Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாக்கப்பட்டோரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன

தாக்கப்பட்டோரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன

தாக்கப்பட்டோரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன

பிரான்சில் ஸ்ட்ராஸ்பர்க் நகரிலுள்ள மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம், மே 3, 2007-ல், ஜார்ஜியா குடியரசிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக ஒருமனதாய் தீர்ப்பளித்தது. அங்கிருந்த சாட்சிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டிருந்ததையும் அவர்களுடைய மத சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்ததையும் நீதிமன்றம் கண்டறிந்தது. வன்முறையில் இறங்கியவர்களைத் தண்டிக்கத் தவறியதற்காக ஜார்ஜியாவின் முன்னாள் அரசாங்கத்தை அது வன்மையாய்க் கண்டித்தது. இந்தத் தீர்ப்பின் பின்னணி என்ன?

அக்டோபர் 17, 1999-ல், ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிஸியில் உள்ள கில்டானீ சபையைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளில் சுமார் 120 பேர், வழிபாட்டிற்காக ராஜ்ய மன்றத்தில் அமைதியாகக் கூடிவந்திருந்தார்கள். திடீரென, பெரிய கும்பல் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தது. ஆர்த்தடாக்ஸ் பாதிரியாக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த வாசீலீ மிகாலாவீஷ்வீலீ என்பவர் அந்தக் கும்பலை வழிநடத்தினார். கையில் வைத்திருந்த மரக்கட்டைகளாலும் இரும்பு சிலுவைகளாலும், கூடிவந்திருந்தோரை அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் ஆக்ரோஷமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். அநேகர் படுகாயமடைந்தார்கள். அவர்கள் அடித்த அடியில் ஒரு பெண்மணியின் கண் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டது. குறைந்தது 16 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்ந்தது. சாட்சிகள் சிலர் உதவி பெற காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கிருந்த தலைமை அதிகாரிதான் அவர்களைச் சந்தித்தார். ‘நானாக இருந்திருந்தால், இன்னும் பயங்கரமாக அடித்து நொறுக்கியிருப்பேன்’ என்று சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் அந்தத் தாக்குதலை வீடியோ எடுத்திருந்தார். அதைப் பிற்பாடு தேசிய தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்பின. தாக்கியவர்கள் யாரென்பது அப்போது வெட்டவெளிச்சமானது. a

தாக்கப்பட்ட சாட்சிகள் இது சம்பந்தமாக புகார் மனு தாக்கல்செய்தார்கள். ஆனால், தாக்கியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியோ, தான் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர் ஆதலால், இவ்வழக்கில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி கைவிரித்துவிட்டார். அரசாங்க அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால், மத வெறியர்கள் இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் துணிச்சலாக இறங்கினார்கள்.

ஆகவே, ஜூன் 29, 2001-ல் யெகோவாவின் சாட்சிகள், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல்செய்தார்கள். b மே 3, 2007-ல் அந்த நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்தது. நடந்த தாக்குதலைத் தத்ரூபமாக அப்போது விவரித்தது, இவ்விஷயத்தில் ஜார்ஜியாவின் அரசாங்க அதிகாரிகளின் மெத்தனப்போக்கைக் கண்டித்தது. தாக்குதலைப்பற்றி, “கொடுக்கப்பட்ட புகாரை உடனடியாக விசாரிக்க வேண்டிய பொறுப்பு . . . அதிகாரிகளுக்கு இருந்தது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. “அதிகாரிகள், இப்படிப்பட்ட செயல்களைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக நடந்துகொண்டால், நீதியின் மீதுள்ள நம்பிக்கையையும் அரசாங்கம் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் என்கிற எண்ணத்தையும் மக்கள் இழந்துவிடுவார்கள்” என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

“மனுதாரர்களான யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அக்டோபர் 17, 1999-ல்தான் முதன்முதல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜார்ஜியா எங்கும் மத வன்முறையில் இறங்குவதற்கு இது வழியைத் திறந்தது” என்று அந்தத் தீர்ப்பில் முடிவாகக் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு, வன்முறைக்கு ஆளான யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. கில்டானீ சபையைச் சேர்ந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதுடன், வழக்கு சம்பந்தப்பட்ட செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஜார்ஜிய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்களைக் கொடூரமாகத் தாக்குவது இப்போது ஜார்ஜியாவில் பெருமளவு குறைந்துவிட்டதை எண்ணி அங்கிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகிறார்கள். அதோடு, வழிபாட்டிற்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி வர தங்களுக்கு இருக்கும் உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டியிருப்பதற்காக அவர்கள் இன்னுமதிகமாக மகிழ்கிறார்கள். இதற்காக, தங்களுடைய பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு அவர்கள் மனப்பூர்வமாக நன்றி செலுத்துகிறார்கள். இந்தச் சோதனையான காலகட்டம் முழுவதும் அவர்களைப் பாதுகாத்து, வழிநடத்தியது அவர்தானே!—சங்கீதம் 23:4. (w08 3/1)

[அடிக்குறிப்புகள்]

a கூடுதல் தகவல்களைப் பெற, பிப்ரவரி 8, 2002 தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கங்கள் 22-28 வரை காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் என்பது ஐரோப்பிய குழுமத்தின் ஓர் அமைப்பாகும். மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்படுகையில் இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது. மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு மே 20, 1999-ல் ஜார்ஜியா உடன்பட்டது. இவ்வாறு, அதில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது.