உங்கள்மீது அக்கறையுள்ள ஒரு மேய்ப்பர்
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
உங்கள்மீது அக்கறையுள்ள ஒரு மேய்ப்பர்
‘கடவுளுக்கு என்மீது அக்கறை இருக்கிறதா?’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல நிறைய பேர் இப்படிக் கேட்டிருக்கிறார்கள். நம்மில் அநேகர், கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்ப்படுகிறோம், எனவே, ‘இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவர் நம்மை ஒரு பொருட்டாக கருதுகிறாரா?’ என்று சில நேரங்களில் யோசிக்கலாம். நம் ஒவ்வொருவர் மீதும் யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறதா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். யெகோவாவைப்பற்றி நன்கு அறிந்திருக்கும் இயேசு, பூமியில் இருந்தபோது சொன்ன ஓர் உதாரணம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறது; அந்தப் பதில் நம் மனதிற்கு ஆறுதலளிக்கும்.
ஒரு மேய்ப்பன் எப்படித் தன் ஆடுகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்வாரோ அதேபோல் யெகோவாவும் நம்மை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார். இதைக் குறித்து இயேசு பின்வருமாறு சொல்கிறார்: “ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது [அதாவது, அழிந்துபோவது] பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” (மத்தேயு 18:12-14) தம்மைச் சேவிக்கிற ஒவ்வொருவரையும் யெகோவா அன்புடனும் அக்கறையுடனும் நடத்துகிறார் என்பதை இயேசு இந்த உதாரணத்தில் விவரித்திருக்கிறார். அதை நாம் இப்போது விவரமாகச் சிந்திக்கலாம்.
இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட அந்த மேய்ப்பர், தன் மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டையும் முக்கியமாகக் கருதினார். மந்தையிலிருந்து ஒரு ஆடு காணாமல் போனாலும் அது எந்த ஆடு என்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒரு பெயரை வைத்து, அந்தப் பெயரைச் சொல்லியே அவற்றை கூப்பிட்டார். (யோவான் 10:3) வழிதவறிப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை அக்கறையுள்ள அந்த மேய்ப்பர் ஓயமாட்டார். அதற்கென்று மீதமுள்ள 99 ஆடுகளையும் அம்போவென்று விட்டுச்செல்லவும் மாட்டார். எப்படிச் சொல்கிறோம்? மேய்ப்பர்கள் பொதுவாக ஒன்றுசேர்ந்து ஆடுகளை மேய்த்ததால், தங்களுடைய ஆடுகளை மற்ற ஆடுகளோடு சேர்ந்து மேய விட்டார்கள். a எனவே, வழிதவறிப்போன ஆட்டை கண்டுபிடிக்கச் செல்கையில் அந்த மேய்ப்பர் தன்னுடைய ஆடுகளை மற்ற மேய்ப்பர்களுடைய பொறுப்பில் கொஞ்ச நேரம் விட்டுச்செல்ல முடிந்தது. காணாமற்போன அந்த ஆட்டிற்கு, அடி எதுவும் படாமல் பத்திரமாக இருக்கிறது என்று தெரிந்ததும் அந்த மேய்ப்பர் ரொம்ப சந்தோஷப்படுவார். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் அந்த ஆட்டை தன்னுடைய தோளில் போட்டுக்கொண்டு தன் மந்தைக்குப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.—லூக்கா 15:5, 6.
இயேசு இந்த உதாரணத்தை விளக்குகையில், ‘இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவதை’ அதாவது, அழிந்துபோவதை கடவுள் விரும்புவதில்லை என்று சொன்னார். ‘[அவரிடத்தில்] விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கும்’ இடறல் உண்டாக்காமல் இருக்கும்படி இதற்கு முன்பு இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரித்திருந்தார். (மத்தேயு 18:6) அப்படியென்றால், இயேசுவின் இந்த உதாரணத்திலிருந்து யெகோவாவைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தம்முடைய ஒவ்வொரு ஆட்டையும் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்கிற மேய்ப்பராக அவர் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறோம். இந்த வசனத்தில் இயேசு குறிப்பிடுகிற ‘இந்தச் சிறியர்’ உலகத்தின் பார்வையில் தாழ்வாகக் கருதப்படுகிறவர்களைக் குறிக்கலாம். இவர்களையும் யெகோவா அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறார். ஆம், யெகோவா தம்மை சேவிக்கும் ஒவ்வொரு நபரையும் முக்கியமாகக் கருதி, அவர்களை நேசிக்கிறார்.
நீங்கள் கடவுளுடைய பார்வையில் அருமையாக இருக்கிறீர்கள் என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா? அப்படியென்றால் மகத்தான மேய்ப்பரான யெகோவா தேவனைப்பற்றி நீங்கள் ஏன் அதிகம் கற்றுக்கொள்ளக்கூடாது? அதோடு, அவரிடம் நெருங்கி வருவது எப்படி என்பதைப் பற்றியும் நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக்கூடாது? அப்படிச் செய்தீர்கள் என்றால், அப்போஸ்தலன் பேதுருவிற்கு இருந்த நம்பிக்கையை நீங்களும் பெற முடியும். இயேசு சொன்ன இந்த உதாரணத்தை பேதுரு ஒருவேளை நேரில் கேட்டிருக்கலாம். அதனால்தான், “அவர் [கடவுள்] உங்களை விசாரிக்கிறவரானபடியால், [அதாவது, உங்கள்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறபடியால்] உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பிறகு எழுதினார்.—1 பேதுரு 5:7. (w08 2/1)
[அடிக்குறிப்பு]
a ஆடுகளுக்குத் தங்களுடைய மேய்ப்பரின் குரல் தெரியும் என்பதால் ஆடுகளைப் பிரிப்பது மேய்ப்பர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.—யோவான் 10:4.