Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நரகத்தைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்?

நரகத்தைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்?

நரகத்தைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்?

“உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ . . . புழு சாகாது; நெருப்பும் அவியாது” என்று இயேசு சொன்னார்.​—⁠மாற்கு 9:​47, 48, பொது மொழிபெயர்ப்பு.

பொல்லாதவர்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பு காலத்தைப் பற்றி பேசியபோது, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” என்று மற்றொரு சமயத்தில் இயேசு கூறினார். அதோடு, இவர்கள் ‘முடிவில்லாத் தண்டனையை’ அடைவார்கள் என்றும் சொன்னார்.​—⁠மத்தேயு 25:​41, 46, தமிழ் கத்தோலிக்க பைபிள்.

இந்த வசனங்களை மேலோட்டமாக பார்த்தால், எரிநரக போதனையை இயேசு ஆதரித்து பேசியதுபோல் தோன்றலாம். ஆனால், அது உண்மையாக இருந்தால், கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக இயேசு பேசியதாக ஆகிவிடும்; இயேசு ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார். ‘இறந்தவர்கள் இனி ஒன்றும் அறியார்கள்’ என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.​—பிரசங்கி [சங்கத் திருவுரை ஆகமம்] 9:​5, கத்.பை.

அப்படியானால், ஒருவர் ‘நரகத்தில்’ தள்ளப்படுவார் என்று இயேசு எந்த அர்த்தத்தில் சொன்னார்? “நித்திய அக்கினி” என்று இயேசு பேசியபோது நிஜமான ஓர் இடத்தைப் பற்றிச் சொன்னாரா அல்லது அடையாள அர்த்தத்தில் சொன்னாரா? என்ன அர்த்தத்தில் பொல்லாதவர்கள் ‘முடிவில்லாத் தண்டனையை’ அடைவார்கள்? இந்தக் கேள்விகளை ஒவ்வொன்றாகச் சிந்திக்கலாம்.

ஒருவர் ‘நரகத்தில்’ தள்ளப்படுவார் என்று இயேசு எந்த அர்த்தத்தில் சொன்னார்? மாற்கு 9:​47-⁠ல் ‘நரகம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் மூல கிரேக்க பதம் கெயன்னா. இந்தப் பதம் கெ இன்னோம் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வருகிறது; இதன் அர்த்தம், “இன்னோம் பள்ளத்தாக்கு.” இந்த இன்னோம் பள்ளத்தாக்கு பூர்வ எருசலேம் நகரத்தின் எல்லையை ஒட்டினாற்போல் இருந்தது. இஸ்ரவேல் ராஜாக்களின் காலத்தில், குழந்தைகளைப் பலி செலுத்துவதற்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அருவருப்பான பழக்கத்தைக் கடவுள் கண்டனம் செய்தார். இப்படிப்பட்ட புறமதப் பழக்கத்தில் ஈடுபட்டவர்களை அழிக்கப்போவதாகவும் சொன்னார். எனவே, இன்னோம் பள்ளத்தாக்கு, “படுகொலையின் பள்ளத்தாக்கு” என அழைக்கப்பட்டது; புறமதப் பழக்கத்தில் ஈடுபட்ட அந்த ‘மக்களின் உடல்கள்’ அடக்கம் பண்ணப்படாமல் இங்கே கிடந்தது. (எரேமியா 7:​30-⁠34, கத்.பை) ஆக, இன்னோம் பள்ளத்தாக்கு, உயிரோடுள்ள குற்றவாளிகளை வதைப்பதற்கான இடமாக இருக்குமென யெகோவா சொல்லவில்லை, எல்லா பிணங்களையும் அழிப்பதற்கான இடமாக இருக்குமென்றே முன்னறிவித்தார்.

இயேசுவின் நாளில், இந்த இன்னோம் பள்ளத்தாக்கை குப்பைக்கூளங்களைக் கொட்டுவதற்கான இடமாக எருசலேம் வாசிகள் பயன்படுத்தினார்கள். பயங்கரமான குற்றவாளிகளின் பிணங்களை அங்கே தூக்கி வீசினார்கள்; அங்கு போடப்பட்ட குப்பைக்கூளங்களையும் பிணங்களையும் அழிப்பதற்கு எப்போதுமே நெருப்பு எரிந்துகொண்டிருக்கும்.

சாகாத புழுக்களையும் அவியாத நெருப்பையும் பற்றி இயேசு சொன்னபோது, அவர் ஏசாயா 66:​24-⁠ஐ (பொ.மொ.) மறைமுகமாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “[கடவுளை] எதிர்த்து கிளர்ச்சி செய்தோரின் பிணங்களைக்” குறித்து ஏசாயா சொன்னபோது, “அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை, அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை” என்று கூறினார். ஏசாயாவில் உள்ள இந்த வார்த்தைகள், அடக்கம் செய்யப்பட தகுதியில்லாதவர்களின் பிணங்களுக்கு என்ன ஆகும் என்பதையே குறித்தன; இதை இயேசுவும் அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களும் அறிந்திருந்தார்கள்.

ஆகையால், இந்த இன்னோம் பள்ளத்தாக்கை, அதாவது கெஹென்னாவை, உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லாமல் நிரந்தரமாய் அழிவதைக் குறிப்பதற்கு பொருத்தமான ஓர் அடையாளமாகவே இயேசு பயன்படுத்தினார். ‘ஆன்மாவையும் உடலையும் கெஹென்னாவில் அழிக்க [கடவுள்] வல்லவர்’ என்று அவர் எச்சரித்தபோது இந்தக் குறிப்பைத் தெளிவாகச் சொன்னார். (மத்தேயு 10:​28, கத்தோலிக்க நியு அமெரிக்கன் பைபிள்) கெஹென்னா என்பது நித்திய அழிவுக்குத்தான் அடையாளம், நித்திய வாதனைக்கு அல்ல.

“நித்திய அக்கினி” என்று இயேசு பேசியபோது நிஜமான ஓர் இடத்தைப் பற்றிச் சொன்னாரா அல்லது அடையாள அர்த்தத்தில் சொன்னாரா? மத்தேயு 25:​41-⁠ல் இயேசு குறிப்பிட்ட “நித்திய அக்கினி” “பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும்” ஆயத்தம் பண்ணப்பட்டது என்பதை கவனியுங்கள். நித்திய அக்கினி என்று இயேசு சொன்னது நிஜமான ஓர் இடமாக இருந்திருந்தால், அதில் ஆவி உடலில் இருக்கும் பிசாசும் அவன் தூதர்களும் எப்படி அழிந்துபோக முடியும்? அப்படியென்றால், “அக்கினி” என்ற பதத்தை அடையாள அர்த்தத்தில் இயேசு பயன்படுத்தினாரா? அதே உரையாடலில் ‘செம்மறியாடுகள்,’ ‘வெள்ளாடுகள்’ என்று இயேசு குறிப்பிட்டது நிச்சயமாகவே நிஜமான ஆடுகள் அல்ல. அவை வேறுபட்ட இரு தொகுதியினரைக் குறிக்கும் ஒரு வர்ணனைதான். (மத்தேயு 25:​32, 33) அதுபோலவே, நித்திய அக்கினி என்று இயேசு குறிப்பிட்டதும் நிஜமான ஒன்றல்ல, மாறாக கெட்டவர்கள் அடையாள அர்த்தத்தில் முழுமையாக எரிக்கப்படுவதையே குறிக்கிறது.

என்ன அர்த்தத்தில் பொல்லாதவர்கள் ‘முடிவில்லாத் தண்டனையை’ அடைவார்கள்? மத்தேயு 25:​46-⁠ல் அநேக மொழிபெயர்ப்புகள் “தண்டனை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றன. தண்டனை என்பதற்குரிய கிரேக்க வார்த்தை கோலாசின்; அதன் நேர்பொருள் என்னவென்றால், “தேவையில்லாத மரக்கிளைகளை வெட்டிவிடுவதாகும்.” எனவே, செம்மறியாடு போன்றவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள், மனந்திரும்பாத வெள்ளாடு போன்றவர்களோ ‘முடிவில்லாத் தண்டனையைப்’ பெறுவார்கள். அதாவது, என்றென்றும் ஜீவனை இழந்துவிடுவார்கள்.

என்ன நினைக்கிறீர்கள்?

மனிதருக்கு அழியாத ஆத்துமா இருப்பதாக இயேசு ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஆனால், மரித்தோருக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருக்கிறதென பல சந்தர்ப்பங்களில் கற்பித்தார். (லூக்கா 14:​13, 14; யோவான் 5:25–29; 11:25) இறந்தவர்களுடைய ஆத்துமாக்கள் மரிக்காது என்பதை இயேசு அறிந்திருந்தால், மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?

பொல்லாதவர்களை கொடூர எண்ணத்துடன் என்றென்றைக்கும் கடவுள் வதைப்பார் என்று இயேசு கற்பிக்கவில்லை. மாறாக, “தம் மகனில் விசுவாசம் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும் பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்” என்றே இயேசு சொன்னார். (யோவான் [அருளப்பர்] 3:​16, கத்.பை) தம்மீது ‘விசுவாசம் கொள்ளும் எவரும் அழியாமல்’ என்று இயேசு சொல்வதைக் கவனியுங்கள். அப்படியானால், விசுவாசம் கொள்ளாத எவரும் அழிவார்கள் என்றுதானே அர்த்தம். ஒருவேளை அவர்கள் முடிவில்லாமல் எரிநரகத்தில் துன்பப்படுவார்கள் என்றால் அதை வெளிப்படையாகவே சொல்லியிருப்பார், அல்லவா?

நரகம் என்பது வாதனைக்குரிய இடம் என்ற கோட்பாடு பைபிள் போதனை அல்ல. மாறாக, இது கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டுவரப்பட்ட புறமத நம்பிக்கை. ( நரகம்​—⁠சுருக்கமான வரலாறு” என்ற பெட்டியை பக்கம் 6-⁠ல் காண்க.) நரகத்தில் மக்களை என்றென்றும் கடவுள் வதைப்பதில்லை. நரகத்தைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது கடவுளைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை எப்படி மாற்றும்? (w08 11/1)

[பக்கம் 6-ன் பெட்டி]

 நரகம்​—⁠சுருக்கமான வரலாறு

புறமதத்திலிருந்து பிறந்தது: பூர்வ எகிப்தியர்கள் எரிநரகம் இருப்பதாக நம்பினார்கள். பொ.ச.மு. 1375-⁠ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆம்டோட் என்ற புத்தகம், “நெருப்பு குழிக்குள் தூக்கி எரியப்படும் ஆட்களைப்” பற்றி பேசுகிறது. “இவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது, . . . கொளுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து அவர்களால் வெளியே வரமுடியாது” என்று அது சொல்கிறது. கீழுலகத்தில் இருப்பவர்கள், “கொடூரமான சித்திரவதையையும் கடும் வேதனையையும் இழிவான தண்டனையையும் அனுபவிக்கும்போது ஓலமிட்டு அழுதார்கள்” என்று கிரேக்க தத்துவஞானி புளூடார்க் (சுமார் பொ.ச. 46-⁠120) எழுதினார்.

யூத மதப் பிரிவுகளையும் தொற்றியது: இஸ்ஸனஸ் என்ற யூத மதப் பிரிவினர் “ஆத்துமா அழியாது, சதாகாலம் உயிர்வாழும்” என்று நம்பியதாக சரித்திர ஆசிரியர் ஜொஸிஃபஸ் (சுமார் பொ.ச. 37-⁠100) அறிவித்தார். “இது கிரேக்கருடைய நம்பிக்கையைப் போல் இருப்பதாக” அவர் சொன்னார். “கெட்ட ஆத்துமாக்கள் திகிலூட்டும் குகைக்குள், கும்மிருட்டான குகைக்குள் தள்ளப்படும், அங்கு அவை சதா வதைக்கப்படும் என அவர்கள் நம்பினார்கள்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

“கிறிஸ்தவத்திற்குள்” நுழைந்தது: பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், பேதுருவின் திருவெளிப்பாடு (ஆங்கிலம்) என்ற தள்ளுபடி ஆகமம் துஷ்டர்களைக் குறித்து இவ்வாறு சொன்னது: “அவர்களைச் சுட்டெரிக்க அணையாத நெருப்பு காத்திருக்கிறது.” “எஸ்ரேல் என்ற கோபத்தின் தூதன், பாதி உடல் எரிந்த நிலையில் இருக்கிற ஆண்களையும் பெண்களையும் இருளுக்குள் தள்ளுகிறான், அதாவது மானிடருக்கான நரகத்திற்குள் தள்ளுகிறான். அங்கு கோபத்தின் தூதன் ஒருவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறான்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. அதே காலத்தில் வாழ்ந்த அந்தியோகியாவைச் சேர்ந்த தியோஃபிலஸ் என்ற எழுத்தாளர், துன்மார்க்கருக்குக் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றி சிபில் என்ற கிரேக்க தீர்க்கதரிசினி சொன்னதை மேற்கோள்காட்டி, “எரிகிற நெருப்புக்குள் நீ தள்ளப்படுவாய், நித்தமும் அக்கினியில் அவிந்துகொண்டிருப்பாய்” என்று சொன்னார். இவையெல்லாம், “உண்மையானவை, பயனுள்ளவை, நீதியானவை, எல்லாருக்கும் நன்மையளிப்பவை” என்றும் தியோஃபிலஸ் சொன்னார்.

வன்முறையை நியாயப்படுத்த இடைக்காலத்தில் எரிநரக போதனை பயன்படுத்தப்பட்டது: இங்கிலாந்து அரசி முதலாம் மேரி (1553-⁠1558), கிட்டத்தட்ட 300 புராட்டஸ்டன்ட் மதத்தவரை கழுமரத்தில் கட்டிவைத்து எரித்ததால் “இரத்தவெறி பிடித்த மேரி” என அழைக்கப்பட்டாள். “சமயபேதம் உள்ளவர்கள் இறந்தபிறகு எப்படியும் எரிநரகத்தில் என்றென்றும் எரிக்கப்படுவார்கள். அதனால், இப்போதே அவர்களைப் பூமியில் எரித்து, தெய்வம் தீர்க்கப்போகும் பழியை நானே தீர்த்தால் என்ன தவறு?” என்று அவள் சொன்னாளாம்.

நவீன விளக்கம்: சமீபத்தில் சில மதப் பிரிவினர் எரிநரக போதனைக்குப் புது விளக்கம் அளித்திருக்கிறார்கள். உதாரணமாக, 1995-⁠ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கோட்பாட்டுக் குழுவினருடைய அறிக்கை இவ்வாறு கூறியது: “நரகம் என்பது நித்திய வாதனைக்குரிய இடமல்ல; ஆனால், கடவுளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத வழியில் செல்ல ஒருவர் எடுக்கும் தீர்மானம்; இந்தப் பிடிவாத போக்கின் முடிவு அழிவு.”

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

‘அக்கினி கடல்’?

பிசாசு ‘அக்கினி கடலிலே’ தள்ளப்பட்டு, ‘இரவும் பகலும் சதாகாலம் வாதிக்கப்படுவான்’ என்று வெளிப்படுத்துதல் 20:10 சொல்கிறது. பிசாசை நித்தியத்திற்கும் வாதிக்க வேண்டுமென்றால் அவனை என்றென்றைக்கும் கடவுள் உயிரோடு வைத்திருக்க வேண்டும். ஆனால், இயேசு அவனை ‘அழிப்பார்’ என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 2:14) அடையாள அர்த்தத்தில் சொல்லப்படும் இந்த அக்கினி கடல் ‘இரண்டாம் மரணத்தைக்’ குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:⁠8) இது பைபிளில் ஆதியில் குறிப்பிடப்பட்ட மரணமல்ல, அதாவது ஆதாமின் பாவத்தினால் வந்த மரணமல்ல; உயிர்த்தெழுதல் மூலம் இந்த மரணத்திலிருந்து விடுதலை பெற முடியும். (1 கொரிந்தியர் 15:​21, 22) ஆனால், ‘அக்கினி கடலில்’ தள்ளப்படும் ஒருவர் விடுதலை பெறுவார் என்று பைபிள் சொல்வதில்லை, அதனால், ‘இரண்டாம் மரணம்’ என்பது மற்றொரு வகையான மரணத்தை, நித்திய அழிவைக் குறிக்க வேண்டும்.

அப்படியானால், அக்கினி கடலில் தள்ளப்படுபவர்கள் சதாகாலம் வதைக்கப்படுவார்கள் என்பது எதைக் குறிக்கிறது? சில சமயங்களில் ‘வதைக்கப்படுவது’ என்பது ஒருவரை “செயலற்ற நிலையில்” வைப்பதைக் குறிக்கலாம். இயேசு ஒருமுறை பிசாசுகளை எதிர்ப்பட்டபோது, “குறித்த காலம் வரும் முன்னே எங்களை வதைக்கவா [அதாவது, பாதாளத்திற்குள் செயலற்ற நிலையில் வைக்கவா] இங்கே வந்தீர்”? என்று கூக்குரலிட்டன. (மத்தேயு 8:​29, பொது மொழிபெயர்ப்பு; லூக். 8:​30, 31) ஆகவே, “அக்கினி கடலிலே” உள்ள அனைவரும் என்றென்றும் செயலற்ற நிலையில் வைக்கப்படுவதன் மூலம் வதைக்கப்படுவார்கள் அதாவது, ‘இரண்டாம் மரணத்தை’ அடைவார்கள்.