Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறந்த தகப்பனாக விளங்க . . .

சிறந்த தகப்பனாக விளங்க . . .

சிறந்த தகப்பனாக விளங்க . . .

“தகப்பன்மார்களே உங்கள் பிள்ளைகள்மீது எரிச்சலடையாதீர்கள், அப்படி எரிச்சலடைந்தால் அவர்கள் மனம் சோர்ந்துவிடுவார்கள்.” ​—⁠கொலோசெயர் 3:​21, பரிசுத்த வேதாகமம்​—⁠நியு இன்டர்நேஷனல் வர்ஷன்.

பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாமல் இருக்க தகப்பன்மார் என்ன செய்யலாம்? ஓர் அப்பாவாக தன்னுடைய பொறுப்புகளை அவர் புரிந்துகொள்வது அவசியம். “பிள்ளை வளர்ப்பில் தகப்பனுடைய பங்கு சிக்கலானது, ஈடிணையற்றது; ஒரு பிள்ளையின் உணர்ச்சிப்பூர்வ மற்றும் அறிவுப்பூர்வ வளர்ச்சியில் அவருடைய பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று மன ஆரோக்கியத்தைப் பற்றி அலசும் ஒரு பத்திரிகை சொல்கிறது.

ஒரு தந்தையின் பங்கு என்ன? நிறைய குடும்பங்களில் தகப்பன்மார்களே பிள்ளைகளைக் கண்டிக்கிறார்கள். அதனால்தான் பிள்ளைகள் சேட்டை செய்தால், “அப்பா வரட்டும்” என்று அநேக தாய்மார்கள் சொல்வதைக் கேட்கிறோம். பிள்ளைகள் பக்குவமான ஆட்களாக வளர, அவர்களை அளவோடு கண்டிக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், ஒரு நல்ல அப்பாவாக இருப்பது சுலபமல்ல, அதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

எல்லா அப்பாமாருக்கும் முன்மாதிரியான தகப்பன் கிடைப்பதில்லை. சில ஆண்கள் தந்தை இல்லாத வீட்டில்தான் வளர்ந்து வந்திருக்கிறார்கள். வேறு சில ஆண்களோ, கொடூரமான அன்பற்ற தகப்பனிடம் வளர்ந்து வந்திருக்கிறார்கள்; அதனால், தங்கள் பிள்ளைகளிடம் அதுபோலவே நடந்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட அச்சுகளில் வார்க்கப்பட்ட தகப்பன்மார் எப்படி அதிலிருந்து வெளிவந்து சிறந்த தகப்பனாக விளங்க முடியும்?

ஆதர்ச அப்பாவாக விளங்குவதற்கு கைகொடுக்கும் நம்பகமான, நடைமுறையான வழிகாட்டி ஒன்று இருக்கிறது. ஆம், குடும்ப வாழ்க்கைக்குப் பொன்னான அறிவுரைகளை பைபிள் வழங்குகிறது. அவையெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயும் அல்ல, எட்டிக்காயும் அல்ல. அதிலுள்ள ஒவ்வொரு அறிவுரையும் அதன் ஆசிரியரான யெகோவா தேவனின் ஞானத்தை பறைசாற்றுகிறது. குடும்ப வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டவரே அவர்தான். (எபேசியர் 3:​14, 15) நீங்கள் ஒரு தகப்பன் என்றால், பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. a

நீங்கள் நல்ல தகப்பனாக இருக்கும்போது, பிள்ளைகள் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் மட்டுமல்ல ஆன்மீக ரீதியிலும் சிறந்து விளங்குவார்கள். தகப்பனிடம் அன்பும் நெருங்கிய பந்தமும் வைத்திருக்கிற பிள்ளைக்கு, கடவுளிடமும் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வது எளிதாக இருக்கலாம். சொல்லப்போனால், நம்முடைய படைப்பாளரான யெகோவா ஒரு விதத்தில் நமக்குத் தகப்பனாக இருக்கிறார் என பைபிள் கூறுகிறது. (ஏசாயா 64:8) தகப்பனிடமிருந்து பிள்ளைகளுக்குத் தேவையான ஆறு விஷயங்களையும் அவற்றைப் பூர்த்தி செய்ய பைபிள் நியதிகள் அவருக்கு எப்படி உதவுகின்றன என்பதையும் இப்போது அலசி ஆராயலாம்.

1 அரும்புகளுக்கு அப்பாவின் அன்பு அவசியம்

தகப்பன்மாருக்கு யெகோவா தலைசிறந்த முன்மாதிரியாய் விளங்குகிறார். தமது முதல் மகன் இயேசுவைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார் என்பதைக் கவனியுங்கள். ‘பிதாவானவர் குமாரனில் அன்பாயிருக்கிறார்’ என்று பைபிள் விவரிக்கிறது. (யோவான் 3:35; கொலோசெயர் 1:15) யெகோவா தம்முடைய மகனை நேசிப்பதையும் அவரை மெச்சுவதையும் பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தினார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து யெகோவா குரல் கொடுத்தார். (லூக்கா 3:22) யெகோவா தம்மீது அன்புகூருகிறார் என்பதில் இயேசுவுக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை. பரலோகத் தகப்பனுடைய முன்மாதிரியிலிருந்து மானிட தகப்பன் என்ன கற்றுக்கொள்ளலாம்?

உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்ல தயங்காதீர்கள். ஐந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருக்கும் கெல்வின் இவ்வாறு கூறுகிறார்: “என் பிள்ளைங்கமேல அன்பு வச்சிருக்கேன் என்பதை அவங்களிடம் சொல்வது மட்டுமில்லாம, அவங்க ஒவ்வொருத்தர் மீதும் அக்கறை காட்டி அவங்க தேவைகளையும் கவனிச்சுக்கிறேன். அவங்க சின்ன குழந்தைங்களா இருந்தப்போ ‘டையபர்’ மாற்றுவது முதல் குளிப்பாட்டுவது வரைக்கும் எல்லா விஷயத்திலேயும் உதவி செஞ்சேன்.” உங்கள் பிள்ளைகளை நீங்கள் மெச்சுகிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதனால், அவர்களை ஓயாமல் திட்டிக்கொண்டும் திருத்திக்கொண்டும் இருக்காதீர்கள். மாறாக, பாராட்டுகளை அள்ளி வழங்குங்கள். “ஒரு தகப்பன் தன் பிள்ளைங்கள பாராட்டுவதற்காக சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டே இருக்கணும்” என்று சிபாரிசு செய்கிறார் இரண்டு டீன்-⁠ஏஜ் மகள்களுக்குத் தகப்பனாய் இருக்கும் டோனிசெட். நீங்கள் அவர்களை மெச்சி பேசும்போதுதான் தங்கள்மீதே அவர்களுக்கு ஒரு மதிப்பு உண்டாகும். கடவுளிடம் அவர்கள் நெருங்கி செல்லவும் இது துணைபுரியும்.

2 இளம் மொட்டுகளுக்கு நல்ல முன்மாதிரி அவசியம்

இயேசு தம் “தகப்பன் எதைச் செய்வதை பார்க்கிறாரோ அதை மட்டுமே” அவரால் செய்ய முடியும் என யோவான் 5:19 (NW) சொல்கிறது. தம்முடைய தகப்பன் என்ன ‘செய்தாரோ’ அதையே இயேசு பார்த்து செய்ததாக இந்த வசனம் சொல்வதைக் கவனியுங்கள். பிள்ளைகளும் அப்படித்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு, அம்மாவை அப்பா மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினால், மகனும் பெரியவனாக வளரும்போது பெண்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவான். அப்பாவின் முன்மாதிரி பையன்களின் மனப்பான்மையைப் பாதிப்பது மட்டுமல்ல, ஆண்களைப் பற்றிய பெண் பிள்ளைகளின் கண்ணோட்டத்தையும் பாதிக்கிறது.

மன்னிப்பு கேட்பதென்றாலே உங்கள் பிள்ளைகளுக்கு மகா கஷ்டமாக இருக்கிறதா? இந்த விஷயத்திலும் முன்மாதிரி முக்கியம். ஒருசமயம் தன் இரண்டு பையன்களும் சேர்ந்து விலையுயர்ந்த ஒரு காமிராவை உடைத்துவிட்டதாக கெல்வின் சொல்கிறார். அதைப் பார்த்தவுடன் அவருக்குக் கோபம் வந்து, மேஜையை இரண்டாக உடைத்துவிட்டார். அப்படிச் செய்ததற்காக ரொம்ப வருத்தப்பட்டு எல்லாரிடமும், தன் மனைவியிடமும் மன்னிப்பு கேட்டார். அவர் அப்படி மன்னிப்பு கேட்டது பிள்ளைகள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என கூறுகிறார். இப்போதெல்லாம் எதாவது தவறு நடந்துவிட்டால் அவர்களாகவே ‘சாரி’ கேட்பதாகவும் சொல்கிறார்.

3 செல்ல பிள்ளைகளுக்குச் சந்தோஷமான சூழல் அவசியம்

யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்.” (1 தீமோத்தேயு 1:​11, NW) அதனால்தான், அப்பாவுடன் இருப்பதில் இயேசு பெருமகிழ்ச்சி அடைந்தார். இயேசுவுக்கும் அவருடைய அப்பாவுக்கும் இருந்த உறவைப் பற்றி நீதிமொழிகள் 8:30 (பொது மொழிபெயர்ப்பு) படம்பிடித்துக் காட்டுகிறது. “நான் அவர் அருகில் சிற்பியாய் இருந்தேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்” என்று சொல்கிறது. தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே எப்பேர்ப்பட்ட அன்பான உறவு!

உங்களுடைய பிள்ளைகளுக்குச் சந்தோஷமான சூழல் அவசியம். அதற்கு, உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்கள் விளையாடலாம். அப்படி விளையாடும்போது அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரு நல்ல பந்தம் ஏற்படுகிறது. டீன்-⁠ஏஜ் பையனுக்கு தகப்பனாக இருக்கும் பெலிக்ஸ் இதை ஆமோதிக்கிறார். “நான் என் பையனுடன் நேரம் செலவழிப்பதால், எங்களுக்குள் நல்ல உறவு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுவோம், நண்பர்களைப் போய் பார்ப்போம், பார்க், பீச் இந்த மாதிரி எங்காவது போயிட்டு வருவோம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் வந்திருக்கு.”

4 இளம் தளிர்களுக்கு ஆன்மீக விஷயங்களைக் கற்றுத்தருவது அவசியம்

இயேசுவுக்கு அவருடைய தகப்பன் கற்றுக்கொடுத்ததால், “நான் அவரிடத்தில் [தகப்பனிடத்தில்] கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (யோவான் 8:26) ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் பொறுப்பை ஒரு தகப்பன் நிறைவேற்ற வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார். ஒரு தகப்பனாக நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிள்ளைகளுடைய மனதில் சரியான நெறிமுறைகளைப் பதியவைப்பதாகும். இப்படிப்பட்ட பயிற்றுவிப்பை சிறுபிராயத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். (2 தீமோத்தேயு 3:​14, 15) தன்னுடைய மகன் மிகவும் சிறுவனாக இருந்தபோதே அழகிய படங்களைக் கொண்ட பைபிள் கதைகளை அவனுக்கு பெலிக்ஸ் வாசித்துக் காட்டினார். உதாரணத்திற்கு, என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலுள்ள அருமையான கதைகளை பெலிக்ஸ் சொல்லிக்கொடுத்தார். b அவருடைய மகன் வளர வளர, அவனுடைய வயதுக்கு ஏற்ப பைபிள் அடிப்படையிலான பல்வேறு புத்தகங்களைப் பயன்படுத்திக் கற்றுக்கொடுத்தார்.

“குடும்ப பைபிள் படிப்பை சுவாரஸ்யமாக நடத்துவது உண்மையிலேயே ஒரு சவால்தான், ஆன்மீக விஷயங்களில் பெற்றோர் அக்கறை காட்டுவது ரொம்ப ரொம்ப முக்கியம், இல்லையென்றால், ‘நீங்க சொல்றபடி செய்றதில்ல’ என்பதை பிள்ளைங்க சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க” என்கிறார் டோனிசெட். மூன்று மகன்களுக்குத் தகப்பனான கார்லோஸ் சொல்கிறார்: “குடும்ப விஷயங்களைப் பேசுவதற்கு எங்க வீட்ல வாராவாரம் மீட்டிங் போட்டோம். அதில் என்ன விஷயம் பேசலாம் என்பதைத் தீர்மானிக்க குடும்பத்தில் உள்ள எல்லாருக்குமே வாய்ப்பு கிடைச்சது.” கெல்வின் தன் பிள்ளைகளுடன் எங்கு போனாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், கடவுளைப் பற்றியே பேசினார். இது மோசேயின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.”​—உபாகமம் 6:​6, 7.

5 கண்மணிகளைக் கண்டிப்பது அவசியம்

பிள்ளைகள் சிறப்பாகவும் பொறுப்பாகவும் வளர அவர்களைக் கண்டித்து வளர்க்க வேண்டும். பிள்ளைகளைக் கண்டிப்பதென்றாலே அவர்களை வெளுத்து வாங்குவதுதான் என்று சில பெற்றோர் நினைக்கிறார்கள். அவர்களைப் பயங்கரமாக மிரட்டுவதும் மோசமாக திட்டுவதும்தான் சிட்சை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், கண்டிப்பதென்றால் பிள்ளைகளைக் கொடூரமாக நடத்துவது என்று பைபிள் சொல்வதில்லை. பதிலாக, யெகோவாவைப் போல, பிள்ளைகளை அன்புடன் கண்டிக்க வேண்டுமென சொல்கிறது. (எபிரெயர் 12:4–11) “தகப்பன்மார்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; மாறாக, யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—எபேசியர் 6:​4, NW.

எப்போதாவது ஒரு முறை பிள்ளைகளைத் தண்டிக்க வேண்டிய சந்தர்ப்பம் வரலாம். ஆனால், நீங்கள் ஏன் தண்டிக்கிறீர்கள் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை நீங்கள் வெறுத்து ஒதுக்கிவிட்டதாக அவர்கள் நினைக்கிற மாதிரி ஒருபோதும் தண்டிக்கக் கூடாது. கண்ணு மூக்கு தெரியாமல் பிள்ளைகளை அடிப்பதை பைபிள் ஆமோதிப்பதில்லை. அப்படி அடிப்பது பிள்ளையைக் காயப்படுத்திவிடும். (நீதிமொழிகள் 16:32) கெல்வின் இப்படிச் சொல்கிறார்: “என் பிள்ளைங்க ஏதாவது பெரிய தப்பு செஞ்சா, அவங்கள கண்டிப்பேன். ஆனால், அவங்க மேல வச்சிருக்கிற அன்பினாலதான் அப்படி செய்றேன் என்பதை அவங்களுக்குப் புரிய வைப்பேன்.”

6 பிள்ளைச் செல்வங்களைப் பாதுகாப்பது அவசியம்

பிள்ளைகளைத் தீய செல்வாக்கிலிருந்தும் கெட்ட நண்பர்களிடமிருந்தும் பாதுகாப்பது அவசியம். ஏனென்றால், சூதுவாது அறியாத பிள்ளைகளைக் கெடுத்துப்போட இந்த உலகத்தில் ‘பொல்லாதவர்கள்’ கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1–5, 13) உங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? பைபிள் தரும் இந்த ஞானமான அறிவுரையைக் கவனியுங்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) உங்கள் பிள்ளைகளைச் சுற்றி பாதுகாப்பு சுவர் எழுப்பும் முன் அவர்களுக்கு வரும் ஆபத்துகளை நீங்கள் முதலில் அறிந்திருக்க வேண்டும். எவையெல்லாம் அவர்களைப் பிரச்சினையில் கொண்டுபோய் தள்ளும் என்பதை முன்கூட்டியே ஊகித்து எச்சரிப்பு நடவடிக்கைகளை எடுங்கள். உதாரணத்திற்கு, இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளை அனுமதித்தால் அதை அவர்கள் ஜாக்கிரதையாக பயன்படுத்தும்படி சொல்லி வையுங்கள். உங்கள் வீட்டிலேயே கம்ப்யூட்டர் இருந்தால் அதை எல்லாரும் பார்க்கும் இடத்தில் வைப்பது நல்லது, அப்போதுதான் உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியும்.

நெறிகெட்ட இந்த உலகத்தில் வரும் ஆபத்துகளைச் சந்திக்க பிள்ளைகளைப் பக்குவப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பது ஒரு தந்தையின் கடமை. நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் பிள்ளைகளை யாராவது “நெருங்கினால்” என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியுமா? c தங்களுடைய அந்தரங்க உறுப்புகளை சரியான/தவறான விதத்தில் பயன்படுத்துவது என்றால் என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டும். இதைக் குறித்து கெல்வின் சொல்வதைக் கேளுங்கள்: “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் வேறு யாராவது சொல்லிக்கொடுக்கட்டும், ஸ்கூல்ல டீச்சருங்க சொல்லிக்கொடுப்பாங்க.. அப்படின்னு நினைச்சு நான் விட்டுவிடவில்லை. செக்ஸ் பற்றியும் சின்ன பிள்ளைங்கள பாலியல் துஷ்பிரயோகம் செய்றவங்கள பற்றியும் என் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது என்னோட கடமைன்னு உணர்ந்தேன்.” அவருடைய பிள்ளைகள் அனைவரும் நல்லபடியாக வளர்ந்து இப்போது கல்யாணம் கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கடவுளுடைய உதவியை நாடுங்கள்

கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவி செய்வதே பிள்ளைகளுக்கு ஒரு தந்தை அளிக்கும் மிகப் பெரிய பரிசு. இதற்கு, தந்தையின் முன்மாதிரி மிக மிக முக்கியம். டோனிசெட் கூறுகிறார்: “கடவுளோடு தங்களுக்கு இருக்கிற உறவை தகப்பன்மார் எந்தளவு பொக்கிஷமா கருதுகிறாங்க என்பதை பிள்ளைகளுக்குக் காட்டணும்​—⁠முக்கியமா, வாழ்க்கையில பிரச்சினைகளோ துன்பங்களோ வரும் சமயத்தில். அப்போதான் யெகோவாமீது அப்பாவுக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதை பிள்ளைங்க தெரிஞ்சிப்பாங்க. கடவுள் செய்த நன்மைகளைக் குறித்து குடும்ப ஜெபத்தில், அடிக்கடி நன்றி சொல்லி ஜெபிக்கும்போது கடவுளை நண்பராகக் கொண்டிருப்பதன் அவசியத்தை பிள்ளைங்க புரிஞ்சிப்பாங்க.”

அப்படியானால், சிறந்த தகப்பனாக விளங்க சிறந்த வழி எது? பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் தலைசிறந்த அறிவுரை வழங்கும் யெகோவா தேவனின் ஆலோசனையை நாடுவதே சிறந்த வழி. கடவுளுடைய வார்த்தையை வழிகாட்டியாகக் கொண்டு உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்தால், “அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்ற வார்த்தைகள் அட்சர சுத்தம் என்பதை உணருவீர்கள்.​—நீதிமொழிகள் 22:⁠6. (w08 10/1)

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும் வேதப்பூர்வ அறிவுரைகள் முக்கியமாக தகப்பனுக்கு சொல்லப்பட்டாலும் அதிலுள்ள நியதிகள் தாய்க்கும் பொருந்தும்.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது சம்பந்தமாக கூடுதல் தகவலுக்கு அக்டோபர் 2007 விழுத்தெழு! இதழில் பக்கங்கள் 3-⁠7-⁠ஐக் காண்க.

[பக்கம் 21-ன் படம்]

தகப்பன்மார் தன் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது அவசியம்

[பக்கம் 22-ன் படம்]

தகப்பன்மார் தன் பிள்ளைகளின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்

[பக்கம் 23-ன் படம்]

பிள்ளைகளுக்கு அன்பான கண்டிப்பு அவசியம்