குடும்ப மகிழ்ச்சிக்கு . . .
பருவ வயதினருடன் பேசுவது எப்படி?
“சின்ன வயசுல என் மகன் எங்களுடன் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தான். ஆனா, இப்பெல்லாம் எங்களிடம் சரியாகவே பேசுறதில்ல. அவனுக்கு 16 வயசாகிறது. அவன் மனசுல என்னதான் இருக்குன்னு எங்களால புரிஞ்சிக்க முடிவதில்லை. எப்போதும் அவனுடைய அறையிலேயே அடைந்து கிடக்கிறான்.”—மிரியம், மெக்சிகோ.
“முன்னாடியெல்லாம் என் பிள்ளைங்க நான் என்ன சொன்னாலும் ஆசையாசையா உட்கார்ந்து கேட்பாங்க. ஆனால் இப்போ, அப்படியெல்லாம் கேட்கிறதே இல்ல. நம்மால் இந்தக் காலத்து பசங்களை புரிஞ்சுக்க முடியாதுன்னு நினைக்கிறாங்க.”—ஸ்காட், ஆஸ்திரேலியா.
உங்களுக்கும் பருவ வயது பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், மேலே குறிப்பிடப்பட்ட பெற்றோரைப் போலவே நீங்களும் உணரலாம். முன்பு, உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருந்திருக்கலாம்; இப்போதோ அதில் சில தடங்கள் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றலாம். “என் மகன் சின்ன வயசுல கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னைத் துளைத்தெடுப்பான். ஆனால் இப்பவெல்லாம் நான்தான் வலியப்போய் பேசவேண்டியதாய் இருக்குது. அப்படிப் பேசலைன்னா, அவனுக்கும் எனக்கும் நாள்கணக்கில எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமலே போய்டும்” என்கிறார் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா.
கலகலவென பேசிக்கொண்டிருந்த உங்கள் பையன் இப்போது சிடுசிடுன்னு ஆகிவிட்டதை ஏஞ்சலாவைப் போல் நீங்களும் பார்த்திருக்கலாம். அவனிடம் பேச நீங்கள் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் ஓரிரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்கிறான். “இன்னிக்கு எப்படி இருந்துச்சு?” என்று உங்கள் மகனிடம் கேட்கிறீர்கள். “நல்லா இருந்துச்சு” என்று பட்டென்று பதில் சொல்லி முடித்துக்கொள்கிறான். “இன்னிக்கு பள்ளிக்கூடத்துல என்ன நடந்துச்சு?” என்று உங்கள் மகளிடம் கேட்கிறீர்கள். தோள்களைக் குலுக்கி, “ஒன்னுமில்ல” என்கிறாள். “அவ்வளவுதானா, வேறெதுவும் சொல்ல மாட்டியா?” என்று நீங்கள் மேற்கொண்டு கேட்டாலும் அதற்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பாள்.
இன்னொரு பக்கத்தில், சில பிள்ளைகள் வாய்திறந்து பேசுவார்கள். ஆனால், அவர்கள் பேசும்விதம் பெற்றோருக்கு பிடிக்காது. “என் மகளிடம் ஏதாவது செய்ய சொன்னால், ‘தயவுசெஞ்சு என்னை சும்மாயிருக்க விடுறீங்களா’ என்றுதான் சொல்வாள்” என்கிறார் நைஜீரியாவைச் சேர்ந்த எட்னா. மெக்சிகோவைச் சேர்ந்த ராமனின் அனுபவமும் இதுதான். அவருக்கும்கூட 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனும் இப்படித்தான். அவனைப் பற்றி ராமன் சொல்கிறார்: “நானும் அவனும் சண்டை போடாத நாளே இல்லை. எதையாவது செய்ய சொன்னா போதும், ஏதாவது சாக்குப் போக்குச் சொல்ல ஆரம்பிச்சிடுவான்.”
பதிலே சொல்லாத பிள்ளை பெற்றோரின் பொறுமையை ரொம்பவே சோதிக்கலாம். “மனந்திறந்து பேசாவிட்டால் திட்டங்கள் தோல்வியடையும்” என்று பைபிளும் ஒத்துக்கொள்கிறது. (நீதிமொழிகள் 15:22, NW) “என் பையனுடைய மனசுல என்னதான் ஓடிட்டிருக்குன்னு தெரியாத சமயத்தில எரிச்சலா வரும். கத்தி கூச்சல் போடனும்போல தோணும்” என்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஒற்றைப் பெற்றோரான அன்னா. இளம் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் இடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டிய கட்டத்தில் ஏன் அவர்களுக்கு அது கடினமாக இருக்கிறது?
பேச்சுத்தொடர்புக்கு முட்டுக்கட்டைகள்
பேச்சுத்தொடர்பு என்பது வெறுமனே பேசுவதைக் குறிப்பதில்லை. ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45) எனவே, நன்கு பேச்சுத்தொடர்பு கொள்வதன் மூலம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், நம்மைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்கிறோம். ஆனால், இந்த இரண்டாவது அம்சம் பருவ வயதினருக்கு சவாலாக இருக்கலாம். ஏனென்றால், பருவ வயதை எட்டின பிறகு எல்லாரிடமும் சிரித்துப்பேசிப் பழகிய பிள்ளையும்கூட திடீரென அமைதியாகிவிடுகிறது. பருவ வயதினர் தாங்கள் பேசுவதையும் செய்வதையும் எப்போதும் யாராவது பார்த்துக்கொண்டே இருப்பதாக நினைக்கிறார்கள். சொல்லப்போனால், தாங்கள் மேடையில் இருப்பது போலவும் எல்லாருடைய பார்வையும் தங்கள் மீதே பதிந்திருப்பது போலவும் அவர்கள் கற்பனை செய்துகொள்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணத்திற்கு, தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் பார்வையாளர்களை நேருக்கு நேர் பார்ப்பதற்குப் பயந்து தங்களுக்கு முன்னால் திரை போட்டுக்கொள்கிறார்கள். அதாவது, பெற்றோர் நுழைய முடியாதபடி தங்களுக்கென்று ஒரு சிறிய உலகத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
பருவ வயதினர் சுதந்திரமாய் இருக்க விரும்புவது பேச்சுத்தொடர்புக்கு இன்னொரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதை நீங்கள் தவிர்க்க முடியாது. ஏனெனில், உங்கள் பிள்ளை வளர்ந்து வருகையில் குடும்பத்திடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது இயல்புதான். அதற்காக, உங்கள் பிள்ளை வீட்டைவிட்டு வெளியேற தயாராகிவிட்டான் என்று அர்த்தமல்ல. பல விஷயங்களில், முன்பைவிட இப்போதுதான் பருவ வயதினருக்கு உங்களுடைய உதவி தேவை. அவர்கள் வளர்ந்து பெரியவர்களாய் ஆவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள தொடங்கிவிடுகிறார்கள். அநேக பருவ வயதினர் ஒரு விஷயத்தைப் பற்றி தங்களுடைய மனதிலிருப்பதை மற்றவர்களிடம் சொல்வதற்கு முன் தனியாக யோசித்துப் பார்க்க விரும்புகிறார்கள்; அவர்கள் பக்குவமடைந்து வருகிறார்கள் என்பதற்கு இது ஓர் அறிகுறி.
அதேசமயத்தில், பருவ வயதினர் தங்கள் நண்பர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. இதை மெக்சிகோவைச் சேர்ந்த ஜெசிக்கா கண்டறிந்தார். “என் பொண்ணு சின்ன குழந்தையா இருந்தபோது எந்தப் பிரச்சினை என்றாலும் என்கிட்ட ஓடிவருவா. ஆனால், இப்போ அவளுடைய ஃபிரண்ட்ஸ்கிட்ட போறா” என்று சொல்கிறார் அந்தத் தாய். உங்களுடைய பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றால், பெற்றோராக உங்களை ஒதுக்கிவிட்டார்களென முடிவுகட்டிவிடாதீர்கள். மறுபட்சத்தில், பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களின் ஆலோசனைகளைவிட பெற்றோரின் ஆலோசனையையே அதிகமாய் மதிக்கிறார்கள்; பிள்ளைகள் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மையென ஆய்வுகள் காட்டுகின்றன. அப்படியென்றால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே பேச்சுத்தொடர்பு என்ற பாலம் எப்போதும் திறந்திருக்க என்ன செய்ய வேண்டும்?
முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய வழிகள் . . .
நேராய்ச் செல்லும் நீண்ட நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். பல கிலோமீட்டர் தூரம் கடந்துவிடுகிறீர்கள், ஆங்காங்கே உங்கள் வண்டியை லேசாகத்தான் திருப்ப வேண்டியிருந்தது. ஆனால், இப்போது திடீரென பாதை மாறுகிறது. நீங்கள் சாலையிலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் வண்டியை திருப்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. உங்கள் பிள்ளை பருவ வயதை எட்டும்போதும் இப்படித்தான் நீங்கள் வளைந்துகொடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில், உங்கள் பயிற்றுவிக்கும் முறைகளில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதுமாயிருந்தது. ஆனால், இப்போது உங்கள் பிள்ளையின் வாழ்க்கை, திடீரென பாதை மாறுகிறது. அதனால் அவனை வளர்க்கும் முறையில் இப்போது நீங்கள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
என் மகனோ மகளோ மனதிலுள்ளதைச் சொல்ல வரும்போது அவர்களுடன் பேச நான் தயாராய் இருக்கிறேனா? “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:11) சரியான சமயத்தில் பேசுவது முக்கியம் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு விவசாயி அறுவடையைச் சீக்கிரமாய் ஆரம்பிக்கவோ தள்ளிப்போடவோ முடியாது. ஏற்ற பருவம் வரும்போது அறுவடை செய்தாக வேண்டும். உங்கள் பருவ வயது பிள்ளையும் குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே தன் மனதிலிருப்பதைச் சொல்ல விரும்பலாம். தேடி வரும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். “பொதுவா என் பொண்ணு ராத்திரி நேரத்திலதான் என்கிட்ட பேச என் பெட் ரூமுக்கு வருவாள்; சில சமயங்கள்ல மணிக்கணக்கா பேசிக்கிட்டிருப்பாள். ராத்திரி கண்முழிச்சிருக்க எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும். ஆனா, அவளுக்காக கண்முழுச்சி காத்திட்டிருந்தப்போ நிறைய விஷயங்களைப் பேச முடிஞ்சுது” என்கிறார் ஃபிரான்ஸிஸ் என்ற ஒற்றைத் தாய்.
இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் பருவ வயது பிள்ளை உங்களிடம் பேச தயங்குவதுபோல் தோன்றினால், இருவரும் சேர்ந்து காலார நடந்து செல்லுங்கள் அல்லது கொஞ்ச தூரம்வரை உங்கள் வண்டியில் சென்றுவாருங்கள், ஏதாவது விளையாடுங்கள், வீட்டில் ஏதாவது வேலை செய்யுங்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளைகள் மனந்திறந்து பேச முன்வரலாம்.
‘வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறேனா?’ “வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கிறதல்லவா?” என்று யோபு 12:11 சொல்கிறது. உங்களுடைய மகன் அல்லது மகள் சொல்வதை எப்போதையும்விட இப்போது நீங்கள் ‘சோதித்துப் பார்ப்பது’ அவசியம். பருவ வயது பிள்ளைகள் பொதுவாக எல்லாவற்றையும் மிகைப்படுத்தியே சொல்வார்கள். உதாரணத்திற்கு, உங்கள் மகன் அல்லது மகள், “நீங்கள் எப்பவும் என்னை சின்னப் பிள்ளை மாதிரிதான் நடத்துறீங்க!” அல்லது “நான் சொல்றத ஒருநாளும் நீங்கள் காதுகொடுத்து கேட்கிறதில்ல!” என்று சொல்லலாம். “எப்பவும்,” “ஒருநாளும்” போன்ற வார்த்தைகளை அப்படியே பிடித்துக்கொள்ளாமல், உங்கள் பிள்ளை உண்மையில் என்னதான் சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “நீங்கள் எப்பவும் என்னை சின்னப் பிள்ளை மாதிரிதான் நடத்துகிறீர்கள்” என்று சொல்லும்போது “உங்களுக்கு என்மீது நம்பிக்கையே இல்லாததுபோல் தோன்றுகிறது” என்று அவர்கள் அர்த்தப்படுத்தலாம். “நான் சொல்வதை ஒருநாளும் நீங்கள் காதுகொடுத்து கேட்டதில்லை” என்று சொல்லும்போது “என் மனசுல இருப்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்று அவர்கள் அர்த்தப்படுத்தலாம். எனவே, வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் பருவ வயது பிள்ளை இப்படிச் சுருக்கென்று பேசும்போது பின்வருமாறு சொல்லுங்கள்: “உனக்கு ஏதோ மனசு கஷ்டம் இருக்கிற மாதிரி தெரியுது. உன் மனசுல இருக்கிறத சொல்லு, நான் கேட்கிறேன். நான் உன்னைச் சின்னப் பிள்ளை மாதிரி நடத்துறேன்னு சொன்னீயே, உனக்கு ஏன் அப்படித் தோனுச்சு?” அவர்கள் பதில் சொல்லும்போது இடைமறிக்காமல் கேளுங்கள்.
‘என் பிள்ளையை பேசச் சொல்லி வற்புறுத்துவதன் மூலம் என்னை அறியாமலேயே பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருக்கிறேனா?’
“சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதான சூழலில் நீதியின் விதையை விதைத்து அதின் கனியை அறுவடை செய்வார்கள்” (யாக்கோபு 3:18, NW) உங்களுடைய பேச்சிலும் நடத்தையிலும் ‘சமாதானமான சூழலை’ உருவாக்குங்கள். அப்போதுதான் பருவ வயது பிள்ளைகள் உங்களிடம் பேச விரும்புவார்கள். நீங்கள் உங்களுடைய பிள்ளையின் சார்பாக வாதாடும் வக்கீல் என்பதை நினைவில் வையுங்கள். எனவே, ஒரு விஷயத்தைக் குறித்து பேசுகையில், எதிர் தரப்பு வக்கீல் போல் உங்கள் பிள்ளைமீது குற்றம் சுமத்தாதீர்கள். “ஞானமுள்ள ஒரு பெற்றோர், ‘எப்பதான் உனக்கு புத்தி வருமோ?’ அல்லது, ‘உனக்கு எத்தனை தடவைதான் சொல்றது?’ என்றெல்லாம் பேச மாட்டார்கள். இந்த விஷயத்தில் நான் பலமுறை தவறு செய்தபிறகு ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதாவது, நான் பேசின விதம் மாத்திரமல்ல நான் பேசின வார்த்தைகள்கூட என் பையன்களின் மனதை புண்படுத்தின என்பதை உணர்ந்துகொண்டேன்” என்கிறார் கொரியாவைச் சேர்ந்த அன்.
இப்படிச் செய்துபாருங்கள்: நீங்கள் ஏதாவது கேட்டு, உங்கள் பருவ வயது பிள்ளை பதில் சொல்லவில்லை என்றால் வேறு வழியை முயன்று பாருங்கள். உதாரணத்திற்கு, ‘இன்னைக்கு எப்படி இருந்தது?’ என்று உங்கள் மகளிடம் கேட்பதற்குப் பதிலாக உங்களுக்கு அந்த நாள் எப்படி இருந்ததென்று சொல்லுங்கள்; அப்போது அவள் பேசுகிறாளா என பாருங்கள். ஒரு விஷயத்தைக் குறித்து உங்கள் மகளுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள, ‘நீ என்ன நினைக்கிறாய்?’ என்று அவளிடம் நேரடியாகக் கேட்பதற்குப் பதிலாக ‘உன் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள். அவளுடைய நண்பர்களுக்கு என்ன அறிவுரை கொடுப்பாள் என்று அவளிடமே கேளுங்கள்.
பருவ வயது பிள்ளைகளுடன் பேச்சுத்தொடர்பு கொள்வது முடியாத காரியம் அல்ல. தேவைக்கேற்றபடி உங்கள் பயிற்றுவிப்பு முறையை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் வெற்றிகண்ட பெற்றோரிடம் பேசுங்கள். (நீதிமொழிகள் 11:14) உங்கள் மகனிடமோ மகளிடமோ பேச்சுத்தொடர்பு கொள்ளும்போது ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருங்கள்.’ (யாக்கோபு 1:19) மிக முக்கியமாக, உங்கள் பருவ வயது பிள்ளைகளை ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டித்து அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்.’ நீங்கள் எடுக்கும் முயற்சியை விட்டுவிடாதீர்கள்.—எபேசியர் 6:4, NW. (w08 8/1)
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .
-
என் பிள்ளை பருவ வயதை எட்டியதிலிருந்து அவனிடம் அல்லது அவளிடம் நான் என்னென்ன மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்?
-
பேச்சுதொடர்பு கொள்ளும் விதத்தில் நான் என்னென்ன முன்னேற்றங்களைச் செய்யலாம்?