில்லாத ஏழைகள், இரண்டு பறவைகளை வழங்கலாம் என்பது நியாயப்பிரமாணத்தில் உள்ள ஓர் ஏற்பாடாகும். (லேவியராகமம் 12:6-8) என்றாலும் இந்த விலையுயர்ந்த பரிசுகள், இயேசுவின் குடும்பம் எகிப்தில் இருந்த சமயத்தில் அவர்களுடைய செலவுக்கு கைகொடுத்து உதவியிருக்கும்.—மத்தேயு 2:13-15.

லாசருவின் கல்லறைக்கு இயேசு வந்துசேர ஏன் நான்கு நாட்கள் எடுத்தன?

இயேசு திட்டமிட்டே அப்படி வந்ததாகத் தெரிகிறது. ஏன் அப்படிச் சொல்லலாம்? யோவான் 11-ஆம் அதிகாரத்தில் உள்ள பதிவைச் சற்று கவனியுங்கள்.

பெத்தானியா ஊரைச் சேர்ந்தவரும் இயேசுவின் நண்பருமான லாசரு, வியாதிப்பட்டு மோசமான நிலையில் இருந்தபோது அவருடைய சகோதரிகள் இயேசுவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார்கள். (வசனங்கள் 1-3) அந்த சமயத்தில், இயேசு பெத்தானியாவிலிருந்து ஏறக்குறைய இரண்டு நாள் பயண தூரத்தில் இருந்தார். (யோவான் 10:40) இயேசுவிற்கு செய்தி கிடைத்த அந்த சமயத்தில் லாசரு இறந்திருக்க வேண்டும். இயேசு என்ன செய்தார்? ‘தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கி,’ பிறகு பெத்தானியாவுக்குச் சென்றார். (வசனங்கள் 6, 7) இப்படி, இரண்டு நாள் தங்கியிருந்ததாலும், பிறகு இரண்டு நாள் பயணம் செய்ததாலும் லாசரு இறந்து நான்கு நாள் கழித்தே அவர் கல்லறைக்கு வந்து சேர்ந்தார்.—வசனம் 17.

இதற்கு முன்பு இயேசு இரண்டு பேரை உயிர்த்தெழுப்பியிருக்கிறார். ஒருவரை, இறந்து சிறிது நேரத்திற்குள்ளே உயிர்த்தெழுப்பினார், மற்றொருவரை, இறந்து சற்று நேரம் சென்றபின் அதே நாளில் உயிர்த்தெழுப்பினார். (லூக்கா 7:11-17; 8:49-55) ஆனால், இறந்து நான்கு நாட்கள் ஆன ஒருவரை, அதுவும் உடல் அழுகிப்போக ஆரம்பித்திருக்கும் ஒருவரை அவரால் உயிர்த்தெழுப்ப முடிந்திருக்குமா? (வசனம் 39) யூதர்கள் மத்தியில் நிலவிய ஒரு நம்பிக்கையைப்பற்றி பைபிள் ஆராய்ச்சி புத்தகம் ஒன்று குறிப்பிடுகிற விஷயம் ஆர்வத்திற்குரியது; அது இவ்வாறு தெரிவிக்கிறது: ‘ஒருவர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டால் அவர் மீண்டும் உயிரடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை; ஏனெனில், அதற்குள் அவருடைய உடல் நிச்சயம் அழுகிப்போக ஆரம்பித்திருக்கும், செத்தவரின் உடலுக்கு மேலே மூன்று நாட்களாக சுற்றிக்கொண்டிருப்பதாகக் கருதப்படும் ஆத்துமாவும் பிரிந்து போயிருக்கும்.’

கல்லறைக்கு வந்திருந்தவர்களில் யாரேனும் இப்படி நினைத்திருந்தால் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்கு வல்லமை இருந்ததை அவர்கள் சீக்கிரத்தில் காண்பார்கள். திறக்கப்பட்ட கல்லறைக்கு முன்பு நின்றுகொண்டு “லாசருவே, வெளியே வா” என்று இயேசு சப்தமாகக் கூப்பிட்டார். அப்பொழுது, “மரித்தவன் வெளியே வந்தான்.” (வசனங்கள் 43, 44) அநேகர் நம்புவதுபோல் இறந்த பிறகும் ஆத்துமா தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற தவறான கருத்து அல்ல, ஆனால் உயிர்த்தெழுதலே இறந்தவர்களுக்கான உண்மையான நம்பிக்கை.—எசேக்கியேல் 18:4; யோவான் 11:25.(w08 1/1)