Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

இயேசு எதைப்பற்றி முக்கியமாகப் பிரசங்கித்தார்? கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிப் பிரசங்கிக்கவே தாம் வந்ததாக அவர் கூறினார். (லூக்கா 4:43) அவர் மக்களிடம் ராஜ்யத்தைப்பற்றி அடிக்கடி பேசினார். எதைப்பற்றி சொல்கிறார் என்று தெரியாமல் அவர்கள் குழம்பினார்களா? ராஜ்யம் என்றால் என்னவென்று அவரிடம் கேட்டார்களா? இல்லை. அப்படிப்பட்ட கேள்வி எதுவும் எழுந்ததாக சுவிசேஷங்களில் எங்குமே சொல்லப்படவில்லை. அப்படியானால், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததா?

ஆம், யூதர்கள் பரிசுத்தமாய்க் கருதிய பூர்வ கால வேதவாக்கியங்களில் அந்த ராஜ்யத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. ராஜ்யம் என்றால் என்னவென்பதும், அது என்ன செய்யப் போகிறதென்பதும் அவற்றில் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. யூதர்களைப் போல நாமும் பைபிளை வாசித்தால் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி இன்னுமதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். ராஜ்யத்தைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிற ஏழு உண்மைகளை இப்போது கவனிக்கலாம். அவற்றில் மூன்று உண்மைகளை இயேசுவின் காலத்திலும் அதற்கு முன்னான காலத்திலும் வாழ்ந்த யூதர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அடுத்த மூன்று உண்மைகளை இயேசுவோ அவருடைய அப்போஸ்தலரோ முதல் நூற்றாண்டில் தெரிவித்தார்கள். கடைசி உண்மையை நம்முடைய காலத்தில் தெளிவாய் புரிந்திருக்கிறோம்.

1. கடவுளுடைய ராஜ்யம் என்பது உண்மையான ஓர் அரசாங்கம், அது என்றென்றும் நிலைத்திருக்கும். உண்மையுள்ள மனிதருக்காக ஒரு மீட்பரை கடவுள் அனுப்புவார் என்ற தகவலை பைபிளிலுள்ள முதல் தீர்க்கதரிசனம் தெரிவித்தது. இந்த மீட்பர், “வித்து” என்று அழைக்கப்படுகிறார். ஆதாமும் ஏவாளும் சாத்தானும் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டபோது தலைதூக்கிய பயங்கர பிரச்சினைகள் அனைத்தையும் இவர் சரிசெய்வார். (ஆதியாகமம் 3:15) வெகு காலத்திற்குப் பிறகு, உண்மையுள்ள தாவீது ராஜாவிடம் இந்த ‘வித்துவை,’ அதாவது மேசியாவைப் பற்றிய ஆர்வமூட்டும் சில தகவல்கள் சொல்லப்பட்டன. அந்த மேசியா ஒரு ராஜ்யத்தை ஆளுவார். இது, மற்ற எந்த ராஜ்யத்திலிருந்தும் வித்தியாசமானதாய் இருக்கும், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.—2 சாமுவேல் 7:12-14.

2. எல்லா மனித அரசாங்கங்களுக்கும் கடவுளுடைய ராஜ்யம் முற்றுப்புள்ளி வைக்கும். அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, ஒன்றன்பின் ஒன்றாக வரவிருந்த உலக வல்லரசுகளை தானியேல் தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் கண்டார். அந்தத் தரிசனத்தின் உச்சக்கட்ட காட்சியைக் கவனியுங்கள்: “அந்த [கடைசி] ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” ஆக, இந்த உலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்களும், அதாவது அரசாங்கங்களும் இல்லாமல் போய்விடும்; அவற்றின் போர்களும், ஒடுக்குமுறைகளும், ஊழலும் சுவடுதெரியாமல் துடைத்தழிக்கப்படும். அதோடு, கடவுளுடைய ராஜ்யம் விரைவில் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யும் என்றும் தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (தானியேல் 2:44) இது நிஜமான அரசாங்கமாக இருப்பதோடு, இந்தப் பூமியை ஆளுகிற ஒரே அரசாங்கமாகவும் இருக்கும். a

3. போர், வியாதி, பஞ்சம், ஏன் மரணத்தையும்கூட கடவுளுடைய ராஜ்யம் நீக்கிப்போடும். இந்தப் பூமில் கடவுளுடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்பதை வியப்பூட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இதுவரை எந்த மனித அரசாங்கமும் அமைப்பும் செய்திராத, இனியும் செய்ய முடியாதவற்றை அந்த அரசாங்கம் செய்யும். போர் கருவிகளே இனி இல்லாமல் போகும் காலத்தை சற்று எண்ணிப் பாருங்கள்! “அவர் [கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9) இனியும் மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ, எந்தவொரு வியாதியோ இருக்காது! “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) பஞ்சமோ, உணவு தட்டுப்பாடோ, ஊட்டச்சத்து குறைவோ, பட்டினியோ இருக்காது. ‘நாட்டில் தானியம் மிகுந்திடும்.’ (சங்கீதம் 72:16, பொது மொழிபெயர்ப்பு) சவ அடக்கங்களோ, கல்லறைகளோ, பிணவறைகளோ, மரணம் தரும் வேதனையோ இருக்காது. நம்மை விடாது துரத்திய மரணமென்னும் எதிரிக்கு இறுதியில் சாவுமணி அடிக்கப்பட்டிருக்கும். கடவுள், ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’—ஏசாயா 25:8.

4. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் கடவுளுடைய ராஜ்யத்தை ஆளுவார். மேசியா தானாகவே அரியணையில் அமர்ந்துகொள்ளவுமில்லை, அபூரண மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படவுமில்லை. அவர் யெகோவா தேவனால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேசியா, கிறிஸ்து ஆகிய பட்டப்பெயர்களே இதைத் தெரிவிக்கின்றன. இவை இரண்டுமே, “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்ற அர்த்தத்தைத் தருகின்றன. இந்த அரசர் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார், அதாவது விசேஷ பொறுப்பை யெகோவாவிடமிருந்து பெற்றிருக்கிறார். “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்” என்று அவரைக் குறித்து கடவுள் சொல்லியிருக்கிறார். (ஏசாயா 42:1; மத்தேயு 12:17, 18) நமக்கு எப்படிப்பட்ட அரசர் வேண்டுமென்று நம்முடைய படைப்பாளருக்குத்தானே நன்றாகத் தெரியும்!

5. கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர், அந்தப் பொறுப்பை ஏற்க தாம் தகுதியானவரே என்பதை எல்லா மனிதர்களுக்கும் நிரூபித்திருக்கிறார். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, தாமே வேதவாக்கியங்களில் முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதை நிரூபித்தார். கடவுள் தேர்ந்தெடுத்திருந்த வம்சாவளியில் அவர் பிறந்தார். (ஆதியாகமம் 22:18; 1 நாளாகமம் 17:11; மத்தேயு 1:1) நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக மேசியாவைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை அவர் பூமிக்கு வந்தபோது நிறைவேற்றினார். அவர்தான் மேசியா என்று பரலோகத்திலிருந்து அடையாளம் காட்டப்பட்டார். எப்படி? அவர் தம்முடைய சொந்த குமாரன் என்று பரலோகத்திலிருந்து கடவுளே சொன்னதன்மூலம் அடையாளம் காட்டப்பட்டார். இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதைத் தேவதூதர்களும் சொன்னார்கள். பெரும்பாலும், நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் முன் இயேசு அற்புதங்களை நிகழ்த்தினார். இவற்றைக் கடவுள் அளித்த சக்தியினால் செய்தார். b தாம் எப்படிப்பட்ட அரசராக இருப்பார் என்பதை இயேசு திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டினார். மக்களுக்கு உதவுவதற்கான சக்தி மட்டுமல்ல, அதற்கான விருப்பமும் அவருக்கு இருந்தது. (மத்தேயு 8:1-3) அவர் தன்னலமற்றவர், கரிசனையுள்ளவர், தைரியமானவர், மனத்தாழ்மையுள்ளவர். பூமியிலிருந்தபோது அவர் செய்த காரியங்கள் எல்லாரும் படித்து தெரிந்துகொள்வதற்காக அவை பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

6. கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவோடுகூட 1,44,000 பேர் அரசாளுவார்கள். அப்போஸ்தலர் உட்பட வேறு சிலரும் பரலோகத்தில் தம்மோடுகூட ஆட்சி செய்வார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். இவர்களை அவர், “சிறுமந்தை” என்று அழைத்தார். (லூக்கா 12:32) இந்தச் சிறுமந்தையில் மொத்தம் 1,44,000 பேர் இருப்பார்களென அப்போஸ்தலன் யோவானுக்குப் பிற்பாடு தெரிவிக்கப்பட்டது. சந்தோஷத்தைத் தரும் பொறுப்பு அவர்களுக்கு பரலோகத்தில் கொடுக்கப்படும்; அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து அரசாண்டு, ஆசாரியர்களாகவும் சேவை செய்வார்கள்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.

7. இப்போது பரலோகத்தில் அரசாளுகிற கடவுளுடைய ராஜ்யம், பூமி முழுவதையும் ஆட்சி செய்யத் தயாராயிருக்கிறது. இந்தக் கடைசி உண்மைதான் நம்முடைய ஆர்வத்தைப் பெரிதும் தூண்டுகிற உண்மையாகும். பரலோகத்தில் இயேசுவுக்கு அரசதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பைபிள் ஏராளமான அத்தாட்சிகளைத் தருகிறது. இப்போது, நம் நாட்களில் அவர் பரலோகத்தில் அரசாளுகிறார். சீக்கிரத்தில் பூமி முழுவதையும் அவர் ஆட்சி செய்யப் போகிறார்; முன்பு குறிப்பிடப்பட்ட மகத்தான தீர்க்கதரிசனங்களை அப்போது அவர் நிறைவேற்றுவார். கடவுளுடைய ராஜ்யம் இப்போது அரசாளுகிறது என்று நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? இந்தப் பூமியை எப்போது அது ஆளத் துவங்கும்? (w08 1/1)

[அடிக்குறிப்புகள்]

a கடவுளுடைய ராஜ்யம் என்பது நம் இருதயத்தில் இருக்கிறது என பலருக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது சரியல்ல என்பதை இத்தகைய தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. பக்கம் 13-ல் உள்ள “வாசகரின் கேள்வி” என்ற கட்டுரையைக் காண்க.

b உதாரணத்திற்கு, மத்தேயு 3:17; லூக்கா 2:10-14; யோவான் 6:5-14 ஆகியவற்றைக் காண்க.