Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரை உபயோகிப்பது தவறா?

கடவுளுடைய பெயரை உபயோகிப்பது தவறா?

கடவுளுடைய பெயரை உபயோகிப்பது தவறா?

எபிரெய வேதாகமத்தில், அதாவது “பழைய ஏற்பாட்டில்,” கடவுளுடைய பெயர் கிட்டத்தட்ட 7,000 தடவை காணப்படுகிறது. எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் இப்படித்தான் உள்ளது—יהוה (வலமிருந்து இடமாக வாசிக்க வேண்டும்). அதாவது, யோத், ஹே, வௌ, ஹே என்ற நான்கு எபிரெய எழுத்துக்களில் குறிப்பிடப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ஒய் ஹெச் டபிள்யூ ஹெச் (YHWH) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில், கடவுளுடைய பெயரை உபயோகிப்பது தவறு என்ற மூடநம்பிக்கை யூதர்கள் மத்தியில் நிலவியது. இதனால் கடவுளுடைய பெயரை அவர்கள் உச்சரிக்காமலேயே விட்டுவிட்டார்கள். கடவுளுடைய பெயர் வரும் இடத்தில் அதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். என்றாலும், அநேக பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை “யாவே” அல்லது “யெகோவா” என மொழிபெயர்த்திருக்கிறார்கள். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் கத்தோலிக்க ஜெருசலேம் பைபிளும் ஒன்று. இந்த மொழிபெயர்ப்பின்படி, தன்னை அனுப்பியது யாரென இஸ்ரவேல் மக்கள் கேட்டால் என்ன சொல்வது என்று கடவுளிடம் மோசே கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக் கவனியுங்கள்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளும் யாக்கோபின் கடவுளுமான உங்கள் மூதாதையரின் கடவுளான யாவே என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; இந்தப் பெயரைச் சொல்லியே எல்லா தலைமுறையினரும் என்னிடம் வேண்டிக்கொள்வார்கள்!”—யாத்திராகமம் 3:15.

கடவுளுடைய பெயரை தாம் உபயோகித்ததைப் பற்றி ஜெபத்தில் இயேசு குறிப்பிட்டார்: “உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.” பரவலாக அறியப்பட்டுள்ள பரமண்டல ஜெபத்திலும் இயேசு இவ்வாறு சொன்னார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் தந்தையே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக.”—யோவான் 17:26; மத்தேயு 6:9, JB.

பதினாறாம் போப் பெனடிக்ட் சமீபத்தில் எழுதிய ஜீஸஸ் ஆஃப் நாஸரேத் என்ற நூலில் சொன்னதைக் கேட்டு நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம். கடவுளுடைய பெயரை உபயோகிப்பதைக் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: “கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஒய் ஹெச் டபிள்யூ ஹெச் (YHWH) என்ற இந்தப் பெயரை இஸ்ரவேலர்கள் உபயோகிக்க மறுத்தது . . . சரியென நான் அடித்துச் சொல்வேன். அப்படிச் செய்ததால் கடவுளுடைய பெயரை பொய் கடவுட்களுக்கு இணையாக கீழ்த்தரமாகப் பயன்படுத்தாதிருந்தார்கள். ஆனால், இன்றுள்ள பைபிள் மொழிபெயர்ப்புகள் பழங்காலத்து பெயர்களைப் போல் கடவுளுடைய பெயரையும் மொழிபெயர்த்திருப்பது தவறு. ஏனென்றால், பூர்வ இஸ்ரவேலர்கள் அதை மர்மமானது என்றும் உச்சரிக்கக் கூடாது என்றும் நினைத்தார்கள்.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுளுடைய பெயரை பயன்படுத்துவது சரியா தவறா? “இதுவே என்றென்றும் என் பெயர்; இந்த பெயரிலே எல்லா தலைமுறையினரும் என்னிடம் வேண்டிக்கொள்வார்கள்!” என்று யெகோவாவே சொல்லியிருக்கும்போது அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்ல யாருக்கு உரிமையிருக்கிறது? (w08 7/1)

[பக்கம் 26-ன் படம்]

இயேசு ஜெபிக்கையில் கடவுளுடைய பெயரை உபயோகித்தார்