Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அவர்கள் படுகிற வேதனைகளை நன்றாக அறிந்திருக்கிறேன்’

‘அவர்கள் படுகிற வேதனைகளை நன்றாக அறிந்திருக்கிறேன்’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘அவர்கள் படுகிற வேதனைகளை நன்றாக அறிந்திருக்கிறேன்’

யாத்திராகமம் 3:1-10

“யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.” (ஏசாயா 6:3, NW) கடவுளாகிய யெகோவா நிகரற்ற விதத்தில் தூய்மையானவர், சுத்தமானவர் என்பதையே இந்த வேதவார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால், உங்கள் மனதில் இந்தக் கேள்விகள் எழலாம்: ‘அவர் அந்தளவு பரிசுத்தமானவர் என்பதால், யாரையுமே அவர் பொருட்படுத்த மாட்டாரா? யாரையுமே தம்மிடம் நெருங்க விடமாட்டாரா? அப்பேர்ப்பட்ட பரிசுத்தமான கடவுள் போயும்போயும் என்மீது, அதுவும் அபூரணத்தில் பிறந்த இந்தப் பாவிமீது, உண்மையிலேயே அக்கறை காட்டுவாரா?’ இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள யாத்திராகமம் 3:1-10 வசனங்களை நாம் இப்போது ஆராய்ந்துபார்க்கலாம்; அந்த வசனங்களில் மோசேயிடம் கடவுள் பேசிய நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் காணலாம்.

ஒருநாள் மோசே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அதிசயத்திலும் அதிசயமான காட்சி ஒன்றைக் கண்டார்—ஒரு முட்புதர் குபுகுபுவென்று எரிந்துகொண்டிருந்தது, ஆனால் ‘கருகிப்போகவே இல்லை.’ (வசனம் 2, NW) அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! அது எப்படி முடியுமென்று நினைத்து, பக்கத்திலே போய்ப் பார்த்தார். எரிந்துகொண்டிருந்த அந்த முட்புதரின் நடுவிலிருந்து ஒரு குரல் வந்தது; “பக்கத்தில் நெருங்காதே, உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய்” என்று மோசேயிடம் யெகோவா ஒரு தேவதூதர் மூலமாகச் சொன்னார். (வசனம் 5, ஈஸி டு ரீட் வர்ஷன்) சற்று யோசித்துப் பாருங்கள்! எரிந்துகொண்டிருந்த முட்புதர் பரிசுத்தமான கடவுளின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தியதால், அந்த நிலமே பரிசுத்த நிலமாய் ஆனது!

பரிசுத்தமான கடவுள் மோசேயிடம் பேச ஆரம்பித்ததற்குக் காரணம் இருந்தது. “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் [“நன்றாக,” NW] அறிந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (வசனம் 7) ஆம், தம்முடைய ஜனங்கள் படுகிற கஷ்டங்களைப் பார்க்காதபடி கடவுள் கண்களை மூடிக்கொள்ளவில்லை, அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்காதபடி காதுகளையும் அடைத்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய வேதனை அவருடைய வேதனையாகவே இருந்தது. ‘அவர்கள் படுகிற வேதனைகளை நன்றாக அறிந்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னதைக் கவனியுங்கள். “நன்றாக அறிந்திருக்கிறேன்” என்ற வார்த்தைகளைக் குறித்து ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இந்தச் சொற்றொடர், ஒருவரது உள்ளார்ந்த உணர்ச்சியை, கனிவை, கரிசனையைக் குறிக்கிறது.” கடவுள் எந்தளவுக்கு அக்கறையுள்ளவர், பரிவுள்ளவர் என்பது அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது.

அந்த ஜனங்களுக்காக யெகோவா என்ன செய்யவிருந்தார்? தம் ஜனங்களை அவர் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டும் அவர்களுடைய முறையீட்டைக் கரிசனையோடு கேட்டுக்கொண்டும் மட்டுமே இருக்கவில்லை. அவர்களுக்காகச் செயல்பட மனம் தூண்டப்பட்டார். எகிப்திலிருந்து அவர்களை விடுவித்து, ‘பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு’ அழைத்துவரத் தீர்மானித்தார். (வசனம் 8) அதனால், ‘என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வா’ என்று மோசேயிடம் கட்டளையிட்டார். (வசனம் 10) அக்கட்டளையின்படியே மோசே அந்த இஸ்ரவேல் ஜனங்களை பொ.ச.மு. 1513-ல் எகிப்திலிருந்து அழைத்து வந்தார்.

யெகோவா மாறவே இல்லை. ஆகையால், இன்று அவருடைய வணக்கத்தார் ஒரு விஷயத்தைக் குறித்து உறுதியோடு இருக்கலாம்:தாங்கள் துன்பப்படும்போது அவர் பார்க்கிறார், உதவிக்காகக் கூப்பிடும்போது கேட்கிறார். அவர்கள் படுகிற வேதனைகளை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். ஆனாலும், தம்மீது பக்தியாய் இருக்கிற ஊழியர்களைக் குறித்து அவர் கரிசனையாக உணர்வதோடு, அவர்களுக்காகச் செயல்படவும் தூண்டப்படுகிறார்; ஏனென்றால், அவர் கனிவான கடவுள், ‘அவர்கள்மீது அக்கறையாக இருக்கிறவர்.’—1 பேதுரு 5:7.

கடவுள் காட்டுகிற கரிசனை நமக்கு நம்பிக்கையூட்டுகிறது. அபூரணர்களாகிய நாம் அவருடைய உதவியோடு, முடிந்தளவு பரிசுத்தமானவர்களாக வாழலாம், அவருக்குப் பிரியமானவர்களாய் ஆகலாம். (1 பேதுரு 1:15, 16) மன உளைச்சலிலும் மனச் சோர்விலும் தத்தளித்த ஒரு கிறிஸ்தவப் பெண் அந்த முட்புதர்ச் சம்பவத்தைப் பற்றி வாசித்தபோது ஆறுதல் அடைந்தாள். அவள் சொல்கிறாள்: “சாதாரண நிலத்தைக்கூட யெகோவாவால் பரிசுத்தமாக்க முடியுமென்றால், என்னையும் அவர் பரிசுத்தமாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. இது எனக்கு ரொம்பவே தெம்பளிக்கிறது.”

அப்படிப்பட்ட கடவுளாகிய யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? அவரோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள நம்மால் முடியும். ஏனெனில், “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:14. (w09 3/1)