Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

தாவீது—ஏன் எதற்கும் பயப்படவில்லை?

தாவீது—ஏன் எதற்கும் பயப்படவில்லை?

நீ எப்போதாவது பயந்திருக்கிறாயா?​— a நாம் எல்லாருமே சிலசமயங்களில் பயப்படுகிறோம். உனக்கு பயம் வந்தால் நீ என்ன செய்வாய்?​—⁠ பெரியவர்களிடம் அல்லது பலசாலிகளிடம் போவாய். ஒருவேளை உன் அப்பாவிடமோ அம்மாவிடமோ போவாய். சரி, இப்போது, உதவி தேடி தாவீது யாரிடம் போனார் என்று பார்க்கலாம். அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் கடவுளை நோக்கி, ‘நான் உம்மை நம்புவேன். . . . தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்’ என்று சொல்லி பாடினார்.​—சங்கீதம் 56:​3, 4.

பயப்படாதிருக்க தாவீது யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்? அப்பா அம்மாவிடமிருந்தா? ஆமாம், அவர்களிடமிருந்துதான். அவருடைய அப்பா பெயர் ஈசா. உண்மையுள்ள இந்த முன்னோரின் சந்ததியில்தான் இயேசு கிறிஸ்து பிறந்தார். இந்த இயேசுவைத்தான் “சமாதான பிரபு” என்று கடவுள் சொன்னார். (ஏசாயா 9:6; 11:1–3, 10) ஈசாயின் அப்பா பெயர் ஓபேத். இவர்தான் தாவீதின் தாத்தா. இவருடைய அம்மா பெயரில் ஒரு பைபிள் புத்தகமே இருக்கிறது. அவர் யார் தெரியுமா?​—⁠ அவர்தான் ரூத். அவர் ரொம்ப நல்லவர், அவருடைய கணவர் பெயர் போவாஸ்.​—ரூத் 4:​21, 22.

ஆனால், தாவீது பிறப்பதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே ரூத்தும் போவாஸும் செத்துப்போய்விட்டார்கள். போவாஸுடைய அம்மா பெயர், அதாவது தாவீதுடைய பூட்டி பெயர் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அவர் எரிகோவில் வசித்து வந்தபோது, இஸ்ரவேல் நாட்டு உளவாளிகள் சிலர் தப்பித்துச் செல்ல உதவி செய்தார். எரிகோவின் மதில் சுவர் இடிந்துவிழுந்த சமயத்தில் அவருடைய வீட்டு ஜன்னலில் சிவப்பு கயிற்றைக் கட்டித் தொங்கவிட்டதால் அவருடைய குடும்பம் தப்பித்துக்கொண்டது. அவருடைய பெயர் என்ன?​—⁠ ராகாப். அவர் பிற்பாடு யெகோவாவை வணங்குபவராக மாறினார். கிறிஸ்தவர்கள் தைரியமாய் இருப்பதற்கு அவர் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.​—யோசுவா 2:1–21; 6:22–25; எபிரெயர் 11:​30, 31.

யெகோவாவுக்கு உண்மையுடன் இருந்த இந்த ஆட்களைப் பற்றியெல்லாம் தாவீதின் அப்பா அம்மா அவருக்குச் சொல்லியிருப்பார்கள். பிள்ளைகளுக்கு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லி கொடுக்க வேண்டும் என்று கடவுளும் கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 6:4–9) இப்போது ஈசாவின் கடைசி பையன் தாவீதை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக தேர்ந்தெடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது. அதற்காக, சாமுவேல் தீர்க்கதரிசியை ஈசாவின் வீட்டுக்கு கடவுள் அனுப்பி வைத்தார்.​—1 சாமுவேல் 16:4–13.

ஒருநாள், கடவுளுடைய எதிரிகளான பெலிஸ்தர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. தாவீதின் மூன்று அண்ணன்மார்களும் போர்க்களத்தில் இருந்தார்கள். இப்போது அண்ணன்களுக்குச் சாப்பாடு கொண்டுபோவதற்காக தாவீதை ஈசா அனுப்பினார். போர் நடந்துகொண்டிருந்த அந்த இடத்திற்கு தாவீது போனபோது ‘ஜீவனுள்ள தேவனின் படையை’ கோலியாத் கேலி செய்துகொண்டிருந்ததைக் கேட்டான். அவனுடன் சண்டை போட யாருக்குமே தைரியம் இல்லை! இந்தச் சந்தர்ப்பத்தில், கோலியாத்துடன் சண்டை போட தாவீது விரும்பும் செய்தியை சவுல் ராஜா கேள்விப்படுகிறார். உடனே அவனை அழைத்து வரும்படி ஆள் அனுப்புகிறார். ஆனால், தாவீதைப் பார்த்தவுடன், ‘நீ சிறு பையன்’ என்று சவுல் சொல்கிறார்.

அப்போது தாவீது, ‘எங்கள் வீட்டு ஆடுகளை நான் மேய்த்துக் கொண்டிருந்தபோது அவற்றைத் தூக்கிக்கொண்டு போக வந்த ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்று போட்டேன்’ என்று சவுலிடம் விளக்குகிறான். ‘இதைப்போல கோலியாத்தையும் கொன்றுபோடுவேன்’ என்று தாவீது சொன்னபோது, ‘போ, யெகோவா உன்னுடனேகூட இருப்பார்’ என்று சொல்லி சவுல் அவனை வாழ்த்தி அனுப்புகிறார். தாவீது ஐந்து கூழாங்கற்களை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டு, அந்த இராட்சதனுடன் போரிட கையில் கவணுடன் கிளம்புகிறான். ஒரு பொடிப் பையன் தன்னிடம் வருவதைப் பார்த்து, ‘என்னிடம் வா; நான் உன் மாம்சத்தை பறவைகளுக்குப் போடுவேன்’ என்று கர்ஜிக்கிறான். அதற்கு தாவீது, ‘நான் யெகோவாவின் பெயரில் உன்னிடம் வருகிறேன். நான் உன்னைக் கொன்றுபோடுவேன்’ என்று உரக்கக் கத்துகிறான்.

இப்போது தாவீது கோலியாத்தை நோக்கி ஓடிப் போகிறான். தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து, அதை தன் கவணில் வைத்து, கோலியாத்தின் நெற்றியைக் குறிபார்த்து அடிக்கிறான். கோலியாத் பொத்தென்று கீழே விழுகிறான்; அதைப் பார்த்ததும் பெலிஸ்தர்கள் பயந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். இஸ்ரவேலர் அவர்களை துரத்திப் பிடித்து, போரில் வெற்றி பெறுகிறார்கள். 1 சாமுவேல் 17:​12-⁠54 (NW) வசனங்களில் உள்ள இந்த முழு கதையையும் குடும்பமாக உட்கார்ந்து வாசியுங்கள்.

நீ இப்போது சிறுவனாக இருப்பதால் கடவுள் சொன்னதை செய்வதற்கு சில சமயங்களில் உனக்குப் பயமாக இருக்கலாம். எரேமியா சின்ன பையனாக இருந்தபோது அவரும் முதலில் பயந்தார். ஆனால் கடவுள் அவரிடம், “பயப்பட வேண்டாம்; . . . நான் உன்னுடனே இருக்கிறேன்” என்றார். கடவுள் சொன்ன செய்தியை எரேமியா எல்லாருக்கும் போய் தைரியத்துடன் அறிவித்தார். தாவீதையும் எரேமியாவையும் போல யெகோவாமீது நம்பிக்கை வைத்தால் நீயும் பயப்படாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.​—எரேமியா 1:6–8. (w08 12/1)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில்சொல்ல சொல்லுங்கள்.