Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீதியை நேசிப்பவர்

நீதியை நேசிப்பவர்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நீதியை நேசிப்பவர்

எபிரெயர் 10:​26-⁠31

அநீதிக்கு அல்லது கொடுமைக்கு நீங்கள் என்றாவது பலியாகி இருக்கிறீர்களா? உங்களை அந்த நிலைக்குத் தள்ளியவர் தண்டனை பெறாமலேயே தப்பித்துவிட்டாரா? அதற்காக துளியும் வருத்தப்படாமல் இருக்கிறாரா? நமக்கு எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம், ஆனால் அநீதிக்கு ஆளாகும்போது, அதுவும் நம்மிடம் அன்பும் அக்கறையும் காட்ட வேண்டியவர்களே நமக்கு அநியாயம் செய்யும்போது, அதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. ‘இந்த உலகத்தில் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் கடவுள் ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறார்?’ என்ற கேள்வி உங்கள் மனதைக் குடைந்துகொண்டிருக்கலாம். a சொன்னால் நம்பமாட்டீர்கள், யெகோவா தேவன் எல்லா அநீதியையும் அறவே வெறுக்கிறார். கல்நெஞ்சம் படைத்த கயவர்கள் தெய்வத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என அவருடைய வார்த்தையாகிய பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. எபிரெயர் 10:26–31-⁠ல் (NW) அப்போஸ்தலன் பவுல் சொன்ன விஷயங்களை இப்போது சிந்திக்கலாம்.

“சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றபின் நாம் வேண்டுமென்றே பாவங்கள் செய்து வந்தால் அந்தப் பாவங்களுக்காகச் செலுத்துவதற்கு வேறெந்தப் பலியும் நமக்கு இருக்காது” என்று பவுல் எழுதுகிறார். (வசனம் 26) வேண்டுமென்றே பாவம் செய்வோர் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏன்? முதலாவதாக, ஏதோ பலவீனத்தின் காரணமாக நொடிப்பொழுதில் அவர்கள் பாவம் செய்துவிடுவதில்லை​—⁠பாவ இயல்புடைய நம் அனைவருக்குமே இப்படிப்பட்ட பலவீனம் இருக்கிறது. ஆனால், அவர்களோ பழக்கமாய் பாவம் செய்து வருகிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் அறிந்தே பாவம் செய்கிறார்கள். எளிய ஆங்கிலத்தில் பைபிள் சொல்கிறபடி, “அவர்கள் மனப்பூர்வமாய் பாவம் செய்கிறார்கள்.” பொல்லாத குணம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. மூன்றாவதாக, ஏதோ அறியாமையினால் அவர்கள் பாவம் செய்வதில்லை. ஏனென்றால், கடவுளுடைய சித்தத்தையும் வழிகளையும் பற்றிய ‘திருத்தமான அறிவு’ அவர்களுக்கு இருக்கிறது.

மனந்திரும்பாத பாவிகளை, கெட்ட புத்தியுள்ளவர்களைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? ‘அந்தப் பாவங்களுக்காகச் செலுத்துவதற்கு வேறெந்தப் பலியும் இருக்காது’ என்று பவுல் சொல்கிறார். நம்முடைய குறைபாட்டின் காரணமாக நாம் செய்கிற பாவங்களை கிறிஸ்துவின் பலி மன்னித்துவிடுகிறது. இதுவே மனிதகுலத்திற்குக் கடவுள் தந்த பரிசு. (1 யோவான் 2:​1, 2) ஆனால், மனந்திரும்பாமல் பழக்கமாய் பாவம் செய்கிறவர்கள் விலையேறப்பெற்ற இந்தப் பரிசுக்கு மதிப்பு காட்டுவதில்லை. கடவுளுடைய பார்வையில், ‘அவருடைய மகனையே மிதித்திருக்கிறார்கள். . . . ‘[இயேசுவின்] இரத்தத்தைச் சாதாரணமாகக் கருதியிருக்கிறார்கள்.’ (வசனம் 29) இயேசுவை ஏளனமாகக் கருதுவதையும், பாவம் செய்கிற சாமானியனின் இரத்தத்தைப் போலவே அவருடைய இரத்தத்தை ‘மலிவாக’ எண்ணுவதையும் அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன. (டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன்) இப்படிப்பட்ட நன்றிகெட்ட ஆட்களுக்கு கிறிஸ்துவின் பலியிலிருந்து ஒரு பலனும் கிடைக்காது.

பொல்லாதவர்களுக்கு என்ன நடக்கும்? “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று நீதியுள்ள கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (வசனம் 30) திருந்தாமல் தொடர்ந்து பாவம் செய்கிறவர்களே, மற்றவர்களுக்குக் கேடு விளைவிப்பவர்களே எச்சரிக்கையாயிருங்கள்: கடவுளுடைய நீதியான சட்டங்களை மீறுகிற யாருமே தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. பெரும்பாலும் அவர்களுடைய பாவமே அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும். (கலாத்தியர் 6:7) அவர்களுக்குத் தண்டனை இப்போது கிடைக்கவில்லையென்றாலும், வெகு விரைவில் கிடைக்கும்; இந்தப் பூமியிலிருந்து எல்லா அநீதியையும் ஒழித்துக் கட்டுவதற்கு கடவுள் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் எப்படியும் அவருக்கு கணக்குக் கொடுத்தே தீரவேண்டும். (நீதிமொழிகள் 2:​21, 22) “உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்குமே” என்று பவுல் எச்சரிக்கிறார்.​—⁠வசனம் 31.

வேண்டுமென்றே பாவம் செய்கிறவர்களைக் கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட மாட்டார்! இது நம் அனைவருக்கும் எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. முக்கியமாக கல்நெஞ்சமிக்க கயவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும். எனவே, நாம் எப்பேர்ப்பட்ட அநீதிக்கு ஆளாகியிருந்தாலும் சரி, அநீதியை அறவே வெறுக்கிற ‘கடவுளே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று நம்பிக்கையுடன் அவருடைய கையில் விட்டுவிடுவோமாக. (w08 11/1)

[அடிக்குறிப்பு]

a கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) என்ற புத்தகத்தில் பக்கங்கள் 106-⁠114-⁠ஐக் காண்க.