Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆதாம் குறைபாடில்லாதவன் என்றால் ஏன் பாவம் செய்தான்?

ஆதாம் குறைபாடில்லாதவன் என்றால் ஏன் பாவம் செய்தான்?

வாசகரின் கேள்வி

ஆதாம் குறைபாடில்லாதவன் என்றால் ஏன் பாவம் செய்தான்?

சுயமாகத் தீர்மானிக்கும் திறமையுடன் ஆதாம் படைக்கப்பட்டதால் அவன் பாவம் செய்ய வாய்ப்பிருந்தது. ஆதாமுக்குச் சுயமாய்த் தீர்மானிக்கும் திறமையைக் கடவுள் கொடுத்ததையும் அவனைப் பூரணமாய்ப் படைத்ததையும் சேர்த்து நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், கடவுள் ஒருவர் மட்டுமே சகலத்திலும் பூரணமானவர். (உபாகமம் 32:​3, 4; சங்கீதம் 18:30; மாற்கு 10:18) வேறு யாருமே சகலத்திலும் பூரணமானவர் அல்லது குறையற்றவர் என்று சொல்ல முடியாது. அதேபோல் வேறு எதுவுமே சகலத்திலும் பூரணமானது அல்லது குறையற்றது என்று சொல்ல முடியாது. உதாரணமாக, இறைச்சியை வெட்ட கத்தி உதவும், ஆனால் அதையே பயன்படுத்தி ‘சூப்’ குடித்தால் என்ன ஆகும்? அந்தக் கத்தியில் எந்தக் குறையுமில்லை; அதை பயன்படுத்தும் முறையில்தான் குறை உள்ளது. எனவே, ஒரு பொருளை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்துதான் அது பூரணமானதா அல்லது குறையற்றதா என்று சொல்ல முடியும்.

அப்படியானால், என்ன நோக்கத்திற்காக ஆதாமை கடவுள் படைத்தார்? சுயமாகத் தீர்மானிக்கும் திறமை படைத்த புத்திக்கூர்மையுள்ள சந்ததியை ஆதாமின் மூலம் உருவாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். கடவுள் மீதும் அவருடைய வழிகள் மீதும் அன்பை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்கள் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியத் தீர்மானிப்பார்கள். ஆனால், மனிதன் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவனுடைய மூளையில் புரோகிராம் செய்யப்படவில்லை, அந்தக் கீழ்ப்படிதல் அவனுடைய இருதயத்திலிருந்து வரவேண்டும். (உபாகமம் 10:​12, 13; 30:​19, 20) கீழ்ப்படிவதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் திறமை ஆதாமுக்கு இல்லாதிருந்தால், அவன் பூரணமாக இருந்திருக்க மாட்டான்; ஏதோவொரு குறையோடுதான் இருந்திருப்பான். சுயமாகத் தீர்மானிக்கும் திறமையை ஆதாம் எப்படிப் பயன்படுத்தினான்? தன்னுடைய மனைவியின் போக்கைப் பின்பற்றி, ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ சம்பந்தமாக கடவுள் கொடுத்திருந்த சட்டத்தை மீறினான் என்று பைபிள் பதிவு சொல்கிறது.​​⁠⁠ஆதியாகமம் 2:17; 3:1–6.

அப்படியானால், ஒழுக்க நெறியில் குறைபாடுள்ளவனாக கடவுள் அவனைப் படைத்தாரா? அதனால், சரியான தீர்மானம் எடுக்க முடியாதவனாக அல்லது சபலங்கள் உண்டாகும்போது அதை எதிர்கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டானா? ஆதாம் கீழ்ப்படியாமல் போனதற்கு முன்பே, முதல் மனித ஜோடியையும் தமது பூமிக்குரிய படைப்புகள் அனைத்தையும் பார்த்து, அது “மிகவும் நன்றாயிருந்தது” என்று யெகோவா சான்றளித்தார். (ஆதியாகமம் 1:31) எனவே, ஆதாம் பாவம் செய்தபோது கடவுளுடைய படைப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டதுபோல் அதை அவர் சரிசெய்ய வேண்டியிருக்கவில்லை; ஆனால் அதற்கு ஆதாம்தான் முழு பொறுப்பாளி எனக் கடவுள் குற்றம்சாட்டினார். (ஆதியாகமம் 3:17–19) கடவுள் மீதும் அவருடைய நீதியான நெறிமுறைகள் மீதும் அவனுக்கு அன்பு இருந்திருந்தால் அவன் கீழ்ப்படியாமல் போயிருக்க மாட்டான்.

இயேசு பூமியில் இருந்தபோது ஆதாமைப் போலவே பூரணராக இருந்தார் என்பதைக் கவனியுங்கள். என்றாலும், ஆதாமின் மற்ற சந்ததியாரைப் போலில்லாமல் இயேசுவோ கடவுளுடைய சக்தியின் உதவியோடு கருத்தரிக்கப்பட்டதால் சபலங்களுக்கு அடிபணிந்துபோகும் பலவீனம் அவருக்கு இருக்கவில்லை. (லூக்கா 1:​30, 31; 2:21; 3:​23, 38) இயேசு கடும் சோதனைகள் மத்தியிலும் தம்முடைய சொந்த விருப்பத்தினாலேயே தம் தகப்பனுக்கு உத்தமமாய் இருந்தார். ஆனால், ஆதாம் சுயமாய்த் தீர்மானிக்கும் திறமையைப் பயன்படுத்தி கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனான்; அதனால் அவன் செய்த தவறுக்கு அவன்தான் பொறுப்பாளி.

அப்படியானால், ஆதாம் ஏன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக தீர்மானித்தான்? தன் வாழ்க்கை முன்னேறும் என நினைத்ததால் அப்படித் தீர்மானித்தானா? இல்லை. “ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 2:14) ஆனால், தனது மனைவியின் விருப்பத்திற்கு​—⁠விலக்கப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்ட மனைவியின் விருப்பத்திற்கு​—⁠இணங்கிப்போகவே தீர்மானித்தான். தனது படைப்பாளரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையைவிட தனது மனைவியைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசைதான் அவனுடைய மனதில் மேலிட்டது. விலக்கப்பட்ட கனியை அவனிடம் ஏவாள் கொடுத்தபோது, கீழ்ப்படியாமல் போவது கடவுளுடன் கொண்டுள்ள தன் உறவை பாதிக்குமென அவன் ஒரு கணம் யோசித்திருக்க வேண்டும். கடவுள்மீது ஆதாமுக்கு ஆழ்ந்த அன்பு, உறுதியான அன்பு, இல்லாத காரணத்தால் அவனுடைய மனைவியிடமிருந்து சோதனை வந்தபோதும் அவன் சட்டென விழுந்துவிட்டான்.

ஆதாமுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே அவன் பாவம் செய்ததால் அவனுடைய சந்ததியார் அனைவரும் குறையுடன் பிறந்தார்கள். என்றாலும், ஆதாமைப் போலவே சுயமாகத் தீர்மானிக்கும் திறமை நமக்கும் இருக்கிறது. யெகோவா நமக்குச் செய்த நன்மையை நன்றியுடன் எண்ணிப்பார்த்து, அவர்மீது, அதாவது நம்முடைய கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் பெறத் தகுதியுள்ளவர்மீது ஆழ்ந்த அன்பை வளர்த்துக்கொள்ள தீர்மானிப்போமாக.​—சங்கீதம் 63:6; மத்தேயு 22:​36, 37. (w08 10/1)