குடும்ப மகிழ்ச்சிக்கு . . .
பிரச்சினைகளைத் தீர்த்தல்
கணவர்: “பிள்ளைகள் எங்கே?”
மனைவி: “துணி வாங்க கடைக்குப் போயிருக்கிறார்கள்.”
கணவர்: [கோபத்தில் குரலை உயர்த்தி] “என்ன, ‘துணி வாங்கவா’? போன மாதம்தானே வாங்கினார்கள்?”
மனைவி: [அவர் சொன்னது பிடிக்காமல் தன்னை நியாயப்படுத்தும் விதத்தில்] “தள்ளுபடி விலையில் கிடைக்கிறதாம். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் போனார்கள்.”
கணவர்: [பொறுமையிழந்து, கத்திக் கூச்சல்போடுகிறார்] “என்னைக் கேட்காமல் பிள்ளைகள் பணம் செலவழிப்பது எனக்குப் பிடிக்காதென்று உனக்குத் தெரியாதா? என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அவசரப்பட்டு நீயாக எப்படி முடிவெடுக்கலாம்?”
இந்த இருவருக்கிடையே என்ன பிரச்சினை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கணவருக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது பிரச்சினை என்பது நன்றாகவே தெரிகிறது. அதோடு, பிள்ளைகளுக்கு எந்தளவு சுதந்திரம் தரவேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதும் தெரிகிறது. ஒருவருக்கொருவர் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்பதும் தெரிகிறது.
எந்தத் தம்பதியரும் பூரணமானவர்கள் அல்ல. எல்லாருக்குமே ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்கிறது. பிரச்சினை பெரிதோ சிறிதோ அதை எப்படித் தீர்த்துக்கொள்வது என்பதை கணவனும் மனைவியும் தெரிந்திருப்பது முக்கியம். ஏன்?
பிரச்சினைகளைத் தீர்க்காமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் இருவருக்கிடையில் பேச்சுத்தொடர்பு என்னும் கதவு அடைக்கப்படலாம். “விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்” என்று ஞானியாகிய சாலொமோன் ராஜாவும் கூறினார். (நீதிமொழிகள் 18:19) அடைக்கப்பட்ட அந்த கதவைத் திறந்து அதாவது, மனம்விட்டுப் பேசி எவ்வாறு பிரச்சினைகளைத் தீர்க்கலாம்?
உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு இருதயமும் நுரையீரலும் தேவைப்படுவதுபோல தம்பதியருக்கு இடையில் சுமுகமான உறவுக்கு அன்பும் மரியாதையும் அவசியம். (எபேசியர் 5:33) பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கும் தம்பதியருக்கு அன்பு இருந்தால், கடந்தகாலத் தவறுகளையும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மறந்துவிட்டு தற்போதைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார்கள். (1 கொரிந்தியர் 13:4, 5; 1 பேதுரு 4:8) தம்பதியர் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தால் மனந்திறந்து பேசுவதற்கு ஒருவர் மற்றவரை அனுமதிப்பார், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் முயலுவார்.
பிரச்சினைகளைத் தீர்க்க நான்கு வழிகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். மரியாதைக்குரிய விதத்தில், அன்பாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவும் என்பதைக் கவனியுங்கள்.
1. பிரச்சினைகளைப் பேசுவதற்கென்று நேரம் ஒதுக்குங்கள்.
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 7) ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விவாதத்தில் பார்த்தபடி சில பிரச்சினைகள் கோபத்தைக் கிளறலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் துணை கோபத்தில் கத்துவதற்கு முன்னே, சுயக்கட்டுப்பாட்டோடு ‘மெளனமாயிருங்கள்,’ அதாவது, அப்போதைக்கு பேச்சை நிறுத்துங்கள். பைபிள் தரும் இந்த அறிவுரைக்குச் செவிகொடுத்தால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். “வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.”—நீதிமொழிகள் 17:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.
ஆனால், ‘பேசுவதற்கும் காலம்’ இருக்கிறது. பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் களைகள்போல அவை மளமளவென்று வளர்ந்துவிடும். அதனால், பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடுமென்று நினைத்து அப்படியே விட்டுவிடாதீர்கள். விவாதத்தை நிறுத்த நீங்கள் விரும்பினால் சீக்கிரத்திலேயே பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அப்படிச் செய்வதன்மூலம் உங்கள் துணைக்கு மரியாதை காட்டலாம். அவ்வாறு நேரம் ஒதுக்குவது, “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்ற பைபிள் அறிவுரையின் நியமத்தை இருவருமே பின்பற்ற உதவும். (எபேசியர் 4:26) பிரச்சினைபற்றிப் பிறகு பேசலாம் என்று சொல்லியிருந்தால் சொன்னபடியே செய்யுங்கள்.
இப்படிச் செய்துபாருங்கள்: குடும்பப் பிரச்சினைகளைப் பேசுவதற்கென்று ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அது, நீங்கள் எளிதில் எரிச்சலடையும் நேரமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, வேலையிலிருந்து வீட்டுக்கு வந்த நேரத்திலோ பசியாய் இருக்கும் நேரத்திலோ பிரச்சினையைப்பற்றிப் பேச்செடுக்காதீர்கள். மாறாக, இருவரும் சாவகாசமாக இருக்கும் சமயத்தை அதற்கென்று ஒதுக்குங்கள்.
2. ஒளிவுமறைவில்லாமல், மரியாதையோடு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
“அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.” (எபேசியர் 4:25) பிறனுடனே உண்மை பேச வேண்டுமெனச் சொல்லும்போது, உங்களுடைய துணையிடம் உண்மை பேசுவது எவ்வளவு முக்கியம்! எனவே, உங்கள் துணையிடம் பேசும்போது, நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்று ஒளிவுமறைவில்லாமல் பேசுங்கள். மணமாகி 26 வருடங்களான மார்கரேட்டா a இப்படிச் சொல்கிறார்: “எனக்குக் கல்யாணமான புதிதில், பிரச்சினை வரும்போது என்னுடைய உணர்வுகளை என் கணவர் அவராகவே புரிந்துகொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நினைத்தது நியாயமல்ல என்று தெரிந்துகொண்டேன். இப்பொழுது, நான் மனதில் நினைப்பதை அப்படியே சொல்வதற்கு முயலுகிறேன்.”
பிரச்சினையைப்பற்றிப் பேசும்போது, துணையின் வாயை அடைப்பதுபோல் பேசி நீங்கள் வெற்றிபெறுவது உங்களுடைய நோக்கம் அல்ல. மாறாக, உங்களுடைய எண்ணங்களை உங்கள் துணைக்குத் தெரியப்படுத்துவதே உங்களுடைய நோக்கம் என்பதை நினைவில் வையுங்கள். இதைச் சரியாகச் செய்வதற்கு, எதைப் பிரச்சினை என்று நினைக்கிறீர்கள், அது எப்போது உருவாகிறது, அந்தச் சமயத்தில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். உதாரணமாக, உங்கள் துணை வீட்டை அழுக்காக்கிவிடுவதால் நீங்கள் எரிச்சலடைகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது, அவருக்கு மரியாதை கொடுத்து இப்படிச் சொல்லலாம்: ‘நீங்கள் வேலையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் துணிமணிகளைக் கழற்றி தரையில் போட்டுவிடுகிறீர்கள் [பிரச்சினை எப்போது வருகிறது, எது பிரச்சினை]. நான் கஷ்டப்பட்டு வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேன். அதை நீங்கள் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்காததுபோல் நான் உணருகிறேன் [எப்படி உணருகிறீர்கள்].’ பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப் பக்குவமாகச் சொல்லுங்கள்.
இப்படிச் செய்துபாருங்கள்: பிரச்சினையையும், அதை எப்படித் தீர்க்கலாம் என நீங்கள் நினைப்பதையும் எழுதி வைத்துக்கொண்டால், உங்கள் மனதில் இருப்பதை துணையிடம் தெளிவாகச் சொல்ல முடியும்.
3. உங்கள் துணை பேசும்போது கேளுங்கள், அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்கள், “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்க வேண்டும் என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:19) ஒரு பிரச்சினையைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் துணை புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமே குடும்பத்தில் சந்தோஷம் பறிபோவதற்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. அப்படியொரு எண்ணத்தை உங்கள் துணையின் மனதில் ஏற்படுத்திவிடாதபடி கவனமாய் இருங்கள்.—மத். 7:12.
திருமணமாகி 35 வருடங்களான வால்ஃப்காங் இவ்வாறு கூறுகிறார்: “பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, முக்கியமாக நான் என்ன நினைக்கிறேன் என்பதை என் மனைவி புரிந்துகொள்ளாததுபோல் நான் உணரும்போது எனக்குள் ஒருவித ஆதங்கம் ஏற்படுகிறது.” மணமாகி 20 வருடங்களான டயனா இப்படிச் சொல்கிறார்: “பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது நான் சொல்வதை என் கணவர் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்று அடிக்கடி அவரிடம் சொல்வேன்.” இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?
உங்களுடைய துணை இப்படித்தான் நினைக்கிறார் அல்லது உணருகிறார் என்று நீங்களாகவே ஊகித்துக்கொள்ளாதீர்கள். “அகந்தையினால் மாத்திரம் வாது நீதிமொழிகள் 13:10) கருத்துகளை உங்கள் துணை சொல்லும்போது குறுக்கிடாமல் அவரைப் பேசவிடுவதன்மூலம் மரியாதை காட்டுங்கள். நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு அவர் சொன்னதையே வேறு வார்த்தைகளில் அவரிடம் சொல்லுங்கள். அப்படிச் சொல்லும்போது கேலி செய்வதுபோலவோ கோபமாகவோ சொல்லாதீர்கள். உங்கள் துணை சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்திருந்தால் அவர் அதைத் திருத்த அனுமதியுங்கள். நீங்களே பேசிக்கொண்டு இராமல் அவரையும். பிரச்சினை சம்பந்தமாக இருவரின் உணர்வுகளையும் எண்ணங்களையும் இருவரும் புரிந்துகொள்ளும்வரை இப்படிச் செய்யுங்கள்.
[அதாவது, வாக்குவாதம்] பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.” (உங்கள் துணை பேசுவதைக் கவனித்துக் கேட்டு, கருத்தைப் புரிந்துகொள்வதற்கு மனத்தாழ்மையும் பொறுமையும் அவசியம் என்பது உண்மையே. அதேசமயம், உங்கள் துணைக்கு இவ்வாறு மதிப்புக் கொடுக்கும்போது அவரும் தானாகவே உங்களுக்கு மதிப்புக் கொடுப்பார்.—மத்தேயு 7:2; ரோமர் 12:10.
இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் துணை சொன்னதைத் திருப்பிச் சொல்லும்போது அதே வார்த்தைகளில் சொல்லாதீர்கள். அவர் சொல்வதையும் நினைப்பதையும்பற்றி நீங்கள் என்ன புரிந்திருக்கிறீர்கள் என்பதைக் கனிவான விதத்தில் சொல்லுங்கள். —1 பேதுரு 3:8.
4. சேர்ந்து முடிவெடுங்கள்.
“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.” (பிரசங்கி 4:9, 10) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காவிட்டால் குடும்பத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினம்.
கணவரைக் குடும்பத்தின் தலைவராக யெகோவா நியமித்திருப்பது உண்மைதான். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23) ஆனால், தலைமைத்துவம் என்பது சர்வாதிகாரம் கிடையாது. ஞானமுள்ள ஒரு கணவர் தன் இஷ்டப்படி தீர்மானங்களை எடுக்க மாட்டார். மணமாகி 20 வருடங்களான டேவிட் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவி எதை ஒத்துக்கொள்வாள் என்பதைக் கண்டுபிடிக்க முயலுகிறேன். அதற்கு ஏற்றாற்போல் ஒரு தீர்மானத்தை எடுக்கிறேன்.” மணமாகி இப்பொழுது ஏழு வருடங்களான டான்யா சொல்வதாவது: “யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்பது விஷயமல்ல. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில் சிலசமயம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருக்கும், அவ்வளவுதான். விட்டுக்கொடுப்பதும் நியாயமாக இருப்பதும் வெற்றிக்கு வழி என்பதை நான் கண்டிருக்கிறேன்.”
இப்படிச் செய்துபாருங்கள்: ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்கையில் உங்களுக்குத் தோன்றும் பல்வேறு வழிகளை எல்லாம் இருவருமாகச் சேர்ந்து எழுத ஆரம்பியுங்கள். இருவருக்கும் தோன்றுகிற எல்லா வழிகளையும் எழுதி முடித்தப் பிறகு எழுதியவற்றில் இருவருக்கும் ஒத்துவரும் ஒரு தீர்வை நடைமுறைப்படுத்துங்கள். அந்தத் தீர்வின்படி செய்திருக்கிறீர்களா, அது எந்தளவு பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என்பதைச் சில நாட்கள் கழித்து கலந்தாலோசிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
தனித்தனியாக அல்ல, சேர்ந்து செய்யுங்கள்
மணவாழ்வை மாட்டின் கழுத்தில் பூட்டப்படும் நுகத்திற்கு இயேசு ஒப்பிட்டார். (மத். 19:6) நுகம் என்பது, இரண்டு மிருகங்கள் சேர்ந்து வேலை செய்வதற்காக அவற்றின் கழுத்தில் இணைத்துப் பூட்டப்படும் தடித்த மரக்கட்டை ஆகும். இரண்டு மிருகங்களும் சேர்ந்து ஒத்துழைக்காவிட்டால் வேலை எதுவும் நடக்காது; அதுமட்டுமல்லாமல், அவற்றின் கழுத்தில் அந்த நுகம் உரசி உரசி அந்த இடமே புண்ணாகிவிடும். அவை சேர்ந்து உழைத்தால், பாரமான சுமைகளை இழுக்கவோ, வயல் நிலத்தை உழவோ முடியும்.
அவ்வாறே, மணவாழ்க்கை என்னும் நுகத்தில் இணைக்கப்பட்ட கணவனும் மனைவியும், சேர்ந்து வேலை செய்யாமற்போனால் உரசல் ஏற்படலாம். மறுபட்சத்தில், எல்லாவற்றையும் அவர்கள் சேர்ந்து செய்யக் கற்றுக்கொண்டால், கிட்டத்தட்ட எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம், நிறைய காரியங்களைச் சாதிக்கலாம். மணவாழ்வில் மகிழ்ச்சிகண்ட கலாலா இவ்வாறு சொல்கிறார்: “25 வருடங்களாக நானும் என் மனைவியும் எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டிருக்கிறோம். அதற்குக் காரணம், நாங்கள் ஒளிவுமறைவின்றிப் பேசினோம், ஒருவர் மற்றொருவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டோம், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தோம், பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தோம்.” நீங்களும் அப்படிச் செய்து பார்க்கலாம், அல்லவா? (w08 5/1)
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .
-
என் துணையோடு எந்தப் பிரச்சினைபற்றி முதலில் பேச விரும்புகிறேன்?
-
இந்த விஷயத்தில் என் துணையின் உள்ளான உணர்வுகளைப் புரிந்திருக்கிறேன் என்று நான் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்வது?
-
எல்லாவற்றிலும் என் வழிக்கே வரவேண்டுமென்று நான் வற்புறுத்தினால் என்ன பிரச்சினையை நானே உருவாக்கலாம்?
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.