Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

நீ யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறாயா? யோசேப்பின் அண்ணன்கள் பொறாமைப்பட்டார்கள்

நீ யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறாயா? யோசேப்பின் அண்ணன்கள் பொறாமைப்பட்டார்கள்

இப்போது, பொறாமைப்படுவதென்றால் என்ன என்று பார்க்கலாம். மற்றவர்கள் யாரையாவது பார்த்து, ‘அவன் ரொம்ப நல்ல பையன், அழகானவன், கெட்டிக்காரன்’ என்றெல்லாம் சொல்லி பாராட்டினால் உனக்கு வெறுப்பாக இருக்கிறதா? a⁠ அந்த வெறுப்புதான் பொறாமை.

ஒரே பிள்ளைக்கு மட்டும் பெற்றோர் அதிகமாகச் செல்லம் கொடுக்கும்போது இன்னொரு பிள்ளை அதைப் பார்த்து பொறாமைப்படலாம். பொறாமையினால் ஒரு குடும்பத்தில் பெரிய சண்டையே வந்துவிட்டது என்று பைபிள் சொல்கிறது. அதனால் என்ன பிரச்சினை வந்தது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

யாக்கோபின் 11-⁠வது பிள்ளைதான் யோசேப்பு. அவன்மீது அண்ணன்களுக்குப் பொறாமை. ஏன் தெரியுமா?​—⁠ ஏனென்றால், மற்ற பிள்ளைகளைவிட யோசேப்பு மேல்தான் அவர்களுடைய அப்பாவுக்கு ரொம்ப பிரியம். உதாரணமாக, யோசேப்புக்கு அழகான ஒரு டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். யாக்கோபுக்கு ‘வயசான காலத்தில் யோசேப்பு பிறந்தான்,’ அதுமட்டுமல்ல, பிரியமான மனைவி ராகேலுக்கு பிறந்த முதல் பிள்ளை; அதனால்தான் அவன்மீது அவருக்குக் கொள்ளை ஆசை.

‘யோசேப்பை தங்கள் அப்பா அதிகமாய் நேசிப்பதை அவன் அண்ணன்கள் பார்த்தபோது, அவனை வெறுத்தார்கள்’ என பைபிள் சொல்கிறது. அண்ணன்மார்களும் அப்பாவும் தனக்கு முன் விழுந்து வணங்குவதைப் போல கனவு கண்டதாக ஒரு நாள் யோசேப்பு அவர்களிடம் சொன்னான். அதைக் கேட்டு ‘அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைப்பட்டார்கள்.’ இந்த மாதிரியான கனவை சொன்னதற்கு அவனுடைய அப்பாவும்கூட அவனைத் திட்டினார்.​—ஆதியாகமம் 37:1–11, NW.

பின்பு ஒருநாள், யோசேப்பின் அண்ணன்கள் எல்லாரும் பல கிலோமீட்டர் தூரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் போய் பார்த்துவிட்டு வரச்சொல்லி யோசேப்பை யாக்கோபு அனுப்பி வைத்தார்; அப்போது அவனுக்கு 17 வயது. அவன் வருவதைப் பார்த்ததும் அவன் அண்ணன்கள் என்ன செய்ய நினைத்தார்கள் என்று தெரியுமா?​—⁠ அவனைக் கொலை செய்ய சதி பண்ணினார்கள்! ஆனால், ரூபனும் யூதாவும் அப்படிச் செய்ய விரும்பவில்லை.

அப்போது அந்த வழியாக வியாபாரிகள் சிலர் எகிப்துக்கு போய்க்கொண்டிருந்தார்கள். உடனே யூதா, ‘வாருங்கள், அவனை விற்றுவிடலாம்’ என்றான். அவன் சொன்ன மாதிரியே யோசேப்பை அவர்கள் விற்றுவிட்டார்கள். பின்பு ஓர் ஆட்டை அடித்து அதன் இரத்தத்தில் யோசேப்பின் டிரெஸ்ஸை முக்கியெடுத்தார்கள். அதை அப்பாவிடம் காட்டியபோது, ‘ஏதோ ஒரு காட்டு மிருகம் அவனைத் தின்றுவிட்டது!’ என்று சொல்லி கதறி அழுதார்.​—ஆதியாகமம் 37:12–36, NW.

கொஞ்சகாலம் போனபிறகு, எகிப்து மன்னன் பார்வோனுக்கு யோசேப்பை ரொம்ப பிடித்துவிட்டது. ஏன் தெரியுமா? ஒருநாள் பார்வோன் இரண்டு கனவு கண்டான். அதற்கு கடவுளுடைய உதவியால் யோசேப்பு அர்த்தம் சொன்னான். முதல் கனவில், ஏழு கொழுத்த மாடுகளும் ஏழு நோஞ்சான் மாடுகள் வந்தன. இரண்டாவது கனவில், செழுமையான ஏழு கதிர்களும் காய்ந்துபோன ஏழு கதிர்களும் வந்தன. ஏழு வருஷம் நல்ல விளைச்சல் இருக்கும்; ஏழு வருஷம் பஞ்சம் இருக்கும் என்பதுதான் அந்த இரண்டு கனவுகளுக்கும் அர்த்தம் என்று யோசேப்பு சொன்னார். அதனால், நாட்டில் நல்ல விளைச்சல் இருக்கும்போதே பஞ்ச காலத்திற்காக தானியங்களைச் சேமித்து வைக்கும் பொறுப்பை யோசேப்புக்கு பார்வோன் கொடுத்தார்.

யோசேப்பின் குடும்பத்தினர் எகிப்திலிருந்து வெகு தூரத்தில் வசித்து வந்தார்கள். பஞ்சகாலம் வந்தபோது அவர்களிடமிருந்த உணவெல்லாம் தீர்ந்துவிட்டது. அதனால், எகிப்துக்குப் போய் உணவு வாங்கிவரச் சொல்லி யோசேப்பின் அண்ணன்கள் பத்துப் பேரையும் யாக்கோபு அனுப்பி வைத்தார். அவர்கள் யோசேப்பு முன் வந்து நின்றார்கள். ஆனால், அவர்களுக்குத் தம்பியை அடையாளம் தெரியவில்லை. அப்போது யோசேப்பு, தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல், தன் சகோதரர்கள் நல்லவர்களாக மாறிவிட்டார்களா என்று சோதித்துப் பார்த்தார். தனக்கு செய்த கொடுமையை நினைத்து அவர்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு, தான் யார் என்று சொன்னார். உடனே அவர்கள் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்!​—ஆதியாகமம் அதிகாரம் 40 முதல் 45.

இந்த பைபிள் கதையிலிருந்து பொறாமையைப் பற்றி நீ என்ன தெரிந்துகொண்டாய்?​—⁠ பொறாமை பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விடலாம். சொந்த தம்பிக்கே தீங்கு செய்ய தூண்டலாம்! இப்போது அப்போஸ்தலர் 5:​17, 18-⁠ஐயும் அப்போஸ்தலர் 7:54–59-⁠ஐயும் நாம் வாசிக்கலாம். பொறாமையினால் இயேசுவின் சீடர்களுக்கு ஜனங்கள் என்ன செய்தார்களென்று பார்க்கலாம்.​—⁠ யார் மீதும் பொறாமைப்படாமல் இருக்க நாம் ஏன் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது இப்போது உனக்குப் புரியுதா?​—

யோசேப்பு 110 வருஷம் வாழ்ந்தார். அவருக்குப் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும், கொள்ளுப் பேரன்களும் பேத்திகளும் இருந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்; பொறாமைப்படக் கூடாது என்றெல்லாம் யோசேப்பு அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார்.​—ஆதியாகமம் 50:​22, 23, 26. (w08 10/1)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில்சொல்ல சொல்லுங்கள்.