மற்றவர்களை நடத்தும் விஷயத்தில் . . .
இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்
மற்றவர்களை நடத்தும் விஷயத்தில் . . .
ஏன் இரக்கம் காட்ட வேண்டும்?
மற்றவர்கள் உங்களிடம் இரக்கம் காட்டாவிட்டாலும் நீங்கள் அவர்களிடம் இரக்கம் காட்டுகிறீர்களா? நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால், நம்மை வெறுக்கிறவர்களிடமும் இரக்கம் காட்ட வேண்டும். இயேசு இவ்வாறு சொன்னார்: ‘உங்கள்மீது அன்பு காட்டுகிறவர்களிடமே நீங்கள் அன்பு காட்டினால், உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது? பாவிகளும்கூட தங்கள்மீது அன்பு காட்டுகிறவர்களிடமே அன்பு காட்டுகிறார்கள். உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அப்போது, உன்னதமானவருடைய பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.’—லூக்கா 6:32-36; 10:25-37, NW.
ஏன் மன்னிக்க வேண்டும்?
நாம் ஏதாவது தவறு செய்துவிடும்போது, கடவுள் நம்மை மன்னிக்க வேண்டுமென விரும்புகிறோம். மன்னிப்பு கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்வது சரியானதென இயேசு கற்பித்தார். (மத்தேயு 6:12) அதேசமயம், நாம் மற்றவர்களை எந்தளவுக்கு மன்னிக்கிறோமோ அந்தளவுக்குத்தான் கடவுளும் நம்மை மன்னிப்பார் என்று இயேசு சொன்னார். “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் தகப்பனும் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:14, 15, NW.
குடும்பங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
இயேசு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாய் ஆக்குவதற்கு அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். சொல்லிலும் செயலிலும் அவர் நமக்குச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். பின்வரும் மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்.
1. கணவன் தன்னுடைய மனைவியை சொந்த உடலைப் போல் நேசிக்க வேண்டும். கணவன்மார்களுக்கு இயேசு முன்மாதிரி வைத்தார். “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று இயேசு தமது சீடர்களிடம் சொன்னார். எந்தளவிற்கு அன்புகூர வேண்டும்? “நான் உங்களில் அன்பாயிருந்தது போல” என்று கூறினார். (யோவான் 13:34) இதிலுள்ள நெறிமுறையை கணவர்களுக்குப் பொருத்தி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். ... அவ்வாறே, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன் மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான்; ஆனால், அதைப் போஷித்து நெஞ்சார நேசிக்கிறான்; கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார்.”—எபேசியர் 5:25, 28, 29, NW.
2. மணத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யக்கூடாது. வேறொரு நபருடன் உறவு வைத்துக்கொள்வது கடவுளுக்கு விரோதமான பாவம்; அப்படிப்பட்ட செயல் குடும்பங்களைச் சின்னாபின்னமாக்குகிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ... அதனால், கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்.”—மத்தேயு 19:4-9, NW.
3. பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இயேசு எந்தப் பாவமும் செய்யாத பரிபூரண மனிதராக இருந்தார்; அவருடைய பெற்றோரோ பாவிகளாய் இருந்தார்கள். என்றாலும், சிறுபிள்ளையாக இருந்த இயேசு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். 12 வயது சிறுவனாக இருந்த இயேசுவைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பின்பு அவர் அவர்களுடனே [பெற்றோருடனே] கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.”—லூக்கா 2:51; எபேசியர் 6:1-3.
இந்த நெறிமுறைகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
தமது சீடர்களுக்கு இதுவரை கற்பித்த பாடங்களைப் பற்றி சொல்கையில், “இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு கூறினார். (யோவான் 13:17, NW) உண்மை கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு, இயேசு சொல்லிக்கொடுத்தபடியே மற்றவர்களை நடத்த வேண்டும். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று அவர் சொன்னார்.—யோவான் 13:35. (w08 8/1)
இதைப்பற்றி கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 14-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள் a
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 24, 25-ன் படம்]
ஊதாரி மகனைப் பற்றிய இயேசுவின் உவமை இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது.—லூக்கா 15:11–32
[பக்கம் 25-ன் படம்]
மணத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யக்கூடாது