Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றி

கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றி

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றி

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

கடவுளுடைய அரசாங்கம் என்பது இந்த முழு பூமியையும் ஆளப்போகிற ஒரு நிஜ அரசாங்கம். இதற்காக ஜெபம்பண்ணும்படி இயேசு சொல்லிக்கொடுத்ததைக் கவனியுங்கள். “நீங்கள் இவ்விதமாக ஜெபம் செய்யுங்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வரவேண்டும் உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நடப்பதுபோல் பூமியிலேயும் நடக்கவேண்டும்.”மத்தேயு 6:9, 10; NW தானியேல் 2:44.

கடவுளுடைய அரசாங்கத்தில் யார் ஆட்சி செய்வார்கள்?

கடவுளுடைய அரசாங்கத்தில் அரசராக ஆட்சி செய்யவே இயேசு பிறந்தார். ஒரு தேவதூதர் இயேசுவின் தாயிடம் அவரைப்பற்றி இவ்வாறு சொன்னார்: ‘அவருடைய [இயேசுவுடைய] தகப்பனான தாவீதின் சிம்மாசனத்தை கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். இயேசு ராஜாவாக அரசாளுவார்.’ (லூக்கா 1:30–33, NW) தம்மோடு சேர்ந்து அரசாள தமது சீடர்கள் சிலரையும் இயேசு தேர்ந்தெடுத்தார். “என்னுடைய சோதனைகளில் என்னோடு நிலைத்திருந்தவர்கள் நீங்களே. அதனால் அரசாங்கத்திற்காக, என் தகப்பன் என்னோடு ஓர் ஒப்பந்தத்தைச் செய்திருப்பது போலவே நானும் உங்களோடு ஓர் ஒப்பந்தத்தைச் செய்கிறேன்” என்று இயேசு தமது அப்போஸ்தலரிடம் கூறினார். (லூக்கா 22:28, 29, NW; தானியேல் 7:27) ஆகவே, இயேசுவோடு சேர்ந்து மொத்தம் 1,44,000 பேர் ஆட்சி செய்வார்கள்.​—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1.

அந்த அரசாங்கம் எங்கே இருக்கும்?

கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும். இதைப் பற்றி இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘நான் போய் உங்களுக்காக [பரலோகத்தில் ஒரு] ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். . . . நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறேன்.’​—⁠யோவான் 14:2, 3, 12; தானியேல் 7:13, 14.

கடவுளுடைய அரசாங்கம் அக்கிரமங்களையெல்லாம் ஒழித்துக்கட்டுமா?

பூமியிலுள்ள கெட்ட ஜனங்களை இயேசு அழித்துவிடுவார். ‘மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள்சூழ வருவார். அவர் தன் மாட்சிமைமிக்க அரியணையில் வீற்றிருப்பார். உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். பிறகு . . . அவர்களுக்கு [கெட்ட ஜனங்களுக்கு] நித்தியமான தண்டனை கொடுப்பார். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுப்பார்.’​—மத்தேயு 25:31–34, 46, ஈஸி டு ரீட் வர்ஷன்.

அந்த அரசாங்கத்தின் குடிமக்கள் யார்?

“சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். ஏனென்றால், அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள்.” (மத்தேயு 5:5, NW; சங்கீதம் 37:29; 72:8) ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ளும் மக்களே இந்த உலகில் இருப்பார்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம் கூறினார்.​—யோவான் 13:34, 35.

கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களுக்காக என்ன செய்யப்போகிறது?

இயேசு எல்லாவித வியாதிகளையும் குணப்படுத்துவார். அவர் பூமியில் இருந்தபோது, ‘அரசாங்கத்தைக் குறித்து’ மக்களிடம் பேசினார்; “நோயுற்றிருந்த மக்களைக் குணப்படுத்தினார்.” (லூக்கா 9:11) உயிர்த்தெழுந்து வந்த இயேசுவை ஒரு தரிசனத்தில் பார்த்த பிறகு அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; . . . பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை.”​—வெளிப்படுத்துதல் 21:1–4.

கடவுளுடைய அரசாங்கம் பூமியை மறுபடியும் பூங்காவனமாக மாற்றும். இயேசுவுடன் மரத்தில் அறையப்பட்ட குற்றவாளி, “இயேசுவே நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர் “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூங்காவனத்தில் இருப்பாய்” என்று கூறினார்.​—லூக்கா 23:42, 43; ஏசாயா 11:4–9; NW. (w08 5/1)

கூடுதல் தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? a புத்தகத்தில் 8-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.