நாம் எவ்வாறு தோன்றினோம்?
நாம் எவ்வாறு தோன்றினோம்?
இக்கேள்விக்குப் பதில் காண்பது ஏன் அவசியம்? இவ்வுலகிலுள்ள உயிர்களெல்லாம் தற்செயலாகத் தோன்றியவையே என்றுதான் பெரும்பாலான மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஏதோ குருட்டாம்போக்கில் எதேச்சையாக ஏற்பட்ட நிகழ்வுகளினால், எல்லாவித உணர்ச்சிகளும், புத்திக்கூர்மையும், ஆன்மீகத் திறனும் படைத்த மனித இனத்தைப் பரிணாமம் பிரசவித்தது என்றே அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
ஆனால் இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ‘நாம் பரிணாமத்தால் உருவானோம்’ என்று சொல்வதும், ‘படைப்பாளர் இல்லை’ என்று சொல்வதும் உண்மையென்றால், ஒரு விதத்தில் மனித இனம் அனாதையாகவே இருக்கும். மனிதன் ஆலோசனை கேட்பதற்கு ஞானத்தின் சிகரமாய் விளங்கும் ஒருவரோ நம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவிக்கரம் நீட்டும் ஒருவரோ இருக்க மாட்டார்கள். சுற்றுச்சூழலின் சீர்குலைவைத் தவிர்க்கவும், அரசியல் சச்சரவுகளைத் தீர்க்கவும், தனிநபரின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் மனித ஞானத்தையே நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை, மனித ஞானத்தால்தான் அனைத்தையும் சாதிக்க வேண்டுமென்ற நிலை இருந்தால், அது உங்களுக்கு மன அமைதி தருமா? இல்லையென்றால், ஞானத்தின் சிகரமாய் விளங்கும் ஒருவரைப்பற்றிச் சற்று சிந்தித்துப்பாருங்கள். அது ஏற்கத் தகுந்ததாய் இருப்பதோடு, பகுத்துணர்வுக்கு ஒத்ததாயும் இருக்கிறது.
பைபிள் சொல்வது
மனித இனத்தைப் படைத்தவர் கடவுள் என்று பைபிள் கற்பிக்கிறது. நாம் பரிணாமத்தால் பிறந்தவர்கள் என்றால், அக்கறையில்லாத, யோசிக்கும் திறனில்லாத ஒன்றிலிருந்து வந்தவர்களென்று ஆகிவிடும். அதற்கு மாறாக, நாம் அன்பும் புத்திக்கூர்மையும் உள்ள ஒரு தகப்பனின் பிள்ளைகள். பைபிளில் உள்ள பின்வரும் தெள்ளத்தெளிவான கூற்றுகளைக் கவனியுங்கள்.
ஆதியாகமம் 1:27. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”
சங்கீதம் 139:14. “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”
மத்தேயு 19:4-6. “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”
அப்போஸ்தலர் 17:24, 25. “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை.”
வெளிப்படுத்துதல் 4:11. “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
பைபிள் அளிக்கும் பதில் நிஜமாகவே மன நிம்மதி தருவது எப்படி
‘பூலோகத்திலுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணர்’ கடவுளே என்பதை நாம் அறிந்திருப்பது, மற்றவர்களைச் சரியான கண்ணோட்டத்தில் காண உதவுகிறது. (எபேசியர் 3:14) அத்துடன், நம்மையும் நம் பிரச்சினைகளையும்கூட சரியான கண்ணோட்டத்தில் காண உதவுகிறது. அது நம் சிந்தனையைப் பின்வரும் வழிகளில் செதுக்கிச் சீராக்குகிறது.
சிக்கலான தீர்மானங்களைச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், மற்றவர்களுக்கிடையே காணப்படுகிற முரண்பட்ட கருத்துகளைக் கேட்டு நாம் அனாவசியமாகக் குழம்பிப்போக மாட்டோம். மாறாக, பைபிள் தரும் ஆலோசனையையே உறுதியாக நம்புவோம். ஏன்? ஏனென்றால், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
அதே சமயத்தில், பைபிள் தரும் புத்திமதியைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சியும் சுயகட்டுப்பாடும் தேவை. சில சமயங்களில் அதன் புத்திமதிக்கு இசைய நடக்க முயலும்போது, நம் விருப்பங்களுக்கு நேர்மாறாகத் தோன்றும் வழிகளில் நாம் செயல்பட வேண்டியிருக்கலாம். (ஆதியாகமம் 8:21) என்றாலும், நாம் அன்பான பரலோகத் தகப்பனால் படைக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், நாம் நடக்க வேண்டிய மிகச் சிறந்த வழி அவருக்கு நன்றாகத் தெரியும் என்ற முடிவுக்கு வருவோம். (ஏசாயா 55:9) ஆகவே, அவருடைய வார்த்தை நமக்குப் பின்வருமாறு உறுதியளிக்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) இந்தப் புத்திமதியை நாம் கடைப்பிடித்தால், சவால்களைச் சந்திக்கும்போதும் சரி, தீர்மானங்களை எடுக்கும்போதும் சரி, நம்முடைய மனப்பாரம் பெருமளவு குறைந்துவிடும்.
பாரபட்சமாக நடத்தப்படுகையில், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனமொடிந்து போக மாட்டோம்; வேறொரு இனத்தாரைவிடவோ வேறொரு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்தவர்களைவிடவோ நாம் ஏதோவொரு விதத்தில் மதிப்புக் குறைந்தவர்கள் என்று நினைக்க மாட்டோம். மாறாக, தகுந்தளவு சுயமரியாதையை வளர்த்துக்கொள்வோம். ஏன்? ஏனென்றால், நம் தகப்பனாகிய யெகோவா தேவன், “பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
இதை அறிந்திருப்பது, மற்றவர்களை மட்டமாகப் பார்க்கும் மனப்பான்மை நம் உள்ளத்தில் தலைதூக்காதபடியும் நம்மைத் தடுக்கும். வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்களைவிட நம்மை உயர்ந்தவர்களாய் நினைப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம். ஏனென்றால், ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்திருக்கிறார்.’—அப்போஸ்தலர் 17:26.
ஆக, நாம் ஒரு படைப்பாளரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும், அவர் நம்மீது அக்கறையுள்ளவர் என்பதையும் அறிந்திருப்பது நிஜமாகவே மன நிம்மதி காண அடித்தளமாய் அமைகிறது. ஆனால், நாம் எப்போதும் மன அமைதியோடிருக்க இன்னும் சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும்.(w08 2/1)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
மனித இனம் பரிணாமத்தால் தோன்றியதா?
[பக்கம் 5-ன் படம்]
படைப்பாளர் நம்மீது அக்கறையுள்ளவர் என்பதை அறிந்திருப்பது நிஜமான மன நிம்மதியைத் தருகிறது