நோவா காலத்துப் பெருவெள்ளம் பூமியெங்கும் வந்தது உண்மையா?
வாசகரின் கேள்வி
நோவா காலத்துப் பெருவெள்ளம் பூமியெங்கும் வந்தது உண்மையா?
நோவா காலத்துப் பெருவெள்ளம் 4,000 வருடங்களுக்கும் முன்பு வந்தது. அதைப் பற்றிய விவரங்களை நம்மால் யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அதைக் கண்கூடாகப் பார்த்த யாரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனாலும், அந்த அழிவைப்பற்றி ஒரு பதிவு இருக்கிறது. வெள்ளப்பெருக்கு அந்தக் காலத்திலிருந்த மிக உயரமான மலையையே மூழ்கடித்துவிட்டதாக அது குறிப்பிடுகிறது.
அந்தச் சரித்திரப் பதிவு சொல்வதைக் கவனியுங்கள்: “நாற்பது நாள்களாகப் பெருவெள்ளம் மண்ணுலகில் [பூமியில்] வந்துகொண்டிருந்தது. மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின. மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் [கிட்டத்தட்ட 22 அடி] உயர்ந்திருந்தது.”—ஆதியாகமம் [தொடக்க நூல்] 7:17-20, பொது மொழிபெயர்ப்பு.
முழு பூமியும் தண்ணீரில் மூழ்கியதாகச் சொல்லப்படுவது வெறும் கட்டுக்கதை என சிலர் நினைக்கலாம்; அல்லது, உண்மை மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக யோசிக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி நினைப்பது முற்றிலும் தவறு! இன்றும்கூட பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், பூமியின் பரப்பளவில் சுமார் 71 சதவீதத்தை ஆக்கிரமித்திருப்பது கடல்நீரே. ஆகவே, பெருவெள்ளத்தின்போது பெருக்கெடுத்த நீர் இன்னமும் பூமியில் இருப்பது நிஜம். அதோடு, பனிக்குன்றுகளும் துருவங்களிலுள்ள பனிக்கட்டிகளும் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து நியூ யார்க், டோக்கியோ போன்ற நகரங்களையே மூழ்கடித்துவிடும்.
ஐக்கிய மாகாணங்களின் வடமேற்கு நிலப்பரப்பை ஆராய்ச்சி செய்கிற நில அமைப்பியல் நிபுணர்கள், கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 100 வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருக்குமென நம்புகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கின்போது, 600 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் சீறிக்கொண்டு வந்ததாகவும், மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் அது பாய்ந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகளின் முடிவுகளால், பூமியெங்கும் ஒரு வெள்ளப்பெருக்கு வந்திருப்பதற்கு நிச்சயம் வாய்ப்பிருப்பதாக மற்ற விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
பைபிளை கடவுளுடைய புத்தகமென்று நம்புகிறவர்கள் பூமியெங்கும் பெருவெள்ளம் வந்திருப்பதை சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். “உம்முடைய வார்த்தை உண்மையானது” என்று கடவுளிடம் இயேசு சொன்னார். (யோவான் 17:17, NW) “எல்லா மனிதர்களும் காப்பாற்றப்பட வேண்டுமென்பதும் உண்மையைத் திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டுமென்பதுமே” கடவுளுடைய விருப்பம் என்று இயேசுவின் சீஷனான பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 2:3, 4, NW) கடவுளுடைய புத்தகத்தில் கட்டுக்கதைகள் இருந்தால், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பவுலால் எப்படி உண்மையைக் கற்றுத் தந்திருக்க முடியும்?
பெருவெள்ளம் வந்ததாக மட்டுமல்ல, அது பூமியெங்கும் வந்ததாகக்கூட இயேசு நம்பினார். தம்முடைய ஆட்சிக்காலத்தைப் பற்றியும் இந்த உலகத்தின் முடிவுகாலத்தைப் பற்றியும் இயேசு முன்னுரைத்தபோது, அவற்றை நோவாவின் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 24:37-39) இயேசுவின் சீஷனான பேதுருவும் நோவா காலத்துப் பெருவெள்ளத்தைப் பற்றி குறிப்பிட்டு, ‘வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது’ என்றார்.—2 பேதுரு 3:6, பொ.மொ.
நோவா ஒரு கற்பனை கதாபாத்திரமாகவும் அவர் காலத்தில் வந்த பெருவெள்ளம் ஒரு கற்பனை கதையாகவும் இருந்தால், கடைசி காலத்தில் வாழ்கிறவர்களுக்கு பேதுருவும் இயேசுவும் கொடுத்த எச்சரிப்புகள் அர்த்தமற்றவையாக இருக்கும். இப்படிப்பட்ட கருத்துகள், பைபிளின் எச்சரிப்பைப் புரிந்துகொள்ள முடியாதபடி மக்களைக் குழப்பிவிடலாம்; பைபிள் தரும் எச்சரிப்புக்கு மக்கள் கவனம் கொடுக்காமல் செய்தும்விடலாம். அதோடு, இனி வரப்போகிற பெரும் அழிவில், அதாவது நோவா காலத்துப் பெருவெள்ளத்தைவிட கொடிய அழிவில், தப்பிக்க முடியாதபடி செய்துவிடும்.—2 பேதுரு 3:1-7.
கடவுள் தம்முடைய மக்களிடம் தொடர்ந்து இரக்கம் காட்டுவதைப் பற்றிப் பேசுகையில், “நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்” என்றார். ஆம், நோவா காலத்துப் பெருவெள்ளம் இந்தப் பூமியை மூழ்கடித்தது எந்தளவுக்கு நிஜமோ, அதேபோல், கடவுள் தம்மை நம்புகிறவர்களுக்கு கருணை காட்டுவார் என்பதும் அந்தளவுக்கு நிஜம்.—ஏசாயா 54:9. (w08 6/1)