Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்போது கடவுளுடைய ராஜ்யம் வரும்?

எப்போது கடவுளுடைய ராஜ்யம் வரும்?

எப்போது கடவுளுடைய ராஜ்யம் வரும்?

“ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்”? (அப்போஸ்தலர் 1:6) இயேசு தம் ராஜ்யத்தை எப்போது ஸ்தாபிப்பார் என்பதைத் தெரிந்துகொள்வதில் அவருடைய அப்போஸ்தலர் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் மக்கள் மனதில் அலைமோதும் கேள்வி இதுதான்: கடவுளுடைய ராஜ்யம் எப்போது வரும்?

இயேசு முக்கியமாக அந்த ராஜ்யத்தைப் பற்றியே பிரசங்கித்ததால், மேலே எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் நிச்சயமாகவே பதில் அளித்தார்! தம்முடைய “பிரசன்னம்” என்பதாக அவர் சொன்ன ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைப்பற்றி அவர் பலமுறை பேசினார். (மத்தேயு 24:37, NW) அவருடைய பிரசன்னத்திற்கும் மேசியாவால் ஆளப்படும் அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அவருடைய பிரசன்னம் எதைக் குறிக்கிறது? கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்பற்றி பைபிள் குறிப்பிடும் நான்கு உண்மைகளை இப்போது கவனிக்கலாம்.

1. கிறிஸ்துவின் பிரசன்னம் அவருடைய மரணத்திற்கு வெகு காலத்திற்குப் பிறகு துவங்கும். ஓர் உவமையில், “ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்ட” ஒரு மனிதனுக்கு இயேசு தம்மை ஒப்பிட்டார். (லூக்கா 19:12) உவமையின் வடிவில் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? இறந்து, உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு இயேசு, “தூரதேசத்துக்கு” அதாவது, பரலோகத்திற்குப் போனார். “வெகு காலமான பின்பு”தான் அவர் ராஜ்ய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வார். இந்தத் தகவலை இது போன்ற மற்றொரு உவமையில் அவர் தீர்க்கதரிசனமாக உரைத்தார்.—மத்தேயு 25:19.

இயேசு பரலோகத்திற்குச் சென்று சில ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “இவரோ, [இயேசுவோ] பாவங்களுக்காக ஒரேபலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 10:12, 13) இயேசு பரலோகத்திற்குச் சென்ற பிறகு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டபடி, பரலோக ராஜ்யத்தின் அரசராக தம்முடைய குமாரனை யெகோவா தேவன் முடிசூட்டியபோது, இயேசு காத்திருந்த காலப்பகுதி முடிவுக்கு வந்தது. அப்போதுதான் கிறிஸ்துவின் பிரசன்னம் ஆரம்பமானது. இந்த முக்கியமான நிகழ்ச்சியை மனிதர்கள் காண்பார்களா?

2. அவருடைய பிரசன்னம் மனித கண்களுக்குப் புலப்படாது. இயேசு தம்முடைய பிரசன்னத்திற்கான அடையாளத்தைப்பற்றிச் சொன்னார் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 24:3, NW) அவருடைய பிரசன்னத்தை மனிதர் தங்கள் கண்களால் காண முடியுமென்றால், அடையாளம் எதற்கு? உதாரணமாக, நீங்கள் கடற்கரைக்குப் போய்க்கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். பாதையில் ஆங்காங்கே கடற்கரைக்குப் போகும் வழியை அடையாளம் காட்டும் பலகைகளை நீங்கள் பார்க்கலாம். கடைசியாக, நீங்கள் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். தண்ணீரில் கால் நனைத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண் முன்னால் பெருங்கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. கொட்டை எழுத்தில் “கடல்” என்று எழுதப்பட்ட பலகை அங்கு இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். உங்கள் கண்ணால் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்ளும் ஒன்றைச் சுட்டிக்காட்ட அடையாள பலகை எதற்கு?

தம்முடைய பிரசன்னத்திற்கான அடையாளத்தை இயேசு கொடுத்தார். மனிதர் தங்களுடைய கண்களால் காண முடிந்த ஒன்றைக் குறிப்பிடுவதற்காக அல்ல, மாறாக பரலோகத்தில் நடக்கவிருந்த ஒன்றைப் புரிந்துகொள்ள உதவுவதற்காகவே அவர்களுக்கு அடையாளத்தைக் கொடுத்தார். இதனால்தான், “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் [“கண்களுக்குப் புலப்படும் முறையில்,” பொது மொழிபெயர்ப்பு] வராது” என்று இயேசு கூறினார். (லூக்கா 17:20) அப்படியானால், கிறிஸ்துவின் பிரசன்னம் ஆரம்பமானதை பூமியில் உள்ளவர்களுக்கு இந்த அடையாளம் எவ்வாறு சுட்டிக்காட்டும்?

3. இயேசுவுடைய பிரசன்னத்தின்போது பூமியில் பிரச்சினைகள் மிக அதிகமாய் இருக்கும். பரலோகத்தில் அரசராக அவர் பிரசன்னமாகியிருக்கும்போது, பூமியில் போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், பயங்கரமான வியாதிகள், அக்கிரமம் ஆகியவை அதிகமாயிருக்கும் என்று இயேசு கூறினார். (மத்தேயு 24:7-12; லூக்கா 21:10, 11) இந்தத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்ன? ராஜாவாக கிறிஸ்துவின் பிரசன்னம் ஆரம்பமாகிவிட்டதால் சாத்தானுக்கு இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே இருக்கிறது. இதை அறிந்த ‘இந்த உலகத்தின் அதிபதியான’ சாத்தான் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 12:31; வெளிப்படுத்துதல் 12:9, 12) சாத்தான் கடுங்கோபத்தோடு இருப்பதையும் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் தெரிந்துகொள்வதற்கு கண்கூடான அத்தாட்சிகள் நம்முடைய காலத்தில் ஏராளமாயிருக்கின்றன. அதுவும் 1914 முதற்கொண்டு, இந்த அடையாளங்கள் உலகெங்கும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகமாயிருக்கின்றன. இந்த வருடத்தை சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்பதாக சரித்திராசிரியர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

இவை அனைத்தும் கெட்ட செய்திகளைப் போலத் தோன்றலாம். ஆனால், இவை கெட்ட செய்திகளல்ல. இவ்விஷயங்கள் மேசியாவின் ஆட்சி பரலோகத்தில் ஆரம்பமாகிவிட்டதைக் குறிக்கின்றன. வெகு சீக்கிரத்தில், இந்த அரசாங்கம் பூமி முழுவதும் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். என்றாலும், இதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, இதன் குடிமக்களாவதற்கு, இதைப்பற்றி மக்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டுமே. இதை அவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்?

4. உலகெங்கும் நடைபெறுகிற பிரசங்க வேலை இயேசுவுடைய பிரசன்னத்தை அடையாளப்படுத்துகிறது. தம்முடைய பிரசன்னத்தின் காலம், ‘நோவாவின் காலத்தைப்’ போன்று இருக்கும் என்று இயேசு கூறினார். a (மத்தேயு 24:37-39) நோவா பேழையைக் கட்டுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பேதுரு 2:5) கடவுள் வெகு விரைவில் நியாயந்தீர்க்கப் போவதைக் குறித்து மக்களை நோவா எச்சரித்தார். தம்முடைய பிரசன்னத்தின்போது இத்தகைய எச்சரிக்கும் வேலையைத் தம்முடைய சீஷர்களும் செய்வார்கள் என்று இயேசு கூறினார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்.—மத்தேயு 24:14.

முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, கடவுளுடைய ராஜ்யம் பூமியில் உள்ள எல்லா அரசாங்கங்களையும் அழித்துவிடும். இந்தப் பரலோக அரசாங்கம் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இது, வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பித்து, அந்த ராஜ்யத்தின் குடிமக்களாக ஆவதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. சரி, அந்தச் செய்திக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலிப்பீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி!

கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமா?

இயேசு பிரசங்கித்த செய்தி மக்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஏதேன் தோட்டத்தில் கலகம் ஏற்பட்ட பிறகு, எல்லாவற்றையும் சரிசெய்யப் போகிற அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது யெகோவாவின் நோக்கமாய் இருந்தது. மனிதர் பூங்காவன பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழவேண்டும் என்ற நோக்கமே ஆரம்பத்தில் கடவுளுடைய மனதில் இருந்தது. இந்த நோக்கத்தை அந்த அரசாங்கத்தின்மூலம் நிறைவேற்றி, உண்மையுள்ள மனிதர் பரதீஸ் பூமியில் வாழ அவர் வழிசெய்வார். பல காலத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த அரசாங்கம் இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதைவிட பெரிய நற்செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது புரியாத புதிரல்ல; நிஜம்.

இப்போது, தம்முடைய எதிரிகளின் மத்தியில் கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர் ஆட்சி செய்கிறார். (சங்கீதம் 110:2) இந்த மோசமான உலகம் கடவுளுடைய வழிநடத்துதலை ஒதுக்கித் தள்ளுகிறது. ஆனால், அதன் மத்தியிலும் கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டு, அவரை “ஆவியோடும் உண்மையோடும்” வழிபட விரும்புகிறவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது அவருடைய நோக்கமாகும். (யோவான் 4:24) இந்த நோக்கத்தை மேசியா நிறைவேற்றி வருகிறார். இனம், வயது, சமூக பின்னணி எதுவாயினும், கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக, முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற இந்த மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்கப்படுத்துகிறோம். கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி இப்போதே கற்றுக்கொள்ளுங்கள். அப்போது, அதன் நீதியான ஆட்சியின்கீழ் நீங்களும் என்றென்றுமாக வாழ முடியும்.—1 யோவான் 2:17. (w08 1/1)

[அடிக்குறிப்பு]

a “பிரசன்னம்” என்ற வார்த்தையை சில பைபிள் மொழிபெயர்ப்புகள், “வருகை” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. “வருகை” என்பது குறுகிய நேரம் நிகழும் சம்பவத்தைக் குறிக்கும். இது சரியான அர்த்தம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. தம்முடைய பிரசன்னத்தை இயேசு, நோவாவின் காலத்தில் வந்த ஜலப்பிரளயத்தோடு ஒப்பிடாததைக் கவனியுங்கள். ஜலப்பிரளயம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஆனால், “நோவாவின் காலம்” என்று சொன்னபோது, ஒரு முக்கிய காலப்பகுதியை இயேசு குறிப்பிட்டார். நோவாவின் காலத்தைப் போன்றே, கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போதும், ஜனங்கள் தங்கள் அன்றாட காரியங்களில் மும்முரமாக மூழ்கிவிடுவார்கள், கொடுக்கப்படுகிற எச்சரிப்பைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

நாம் அன்றாடம் கேட்கும் கெட்ட செய்திகள் அனைத்தும், வெகு சீக்கிரத்தில் நல்லது நடக்கும் என்பதற்கான அடையாளங்களாகும்

[படத்திற்கான நன்றி]

விமானத் தாக்குதலை எதிர்கொள்ள உதவும் துப்பாக்கி: U.S. Army photo