குடும்ப மகிழ்ச்சிக்கு . . .
பிள்ளைகளைக் கண்டித்து வளர்த்தல்
ஜான்: a நான் ஏதாவது தப்பு செய்தால் என்னைத் தண்டிப்பதற்கு முன்பு என் அப்பாவும் அம்மாவும் நான் ஏன் அப்படிச் செய்தேன், எதனால் அப்படிச் செய்தேன் என்பதைப் புரிந்துகொள்ள ரொம்பவே முயற்சி செய்தார்கள். என் மகள்களைக் கண்டிக்கும் விஷயத்தில் நானும் அவர்களைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், என் மனைவி ஆலிஸன் வளர்ந்த சூழலோ வேறு. என்ன, ஏது என விசாரிக்காமல் அவளுடைய அப்பா அம்மா உடனடியாகத் தண்டிப்பார்களாம். எந்தச் சூழ்நிலையில் பிள்ளைகள் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல் அவர்களை அடித்துவிடுவார்களாம். சில சமயங்களில், என் மனைவிகூட அதேபோல் பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
கேரல்: எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது என் அப்பா எங்கள் குடும்பத்தை அம்போவென விட்டுப் போய்விட்டார். என் மீதோ என் மூன்று தங்கைகள் மீதோ அவருக்குத் துளிகூட அக்கறை இருக்கவில்லை. அம்மா ரொம்ப பாடுபட்டு எங்களை வளர்த்து ஆளாக்கினார்; என் தங்கைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால் என் குழந்தைப் பருவ ஆசாபாசங்களைத் தொலைத்தேன். அதனால் இன்றும்கூட கலகலப்பாக எல்லாருடனும் பேசிப் பழகாமல் அமைதியாக இருப்பதே என் சுபாவமாகிவிட்டது. இப்போதுகூட என் பிள்ளைகள் தவறு செய்யும்போது அதை நினைத்து ரொம்ப கவலைப்படுகிறேன். ஏன் அப்படி நடந்துகொண்டார்கள், அவர்கள் மனதில் என்னதான் இருக்கிறது என்றெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இந்த விஷயத்தில் என் கணவர் மாற்கு எனக்கு நேர்மாறானவர். அவருடைய அப்பா அன்பானவர், அதே சமயம் கண்டிப்புமிக்கவர், தன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொண்டவர். எனவே, எங்கள் மகள்களிடம் ஏதாவது பிரச்சினை இருந்தால் அவர் உடனடியாகச் சரிசெய்துவிடுவார், மறுபடியும் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க மாட்டார்.
ஜான், கேரல் அனுபவம் எதைக் காட்டுகிறது? உங்கள் அப்பா அம்மா உங்களை எப்படி வளர்த்தார்களோ அதேபோல்தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பீர்கள் என்பதையே காட்டுகிறது. கணவனும் மனைவியும் வெவ்வேறு குடும்பச் சூழலிலிருந்து வந்திருப்பதால் பிள்ளைகளைக் கண்டிக்கிற விஷயத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். சில சமயங்களில், இந்தக் கருத்துவேறுபாடுகளால் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகலாம்.
வேலைப் பளுவினால் பெற்றோர் களைப்படையும்போது பிரச்சினைகள் இன்னும் அதிகமாகிவிடலாம். பிள்ளை பிறக்கையில் அதை நல்ல விதத்தில் பயிற்றுவிப்பது எளிதல்ல, அது தங்களுடைய நேரத்தையெல்லாம் உறிஞ்சிவிடும் என்பதைப் பெற்றோராகும் தம்பதிகள் அறிந்துகொள்கிறார்கள். ஜோன், டாரன் தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். தன் பிள்ளைகளைக் குறித்து ஜோன் இவ்வாறு சொல்கிறார்: “என் பிள்ளைகள்மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன். சில சமயங்களில் இத்தனை மணிக்குத் தூங்கப்போங்கள் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். அப்புறம் நேரங்கெட்ட நேரத்தில் எழுந்துவிடுவார்கள். நான் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே பேசுவார்கள். அவர்களுடைய ஷூ, துணிமணி, விளையாட்டு சாமான்கள். . . என எதையும் எடுத்த இடத்தில்
வைக்கமாட்டார்கள், சாப்பிடும் பொருளை ஃபிரிஜ்ஜிலிருந்து வெளியே எடுத்தால் மீண்டும் உள்ளே வைக்க மாட்டார்கள்.”ஜாக் என்பவரின் மனைவி இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனச்சோர்வினால் அவதிப்பட்டார். அந்தச் சமயத்தில் தான் எதிர்ப்பட்ட கஷ்டத்தைப் பற்றி ஜாக் இவ்வாறு சொல்கிறார்: “பெரும்பாலும் வேலையிலிருந்து வரும்போதே களைத்துப்போய் வருவேன்; போதாக்குறைக்கு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள இரவில் பாதிநேரம் விழித்திருப்பேன். இதனால், என் மூத்த மகளைச் சரியாகக் கண்டித்து வளர்க்க முடியவில்லை. இத்தனை நாளாக அவளை மட்டுமே கவனித்துவந்த நாங்கள் இப்போது அவளுடைய தங்கையையும் கவனித்துக்கொள்வதைப் பார்த்து அவள் பொறாமைப்பட்டாள்.”
களைத்துப்போயிருக்கும் பெற்றோர், பிள்ளையைப் பயிற்றுவிக்கும் விஷயத்தில் முரண்படும்போது, சின்னச்சின்ன சண்டைகள்கூட பெரிய வாக்குவாதங்களாக வெடிக்கலாம். இந்த வாக்குவாதங்கள் முற்றிப்போய் அவர்களுக்கு நடுவில் விரிசல் விழலாம்; பிள்ளை அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம். பிள்ளைகளைச் சிறந்த விதத்தில் வளர்ப்பதோடுகூட தங்களுடைய பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள என்னென்ன பைபிள் நெறிகள் தம்பதியருக்கு உதவும்?
உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்
ஓர் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொண்ட பிறகே பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். பிள்ளைகள் வளர்ந்து, பெரியவர்களாகி, அவர்களுக்கென்று ஒரு குடும்பம் ஆனபிறகும் இவர்கள் திருமண பந்தத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார். “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று திருமண பந்தத்தைக் குறித்து பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:6) “தகப்பனையும் தாயையும் விட்டு” பிள்ளைகள் விலகுவார்கள் என்று அதே பைபிள் பகுதி சொல்கிறது. (மத்தேயு 19:5) சொல்லப்போனால், பிள்ளைகளை வளர்ப்பது மணவாழ்வின் ஓர் அங்கம்தான்; அதுவே அதன் அஸ்திவாரம் அல்ல. பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பெற்றோர் தங்கள் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பது உண்மைதான்; ஆனால், திருமண பந்தம் பலமாக இல்லாவிட்டால் அதைத் தங்களால் செய்ய முடியாது என்பதை அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
பிள்ளைகளை வளர்த்துவருகிற அதேசமயத்தில் தம்பதியர் தங்கள் பந்தத்தையும் பலப்படுத்திக்கொள்ள வழி இருக்கிறதா? இருக்கிறது. முடிந்தால், பிள்ளைகள் பக்கத்தில் இல்லாமல் தம்பதியர் தனிமையில் நேரம் செலவிட வேண்டும்; இதைத் தவறாமல் செய்ய வேண்டும். இது, குடும்பம் சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களைக் கலந்துபேசவும் ஒருவருக்கொருவர் தனிமையில் நேரத்தைச் செலவிடவும் உதவும். ஆனால், ஒன்றாகச் சேர்ந்திருக்க நேரம் கிடைப்பது கஷ்டம்தான். முன்னர் குறிப்பிடப்பட்ட ஆலிஸன் இவ்வாறு சொல்கிறார்: “என் கணவருடன் தனியாகப் பேச நல்ல சந்தர்ப்பமென நினைக்கும்போதுதான், எங்கள் கடைக்குட்டி சிணுங்கத் தொடங்குவாள்; இல்லையென்றால், எங்கள் ஆறு வயது மகள் தன் கிரேயான் பென்சில்களைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி பாடாய்ப்படுத்துவாள்.”
முன்னர் குறிப்பிடப்பட்ட ஜோனும் டேரனும் தங்களுடைய மகள்கள் இத்தனை மணிக்கெல்லாம் தூங்கப்போய்விட வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்; இதனால், அவர்கள் தனிமையில் பேச நேரம் கிடைத்தது. “எத்தனை மணிக்கு விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட வேண்டும் என்று பிள்ளைகளுக்குத் தெரிந்திருந்தது. அதனால் பிள்ளைகளுடைய தொல்லை இல்லாமல் நானும் டேரனும் நிம்மதியாகப் பேச முடிந்தது” என்று ஜோன் சொல்கிறார்.
இத்தனை மணிக்குப் படுக்கைக்குப் போகவேண்டுமென பிள்ளைகளைப் பழக்கப்படுத்தினால்தான் தம்பதியர் தங்களுக்கென நேரம் செலவிட முடியும். பிள்ளையும் “தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” இருக்கும். (ரோமர் 12:3) பெற்றோர் கற்றுக்கொடுக்கும் இந்தப் பழக்கத்தை மதித்து நடக்கும் பிள்ளைகள் ஒரு விஷயத்தைப் பின்னர் புரிந்துகொள்கிறார்கள்; அதாவது, குடும்பத்தில் தாங்களும் முக்கியமானவர்கள்தான், ஆனால் தாங்கள் மட்டுமே முக்கியமானவர்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். எனவே, தங்களுக்காக அப்பா அம்மா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்படி எதிர்பார்க்காமல் பிள்ளைகள்தான் அவற்றிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இப்படிச் செய்துபாருங்கள்: தினமும் இத்தனை மணிக்குத் தூங்கப்போக வேண்டுமென்று பிள்ளைகளிடம் சொல்லிவிடுங்கள். அதை அமல்படுத்துங்கள். ஒருவேளை பிள்ளை ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லலாம்; உதாரணத்திற்கு, தண்ணீர் குடிக்க வேண்டுமென கேட்டால், அதற்கு அனுமதியுங்கள். ஆனால், இதுபோன்ற சாக்குப்போக்குகளை அடுக்கிக்கொண்டே போக அனுமதிக்காதீர்கள். ஐந்து நிமிடம் கழித்துத் தூங்கப் போவதாகப் பிள்ளை கெஞ்சுவதாக வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் அதற்குச் சம்மதித்தால், சரியாக ஐந்து நிமிடத்தில் அலாரம் அடிக்கச் செய்யுங்கள். மணி அடித்ததும் பிள்ளையைப் படுக்கைக்கு அனுப்புங்கள், வேறெந்த சாக்குப்போக்கும் சொல்ல அனுமதிக்காதீர்கள். நீங்கள் “‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும். ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.”—மத்தேயு 5:37, NW.
ஒற்றுமையாய்ச் செயல்படுங்கள்
“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” என்ற ஞானமான புத்திமதியை பைபிள் தருகிறது. (நீதிமொழிகள் 1:8) பிள்ளையைக் கண்டிப்பதில் அப்பா, அம்மா இருவருக்கும் உரிமை இருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. ஒருவேளை அவர்கள் இருவரும் வளர்ந்த சூழல் ஒரே விதமாக இருந்தாலும், பிள்ளையைக் கண்டிக்கும் விஷயத்திலோ குறிப்பிட்ட சூழ்நிலையில் குடும்ப சட்டங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்திலோ அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரலாம். இந்தப் பிரச்சினையைப் பெற்றோர் எப்படிக் கையாளலாம்?
“கணவனும் மனைவியும் ஏதாவதொரு விஷயத்தில் ஒத்துப்போகவில்லையென்றால் அதைப் பிள்ளைகள் முன் காட்டிக்கொள்ளாதிருப்பது நல்லது” என்று முன்னர் குறிப்பிடப்பட்ட ஜான் சொல்கிறார். ஆனால், அதைச் சொல்வது எளிது, செய்வதோ கடினம் என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். “பிள்ளைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருப்பதை நாங்கள் சொல்லாவிட்டாலும் எங்கள் மகள் எப்படியோ அதைக் கண்டுபிடித்துவிடுவாள்” என்றும் அவர் சொல்கிறார்.
இந்தப் பிரச்சினையை ஜானும் ஆலிஸனும் எப்படிச் சமாளித்தார்கள்? “சில சமயங்களில் மகளை என் வீட்டுக்காரர் கண்டிக்கிற விதம் எனக்குப் பிடிக்காது; அந்தச் சமயத்தில் எதுவும் பேசமாட்டேன்; அவள் அந்தப் பக்கம் போனதும் என் கருத்தை அவரிடம் தெரிவிப்பேன். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கிற 1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 6:1–3) ஜான் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் இருவரும் இருக்கும் சமயத்தில் பொதுவாக நானே என் மகள்களைக் கண்டிப்பேன். ஒரு பிரச்சினையைப் பற்றி ஆலிஸனுக்கு நன்கு தெரியுமென்றால் அவளையே பிள்ளைகளைக் கண்டிக்கச் சொல்வேன், அவள் சொல்வதை நான் ஆமோதிப்பேன். ஆனால், அந்தச் சமயத்தில் அவளோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அதைப் பற்றிப் பின்னர் அவளிடம் பேசுவேன்.”
கருத்துவேறுபாடுகளை அவள் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, தான் நினைத்ததைச் சாதித்துவிடக் கூடாதென நினைத்தேன். எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பது ஒருவேளை அவளுக்குத் தெரிய வந்தால், யெகோவா ஏற்படுத்தியுள்ள தலைமை ஸ்தானத்திற்குக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கீழ்ப்படிய வேண்டும் என்றும், பெற்றோராக நாங்கள் சொல்வதற்கு அவள் எப்படிக் கீழ்ப்படிய வேண்டுமோ அப்படியே நானும் அவளுடைய அப்பாவின் தலைமைக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொல்லுவேன்” என்கிறார் ஆலிஸன். (பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் விஷயத்தில் உங்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் தலைதூக்கலாம்; இதனால், கோபதாபங்கள் ஏற்படலாம், பிள்ளைகள் உங்கள்மீது வைத்திருக்கும் மதிப்பு மரியாதை குறையலாம். இவற்றை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்?
இப்படிச் செய்துபாருங்கள்: பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒவ்வொரு வாரமும் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள், உங்களுக்குள் எழும் கருத்துவேறுபாடுகளை மனம்விட்டுப் பேசுங்கள். விஷயங்களை உங்கள் மணத்துணையின் கண்ணோட்டத்தில் பாருங்கள், அவருக்கும் பிள்ளைமீது பாசம் இருப்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளுங்கள்
பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண காரியமல்லதான். சில சமயங்களில், அது உங்கள் சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடலாம். காலப்போக்கில், பிள்ளைகள் வளர்ந்து தங்களுக்கென ஒரு குடும்பம் உருவானதும் தனியாகச் சென்றுவிடலாம்; இனி, ‘எனக்கு நீ, உனக்கு நான்’ என்பதுபோல் நீங்கள் இருவர் மட்டுமே இருப்பீர்கள். அப்போது, பிள்ளையை வளர்த்த அனுபவத்தால் உங்களுக்கிடையே உள்ள பந்தம் பலப்பட்டிருக்குமா அல்லது பலவீனப்பட்டிருக்குமா? இதற்கான பதில் பிரசங்கி 4:9, 10-லுள்ள நியதியை நீங்கள் எந்தளவு பின்பற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. அது பின்வருமாறு சொல்கிறது: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”
பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும்போது நல்ல பலன்கள் கிடைக்கும்; இது, பரம திருப்தி தரும். முன்னர் குறிப்பிடப்பட்ட கேரல் இவ்வாறு சொல்கிறார்: “என் கணவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், பிள்ளைகளை வளர்த்தபோது இன்னும் நிறைய நல்ல குணங்களை அவரிடம் பார்த்தேன். மகள்களை அன்போடும் பரிவோடும் கவனித்துக்கொண்டதைப் பார்க்க பார்க்க அவரிடம் எனக்கிருந்த அன்பும் மரியாதையும் பன்மடங்கு பெருகியது.” ஆலிஸனைப் பற்றி ஜான் இவ்வாறு சொல்கிறார்: “கனிவான தாயாக என் மனைவி மாறியிருப்பதைப் பார்க்கையில் அவள் மீதுள்ள அன்பும் மதிப்பும் எனக்கு அதிகரித்துள்ளது.”
பிள்ளைகளை வளர்க்கும் சமயத்தில், உங்கள் மணத்துணைக்காக நேரத்தை ஒதுக்கி, ஒற்றுமையாய்ச் செயல்படுங்கள்; அப்போது, பிள்ளைகள் வளர வளர உங்கள் மணவாழ்வு செழிக்கும். உங்களைத் தவிர வேறு யாரால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்க முடியும்? (w09 2/1)
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .
-
பிள்ளைகள் இல்லாமல் தனியாக என் கணவருடன்/மனைவியுடன் ஒவ்வொரு வாரமும் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன்?
-
பிள்ளைகளை என் கணவர்/மனைவி கண்டிக்கும்போது எந்த விதத்தில் நான் அதை ஆதரிக்கிறேன்?