நரகத்தைப் பற்றிய உண்மை உங்களை எப்படிப் பாதிக்கிறது?
நரகத்தைப் பற்றிய உண்மை உங்களை எப்படிப் பாதிக்கிறது?
நரகம் என்பது வதைக்கப்படும் ஓர் இடமென கற்பிக்கிறவர்கள் யெகோவா தேவனையும் அவருடைய குணங்களையும் பற்றி தவறாகச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். பொல்லாதவர்களைக் கடவுள் அழிப்பார் என்று பைபிள் சொல்வது உண்மைதான். (2 தெசலோனிக்கேயர் 1:6-9 ) ஆனால், கடவுளுடைய நீதியான கோபமே அவருடைய பிரதான குணம் அல்ல.
கடவுள் தீய எண்ணமுடையவரோ பழிவாங்குகிறவரோ அல்ல. “துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?” என்று அவர் கேட்கிறார். (எசேக்கியேல் 18:23 ) துன்மார்க்கர் அழிவதையே கடவுள் விரும்புவதில்லையென்றால், அவர்கள் என்றென்றும் வதைக்கப்படுவதைப் பார்த்து எப்படிச் சந்தோஷப்படுவார்?
அன்பே கடவுளுடைய பிரதான குணம். (1 யோவான் 4:8 ) சொல்லப்போனால், “கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது.” (சங்கீதம் 145:9 ) அதேபோல் நாமும் அவரை உள்ளப்பூர்வமாய் நேசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—மத்தேயு 22:35–38.
நரக பயமா தேவ அன்பா —எது உங்களைக் கவருகிறது?
நரகத்தில் ஆத்துமாக்கள் வதைக்கப்படும் என்ற போதனை கடவுள்மீது பயத்தை உண்டாக்குகிறது. ஆனால், கடவுளைப் பற்றிய உண்மையை ஒருவர் அறிந்துகொள்ளும்போது கடவுள்மீது அவருக்கு பயபக்தி உண்டாகிறது. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு” என்று சங்கீதம் 111:10 விளக்குகிறது. நாம் கடவுள்மீது காட்டுகிற இத்தகைய பயம், திகிலூட்டும் பயத்தை அல்ல, படைப்பாளர்மீது நாம் வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதையையும் பக்தியையுமே குறிக்கிறது; அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவிடக் கூடாதென்ற ஓர் ஆரோக்கியமான பயத்தையே இது நமக்குள் உண்டாக்குகிறது.
ஒருகாலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாயிருந்த 32 வயது கேத்லீன், நரகத்தைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டபின் வாழ்க்கை பற்றிய அவளுடைய கண்ணோட்டம் எப்படி மாறியது என்பதைக் கவனியுங்கள். அவளுடைய வாழ்க்கை எப்போதும் குடியும் கும்மாளமுமாகவே இருந்தது; வாழ்வில் விரக்தியடைந்து, வன்முறையிலும் ஒழுக்கயீனத்திலும் ஈடுபட்டாள். “என்னுடைய ஒரு வயசு மகளைப் பார்த்து, ‘அவள் வாழ்க்கையை நான் நாசமாக்குறேன். இதற்கு நரக தண்டனைதான் எனக்குக் கிடைக்கும்’ என்று என் மனசுக்குள் சொல்லிக்கொள்வேன்” என்கிறார். போதைப்பொருள் பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென எவ்வளவோ அவள் முயன்றும் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை. “நான் நல்லவளா மாறணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் என் வாழ்க்கையையும் உலகப் போக்கையும் சிந்தித்துப் பார்த்தபோது நான் நல்லவளா
மாறி என்ன பிரயோஜனம்னு தோனுச்சு” என்று அவள் சொல்கிறாள்.ஒருநாள் கேத்லீன் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தாள். “எரிநரகம்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். பைபிள் கொடுத்த விளக்கம்தான் எனக்கு சரின்னு தோனுச்சு. நரகத்தில் நான் எரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லைன்னு தெரிஞ்சப்போ அது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு” என்கிறாள். துன்மார்க்கத்தின் சுவடே இல்லாத சுத்தமான பூமியில் மனிதர் என்றென்றும் வாழ்வார்கள் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியையும் அவள் கற்றுக்கொண்டாள். (சங்கீதம் 37:10, 11, 29; லூக்கா 23:43 ) “இப்போதான் வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பு வந்திருக்கு—பூங்காவன பூமியில் காலமெல்லாம் சந்தோஷமாக வாழும் நம்பிக்கை பொறந்திருக்கு” என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள்.
நரக பயம் இல்லாமலேயே போதைப்பொருள் பழக்கத்திலிருந்து கேத்லீன் விடுதலை பெற முடியுமா? “போதைப்பொருள் எடுக்கணும்னு ஆசை வந்தபோதெல்லாம், உதவிக்காக யெகோவாவிடம் கெஞ்சி கேட்டேன். இந்தக் கெட்ட பழக்கங்களைப் பற்றி அவர் எப்படி நினைக்கிறார்னு யோசிச்சி பார்த்தேன். அவர் மனசை நோகடிக்க நான் கொஞ்சங்கூட விரும்பல. அவரும் என் ஜெபத்திற்கு பதிலளிச்சார்” என்கிறாள். (2 கொரிந்தியர் 7:1 ) கடவுளுக்குப் பிடிக்காததை செய்யக் கூடாதென்ற பயம்தான் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற கேத்லீனுக்கு உதவியது.
ஆம், எரிநரக பயமல்ல, கடவுள்மீது ஆரோக்கியமான பயத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்வது அவருடைய சித்தத்தைச் செய்ய நம்மை உந்துவிக்கும். அதன் விளைவாக நாம் நித்திய சந்தோஷத்தையும் அனுபவிப்போம். “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்” என்று சங்கீதக்காரர் எழுதினார்.—சங்கீதம் 128:1. (w08 11/1)
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
நரகத்திலிருந்து யாருக்கு விடுதலை?
கெயன்னா, ஹேய்டிஸ் என்ற இருவேறு கிரேக்க வார்த்தைகளுக்கும் “நரகம்” என்ற ஒரே வார்த்தையைப் பயன்படுத்தி சில பைபிள் மொழிபெயர்ப்புகள் குழப்புகின்றன. பைபிளில் கெயன்னா என்பது உயிர்த்தெழுதல் நம்பிக்கையில்லாமல் அடியோடு அழிவதைக் குறிக்கிறது. ஆனால், ஹேய்டிஸில் இருப்பவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருக்கிறது.
எனவேதான், இயேசு ‘நரகத்திலே விடப்படவில்லை’ என்று அவர் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு, அப்போஸ்தலன் பேதுரு உறுதியளித்தார். (அப்போஸ்தலர் 2:27, 31, 32; சங்கீதம் 16:10; கிங் ஜேம்ஸ் வர்ஷன் ) இந்த வசனத்தில் ‘நரகம்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை ஹேய்டிஸ். ஆகவே, அக்கினி ஜூவாலித்து எரிகிற ஓர் இடத்திற்கு இயேசு போகவில்லை. இந்த ஹேடிஸ், அதாவது நரகம், கல்லறையைக் குறிக்கிறது. ஆனால், இயேசுவை மட்டுமல்ல பலரையும் ஹேடிஸிலிருந்து கடவுள் விடுவித்திருக்கிறார்.
உயிர்த்தெழுதல் பற்றி பைபிள் குறிப்பிடுகையில் “மரணமும் நரகமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன” என்று சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 20:13, 14, KJ) ‘நரகத்திலிருந்து’ விடுதலை செய்யப்படுவது என்பது உயிர்த்தெழுதலுக்கு தகுதியுள்ளவர்களென கடவுளால் நியாயந்தீர்க்கப்படும் அனைவரும் மீண்டும் உயிரடைவதைக் குறிக்கிறது. (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) இறந்துபோன நம் அன்பானவர்கள் எதிர்காலத்தில் கல்லறையைவிட்டு வெளியே வருவதை நாம் பார்ப்போம்—எப்பேர்ப்பட்ட மகத்தான நம்பிக்கை! அளவிலா அன்புடைய யெகோவா தேவன் இதை நிறைவேற்றுவார்.