Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமக்கு என்ன எதிர்காலம்?

நமக்கு என்ன எதிர்காலம்?

நமக்கு என்ன எதிர்காலம்?

இக்கேள்விக்குப் பதில் காண்பது ஏன் அவசியம்? ஒருவர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்குமெனக் கருதுகிறாரோ அதற்கு ஏற்றவாறே வாழ்கிறார். உதாரணமாக, எதிர்காலத்தைக் குறித்து எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற மனப்பான்மையுடன் வாழக்கூடும். (1 கொரிந்தியர் 15:32) அப்படிப்பட்ட மனப்பான்மை ஒருவரை அளவுக்கு மிஞ்சி உண்ணவும் குடிக்கவும் வைப்பதோடு பாரமாகவும் உணரச் செய்யும். இது, நிஜ மன அமைதியைக் காண இம்மியும் உதவாது.

ஒருவேளை, நம் எதிர்காலம் மனிதரைச் சார்ந்தே இருக்குமானால், அது இருண்டதாகவே இருக்கும். இன்றும்கூட பூமியிலுள்ள காற்று, நீர், நிலம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. அணு ஆயுதப் போர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய அச்சுறுத்தலும் அதிகரித்துவருகிறது. நோயும் வறுமையும் உலகெங்கும் கோடிக்கணக்கானோரை வாட்டி வதைக்கின்றன. என்றாலும், நாம் எதிர்காலத்தைக் குறித்து நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன.

எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று மனிதரால் துல்லியமாகச் சொல்ல முடியாது. என்றாலும், யெகோவா தேவனால் அதைச் சொல்ல முடியும். ‘அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறவர்’ என்று அவர் தம்மை விவரிக்கிறார். (ஏசாயா 46:10) எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றைப்பற்றி யெகோவா என்ன சொல்கிறார்?

பைபிள் சொல்வது

பூமியையும் பூமியிலுள்ள உயிர்களையும் முற்றிலுமாய் அழித்துப்போட மனிதரை யெகோவா விடமாட்டார். சொல்லப்போனால், ‘பூமியைக் கெடுத்தவர்களை [கடவுள்] கெடுப்பார்’ என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) யெகோவா தம் ராஜ்யத்தின் மூலமாக, அதாவது பரலோக அரசாங்கத்தின் மூலமாக இந்தப் பூமியில் மலிந்து கிடக்கும் அநியாயத்தையும் அட்டூழியத்தையும் அகற்றிவிடுவார்; இவ்வாறு, தம்முடைய ஆதி நோக்கத்தின்படியே இந்தப் பூமியை நல்ல நிலைமைக்கு மாற்றுவார். (ஆதியாகமம் 1:26-31; 2:8, 9; மத்தேயு 6:9, 10) வெகு சீக்கிரத்தில், ஒவ்வொருவரும் இந்தப் பூமியில் அனுபவிக்கப்போகிற சூழ்நிலையைப் பின்வரும் பைபிள் வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

சங்கீதம் 46:8, 9. “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”

ஏசாயா 35:5, 6. “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.”

ஏசாயா 65:21, 22. “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.”

தானியேல் 2:44. ‘பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’

யோவான் 5:28, 29. ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, [அவர்கள்] . . . எழுந்திருப்பார்கள்.’

வெளிப்படுத்துதல் 21:3, 4. “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”

பைபிள் அளிக்கும் பதில் நிஜமாகவே மன நிம்மதி தருவது எப்படி

இவற்றை வாசிக்கும்போது, இவையெல்லாம் நடக்கவாபோகின்றன என்ற சந்தேகம் நமக்கு வரலாம். ஆனால் இந்த வாக்குறுதிகளை அளித்திருப்பது மனிதரல்ல, கடவுளே. அது மட்டுமல்ல, யெகோவா தேவன் ‘பொய்யுரையாதவர்.’—தீத்து 1:3.

நீங்கள், கடவுளுடைய வாக்குறுதிகளை நம்பி அவருடைய சட்டங்களுக்கு இசைய வாழ்ந்தால், புயல்போன்று பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் மன அமைதியைத் தொலைத்துவிட மாட்டீர்கள். போர், வறுமை, நோய் ஆகியவையோ, முதுமையால் வரும் உபாதைகளோ, சீக்கிரத்தில் இறந்துவிடுவோம் என்ற பயமோ நிரந்தரமாக உங்கள் மன அமைதியைத் தட்டிப்பறித்துவிடாது. ஏன்? ஏனென்றால், கடவுளுடைய ராஜ்யம் இந்த எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்குள் ஏற்படும்.

எதிர்காலத்தைப் பற்றிய அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையை நீங்கள் எப்படிப் பெறலாம்? ‘உங்கள் மனம் புதிதாகி,’ ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று’ நீங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும். (ரோமர் 12:2) பைபிள் தரும் வாக்குறுதிகள் நம்பத்தக்கவை என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிகள் உங்களுக்குத் தேவைப்படலாம். அவற்றை ஆராய்ந்து பார்ப்பதால் கைமேல் பலன் கிடைக்கும். வாழ்க்கையில் இதைவிட மிகுந்த மன அமைதிதரும் காரியங்கள் இருக்குமா, என்ன! (w08 2/1)

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

எதிர்காலத்தைப்பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

ஏசாயா 35:5

ஏசாயா 35:6

யோவான் 5:28, 29