Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாகும்போது என்னதான் நடக்கிறது?

சாகும்போது என்னதான் நடக்கிறது?

சாகும்போது என்னதான் நடக்கிறது?

“யாருடைய ஆத்துமாவும் சாகாது, கெட்டவர்களுடைய ஆத்துமாவாக இருந்தாலும் சரி, அது சாகாது. . . . அவர்கள் அணையாத நெருப்பில் என்றென்றும் வதைக்கப்படுவதால், சாகாமல் இருப்பதால், அவர்களுடைய துன்பத்திற்கு [முடிவே] இருக்காது.”​—⁠அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளமென்ட், இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளர்.

கிளமென்ட்டைப் போல, நரகம் என்பது வாதனைக்குரிய இடம் என்ற போதனையை ஆதரிப்பவர்கள் மனித ஆத்துமா சாகாது என்றே நினைக்கிறார்கள். இந்தப் போதனையை பைபிள் ஆதரிக்கிறதா? பின்வரும் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களைச் சிந்தித்துப் பாருங்கள்.

முதல் மனிதன் ஆதாமுக்கு அழியாத ஆத்துமா இருந்ததா? புராட்டஸ்டன்ட் பைபிள் அதாவது தமிழ் யூனியன் வர்ஷன், ஆதாம் படைக்கப்பட்டதைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) கவனியுங்கள்: ஆதாமுக்கு ஓர் ஆத்துமா கொடுக்கப்பட்டதென்று அந்த வசனம் சொல்வதில்லை.

ஆதாம் பாவம் செய்த பிறகு கடைசியில் அவனுக்கு என்ன நேரிட்டது? ‘நீ என்றென்றைக்கும் நரகத்தில் வதைக்கப்படுவாய்’ என்று கடவுள் அவனுக்குத் தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக, ‘நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய். இறுதியில், நீ எந்தப் பூமியினின்று எடுக்கப்பட்டாயோ அந்தப் பூமிக்கே திரும்பிப் போவாய். ஏனென்றால், நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்’ என்றே கடவுள் தீர்ப்பு வழங்கியதாக தமிழ் கத்தோலிக்க பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 3:19) ஆகவே, ஆதாம் இறக்கும்போது அவனுடைய உடலிலிருந்து ஏதோவொரு பாகம் பிரிந்துசென்று தொடர்ந்து உயிர்வாழும் என்று கடவுள் மறைமுகமாகக்கூட அவனிடம் சொல்லவில்லை. ஆதாம் மரித்தபோது, ஆதாம் என்ற ஆத்துமா மரித்தது.

எந்த மனிதனுக்காவது அழியாத ஆத்துமா இருக்கிறதா? “பாவஞ்செய்யும் ஆன்மாவே சாகும்” என்று எசேக்கியல் தீர்க்கதரிசியிடம் கடவுள் சொன்னார். (எசேக்கியேல் 18:​4, கத்.பை) “ஒரே மனிதனால் [ஆதாமினால்] பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லாரும் பாவஞ்செய்தமையால், எல்லா மனிதர்க்குள்ளும் சாவு பரவியது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 5:​12, கத்.பை) எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்கள் என்றால் எல்லா ஆத்துமாக்களும் சாகும்தானே.

இறந்த ஆத்துமாவுக்கு எதாவது தெரியுமா அல்லது எதாவது உணர்வுதான் இருக்கிறதா? “உயிரோடிருக்கிறவர்கள் தங்களுக்குச் சாவு வருமென்று அறிந்திருக்கிறார்கள். இறந்தவர்களோ இனி ஒன்றும் அறியார்கள்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (பிரசங்கி [சங்கத் திருவுரை ஆகமம்] 9:​5, கத்.பை) ஒரு மனிதன் சாகும்போது என்ன நடக்கிறது என்பதை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:4) இறந்தவர்கள் “இனி ஒன்றும் அறியார்கள்,” அவர்களுடைய “யோசனைகள் அழிந்துபோம்” என்றால், எரிநரகத்தில் வதைக்கப்படுவது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

இயேசு கிறிஸ்து, மரணத்தை ஏதோவொரு வகையில் உணர்வுடன் இருப்பதற்கு ஒப்பிடவில்லை, தூக்கத்திற்குத்தான் ஒப்பிட்டார். a (யோவான் 11:11–14) ஆனால், நரகம் என்பது சுட்டெரிக்கும் இடம் என்றும், பாவிகள் அதற்குள் தள்ளப்படுவார்கள் என்றும் இயேசு கற்பித்ததாகச் சிலர் சொல்லலாம். அப்படியானால், நரகத்தைப் பற்றி இயேசு என்னதான் சொன்னார் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (w08 11/1)

[அடிக்குறிப்பு]

a கூடுதல் தகவலுக்கு, “இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்​—⁠இறந்தவர்களுக்கான நம்பிக்கையைப் பற்றி” என்ற கட்டுரையை 16, 17 பக்கங்களில் காண்க.