கடவுளுக்குப் பெயர் இருக்கிறதா?
கடவுளுக்குப் பெயர் இருக்கிறதா?
எல்லாரும் சொல்கிற பதில்கள்:
▪ “அவருடைய பெயர் கர்த்தர்.”
▪ “அவருக்கென்று ஒரு பெயர் கிடையாது.”
இயேசுவின் பதில்:
▪ “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதென இயேசு சொன்னதைக் கவனித்தீர்களா?
▪ ‘நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.’ (யோவான் 17:26) கடவுளுடைய பெயரை இயேசு அனைவருக்கும் தெரியப்படுத்தினார் என இதிலிருந்து தெரிகிறதல்லவா?
▪ “யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை இனி ஒருபோதும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்.” (லூக்கா 13:35; சங்கீதம் 118:26; Nw) கடவுளுடைய பெயரை இயேசு பயன்படுத்தியதைப் பார்த்தீர்களா?
கடவுளே தம்முடைய பெயரை நமக்குச் சொல்கிறார். “நானே யெகோவா, என் நாமம் இதுவே” என்று அவரே சொல்லும் வார்த்தைகள் பைபிளில் பதிவாகியுள்ளன. a (ஏசாயா 42:8, திருத்திய மொழிபெயர்ப்பு) கடவுள் தமக்கே சூட்டிக்கொண்ட எபிரெய பெயரின் தமிழ் வடிவம்தான் யெகோவா. இந்தப் பெயர் பழங்கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் எத்தனை முறை வந்திருக்கிறது என்று கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஆம், பல்லாயிரக்கணக்கான முறை வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், வேறெந்தப் பெயரையும்விட இந்தப் பெயர்தான் பைபிளில் அதிக தடவை வருகிறது.
கடவுளுடைய பெயர் என்னவென்று கேட்டால் சிலர், “கர்த்தர்” எனச் சொல்லலாம். இது எப்படி இருக்கிறதென்றால், “தேர்தலில் யார் ஜெயித்தார்?” எனக் கேட்கும்போது “வேட்பாளர்” என்று சொல்வதுபோல் இருக்கிறது. இரண்டு பதில்களுமே சரி கிடையாது. ஏனென்றால், “கர்த்தர்” என்பதும், “வேட்பாளர்” என்பதும் பெயர்களே அல்ல.
கடவுள் ஏன் தம்முடைய பெயரை நமக்குத் தெரியப்படுத்தினார்? அவரை நன்றாகத் தெரிந்துகொள்வதற்காகத்தான். உதாரணமாக, சூழ்நிலையைப் பொறுத்து ஒருவரை ஐயா, முதலாளி, அப்பா, தாத்தா என்றெல்லாம் கூப்பிடலாம். இந்தப் பட்டப்பெயர்கள் அந்த நபரைப் பற்றி ஏதோ ஒரு விஷயத்தைத்தான் நமக்குச் சொல்கின்றன. ஆனால், அந்த நபருடைய பெயர் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்கிற அனைத்தையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதுபோலவே, கர்த்தர், சர்வ வல்லமையுள்ளவர், பிதா, சிருஷ்டிகர் போன்ற பட்டப்பெயர்கள் கடவுளுடைய செயல்களின் பல அம்சங்களை நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால், யெகோவா என்ற அவருடைய பெயர் மாத்திரமே அவரைப் பற்றி நாம் அறிந்திருக்கிற அனைத்தையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. கடவுளுடைய பெயரே தெரியாமல் அவரை நாம் எப்படி முழுமையாக அறிந்துகொள்ள முடியும்?
அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, அதைப் பயன்படுத்தவும் வேண்டும். ஏன்? ஏனென்றால், “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 10:13; யோவேல் 2:32; NW. (w09 2/1)
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய பெயரின் அர்த்தத்தையும் ஏன் சில பைபிள்களில் அவருடைய பெயர் இல்லை என்பதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 195-197-ஐக் காண்க.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
சூழ்நிலையைப் பொறுத்து, ஒருவரை ஐயா, முதலாளி, அப்பா, தாத்தா என்றெல்லாம் கூப்பிடலாம். ஆனால், அந்த நபருடைய பெயரைச் சொல்லும்போதுதான் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்கிற அனைத்தும் நம் நினைவுக்கு வருகிறது