Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரவலாகக் காணப்படும் நம்பிக்கை

பரவலாகக் காணப்படும் நம்பிக்கை

பரவலாகக் காணப்படும் நம்பிக்கை

“நரகத்தில என்னை வதைக்கிற மாதிரியும், தகதகன்னு எரிகிற நெருப்பில என்னைத் தூக்கி போடுகிற மாதிரியும் பயங்கரமான கனவெல்லாம் வரும்! பயத்தில திடீரென வீரிட்டு எழுந்திருப்பேன். அதனாலதான், பாவம் செய்யாதிருக்க ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன்.”​—⁠ஆர்லென்.

நரகம் என்பது பாவிகளைச் சித்திரவதை செய்யும் இடமென நீங்கள் நம்புகிறீர்களா? அநேகர் அப்படித்தான் நம்புகிறார்கள். உதாரணமாக, 2005-⁠ல் செ. ஆன்ட்ரூஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து அறிஞர் நடத்திய ஆய்வின் முடிவைக் கவனியுங்கள். கடவுளிடமிருந்து பிரிந்திருப்பவர்கள் “நரகத்தில் காலம்பூராவும் மனோ ரீதியில் வேதனைப்படுவார்கள்” என ஸ்காட்லாந்து பாதிரிமாரில் மூன்றில் ஒருவர் நம்பினர்; ஆனால், அவர்களில் ஐந்தில் ஒருவர், நரகத்தில் இருப்பவர்கள் உடல் ரீதியில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என நம்பினர்.

அநேக நாடுகளில் எரிநரக நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் சுற்றாய்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதத்தினருக்கு அந்த நம்பிக்கை இருப்பதாக 2007-⁠ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர அறிக்கை காட்டுகிறது. துளியும் மதநம்பிக்கை இல்லாத நாடுகளிலும் எரிநரக நம்பிக்கை இருந்து வருகிறது. 2004-⁠ல் கனடாவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, 42 சதவீதத்தினருக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்தில் 32 சதவீதத்தினர் எரிநரகம் இருப்பதாக உறுதியாக நம்பினார்கள்.

பாதிரிமாரின் போதனை?

எரிநரகம் என்பது உண்மையிலேயே பாவிகளைச் சுட்டெரிக்கும் ஓர் இடம் என்று போதிப்பதை அநேக பாதிரிமார் நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக, “எரிநரக தண்டனை என்பது ஒருவரை கடவுளிடமிருந்து நிரந்திரமாகப் பிரித்து விடுவதைக் குறிக்கிறது” என்று போதிக்கிறார்கள். இந்தப் போதனை, கேத்தலிக் சர்ச்சின் வேதபாட புத்தகம் (1994-⁠ல் பிரசுரிக்கப்பட்டது, ஆங்கிலம்) கொடுக்கும் விளக்கத்தைப் போல் இருக்கிறது.

அப்படியிருந்தாலும், நரகம் என்பது மனோ ரீதியிலோ உடல் ரீதியிலோ வேதனைப்படும் ஓர் இடம் என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள், பைபிளும் இதைத்தான் போதிக்கிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சதர்ன் பாப்டிஸ்ட் தியாலஜிக்கல் செமினரியின் தலைவரான ஆர். ஆல்பெர்ட் மோலெர், எரிநரகம் என்பது “பைபிள் போதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பது ஏன் முக்கியம்?

நரகம் என்பது உண்மையிலேயே பாவிகளை வதைக்கும் இடமென்றால், நீங்கள் அதைக் குறித்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அது உண்மை அல்ல என்றால், இந்தக் கருத்தை போதிக்கும் மதத் தலைவர்கள் தேவையில்லாமல் மக்கள் மனதில் பயத்தையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். அதோடு, கடவுளுடைய பெயரையும் கெடுக்கிறார்கள்.

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இந்த விஷயத்தைக் குறித்து என்ன சொல்கிறது? தொடர்ந்து வரும் கட்டுரைகளில், இந்த மூன்று கேள்விகளுக்கு கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பைபிள் மொழிபெயர்ப்புகளே பதிலளிக்கின்றன: (1) ஒருவர் சாகும்போது என்ன நடக்கிறது? (2) நரகத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? (3) நரகத்தைப் பற்றிய உண்மை உங்கள் கண்ணோட்டத்தை எப்படி மாற்றும்?  (w08 11/1)