Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் புகழைப் பெற தகுதியுள்ள படைப்பாளர்

நம் புகழைப் பெற தகுதியுள்ள படைப்பாளர்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நம் புகழைப் பெற தகுதியுள்ள படைப்பாளர்

வெளிப்படுத்துதல் 4:⁠11

‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? குருட்டுத்தனமான பரிணாமத்தில் நம்பிக்கை வைப்போர், இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். ஆனால், யெகோவா தேவனே உயிரின் ஊற்றுமூலர் என்ற உண்மையை நம்புவோர் அப்படி இருப்பதில்லை. (சங்கீதம் 36:9) மனிதனை கடவுள் ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த நோக்கம் வெளிப்படுத்துதல் 4:​11-⁠ல் (NW) விவரிக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு விடை தெரிந்துகொள்ள அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய வார்த்தைகளை இப்போது ஆராயலாம்.

“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று பரலோக சேனை ஒன்று கடவுளை துதித்து பாடுவதாக யோவான் எழுதினார். அப்படிப்பட்ட மரியாதையைப் பெற யெகோவா தேவன் மட்டுமே தகுதியுள்ளவர். ஏன்? ஏனென்றால், அவரே ‘எல்லாவற்றையும் படைத்தார்.’ அப்படியென்றால், அவரால் படைக்கப்பட்ட புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள் என்ன செய்ய தூண்டப்பட வேண்டும்?

யெகோவா தேவன் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் “பெற்றுக்கொள்ளத்” தகுதியுள்ளவர் என்று பைபிள் சொல்கிறது. உண்மையில், இந்த அண்டத்திலேயே எல்லா மகிமையும் மாண்பும் வல்லமையும் உள்ளவர் அவர் ஒருவரே. என்றாலும், அவரே படைப்பாளர் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், “காணமுடியாத அவருடைய பண்புகள்” அவரது படைப்பில் பளிங்கு போல் பளிச்சென தெரிவதை சிலர் கவனிக்கிறார்கள். (ரோமர் 1:​20, NW) அதனால், நன்றி பொங்கும் உள்ளத்தோடு யெகோவாவுக்கு மகிமையும் மாண்பும் சேர்க்கிறார்கள். அதோடு, செவிகொடுத்து கேட்போரிடம், யெகோவாவே அனைத்தையும் அற்புதமாக படைத்தார் என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சியை அளிக்கிறார்கள்; அவரே நமது பயபக்திக்கும் மரியாதைக்கும் பாத்திரர் என்பதையும் அறிவிக்கிறார்கள்.​—சங்கீதம் 19:​1, 2; 139:⁠14.

ஆனால், தம்மை வணங்குவோரிடமிருந்து யெகோவா எப்படி வல்லமையைப் பெற முடியும்? எந்தவொரு சிருஷ்டியும் சர்வசக்தி படைத்த கடவுளுக்கு வல்லமை அளிக்க முடியாது! (ஏசாயா 40:​25, 26) இருந்தாலும், நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அவருடைய எல்லா குணங்களும், வல்லமையும் நம்மிடமும் கொஞ்சம் இருக்கின்றன. (ஆதியாகமம் 1:27) படைப்பாளர் நமக்காக செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் உண்மையிலேயே நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், அவருக்கே மகிமையையும் துதியையும் சேர்ப்பதற்கு நம் சக்தியையும் வல்லமையையும் அர்ப்பணிப்போம். நமக்காகவே நம் சக்தியைப் பயன்படுத்துவதைவிட அதைப் பெற தகுதியான யெகோவாவுக்கு அதை பயன்படுத்துவதே உத்தமம் என்பதை உணருவோம்.​—மாற்கு 12:⁠30.

சரி, நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்? “உங்களுடைய சித்தத்தின்படியே அவை [அதாவது, சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும்] உண்டாயின, படைக்கப்பட்டன” என்று வெளிப்படுத்துதல் 4:11 (NW) பதிலளிக்கிறது. நாம் தானாகவே வந்துவிடவில்லை. கடவுளுடைய சித்தத்தினாலேயே படைக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான், நம்முடைய இன்பத்தையே பிரதானமாக வைத்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை சூனியமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும். வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெற கடவுளுடைய சித்தத்தை அறிந்து அதற்கு ஏற்ப வாழ வேண்டும். அப்போதுதான், நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.​—சங்கீதம் 40:⁠8. (w08 12/1)

[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]

NASA, ESA, and A. Nota (STScI)