Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏமாற்றத்திலும் சந்தோஷம்

ஏமாற்றத்திலும் சந்தோஷம்

ஏமாற்றத்திலும் சந்தோஷம்

ஒருபோதும் ஏமாறாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஏன், நம்முடைய பரலோகத் தகப்பனான யெகோவா தேவனும்கூட ஏமாற்றத்தின் வலியை அனுபவித்திருக்கிறாரே. உதாரணமாக, இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, ஏராளமாய் ஆசீர்வதித்தார். என்றாலும், “அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள் [அதாவது, வேதனைப்படுத்தினார்கள்]” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 78:41) இருப்பினும், யெகோவா எப்பொழுதும் ‘நித்தியானந்த தேவனாய்’ இருக்கிறார்.—1 தீமோத்தேயு 1:11.

உண்மையில், நிறைய காரணங்களால் ஏமாற்றம் ஏற்படுகிறது. அவை நம்முடைய சந்தோஷத்தைப் பறித்துவிடாமலிருக்க நாம் என்ன செய்யலாம்? ஏமாற்றம் அளித்த சூழ்நிலைகளை யெகோவா கையாண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஏமாற்றம் தரும் விஷயங்கள்

“சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நம் எல்லாருக்குமே நேரிடுகிறதென கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (பிரசங்கி 9:11, NW) குற்றச்செயல், விபத்து, நோய் போன்றவற்றால் நாம் திடீரென பாதிக்கப்படலாம்; இது நமக்குக் கடும் வேதனையை, அதாவது ஏமாற்றத்தைத் தரலாம். “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:12) நன்மையான ஒன்றை ஆவலோடு எதிர்பார்க்கும்போது சந்தோஷத்தில் திளைத்துப்போகிறோம்; ஆனால், அது சீக்கிரம் கிடைக்காதபோது ஏமாற்றத்தில் இளைத்துப்போகிறோம். உதாரணமாக, டங்கன் a என்பவருக்கு மிஷனரி ஊழியத்தைத் தொடருவதில்தான் பேரின்பம். ஆனால், பல வருடங்களாக செய்துவந்த அந்தச் சேவையை விட்டுவிட்டு அவரும் அவருடைய மனைவியும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. “என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக, நூலறுந்த பட்டம்போல் உணர்ந்தேன். என்ன செய்வது, ஏது செய்வதென்று தெரியவில்லை. இனி வாழ்க்கையில் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லையென்று தோன்றியது” என்று அவர் சொல்கிறார். ஏமாற்றத்தின் வேதனை மாறாத வடுக்களாகவே மாறிவிடலாம். க்ளார் என்பவரும் அப்படித்தான் உணர்ந்தார். “நான் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டதால் என் குழந்தையை இழந்தேன். இது நடந்து எத்தனையோ வருடங்களாகி விட்டது. ஆனால், இப்பொழுதும்கூட மேடையிலிருந்து ஒரு பையன் பேச்சுக் கொடுக்கும்போது, ‘என் மகன் உயிரோடிருந்தால் அவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும்’ என நினைத்துக்கொள்வேன்” என்று அவர் சொல்கிறார்.

காதல் தோல்வி அடையும்போது, மணவாழ்வு முறிந்துபோகும்போது, பிள்ளை அடங்காதபோது, வியாபாரத்தில் கூட்டாளி துரோகம் செய்யும்போது, நண்பன் நன்றிகெட்டத்தனமாய் நடந்துகொள்ளும்போது அந்த ஏமாற்றம் தாளாமல் நீங்கள் வேதனையில் துடிக்கலாம். குற்றங்குறைகள் செய்கிறவர்களின் மத்தியிலும், பிரச்சினைகள் நிறைந்த காலத்திலும் நாம் வாழ்வதால் ஏமாற்றம் என்பது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

ஏமாற்றத்திற்கு நம்முடைய தோல்வியும் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, பரிட்சையில் தோல்வியடையும்போது, வேலை கிடைக்காமல் திண்டாடும்போது, ஒருவருடைய அன்பைப் பெற முடியாமல் தவிக்கும்போது நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற உணர்வு நமக்குள் எழலாம். நாம் நேசிக்கும் ஒருவர் மெய் கிறிஸ்தவர் ஆவதற்கான தகுதியை அடைய முயற்சி செய்யாதபோதும்கூட ஏமாற்றமடையலாம். “என்னுடைய மகள் சத்தியத்தில் முன்னேற்றம் செய்வதுபோல் தெரிந்தது. நான் அவளுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைத்திருப்பதாக நினைத்தேன். ஆனால், அவள் யெகோவாவையும் எங்களுடைய குடும்பத்தின் கட்டுப்பாடுகளையும் தூக்கியெறிந்தபோது, நான் படுதோல்வியடைந்து விட்டதாக உணர்ந்தேன். வாழ்க்கையில் பெறும் வேறெந்த வெற்றியும் இந்தத் தோல்வியைச் சரிக்கட்ட முடியாது. நான் நொந்து நூலாகிப் போனேன்” என்று மேரி சொல்கிறார்.

இதுபோன்ற ஏமாற்றங்களை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? ஏமாற்றம் அளித்த சூழ்நிலையை யெகோவா எவ்வாறு கையாண்டார் என்பதைச் சிந்திப்பதிலிருந்து இதற்கான பதிலைப் பெறலாம்.

தீர்வின்மீது கவனத்தை ஊன்றவையுங்கள்

யெகோவா தேவன் முதல் மனித ஜோடிக்குத் தேவையானவற்றை அன்புடன் வழங்கினார். ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாமல், நன்றிகெட்டதனமாய் நடந்து கொண்டார்கள். (ஆதியாகமம், அதிகாரங்கள் 2, 3) பிறகு, அவர்களுடைய மகன் காயீன் மோசமான குணத்தை வளர்த்துக்கொண்டான். யெகோவாவின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு தன் தம்பியையே கொலை செய்தான். (ஆதியாகமம் 4:1-8) யெகோவாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

அந்த ஏமாற்றம் கடவுளின் சந்தோஷத்தைப் பறித்துவிடவில்லை. ஏன்? ஏனென்றால், பரிபூரண மனிதர்களால் பூமி நிரம்ப வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து பாடுபட்டார். (யோவான் 5:17) அதை மனதில் வைத்தே மீட்கும் பலிக்கும் தமது ராஜ்யத்திற்கும் வழிசெய்தார். (மத்தேயு 6:9, 10; ரோமர் 5:18, 19) பிரச்சினையின் மீதல்ல, தீர்வின் மீதே யெகோவா தேவன் கவனத்தை ஊன்றவைத்தார்.

நடந்ததை நினைத்து இடிந்துபோய் உட்கார்ந்துவிடாமல் இனி நடக்க வேண்டியதைக் குறித்து யோசிக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது.உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” என்று அது சொல்கிறது.—பிலிப்பியர் 4:8.

ஏமாற்றத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம்

நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப்போடும் சம்பவங்களும் நடக்கலாம். உதாரணமாக, திடீரென வேலை பறிபோகலாம், மணத்துணையை இழக்கலாம், முன்பு பெற்றிருந்த சபைப் பொறுப்புகள் இல்லாமல் போகலாம். உடல் ஆரோக்கியம் குறைவுபடலாம், வீடு கையைவிட்டுப் போகலாம், நண்பர்களை இழக்கலாம். ஏமாற்றம் தரும் இந்த மாற்றங்களை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?

எந்தக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பது உதவியாக இருக்குமென சிலர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். “நானும் என் மனைவியும் இனிமேல் மிஷனரிகளாக சேவை செய்ய முடியாது என்று தெரிந்ததும் மனமுடைந்து போனோம். ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு, இரண்டு காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கத் தீர்மானித்தோம். ஒன்று, அம்மாவைக் கவனித்துக்கொள்வது; மற்றொன்று, முடிந்தவரை முழுநேர ஊழியர்களாக தொடர்ந்து சேவை செய்வது. தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் அவை இந்த முன்னுரிமைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சிந்தித்தோம். அப்படிச் சிந்தித்தது சரியான தீர்மானங்களை சுலபமாக எடுக்க உதவியது” என்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட டங்கன்.

ஏமாற்றமடையும்போது அதையே பெரிதாக நினைத்து நம்மில் அநேகர் கவலைப்படலாம். உதாரணமாக, குழந்தையை வளர்ப்பதற்கு, ஒரு வேலைக்கான தகுதியைப் பெறுவதற்கு, முன்பின் தெரியாத இடத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தராமல் போகலாம். அப்போது, ‘தோற்றுவிட்டதாக’ நாம் நினைக்கலாம். மனிதகுலம் தோன்றிய சமயத்தில் நடந்த சம்பவங்கள் கடவுளுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. எனினும், கடவுள் தோற்றுவிட்டாரென இது அர்த்தப்படுத்தவில்லை. அதேபோல, நம்முடைய முயற்சிகள் உடனடியாகப் பலன் அளிக்காதபோது தோற்றுவிட்டோமென நினைக்க வேண்டியதில்லை.—உபாகமம் 32:4, 5.

யாராவது நம்மை ஏமாற்றும்போது கோபம் தலைக்கேற, ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவது சுலபம்தான். ஆனால், யெகோவா அப்படிச் செய்யவில்லை. தாவீது ராஜா ஒரு பெண்ணோடு விபசாரம் செய்து, அவளுடைய கணவனைக் கொன்று போட ஏற்பாடு செய்தது யெகோவாவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. என்றாலும், தாவீது உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பியதை அவர் கவனித்தார்; தம்முடைய ஊழியராக அவரைத் தொடர்ந்து பயன்படுத்தினார். அதேபோல, உண்மையுள்ள ராஜாவான யோசபாத் கடவுளுடைய எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்தபோது தவறு செய்தார். “இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. ஆகிலும் . . . நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு” என்று யெகோவாவின் தீர்க்கதரிசி அவரிடம் கூறினார். (2 நாளாகமம் 19:2, 3) யோசபாத் தவறு செய்திருந்தபோதிலும், அவர் யெகோவாவை விட்டு அடியோடு விலகிவிடவில்லை என்பதை யெகோவா புரிந்துகொண்டார். அதைப் போலவே, நம்முடைய நண்பர்கள் தவறு செய்யும்போது அதைப் பெரிதுபடுத்தாதிருந்தால் அவர்களை இழக்காமல் இருக்கலாம். நம்மை ஏமாற்றிய நண்பர்களிடமும் சில நல்ல குணங்கள் இருக்கலாம்.—கொலோசெயர் 3:13.

வெற்றிச் சிகரத்தை எட்டுவதில் ஏமாற்றங்கள் எனும் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவைதான். ஏதாவதொரு பாவத்தை. நாம் செய்யும்போது, நம்மீதே நமக்கு கோபம் வரலாம், ஏமாற்றமாக இருக்கலாம். என்றாலும், சரியான, உறுதியான நடவடிக்கை எடுத்து முன்னேற்றம் செய்தால் அதிலிருந்து மீளலாம். தான் செய்த தவறால் தாவீது ராஜா மனமுடைந்திருந்தபோது, “நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. . . . என் பாவத்தை உமக்கு [“யெகோவாவுக்கு,” NW] அறிவித்தேன்; . . . தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” என்று எழுதினார். (சங்கீதம் 32:3-5) கடவுள் எதிர்பார்க்கிறவற்றை நாம் செய்யத் தவறுவதாக உணர்ந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாட வேண்டும். அதோடு, நம்முடைய வழிகளை மாற்றிக்கொண்டு, இனி கடவுளுடைய ஆலோசனைகளுக்கு இன்னும் அதிகமாகக் கீழ்ப்படிய தீர்மானிக்க வேண்டும்.—1 யோவான் 2:1, 2.

ஏமாற்றத்தைச் சமாளிப்பதற்கு எப்படித் தயாராகலாம்?

இனிவரும் காலத்தில் நாம் அனைவருமே சில ஏமாற்றங்களை நிச்சயம் சந்திப்போம். அவற்றைச் சமாளிக்க நாம் எப்படித் தயாராகலாம்? ப்ரூனோ என்ற வயதான கிறிஸ்தவர் சந்தித்த ஏமாற்றம் அவருடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது. அது சம்பந்தமாக, அவர் சொன்ன விஷயங்கள் ஆர்வத்துக்குரியவை. “கடவுளோடுள்ள உறவைப் பலப்படுத்திக்கொள்ள முன்பு நான் என்ன செய்து வந்தேனோ அதைத் தொடர்ந்து செய்தேன்; இதுவே, என்னைப் பொருத்தவரை ஏமாற்றத்தைச் சமாளிப்பதற்கு உதவிய அதிமுக்கியமான விஷயமாய் இருந்தது. இந்தக் கொடூரமான உலகத்தை கடவுள் இன்னமும் விட்டு வைத்திருப்பதற்கான காரணத்தைக் கற்றிருந்தேன். யெகோவாவோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள பல வருடங்களைச் செலவிட்டிருந்தேன். அப்படிச் செய்ததற்கு மிகவும் சந்தோஷப்பட்டேன். அவர் என்னோடு இருக்கிறார் என்ற எண்ணமே, எனக்கு ஆறுதல் அளித்து மனச்சோர்வைச் சகிக்க உதவியது” என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கும்போது ஒன்றைக் குறித்து மட்டும் நிச்சயமாயிருக்கலாம். நாம் செய்கிற காரியங்களால் நாமே ஏமாற்றமடையலாம், மற்றவர்களால் ஏமாற்றப்படலாம். ஆனால், கடவுள் ஒருபோதும் நம்மை ஏமாற்ற மாட்டார். யெகோவா என்ற பெயருக்கு “நான் என்னவாக ஆவேனோ அவ்வாறே ஆவேன்” என்று அர்த்தம். இதை அவரே சொல்லியிருக்கிறார். (யாத்திராகமம் 3:14, NW) தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்வார் என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது. தம்முடைய ராஜ்யத்தின்மூலம் தம்முடைய சித்தம், “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும்” செய்யப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனால்தான், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், . . . வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—மத்தேயு 6:10; ரோமர் 8:38, 39.

“இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்று ஏசாயா தீர்க்கதரிசிமூலம் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம். (ஏசாயா 65:17) ஏமாற்றத்தின் நினைவலைகளெல்லாம் விரைவில் ஓய்ந்துபோகும்; வரவிருக்கும் அந்தக் காலம் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்! (w08 3/1)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

நம்முடைய முயற்சிகள் உடனடியாகப் பலன் அளிக்காதபோது தோற்றுவிட்டோமென நினைக்க வேண்டியதில்லை

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

நடந்ததை நினைத்து இடிந்துபோய் உட்கார்ந்துவிடாமல் இனி நடக்க வேண்டியதைக் குறித்து யோசிக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது

[பக்கம் 31-ன் படங்கள்]

மனிதர்கள் ஏமாற்றமளித்தாலும், கடவுளுடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என்பதால் அவர் சந்தோஷமாயிருக்கிறார்

[பக்கம் 32-ன் படம்]

கடவுளுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது ஏமாற்றங்களைச் சமாளிக்க உதவும்