Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்

யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்

யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்

“நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்” என்று எதிர்காலத்தைக் குறித்து துல்லியமாக முன்னறிவிக்க வல்லவராகிய யெகோவா சொல்கிறார்.—ஏசாயா 46:9, 10.

எதிர்காலத்தைத் துல்லியமாக அறிவிப்பது மனிதனால் முடியாத காரியம் என்பது யாவரும் அறிந்த விஷயமே. அப்படியிருக்க, பைபிள் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் என்றால், அது உரிமைபாராட்டுவதுபோல் கடவுள்தான் அதன் நூலாசிரியரா என்பதை உண்மையைத் தேடும் அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமல்லவா? எனவே, ஏற்கெனவே நிறைவேறியுள்ள சில பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் இப்போது கவனிக்கலாம்.

பண்டைய சமுதாயங்கள்

ஏதோம், மோவாப், அம்மோன், ஆகிய தேசங்கள் நித்தியத்திற்கும் அழிந்துபோகும் என்பதாக கடவுள் முன்னுரைத்தார். (எரேமியா 48:42; 49:17, 18; 51:24-26; ஒபதியா 8, 18; செப்பனியா 2:8, 9) அந்தத் தேசத்தார், தனித்தனி ஜனத்தொகுதிகளாக இல்லாமலேயே போனது, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை துல்லியமாக இருப்பதற்கு சான்று பகருகிறது.

எவ்வளவு சிறப்பாக கொடிகட்டி பறக்கும் தேசமும் என்றாவது ஒருநாள் இல்லாமற்போகும் என யார் வேண்டுமானாலும் முன்னறிவிக்கலாமே என்று ஒருவர் வாதாடலாம். ஆனால், அப்படி வாதாடுபவர் ஒரு முக்கியமான உண்மையை கவனிக்க தவறுகிறார். அது என்னவென்றால், பைபிள் ஒரு தேசத்தின் அழிவைப்பற்றி மட்டுமே சொல்லாமல் அதைவிட ஒருபடி மேலே சென்று அந்த அழிவைப் பற்றிய கூடுதலான விவரங்களையும் அளித்தது. உதாரணத்திற்கு, பாபிலோன் எப்படி வீழ்ச்சி அடையும் என்பதற்கான விவரங்களை பைபிள் கொடுத்தது. மேதியர்கள் அந்த நகரத்தைக் கைப்பற்றுவார்கள், படையெடுத்து வரும் வீரர்கள் கோரேசின் தலைமையில் செயல்படுவார்கள், அந்த நகருக்குப் பாதுகாப்பாய் இருந்த நதி வற்றிப்போகும்படி செய்யப்படும் என்றெல்லாம் பைபிள் முன்னறிவித்தது.—ஏசாயா 13:17-19; 44:27–45:1.

கைப்பற்றப்படும் எல்லா தேசங்களும் அல்லது அங்குள்ள எல்லா மக்களும் இல்லாமற்போவார்கள் என்று பைபிள் முன்னறிவிக்கவில்லை. மாறாக, பாபிலோனியர் எருசலேமை முற்றுகையிடுவார்கள் என்று சொன்னபோது, எருசலேம் திரும்ப நிலைநாட்டப்படும் என்றும் கடவுள் சொன்னார்; சிறைபிடித்து சென்றவர்களை பாபிலோனியர்கள் விடுவித்ததாக சரித்திரமே கிடையாது, இருப்பினும் கடவுள் அவ்வாறு அறிவித்தார். (எரேமியா 24:4-7; 29:10; 30:18, 19) இது நிறைவேறியது; யூத சந்ததியினர் தனியொரு ஜனமாக இன்றுவரை இருக்கிறார்கள்.

மேலும், எகிப்து ஓர் உலக வல்லரசாக இருப்பதிலிருந்து வீழ்ச்சி அடையும், ஆனால் “பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும்” என்று யெகோவா முன்னுரைத்தார். காலப்போக்கில், இந்தப் பண்டைய வல்லரசு ‘அற்ப ராஜ்யமாகிவிடும்’ என்றும் அறிவித்தார். (எரேமியா 46:25, 26; எசேக்கியேல் 29:14, 15) இதுவும் நிறைவேறியது. இதேபோல், உலக வல்லரசாக இருந்த கிரீஸ், வீழ்ச்சியை சந்திக்கும் என்று யெகோவா முன்னறிவித்தாரே தவிர அந்தத் தேசம் சுவடு தெரியாமல் அழிந்து போகும் என்று அவர் சொல்லவே இல்லை. எனவே, முற்றிலும் இல்லாமற்போகும் என்பதாக யெகோவா முன்னறிவித்த சில மக்கள் சமுதாயங்கள் அவர் சொன்னதுபோலவே அழிந்துபோனதையும், அவர் அவ்வாறு முன்னறிவிக்காத சமுதாயங்கள் தொடர்ந்து இருப்பதையும் கவனிக்கையில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? உண்மையான நம்பகமான தீர்க்கதரிசனம் கடவுளுடைய வார்த்தையில் இருக்கிறது என்பதையே.

ஆச்சரியமான விவரப்பதிவு

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து யெகோவா எத்தனையோ விவரங்களை அளித்தார். அதேவிதமாக, தீருவின் வீழ்ச்சியைப்பற்றி முன்னறிவிக்கையில், அதன் கல்லுகளும், மரங்களும், மண்ணும் ‘கடலின் நடுவிலே போடப்படும்’ என்று எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டது. (எசேக்கியேல் 26:4, 5, 12) இந்தத் தீர்க்கதரிசனம் மகா அலெக்ஸான்டரின் காலத்தில் பொ.ச.மு. 332-ல் நிறைவேறியது; அவர் தன் படையினரை வைத்து, தீருவின் முக்கிய நகரை கைப்பற்றினார். பின்னர் அதன் இடிபாடுகளைப் பயன்படுத்தி, தீருவின் தீவு பகுதிக்கு ஒரு பாதை அமைக்கச் செய்தார். பின்னர் அந்தத் தீவுப்பகுதியும் கைப்பற்றப்பட்டது.

தானியேல் 8:5-8, 21, 22-லும் 11:3, 4-லும் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனமும் தனிச்சிறப்புடன் திகழ்ந்த “கிரேக்கு தேசத்தின் ராஜா”வைப்பற்றி கவனிக்கத்தக்க விவரங்களை அளித்தது. அந்த ராஜா, தன் ஆட்சி அதிகாரத்தின் உச்சநிலையில் இருக்கையில் நீக்கப்படுவார்; அதன் பிறகு அவருடைய ராஜ்யம் நான்காகப் பிரிக்கப்படும், ஆனால், அதைப் பிரித்துக்கொள்பவர்கள் அவருடைய சந்ததியாராக இருக்கமாட்டார்கள். இந்தத் தீர்க்கதரிசனம் பதிவுசெய்யப்பட்டு 200-க்கும் அதிகமான வருடங்கள் சென்ற பிறகு மகா அலெக்ஸான்டர், பராக்கிரமமுள்ள அந்த ராஜாவாக நிரூபித்தார். உலக சரித்திரம் இதை நமக்குத் தெளிவாக்குகிறது. அவர் அகால மரணமடைந்ததாகவும் கடைசியில் அவருடைய சந்ததியார் அல்ல, ஆனால், அவருடைய தளபதிகளில் நான்குபேர் அந்தப் பேரரசைப் பிரித்துக்கொண்டதாகவும் அது சொல்கிறது.

இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகே இந்தத் தீர்க்கதரிசனம் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதாக விமர்சகர்கள் குறைகூறியிருக்கிறார்கள். தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே பதிவை மீண்டும் கவனியுங்கள். அதை ஒரு தீர்க்கதரிசனம் என்று எடுத்துக்கொண்டால், அதன் விவரங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், தீர்க்கதரிசனம் என்ற போர்வையை போர்த்தியிருக்கும் சரித்திரம் என்று எடுத்துக்கொண்டால், அதில் போதிய விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தகரமான விஷயம் அல்லவா? சரி, அலெக்ஸான்டரின் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த ஓர் ஏமாற்றுப் பேர்வழி, தன் வாசகரைக் கவர வேண்டும் என்பதற்காக தீர்க்கதரிசனம் என்ற பெயரில் இதை எழுதியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால், அலெக்ஸான்டரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய இரு மகன்கள் ஆட்சியை நிறுவ முயலுவார்கள், ஆனால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை அவர் ஏன் எழுதவில்லை? அலெக்ஸான்டரின் சாம்ராஜ்யத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு தளபதிகள் ஆட்சியை நிறுவுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதை அந்த நபர் ஏன் குறிப்பிடவில்லை? எல்லாவற்றிக்கும் மேலாக, அந்த மகா ராஜாவின் பெயரையும் அந்த நான்கு தளபதிகளின் பெயரையும் அவர் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை?

சம்பவங்கள் நடந்த பிறகே பைபிள் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டது என்ற வாதம், நெடுங்காலமாக இருந்து வந்தாலும் அது நிரூபிக்கப்படாத ஒரு கருத்தாக இருக்கிறது. இப்படி வாதம் செய்கிறவர்கள் யார் என்று பார்த்தால், சான்றுகள் எதையும் அலசி ஆராயாமல், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பது சாத்தியமல்ல என்று மனதளவில் தீர்மானித்திருப்பவர்களே. பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்க மறுப்பதால் எதையுமே வெறும் மனித கண்ணோட்டத்தில் விளக்கமளிக்கும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். யார் என்ன நினைத்தாலும் சரி, கடவுள்தான் பைபிள் தீர்க்கதரிசனங்களின் ஊற்றுமூலர் என்பதை நிரூபிப்பதற்கு அவர் தாமே போதுமான விவரங்களை ஞானமாக பதிவு செய்து வைத்திருக்கிறார். a

பைபிளிலுள்ள வெவ்வேறு தீர்க்கதரிசனங்களையும் அவற்றின் நிறைவேற்றத்தையும் நேரமெடுத்து தியானித்தால் அவை உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும். பைபிள் தீர்க்கதரிசனங்களை நீங்கள் ஏன் அவ்வாறு ஆராய்ந்து பார்க்கக்கூடாது? இதை செய்வதற்கு,வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற புத்தகத்தில் 343 முதல் 346-ஆம் பக்கங்கள்வரை கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். b உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள். நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் படிக்காதீர்கள். யெகோவா முன்னறிவிக்கும் ஒவ்வொரு விஷயமும் எப்படித் தவறாமல் நிறைவேறுகிறது என்ற உண்மையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.(w08 1/1)

[அடிக்குறிப்புகள்]

a சம்பவம் நடந்த பிறகே பைபிள் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டது என்ற வாதம் சரியல்ல என்பதை நிரூபிப்பதற்கு கூடுதல் தகவலைப் பெற யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட உங்கள் மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் 106-11 பக்கங்களைப் பார்க்கவும்.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

வாழ்க்கைக்குப் பொருந்தும் நியமங்கள்

நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு வேறொரு விஷயமும் உள்ளது. உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறித்து அவ்வளவு துல்லியமாக முன்னறிவித்த கடவுள் தாமே வாழ்க்கைக்குப் பொருந்தும் பைபிள் நியமங்களையும் கொடுத்திருக்கிறார். அவற்றில் சில இதோ:

நீங்கள் எதை விதைப்பீர்களோ அதையே அறுப்பீர்கள்.கலாத்தியர் 6:7.

வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதில் அதிக சந்தோஷம் உள்ளது.அப்போஸ்தலர் 20:35.

மகிழ்ச்சியைப் பெற ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம்.மத்தேயு 5:3.

இந்த நியமங்களின்படி வாழ்ந்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிச்சயம்.

[பக்கம் 22, 23-ன் படங்கள்]

இந்தச் சமுதாயங்களின் நிரந்தரமான முடிவை கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது . . .

ஏதோம்

பாபிலோன்

. . . ஆனால், இவற்றைப் பற்றி அறிவிக்கவில்லை

கிரீஸ்

எகிப்து

[படங்களுக்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

WHO photo by Edouard Boubat

[பக்கம் 23-ன் படம்]

மகா அலெக்ஸான்டர்