Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் மரணம் உங்களை எப்படிக் காப்பாற்றும்?

இயேசுவின் மரணம் உங்களை எப்படிக் காப்பாற்றும்?

கிட்டத்தட்ட 2,000 வருடங்களுக்கு முன்பு, பொ.ச. 33-ல் யூதர்களுடைய பஸ்கா பண்டிகையின்போது, மற்றவர்களை வாழ வைப்பதற்காக குற்றமற்ற ஒருவர் மரித்தார். அவர் யார்? அவர் நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு. அவருடைய பெருந்தன்மைமிக்க செயலிலிருந்து யாரெல்லாம் நன்மை அடையலாம்? முழு மனிதகுலமும்தான். உயிர்களைக் காப்பாற்ற அவர் செய்த தியாகத்தை, பிரபலமான பைபிள் வசனம் ஒன்று இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.

இந்த வசனத்தை அநேகர் நன்கு அறிந்திருக்கிற போதிலும், அதன் அர்த்தத்தைப் புரிந்திருக்கிறவர்கள் உண்மையில் வெகு சிலரே. ‘கிறிஸ்துவின் பலி நமக்கு ஏன் தேவை? ஒரேவொருவரின் மரணம் எப்படி மனிதகுலத்தையே நித்திய மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்?’ என்று அவர்கள் யோசிக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தெளிவான, திருப்திகரமான பதில்களைத் தருகிறது.

மனிதகுலத்தை மரணம் எப்படி ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது?

பூமியில் கொஞ்ச காலம் வாழ்ந்து, துன்பங்களால் துவண்டு, ஓரளவு சந்தோஷத்தை அனுபவித்து, பிறகு இறந்துபோய், மேம்பட்ட இடத்திற்குச் செல்லவே மனிதன் படைக்கப்பட்டதாக சிலர் நம்புகிறார்கள். இதன்படி பார்த்தால், பிறப்பு ஒன்று இருந்தால், இறப்பும் இருக்கும் என்ற நியதியை கடவுளே ஏற்படுத்திவிட்டார் என்று அர்த்தமாகிறது. ஆனால், வேறொரு காரணத்தாலேயே மரணம் மனிதரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்ததென பைபிள் காட்டுகிறது. ‘ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது . . . எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது’ என்று அது சொல்கிறது. (ரோமர் 5:12) பாவத்தினால் மனிதர் இறக்கிறார்களென இந்த வசனம் காட்டுகிறது. அப்படியென்றால், எந்த ‘ஒரே மனுஷனால்’ உயிரைக் குடிக்கும் பாவம் மனிதகுலத்தைத் தொற்றியது?

ஒரே ஊற்றுமூலத்திலிருந்து எல்லா மனிதரும் வந்ததாகப் பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புவதாக த உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அந்த ஊற்றுமூலத்தை ‘ஒரே மனுஷன்’ என்று பைபிள் தெளிவாக அடையாளம் காட்டுகிறது . “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என்று ஆதியாகமம் 1:27-ல் நாம் வாசிக்கிறோம். இவ்வாறு, முதல் மனித தம்பதியர் சர்வவல்லமைமிக்க கடவுளுடைய பூமிக்குரிய படைப்பில் மகிமையின் மகுடமாய் விளங்கினார்கள்.

முதல் மனிதனை யெகோவா தேவன் படைத்த பிறகு, அவனுடைய வாழ்க்கை எப்படியிருந்தது என்பதைப்பற்றி ஆதியாகமப் புத்தகம் கூடுதல் தகவலை அளிக்கிறது. கீழ்ப்படியாமல் போனால் மட்டுமே இறக்க நேரிடுமென கடவுள் சொன்னாரே தவிர மற்றபடி மரணத்தைப்பற்றி அந்தப் புத்தகத்தில் அவர் வேறு எங்குமே குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. (ஆதியாகமம் 2:16, 17) அழகிய பரதீஸில், பூங்காவன பூமியில் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் முடிவில்லா காலத்திற்கு மனிதர் வாழ வேண்டுமென்றே கடவுள் விரும்பினார். முதுமையின் வேதனைகளால் வாடி, கடைசியில் அவர்கள் இறந்துபோக வேண்டுமென அவர் விரும்பவில்லை. அப்படியென்றால், மனிதகுலம் முழுவதையும் மரணம் எப்படி அடிமைப்படுத்திக்கொண்டது?

முதல் மனிதத் தம்பதியர், தங்கள் உயிரின் ஊற்றுமூலரான யெகோவா தேவனின் கட்டளையை எவ்வாறு வேண்டுமென்றே மீறினார்கள் என்பதை ஆதியாகமம் 3-ஆம் அதிகாரம் சொல்கிறது. இதனால், முன்னரே தெரிவித்திருந்த விதமாக தம்முடைய தண்டனைத் தீர்ப்பை கடவுள் நிறைவேற்றினார். “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று அவர் மனிதனிடம் சொன்னார். (ஆதியாகமம் 3:19) கீழ்ப்படியாமல் போன அந்த இருவரும் கடவுள் சொன்னபடியே கடைசியில் இறந்துபோனார்கள்.

எனினும், அந்தத் தண்டனைத் தீர்ப்பினால் முதல் மனித ஜோடி மட்டுமே பாதிக்கப்படவில்லை. அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால் பரிபூரணமாய் வாழ்வதற்கு இருந்த வாய்ப்பை அவர்களுடைய சந்ததியாரும் இழந்தார்கள். ஆதாம் ஏவாளிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார்; இன்னும் பிறவாதிருந்த அவர்களுடைய சந்ததியாரையும் மனதில் வைத்தே அப்படி அவர் சொன்னார். (ஆதியாகமம் 1:28) இவ்வாறு, இந்த மனிதர்கள் காலப்போக்கில் பூமி முழுவதையும் நிரப்பி, சாகாமல் சதா காலத்திற்கும் மிகுந்த சந்தோஷமாய் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், அவர்களுடைய முற்பிதாவான ஆதாம் என்ற ‘ஒரே மனிதன்,’ பாவத்திற்கு அடிமைகளாக அவர்கள் எல்லாரையும் விற்றுப்போட்டான். இதனால், மரணமும் தவிர்க்க முடியாத முடிவாக மனிதருக்கு ஆகிவிட்டது. அந்த முதல் மனிதனின் சந்ததியில் வந்தவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் பவுல், ‘நான் பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்’ என்று எழுதினார்.—ரோமர் 7:14.

விலைமதிப்புள்ள கலைப்பொருள்களை சமீப காலங்களில் எதிரிகள் வேண்டுமென்றே நாசப்படுத்தியிருப்பதைப்போல, பாவம் செய்ததன்மூலம் கடவுளின் அற்புதப் படைப்பான மனிதகுலத்தை ஆதாம் படுமோசமாய் நாசப்படுத்தினான். ஆதாமின் பிள்ளைகளுக்கு, பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பிறந்தனர். அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் எல்லாரும் பிறந்து, வளர்ந்து, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, கடைசியில் இறந்துபோனார்கள். அவர்கள் எல்லாரும் ஏன் இறந்தார்கள்? ஏனெனில், அவர்கள் எல்லாரும் ஆதாமின் சந்ததியினர். ‘ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:15) தன் குடும்பத்தாருக்கு ஆதாம் நம்பிக்கை துரோகம் செய்ததன் விளைவாக வியாதி, முதுமை, தவறான காரியங்களைச் செய்வதற்கான தூண்டுதல் ஆகியவற்றோடு, மரணமும் வந்தது. நாம் அனைவரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

அபூரண மனிதர்களின் பரிதாபகரமான நிலையைக் குறித்தும், பாவத்தின் பாதிப்புகளுக்கு எதிராக போராடுவதைக் குறித்தும் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். தானும் அப்படிப் போராடுவதைச் சொல்பவராக, “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று கேட்டார். இது நியாயமான கேள்வி, அல்லவா? பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து பவுலையும் அவரைப் போல விடுதலை பெற ஏங்குகிற மற்ற அனைவரையும் யாரால் மீட்க முடியும்? “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று அவரே அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறார். (ரோமர் 7:14-25) ஆம், தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின்மூலம் நம்மை மீட்க நம்முடைய படைப்பாளர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

மனிதர்களை மீட்பதற்கான கடவுளுடைய ஏற்பாட்டில் இயேசுவின் பங்கு

மரணமடையும்படி பாவத்திற்கு அடிமைகளாய் விற்கப்பட்ட மனிதகுலத்தை மீட்பதில் தம்முடைய பங்கை இயேசு விவரித்தார். அதாவது, ‘மனுஷகுமாரன் . . . அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார்’ என்று அவர் சொன்னார். (மத்தேயு 20:28) இயேசுவின் உயிர் எவ்வாறு மீட்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது? அவருடைய மரணம் நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது?

‘பாவமில்லாதவர்,’ ‘பாவிகளுக்கு விலகினவர்’ என்று இயேசுவை பைபிள் வர்ணிக்கிறது. அவர் பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். (எபிரெயர் 4:15; 7:26) எனவே, ஆதாமைப் போல பாவத்தாலும் கீழ்ப்படியாமையாலும் இயேசு இறந்துபோகவில்லை. (எசேக்கியேல் 18:4) சொல்லப்போனால், மரிக்க வேண்டிய அவசியம் இயேசுவுக்கு இல்லாதிருந்தும், மனிதகுலத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க வேண்டுமென்ற தம் தகப்பனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மரிப்பதற்கு அவர் சம்மதித்தார். மேற்குறிப்பிடப்பட்டதைப்போல, ‘மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கு’ தாமாகவே இயேசு முன்வந்தார். மனித சரித்திரத்திலேயே ஈடிணையற்ற அன்பைக் காட்டுபவராக இயேசு மனமுவந்து ‘ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்த்தார்.’—எபிரெயர் 2:9.

இயேசு பலியாகக் கொடுத்த உயிர், பாவம் செய்ததால் ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்குச் சரிசமமாய் இருந்தது. இயேசுவுடைய மரணத்தின் விளைவு என்ன? ‘எல்லாருக்காகவும்,’ ‘[“இணையான,” NW] மீட்கும்பொருளாக’ கொடுக்கப்பட்ட அந்தப் பலியை யெகோவா ஏற்றுக்கொண்டார். (1 தீமோத்தேயு 2:6) இவ்வாறு, இயேசுவினுடைய உயிரின் மதிப்பைப் பயன்படுத்தி பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டிருந்த மனிதகுலத்தை கடவுள் மீண்டும் விலைக்கு வாங்கினார், அதாவது மீட்டுக்கொண்டார்.

படைப்பாளர், செயலில் காட்டிய இந்த மாபெரும் அன்பைப்பற்றி பைபிள் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறது. மேலும், கிறிஸ்தவர்கள் ‘கிரயத்துக்குக் கொள்ளப்பட்டதை’ பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டினார். (1 கொரிந்தியர் 6:20; 7:23) மரணத்தில் முடியும் வாழ்க்கையில் சிக்கித் தவித்த கிறிஸ்தவர்களை மீட்பதற்கு, வெள்ளியையோ பொன்னையோ அல்ல, தம்முடைய குமாரனுடைய இரத்தத்தை கடவுள் பயன்படுத்தினார். (1 பேதுரு 1:18, 19) கிறிஸ்துவின் மீட்கும் பலியின்மூலம், நித்திய மரணத்தின் பிடியிலிருந்து மனிதகுலத்தை மீட்க யெகோவா ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்துவின் மீட்கும் பலியிலிருந்து நீங்கள் நன்மை அடைவீர்களா?

கிறிஸ்துவின் மீட்கும் பலி எந்தளவுக்கு நன்மை அளிக்கிறது என்பதைக் குறிப்பிடுகையில், “நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே [இயேசு கிறிஸ்துவே]; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்று அப்போஸ்தன் யோவான் எழுதினார். (1 யோவான் 2:2) ஆம், கிறிஸ்துவின் மீட்கும் பலி மனிதகுலம் முழுவதற்குமே நன்மை அளிக்கிறது. மதிப்புமிக்க இந்த ஏற்பாட்டிலிருந்து எல்லாரும் தானாகவே நன்மை அடைந்துவிடுவார்களென இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. கிறிஸ்துவின் இந்த மீட்கும் பலியிலிருந்து நன்மையடைய விரும்புவோர் கடவுளுடைய ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருந்தால் மட்டும் போதாது. அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார்? “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” என்று யோவான் 3:36 நமக்குச் சொல்கிறது. கிறிஸ்துவின் பலியின்மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார். அதோடு, வேறு சில காரியங்களையும் அவர் எதிர்பார்க்கிறார். “அவருடைய கற்பனைகளை [அதாவது, கட்டளைகளை] நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை [இயேசுவை] அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.” (1 யோவான் 2:3) அப்படியானால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்கப்படுவதற்கு கிறிஸ்துவின் மீட்கும் பலியின்மீது விசுவாசம் வைப்பதும், கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் முக்கியமான அம்சங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இயேசு கட்டளையிட்டபடி, அவருடைய மரண நினைவுநாளை ஆசரிப்பதன்மூலம் நன்றியுணர்வைக் காட்டலாம். இது, அவருடைய மீட்கும் பலி மீதுள்ள விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு முக்கியமான ஒரு வழியாகும். தாம் இறப்பதற்கு முன்பு, தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலருடன் இராப்போஜன ஏற்பாட்டைத் துவங்கி வைத்து அவர்களிடம், “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்; இந்தப் போஜனம் அடையாள அர்த்தமுள்ளதாய் இருந்தது. (லூக்கா 22:19) கடவுளுடைய குமாரனுடன் உள்ள தோழமையை யெகோவாவின் சாட்சிகள் பொக்கிஷமாய்க் கருதி, அவர் கொடுத்த இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். இந்த வருடம் இயேசு கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பு மார்ச் 22, சனிக்கிழமை, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் விதத்தில் இந்த விசேஷக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உங்களை நாங்கள் அன்போடு அழைக்கிறோம். இந்த நிகழ்ச்சி எந்த இடத்தில், எத்தனை மணிக்கு நடைபெறும் என்பதை உங்கள் பகுதியில் வசிக்கிற யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், ஆதாம் செய்த பாவத்தால் விளைந்த மரணத்திலிருந்து கிறிஸ்துவின் மீட்கும் பலி உங்களை விடுவிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து அதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள்.

தங்களை அழிவிலிருந்து மீட்பதற்கு படைப்பாளரும் அவருடைய குமாரனும் செய்திருக்கிற மாபெரும் தியாகத்தை இன்று சிலர் நன்கு புரிந்துகொண்டு, அதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதன்மீது விசுவாசம் வைப்பவர்கள் விசேஷ சந்தோஷத்தை ருசிக்கிறார்கள். “அவரிடத்தில் [இயேசுவிடத்தில்] விசுவாசம் வைத்து, சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும ரட்சிப்பை அடைகிறீர்கள்” என்று தன்னுடைய சக கிறிஸ்தவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 1:8, 9) இயேசு கிறிஸ்துமீது அன்பையும் அவருடைய மீட்கும் பலிமீது விசுவாசத்தையும் வளர்த்துக்கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கை இப்போது மகிழ்ச்சி நிறைந்ததாய் இருக்கும்; பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றப்படும் அந்த நல்ல நாளை நீங்கள் எதிர்பார்க்கவும் முடியும். (w08 3/1)