எமது வாசகருக்கு
எமது வாசகருக்கு
இந்த இதழ் முதற்கொண்டு, காவற்கோபுர பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்திருப்பதைத் தெரிவித்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். என்னென்ன மாற்றங்களெனச் சொல்வதற்கு முன்பாக, எந்தெந்த அம்சங்கள் மாறாதிருக்கின்றன என்பதை முதலில் சொல்லிவிடுகிறோம்.
இந்தப் பத்திரிகையின் பெயர் மாறவில்லை; காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்ற பெயரிலேயே இனியும் வெளிவரும். ஆகவே, காவற்கோபுரம் தொடர்ந்து உண்மைக் கடவுளான யெகோவாவைக் கனப்படுத்தும், அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதன்மூலம் வாசகர்களுக்கு ஆறுதலளிக்கும். இந்த இதழில் பக்கங்கள் 5-9-ல் உள்ள கட்டுரைகள் கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்னவென்பதையும் அது எப்போது வருமென்பதையும் விளக்குகின்றன. அதோடு, காவற்கோபுரம் பல பத்தாண்டுகளாக செய்து வந்திருப்பதைப் போலவே இனியும் இயேசு கிறிஸ்துவின்மீது வாசகர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்தும்; பைபிள் சத்தியத்தை ஆதரிக்கும், பைபிள் தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் தற்போதைய உலக சம்பவங்களுக்கான காரணத்தை விளக்கும்.
சரி, என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழில் உள்ள ஆர்வமூட்டும் புதிய அம்சங்களை இப்போது தெரிவிக்கிறோம். a
மக்களைச் சிந்திக்க வைக்கும் அநேக பகுதிகள் இந்த இதழில் இடம்பெறும். “உங்களுக்குத் தெரியுமா?” என்ற கட்டுரை, சில பைபிள் பதிவுகளைப் புரிந்துகொள்ள உதவும் சுவாரஸ்யமான பின்னணி தகவல்களை அளிக்கும். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்” என்ற கட்டுரை, குறிப்பிட்ட பைபிள் வசனங்களில் இருந்து யெகோவாவைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைச் சிறப்பித்துக் காட்டும். “வாசகரின் கேள்வி” என்ற பகுதி பொதுவான பைபிள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். உதாரணமாக, இந்த இதழில் சிந்திக்கப்பட்டுள்ள, “கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இருதயத்தில் இருக்கிறதா?” என்ற கேள்வியைக் குறித்து அநேகர் யோசித்திருக்கிறார்கள். இதற்கான பதிலை 13-ஆம் பக்கத்தில் காணலாம்.
குடும்பங்களுக்கு உதவுகிற சில பகுதிகள் தொடர்ச்சியாக இடம்பெறும். “குடும்ப மகிழ்ச்சிக்கு . . .” என்ற பகுதி, சில குடும்ப பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தீர்க்க பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவும் என்பதைக் குறிப்பிடும். “பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற கட்டுரையை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாசிக்க வேண்டும். இளைஞர்கள் பைபிளை ஆய்வு செய்வதற்கு உதவும் விதத்தில், “இளம் வாசகருக்கு” என்ற ஆர்வமூட்டும் பகுதி வெளிவரும்.
கூடுதலான சில பகுதிகளும் இந்தக் காலாண்டு இதழில் இடம்பெறும். “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்ற பகுதி, பைபிள் கதாபாத்திரம் ஒன்றின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி நம்மை ஊக்கப்படுத்தும். உதாரணமாக, இந்த இதழில், பக்கங்கள் 18 முதல் 21-ல், எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் நடந்த உள்ளத்தைத் தொடும் சம்பவத்தை வாசிப்பீர்கள்; அவருடைய விசுவாசத்தை எப்படிப் பின்பற்றலாம் என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். மிஷனரிகளும் உலகெங்கும் உள்ள மற்றவர்களும் தங்கள் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பகுதி ஒன்றும் இடம்பெறும். “இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்” என்ற பகுதி, அடிப்படை பைபிள் சத்தியங்களை எளிமையாக விளக்கும்.
பைபிளை மதிக்கிற, அது உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிற வாசகரின் ஆர்வப்பசியை காவற்கோபுரம் தொடர்ந்து திருப்தி செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாயிருக்கிறோம். இந்தப் பத்திரிகை, பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற உங்கள் தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம்.
பிரசுரிப்போர்
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம் இனிமேல் இரண்டு பதிப்புகளாக வெளிவரும். காலாண்டு இதழ் பொதுமக்களுக்காகத் தயாரிக்கப்படும். 15-ஆம் தேதியிடப்பட்ட இதழ், படிப்பு இதழாக வெளிவரும். இதை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபை கூட்டங்களில் பயன்படுத்துவார்கள். இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்.