Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் பிள்ளையாய் ஆவீர்களா?

கடவுளின் பிள்ளையாய் ஆவீர்களா?

கடவுளின் பிள்ளையாய் ஆவீர்களா?

கொரிய போர் நடந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, போரால் சிதறிப்போன குடும்பங்களை ஒன்றுசேர்த்து வைக்கும் முயற்சியில், கொரிய ஒளிபரப்பு நிறுவனம் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதன் விளைவு? 11,000-க்கும் அதிகமானோர் தங்களுடைய அன்பான குடும்பத்தாருடன் மறுபடியும் ஒன்றுசேர்ந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே அழுகை, கண்ணீர், ஆனந்தத் தழுவல்தான்! “கொரிய மக்கள் அனைவரின் கண்களிலும் ஒரே சமயத்தில் தானாகவே ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது. கொரியாவில் இது வரலாறு காணாத காட்சி” என்று கொரியா டைம்ஸ் என்ற செய்தித்தாள் குறிப்பிட்டது.

பிரேசிலைச் சேர்ந்தவர் சேஸார். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத அவருடைய தந்தை, அதற்குப் பதிலாக குழந்தையாயிருந்த சேஸாரைத் தத்துக்கொடுத்துவிட்டார். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னைப் பெற்றெடுத்த தாயை சேஸார் கண்டுபிடித்தார். அந்தச் சந்தோஷத்தில், தன்னை தத்தெடுத்திருந்த பணக்காரப் பெற்றோரை விட்டு, தன் உண்மையானப் பெற்றோரிடம் வந்துவிட்டார்.

காணாமல் போனதால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள், பிறகு ஒன்றுசேரும்போது அடையும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! மனிதர்கள் கடவுளுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்த சோகக் கதையை பைபிள் விவரிக்கிறது. இப்போது அவர்கள் சந்தோஷமாக அவருடைய குடும்பத்தில் ஒன்றுசேர்ந்து வரும் விதத்தைப் பற்றியும் அது சொல்கிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? நீங்களும் இந்தக் குடும்பத்தில் எப்படிச் சந்தோஷமாய் ஒன்றுசேர முடியும்?

கடவுளுடைய குடும்பம் பிரிந்தது எப்படி?

“ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” என்று படைப்பாளரான யெகோவா தேவனை சங்கீதக்காரன் துதித்தார். (சங்கீதம் 36:9) உண்மையுள்ள, புத்திக்கூர்மையுள்ள படைப்புகளைக் கொண்ட பெரிய குடும்பத்தின் தகப்பனாக யெகோவா இருக்கிறார். பரலோகத்திலுள்ள ஆவி குமாரர்களான தேவதூதர்களும், பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள்.

முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி, கடவுளுடைய முதல் மனிதக் குமாரனான ஆதாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் போனான். (லூக்கா 3:38) இதனால், அன்பான தகப்பனும் படைப்பாளருமான கடவுளிடமிருந்து மனிதகுலம் பிரிந்தது வருந்தத்தக்க விஷயம். கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதன்மூலம், அவருடைய பிள்ளையாக இருக்கும் பாக்கியத்தை ஆதாம் இழந்தான்; இனி பிறக்கவிருந்த தன் சந்ததியாரும் அதை இழந்துபோகும்படிச் செய்தான். இதன் விளைவுகளை தம் ஊழியரான மோசேயின்மூலம் கடவுள் இவ்வாறு விவரித்தார்: ‘அவர்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய [கடவுளுடைய] பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம் [“குறை,” NW].’ அவர்களுடைய “குறை” அல்லது, பாவமுள்ள இயல்பு காரணமாக பரிசுத்தரும் எல்லா விதத்திலும் பரிபூரணருமான கடவுளிடமிருந்து மனிதர்கள் பிரிந்தார்கள். (உபாகமம் 32:4, 5; ஏசாயா 6:3) இதனால், மனிதர்கள் ஒருவிதத்தில் காணாமல்போன பிள்ளைகளைப் போலவும், தகப்பனில்லாதவர்களைப் போலவும் ஆனார்கள்.—எபேசியர் 2:12.

கடவுளின் குடும்பத்தில் இல்லாதவர்களை ‘சத்துருக்கள்’ என்று பைபிள் அழைக்கிறது; இது, மனிதர்கள் எந்தளவுக்குக் கடவுளைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (ரோமர் 5:8, 10) கடவுளைவிட்டுப் பிரிந்த பிறகு, சாத்தானின் கொடூர ஆட்சியில் மனிதகுலம் அவதிப்பட்டிருக்கிறது; வழிவழியாகப் பெற்ற பாவம், அபூரணம் ஆகியவற்றின் கோரப்பிடியில் சிக்கித் தத்தளித்திருக்கிறது. (ரோமர் 5:12; 1 யோவான் 5:19) பாவமுள்ள மனிதர்கள் கடவுளுடைய குடும்பத்தின் அங்கத்தினராக முடியுமா? பாவம் செய்வதற்கு முன்பு ஆதாமும் ஏவாளும் முழுக்க முழுக்க கடவுளுடைய பிள்ளைகளாய் இருந்தார்கள்; அதே போல அபூரண மனிதர்களும் ஆக முடியுமா?

பிரிந்துபோன பிள்ளைகளை ஒன்றுசேர்த்தல்

தம்மை நேசிக்கும் அபூரண மனிதர்களின் நன்மைக்காக யெகோவா அன்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:9) ‘தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்’ என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (2 கொரிந்தியர் 5:19) முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி, நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவை மீட்கும் பலியாக யெகோவா தேவன் அளித்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார். (1 யோவான் 3:1) இவ்வாறு, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் யெகோவாவின் குடும்பத்தில் மறுபடியும் ஒன்றுசேருவதற்கு வழி திறக்கப்பட்டது.

கடவுளுடைய குடும்பத்தில் ஒன்றுசேருகிறவர்கள் அனைவரும் தங்கள் பரலோக தகப்பனின் அரவணைப்பைப் பெறுவார்கள், அருமையான ஒற்றுமையை அனுபவிப்பார்கள் என்பது உண்மைதான். எனினும், அவர்கள் இரு வேறு தொகுதிகளாகக் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்று பைபிள் கூறுகிறது. ‘காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, [கடவுள்] தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்’ என்று பைபிளில் வாசிக்கிறோம். (எபேசியர் 1:9, 10) கடவுள் ஏன் இவ்விதமாகக் கூட்டிச் சேர்க்கிறார்?

தம் பிள்ளைகளை யெகோவா இரு வேறு தொகுதிகளாகப் பிரித்திருப்பது அவருடைய குடும்பத்தின் ஒற்றுமைக்கே வழிவகுக்கிறது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. கடவுளுடைய குடும்பம் அந்தளவு பெரிதாக இருப்பதால், அதை ஒரு நாட்டிற்கு ஒப்பிடலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும், அரசு அமைக்கும்படி குடிமக்களிலிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினையின்றி மற்றவர்கள் சமாதானமாக வாழ்வதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதுவரை எந்தவொரு மனித அரசாங்கத்தாலும் முழுமையான சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், தம்முடைய குடும்பத்திற்காக யெகோவா பரிபூரண அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துகிறார். இந்தப் பரலோக அரசாங்கத்தை அமைக்க, யெகோவா தம்முடைய பிள்ளைகள் சிலரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களே ‘பரலோகத்திலிருக்கிறவைகள்’ என்றழைக்கப்படும் முதல் தொகுதியைச் சேர்ந்தோர். இவர்கள் பரலோகத்திலிருந்து ‘பூமியிலே [“பூமியின்மீது,” NW] அரசாளுவார்கள்.’—வெளிப்படுத்துதல் 5:10.

பூமியிலுள்ள கடவுளின் பிள்ளைகள்

யெகோவா ‘பூலோகத்திலிருக்கிறவைகளையும்கூட’ கூட்டிச்சேர்த்து வருகிறார். ஆம், காலப்போக்கில் தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளாய் ஆகும்படி உலகெங்குமிருந்து லட்சக்கணக்கானோரை அவர் கூட்டிச்சேர்த்து வருகிறார். கனிவான தகப்பனாக, அன்பு காட்ட அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதனால், அவருடைய மக்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒற்றுமையாக இருக்கிறார்கள். மூர்க்கமான, சுயநலமுள்ள, ஒழுக்கங்கெட்ட, கடவுளுக்குக் கீழ்ப்படியாத ஆட்களுக்கும்கூட “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது.—2 கொரிந்தியர் 5:20.

கடவுளுடன் இப்படி ஒப்புரவாவதன்மூலம், அவருடைய பிள்ளைகளில் ஒருவராவதற்கு விடுக்கப்படும் அழைப்பை நிராகரிப்போருக்கு என்ன நிலை ஏற்படும்? தம்முடைய குடும்பத்தின் சமாதானமும் ஒற்றுமையும் குலையாதிருப்பதற்கு, இப்படிப்பட்ட ஆட்கள்மீது கடவுள் கடும் நடவடிக்கை எடுப்பார். அதுவே, ‘தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாளாக’ இருக்கும். (2 பேதுரு 3:7) தமக்குக் கீழ்ப்படியாதவர்களை கடவுள் இந்தப் பூமியிலிருந்து நீக்கிவிடுவார். கீழ்ப்படிவோருக்கு அது எப்பேர்ப்பட்ட நிம்மதியைத் தரும்!—சங்கீதம் 37:10, 11.

அதன் பிறகு, ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியில் சமாதானம் நிலவும். கடவுள் காட்டிய அன்பிற்குக் கட்டுப்பட்டு அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவரும் ஆதாம் இழந்துபோன பரிபூரண நிலையைப் படிப்படியாக மீண்டும் பெறுவார்கள். இறந்துபோனவர்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:6; 21:3, 4) இவ்வாறு, “[மனித] சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்ற வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றுவார்.—ரோமர் 8:20.

உங்கள் தகப்பனுடன் ஒன்றுசேருங்கள்

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சேஸாரும் ஆயிரக்கணக்கான கொரியர்களும் தங்கள் குடும்பத்தாரோடு ஒன்றுசேருவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. கொரியர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. சேஸாரின் விஷயத்திலோ, அவர் தன்னுடைய வளர்ப்பு பெற்றோரிடமிருந்து பிரிந்துவர வேண்டியிருந்தது. அதேபோல, நீங்களும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. அது, உங்கள் பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனுடன் ஒப்புரவாவதற்கும், அவருடைய குடும்பத்தாரில் ஒருவராய் ஆவதற்கும் வழிவகுக்கும். இதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் தகப்பனுடன் நெருங்கிய பந்தத்தை வைத்திருக்க விரும்பினால், நீங்கள் அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிக்க வேண்டும். இதன்மூலம் அவர்மீதும் அவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள்மீதும் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். கடவுள் சொல்லியிருப்பவை எல்லாம் உங்களுடைய நன்மைக்கே என்பதை நம்புவதற்குக் கற்றுக்கொள்வீர்கள். கடவுள் உங்களுடைய தவறுகளைக் கண்டித்துத் திருத்தும்போது, அதை ஏற்றுக்கொள்வதும் முக்கியம். ஏனெனில், “தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” என்று கிறிஸ்தவர்களிடம் பைபிள் கேட்கிறது.—எபிரெயர் 12:7.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கையில் உங்களுடைய வாழ்க்கைமுறை அடியோடு மாறிவிடும். “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:23, 24) ஆகவே, ‘நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருங்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த அறிவுரைக்குக் கீழ்ப்படியுங்கள்.—1 பேதுரு 1:14.

உங்களுடைய உண்மையான குடும்பத்தைக் கண்டுபிடியுங்கள்

தன் தாயை சேஸார் கண்டுபிடித்த பிறகு, அவருக்கு ஓர் அண்ணனும் அக்காவும்கூட இருப்பதை அறிந்து ஆனந்தப்பட்டார். அதேபோல, உங்களுடைய பரலோகத் தகப்பனுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளும்போது, கிறிஸ்தவ சபையில் உங்களுக்கு அநேக சகோதர சகோதரிகள் இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள். இவர்களோடு பழகப் பழக, உங்களுடைய சொந்த குடும்பத்தாரைவிட, இவர்களிடம் நெருக்கம் அதிகமாவதைக் காண்பீர்கள்.—அப்போஸ்தலர் 28:14, 15; எபிரெயர் 10:24, 25.

உங்களுடைய உண்மையான தகப்பனுடனும், சகோதர சகோதரிகளுடனும் ஒன்றுசேரும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அப்போது, சேஸாரும், கொரியாவில் இருந்த ஆயிரக்கணக்கானோரும் தங்களுடைய குடும்பத்தாரோடு ஒன்றுசேர்ந்தபோது அடைந்த ஆனந்தத்தை நீங்களும் பெறுவீர்கள். (w08 3/1)

[பக்கம் 26-ன் படம்]

சேஸார் 19 வயதில் தன் அம்மாவுடன்

[பக்கம் 28-ன் படங்கள்]

கடவுளுடன் நெருங்கி வர நடவடிக்கை எடுங்கள்