Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“முடிவை” யோசித்துப் பாருங்கள்

“முடிவை” யோசித்துப் பாருங்கள்

“முடிவை” யோசித்துப் பாருங்கள்

வாழ்க்கை எனும் பயணத்தை மேற்கொள்கையில் உங்கள் முன்னே பல பாதைகள் விரிந்து செல்லலாம். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை எங்கு போய் முடியும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. சிலர் தாங்கள் எடுத்த தீர்மானத்தைக் குறித்து பிற்பாடு ரொம்ப கவலைப்பட்டிருக்கிறார்கள். ‘இப்படி நடக்குமென்று எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தால் இந்தக் காரியத்தை நான் செய்தே இருக்க மாட்டேன்’ என்று சொல்லி நீங்களும் ஒருவேளை வருத்தப்பட்டிருக்கலாம்.

அனுபவமுள்ள ஒரு பயணி ஒவ்வொரு சாலையும் எங்கோ போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவார். அதற்கு அவர் ஒரு வரைபடத்தைப் பார்க்கலாம், அந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் கேட்கலாம். சாலையில் ஆங்காங்கே இருக்கும் வழிகாட்டி கம்பங்களையும் கவனமாகப் பார்க்கலாம். அப்படியானால், உங்களுடைய வாழ்க்கை பயணத்தில் எந்தப் பாதை சிறந்த பாதை என்பதை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? பூர்வ இஸ்ரவேல் மக்களைப் பற்றி மோசேயிடம் கடவுள் பேசுகையில், “அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும்” என்று சொன்னார்.—உபாகமம் 32:29.

மிகச் சிறந்த ஆலோசனை

வாழ்க்கை பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதைகள் எங்கு போய் ‘முடியுமோ’ என்று நாம் குழம்ப வேண்டிய அவசியமில்லை. கடவுளுக்கு எல்லாம் நன்றாகத் தெரிந்திருப்பதால், நம் அனைவருக்கும் எது சிறந்த பாதை என்பதை அவரால் மட்டுமே சிபாரிசு செய்ய முடியும். மனிதர்கள் சென்ற அநேக பாதைகளையும் அவற்றின் முடிவுகளையும் அவர் கண்ணார கண்டிருக்கிறார். ‘மனுஷனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 5:21.

தம்மை நேசிப்பவர்களை யெகோவா கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொள்கிறார். தம்முடைய வார்த்தையான பைபிள் என்ற வரைபடத்தின் மூலம் அவர்களுக்குச் சிறந்த வழியைக் காட்டுகிறார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று அதில் நாம் வாசிக்கிறோம். எனவே, நீங்கள் எந்த ஒரு பாதையையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜாவைப் போல் யெகோவாவின் ஆலோசனையை நாடுவது ஞானமானது. “நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்” என்று அவர் ஜெபம் செய்தார்.—சங்கீதம் 32:8; 143:8.

நம்பிக்கைக்குப் பாத்திரமான, அனுபவம் வாய்ந்த பயணி சிபாரிசு செய்த பாதையில் செல்லும்போது நீங்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் உணரலாம். அந்தப் பாதை உங்களை எங்கே கொண்டுபோய் விடுமோ என நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். தாவீது, யெகோவாவின் வழிநடத்துதலையும் அறிவுரையையும் கேட்டு அதன்படி செய்தார். அதனால் மன அமைதியைப் பெற்றார்; இது 23-ஆம் சங்கீதத்தில் அற்புதமாக வருணிக்கப்பட்டுள்ளது. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்” என்று தாவீது சொன்னார்.—சங்கீதம் 23:1–4.

அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்திருந்த சங்கீதக்காரரான ஆசாப் அல்லது அவருடைய சந்ததியாரில் ஒருவர் சரியான பாதையிலிருந்து “கிட்டத்தட்ட விலகும்” நிலையில் இருந்ததாக ஒத்துக்கொண்டார். அவருக்கு என்ன ஆனது? நேர்மையற்றவர்களும் மூர்க்கமானவர்களும் செல்வச் செழிப்பில் மிதப்பதையும், “சமாதானமாய்” வாழ்வதையும் கண்டு பொறாமைப்பட்டார். அவர்கள் என்றும் “சகலத்தையும் பெற்று சுகமாய்” வாழ்வதுபோல் அவருக்குத் தோன்றியது. இவர், தான் செல்லும் நீதியான பாதையையே சந்தேகிக்க ஆரம்பித்ததுதான் அதைவிட மோசம்.—சங்கீதம் 73:2, 3, 6, 12, 13, NW.

பிறகு இந்தச் சங்கீதக்காரன் யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று, ஜெபித்து, அந்தப் பொல்லாதவர்களின் முடிவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தார். ‘அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை நான் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்றார். தான் பொறாமைப்பட்ட ஆட்களுடைய முடிவை எண்ணிப்பார்த்தார். அவர்களுடைய எதிர்காலம் என்ன? அவர்கள் “சறுக்கலான இடங்களில்” இருந்ததையும் ‘திகில் பிடித்து அடியோடு அழிந்துபோவார்கள்’ என்பதையும் உணர்ந்துகொண்டார். தான் சென்று கொண்டிருந்த பாதையைக் குறித்து இப்போது எப்படி உணர்ந்தார்? “முடிவில், யெகோவாவே நீர் என்னை மகிமைப்படுத்துவீர்” என்று அவர் வாயாலேயே சொன்னார்.—சங்கீதம் 73:17–19, 24, NW.

குறுக்கு வழியில் அல்லது தகாத வழியில் செல்வம் சேர்ப்பவர்களுக்கு நேரிடும் முடிவைப் புரிந்துகொண்ட பிறகே தான் செல்லும் வழி சரியானது என்பது சங்கீதக்காரனுக்கு உதித்தது. “என்னைப் பொறுத்தவரை, நான் தேவனிடம் நெருங்கி வருவதே எனக்கு நலமானது” என்று கடைசியில் உணர்ந்துகொண்டார். ஆம், யெகோவாவிடம் நெருங்கி இருப்பதே எப்போதும் நல்ல பலன்களை வாரிவழங்கும்.—சங்கீதம் 73:28, NW.

“நீ போகும் பாதையைக் குறித்து எச்சரிக்கையாயிரு”

இன்று நமக்கும்கூட பல வாய்ப்புகள் காத்திருக்கலாம். கைநிறைய சம்பளத்தை அளிக்கும் வேலையோ பதவி உயர்வோ லாபகரமான தொழிலில் கூட்டாளியாகும் வாய்ப்போ உங்களுக்கு முன்னே இருக்கலாம். ஆனால், இந்த எல்லா வாய்ப்புகளிலும் ஆபத்து பதுங்கியிருக்கலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையின் ‘முடிவு’ என்னவாயிருக்கும் என்பதை முதலிலே சிந்தித்துப் பார்ப்பது எவ்வளவு சிறந்தது? நீங்கள் எடுக்கும் தீர்மானத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம்? குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரிடுமா? நீங்களோ உங்கள் மனைவியோ மன அழுத்தத்திற்கு ஆளாவீர்களா? உங்களுடன் வேலை செய்பவர்களோ ஓட்டல்களில் அல்லது மற்ற இடங்களில் நீங்கள் சந்திப்பவர்களோ தப்புத்தண்டா செய்யும்படி உங்களைத் தூண்டக்கூடுமா? நீங்கள் போகும் பாதை எப்படிப்பட்டது என்பதற்குக் கவனம் செலுத்தினால் உங்களால் சரியான தீர்மானம் எடுக்க முடியும். “நீ போகும் பாதையைக் குறித்து எச்சரிக்கையாயிரு” என்ற சாலொமோனின் அறிவுரையை நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 4:26, NW.

இந்த அறிவுரைக்கு நாம் அனைவருமே கவனம் செலுத்த வேண்டும், முக்கியமாக இளைஞர்கள். அறிவுரையை அசட்டை செய்த ஓர் இளைஞனுக்கு நேரிட்டதைக் கவனியுங்கள். அவன் ஓர் வீடியோவை வாடகைக்கு வாங்கினான். அதில் காம உணர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகள் இருப்பதை அறிந்திருந்தும் அதை வாங்கி பார்த்தான். விளைவு? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகே குடியிருந்த ஒரு விலைமகளிடம் சென்றான். பிறகு அவனுடைய மனசாட்சி அவனைச் சும்மா விடவில்லை. நெருப்பில் விழுந்த புழுவாய்த் துடிதுடித்தான். குற்ற உணர்வு அவனை பாடாய்ப்படுத்தியது; அதோடு, ஏதாவது நோய் தன்னைத் தொற்றிக்கொள்ளுமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது. பைபிள் வர்ணித்தபடியே அவனுக்கு நடந்தது: ‘வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போல உடனே அவனும் அவள் பின்னே சென்றான்.’ அவன் மட்டும் ‘முடிவை’ ஆரம்பத்திலேயே யோசித்துப் பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்!—நீதிமொழிகள் 7:22, 23.

வழிகாட்டி கம்பங்களை நம்புங்கள்

வழிகாட்டி கம்பங்களைப் பார்க்காமல் பயணம் செய்வது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அநேகர் ஒத்துக்கொள்வார்கள். ஆனால், வாழ்க்கை பாதையில் செல்லும் சிலர், தங்களுக்குப் பிடிக்காத ஆலோசனைகளை அசட்டை செய்துவிடுவது சோகமான விஷயம். எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த சில இஸ்ரவேலர் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய சமயத்தில், ‘பழைய பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்’ என்று யெகோவா தேவன் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். ஆனால், அவர்களோ “அதிலே செல்லமாட்டோம்” என்று முரண்டுபிடித்தார்கள். (எரேமியா 6:16) அவர்களுடைய கலகத்தனமான செயலின் ‘முடிவு’ என்ன? பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து எருசலேம் நகரத்தை தரைமட்டமாக்கினார்கள். அதன் குடிமக்களை சிறைக்கைதிகளாக பாபிலோனுக்குக் கொண்டு சென்றார்கள்.

கடவுள் நமக்காக நாட்டியிருக்கும் வழிகாட்டு கம்பங்களை அசட்டை செய்தால் நாம் ஒருபோதும் வாழ்வில் வெற்றி பெறமாட்டோம். ‘யெகோவாவை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார்’ என்று சொல்லி வேதவசனங்கள் நமக்கு ஊக்கமளிக்கின்றன.—நீதிமொழிகள் 3:5, 6, ஈஸி டு ரீட் வர்ஷன்.

‘இந்த வழியே செல்லாதீர்’ என்ற எச்சரிப்பு பலகைகளைப் போல பைபிளும் சில விஷயங்களில் நம்மை எச்சரிக்கிறது. உதாரணத்திற்கு, ‘பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே’ என்று பைபிள் சொல்கிறது. அப்படிப்பட்ட ஆபத்தான வழிகளில் ஒன்றைத்தான் நீதிமொழிகள் 5:3, 4 (பொது மொழிபெயர்ப்பு) குறிப்பிடுகிறது: ‘விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயிலும் மிருதுவானவை. ஆனால், அவள் உறவின் விளைவோ எட்டியிலும் கசக்கும்; இருபுறமும் கூரான வாளைப்போல்’ இருக்கும். துணையுடன் அல்லாமல் வேறொருவருடன் உறவு கொள்வது—அது விலைமகளாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி—சிலருக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். ஒழுக்க ரீதியில் நம்மைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள உதவும் இந்த எச்சரிக்கை பலகைகளை அசட்டை செய்தால் படுபாதாளத்தில்தான் போய் விழுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு, “இந்தப் பாதை எங்கே போய் முடியும்?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ‘முடிவு’ என்னவாயிருக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தால், விபரீத விளைவுகளுக்கு வழிநடத்தும் பாதையைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். எச்சரிக்கை பலகைகளை அசட்டை செய்து தவறான பாதையில் செல்ல தீர்மானித்திருப்பவர்கள் எய்ட்ஸ், பால்வினை நோய்கள், முறையற்ற கர்ப்பங்கள், கருச்சிதைவு, கணவன் மனைவி உறவில் விரிசல்கள், குற்ற உணர்வு போன்ற படுகுழிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒழுக்கங்கெட்ட நடத்தையுள்ளவர்கள் செல்லும் பாதையின் முடிவை அப்போஸ்தலன் பவுல் மிகத் தெளிவாகச் சொன்னார்: அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.

“வழி இதுவே”

சில சமயங்களில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை நம்மை எங்கு கொண்டுபோய்விடும் என்பதைக் கண்டுபிடிப்பதே கடினமாய் இருக்கலாம். ஆனால், கடவுள் நம்மிடம் அன்பாய் இருப்பதற்காகவும் சரியான வழியைக் காட்டுவதற்காகவும் நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (ஏசாயா 30:21) யெகோவா நமக்கு காட்டும் வழி நம்மை எங்கே கொண்டு செல்லும்? அந்தப் பாதை குறுகலாகவும் பயணிப்பதற்குக் கடினமாகவும் இருந்தாலும்கூட அது நம்மை முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும்.—மத்தேயு 7:14.

நீங்கள் சென்றுகொண்டிருக்கும் பாதை எப்படிப்பட்டது? அது சரியான பாதைதானா? அது எங்கே செல்கிறது? என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பைபிள் என்ற ‘வரைபடத்தை’ புரட்டிப் பாருங்கள். கடவுளுடைய வழியில் பல வருடங்களாய் சென்றுகொண்டிருக்கும் அனுபவமுள்ள பயணியிடமும் ஆலோசனைக் கேளுங்கள். உங்கள் பாதையை மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

ஒரு பயணி தான் சரியான வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை வழிகாட்டி கம்பங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார். அதேபோல் நீங்களும் சுய பரிட்சை செய்து பாருங்கள். நீதியின் பாதையில் நீங்கள் செல்வதாகத் தெரியவந்தால் தொடர்ந்து அதிலேயே நடந்துவர தீர்மானமாயிருங்கள். உங்கள் பயணத்தின் முடிவில் உங்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது.—2 பேதுரு 3:13.

எல்லா பாதைக்கும் ஒரு முடிவு உண்டு. நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை முடியும்போது நீங்கள் எங்கே இருப்பீர்கள்? அப்போது, “ஐயோ, நான் மட்டும் அந்தப் பாதையில் போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?” என்று புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அதனால், உங்கள் வாழ்க்கை பாதையில் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு முன்பே, “இந்தப் பாதையின் முடிவு என்ன?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (w08 9/1)

[பக்கம் 30-ன் பெட்டி/படங்கள்]

“முடிவு” என்னவாயிருக்கும்?

இன்றைக்கு நண்பர்கள் மத்தியில் பிரபலமாய் இருக்கும் காரியங்களைத் தாங்களும் செய்து பார்க்க வேண்டுமென்ற தூண்டுதல் இளைஞர்களுக்கு அடிக்கடி வருகிறது. அந்தத் தூண்டுதல் உள்ளுக்குள்ளிருந்தும் வரலாம், வெளியிலிருந்தும் வரலாம். அவற்றில் சில:

◼ சிகரெட் குடிக்க நீங்கள் பயப்படுவதாகச் சொல்லி யாரோ ஒருவர் உங்களை உசுப்பிவிடுகிறார்.

◼ ஏதாவது பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மேற்கொண்டு படிக்கும்படி உங்கள்மீது அக்கறையுள்ள ஆசிரியர் உங்களை உற்சாகப்படுத்துகிறார்.

◼ மதுபானமும், ஒருவேளை போதை பொருள்களும் பரிமாறப்படும் ஒரு விருந்துக்கு யாரோ உங்களை அழைக்கிறார்.

◼ ‘உன்னுடைய போட்டோவையும் உன்னைப் பற்றிய தகவல்களையும் இன்டர்நெட்டில் போடலாமே’ என்று யாரோ ஒருவர் உங்களுக்குச் சிபாரிசு செய்கிறார்.

◼ சண்டைக் காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும் நிறைந்த படத்தைப் பார்க்க உங்களுடைய நண்பர் அழைக்கிறார்.

இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் எதிர்ப்பட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் ஆசைக்கு இடம் கொடுத்துவிடுவீர்களா அல்லது அதன் “முடிவை” கவனமாய் சிந்தித்துப் பார்ப்பீர்களா? பின்வரும் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்வது ஞானமான தீர்மானத்தை எடுக்க உதவும்: “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?”—நீதிமொழிகள் 6:27, 28.