Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதன் ஆகாரத்தினால் மட்டுமே உயிர்வாழ்வதில்லை நாசி சிறை முகாம்களிலிருந்து நான் தப்பிப்பிழைத்த கதை

மனிதன் ஆகாரத்தினால் மட்டுமே உயிர்வாழ்வதில்லை நாசி சிறை முகாம்களிலிருந்து நான் தப்பிப்பிழைத்த கதை

மனிதன் ஆகாரத்தினால் மட்டுமே உயிர்வாழ்வதில்லை நாசி சிறை முகாம்களிலிருந்து நான் தப்பிப்பிழைத்த கதை

ஜோசஃப் ஹீஸிகா சொன்னபடி

“என்ன வாசிக்கிறாய்?” என்று என்னோடிருந்த கைதியிடம் கேட்டேன். அதற்கு அவன், “பைபிள்” என்று சொல்லிவிட்டு, “ஒரு வாரம் உனக்குக் கிடைக்கிற ரொட்டியை நீ எனக்குத் தந்துவிடு, இதை நான் உனக்குத் தந்துவிடுகிறேன்” என்றான்.

மோஸல் என்ற ஊரில் 1914, மார்ச் 1-ஆம் தேதி நான் பிறந்தேன்; இந்த ஊர் அப்போது ஜெர்மனியின் பாகமாக இருந்தது. 1918-ல் முதல் உலகப் போர் முடிந்த பிறகு இந்த ஊர் மீண்டும் பிரான்சின் பாகமானது. 1940-ல் இதை ஜெர்மனி திரும்பவும் கைப்பற்றியது. 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு மீண்டும் இது பிரான்சின் பாகமானது. இப்படி, மாறிமாறி நான் இரண்டு நாடுகளின் பிரஜையாக இருந்ததால் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசக் கற்றுக்கொண்டேன்.

என் பெற்றோர் கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போனவர்கள். ஒவ்வொரு இரவும் படுக்கப்போவதற்குமுன் நாங்கள் முழங்கால் போட்டுக் குடும்பமாக ஜெபம் செய்தோம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் சர்ச்சுக்குப் போனோம். என் மதத்தை மிக முக்கியமானதாய்க் கருதினேன்; கத்தோலிக்க கேட்டகிஸம் தொகுதியில் இருந்தேன்.

ஊழியத்தில் மூழ்கிவிட்டேன்

யெகோவாவின் சாட்சிகளில் இருவர் 1935-ல் என் பெற்றோரைச் சந்தித்தார்கள். அப்போது, முதல் உலகப் போரில் மதங்கள் ஈடுபட்டதைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர்கள் பேசியதைக் கேட்ட பிறகு, பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்; 1936-ல், எனக்கொரு பைபிள் கிடைக்குமாவென மதகுருவிடம் கேட்டேன். நான் அதைப் புரிந்துகொள்வதற்கு இறையியல் படிக்க வேண்டுமென அவர் சொல்லிவிட்டார். ஆனாலும், எப்படியாவது ஒரு பைபிளை வாங்கி, அதை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்குத் தணியவே இல்லை.

என்னோடு வேலை செய்த ஆல்பின் ரலவிட்ஸ் என்ற யெகோவாவின் சாட்சி, 1937 ஜனவரியில் பைபிள் விஷயங்களைப் பற்றி என்னிடம் பேச ஆரம்பித்தார். அப்போது நான், “உங்களிடம் பைபிள் இருக்குமென்று நினைக்கிறேன்” எனச் சொன்னேன். ஆம், அவரிடம் இருந்தது. சீக்கிரத்திலேயே, ஜெர்மன் மொழியில் எல்பர்ஃபெல்டர் வர்ஷனை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார்; கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை அதிலிருந்து எடுத்துக் காட்டினார். அந்த பைபிளை ஆசை ஆசையாகப் படிக்க ஆரம்பித்தேன், டியாங்வில் என்ற பக்கத்து ஊரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

1937 ஆகஸ்ட் மாதத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடு ஒன்று பாரிஸ் நகரில் நடந்தது; அதில் கலந்துகொள்ள ஆல்பினுடன் நான் போனேன். அங்குதான் முதன்முதலாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்டேன். விரைவில் ஞானஸ்நானம் பெற்றேன். 1939-ன் ஆரம்பத்தில் பயனியர் ஊழியத்தை, அதாவது முழுநேர ஊழியத்தைத் தொடங்கினேன். ஊழியம் செய்ய மெட்ஸ் நகரத்திற்கு அனுப்பப்பட்டேன். ஜூலை மாதத்தில், பாரிஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றேன்.

போர்க்கால கஷ்டங்கள்

கிளை அலுவலகத்தில் கொஞ்சக் காலமே என்னால் சேவை செய்ய முடிந்தது; ஏனெனில், ஆகஸ்ட் 1939-ல் பிரெஞ்சு ராணுவத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டேன். மனசாட்சியின் நிமித்தம் நான் போரில் கலந்துகொள்ளாததால் சிறைத்தண்டனை பெற்றேன். அதற்கு அடுத்த வருடம் மே மாதம் நான் சிறையில் இருந்தபோது ஜெர்மானியப் படை பிரான்சுமீது திடீர்த் தாக்குதலை நடத்தியது. ஜூன் மாதம் பிரான்சு கைப்பற்றப்பட்டது, நான் மீண்டும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவனானேன். அதனால், ஜூலை 1940-ல் சிறையிலிருந்து விடுதலையானதும் என் பெற்றோரிடமே போய்விட்டேன்.

நாசி ஆட்சியின்கீழ் நாங்கள் வாழ்ந்ததால் பைபிள் படிப்புக்கு ரகசியமாகக் கூடிவந்தோம். யெகோவாவின் சாட்சி ஒருவருடைய பேக்கரியில் நான் சந்தித்து வந்த மாரிஸ் அனஸையாக் என்ற தைரியசாலியான சகோதரியிடமிருந்து காவற்கோபுர பத்திரிகையைப் பெற்றோம். ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளில் சிக்காமல் 1941 வரை நான் சமாளித்தேன்.

திடீரென ஒருநாள் கெஸ்டாப்போ (ரகசிய போலீஸ்) அதிகாரி என்னைத் தேடி வந்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் தடை செய்யப்பட்டிருந்ததைப் பற்றிச் சொல்லிவிட்டு, இன்னமும் யெகோவாவின் சாட்சியாய் இருக்க விரும்புகிறேனாவென என்னிடம் கேட்டார். “ஆமாம்” என்று பதிலளித்தபோது தன் பின்னே வரும்படி உத்தரவிட்டார். அதிர்ச்சி தாங்காமல் என் அம்மா மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அந்த அதிகாரி, என்னை அங்கேயே இருந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

நான் வேலை செய்த தொழிற்சாலையில் மேனேஜருக்கு “ஹெய்ல் ஹிட்லர்!” சொல்லி வணக்கம் தெரிவிக்காமல் இருந்துவிட்டேன். நாசி கட்சி உறுப்பினன் ஆகவும் மறுத்துவிட்டேன். அதனால் மறுநாள் நான் கெஸ்டாப்போ போலீஸாரால் கைதுசெய்யப்பட்டேன். விசாரணை சமயத்தில் மற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய பெயர்களைச் சொல்லும்படி கேட்டபோது, மறுத்துவிட்டேன். என்னை விசாரித்த அதிகாரி துப்பாக்கியைப் பின்புறம் திருப்பி மூர்க்கத்தனமாக என் தலையில் அடித்தார், நான் மயங்கி விழுந்தேன். “அசோஸியேஷன் ஆஃப் ஜெஹோவாஸ் விட்னசஸ் அண்ட் த பைபிள் ஸ்டூடன்ட்ஸ் சார்பில் பிரச்சாரம் செய்ததற்காக” மெட்ஸ் நகரிலுள்ள ஸான்டெர்கரிக்ட் என்ற தனிச்சிறப்பு நீதிமன்றம் 1942, செப்டம்பர் 11-ஆம் தேதி மூன்று வருடம் எனக்குச் சிறைத்தண்டனை விதித்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மெட்ஸ் நகரிலுள்ள சிறைச்சாலையிலிருந்து என்னை மாற்றினார்கள்; அந்தப் பயணத்தின்போது இடையிடையே பல இடங்களில் நின்று, கடைசியாக ஸ்விப்ரூக்கன் கடின உழைப்பு முகாமுக்கு என்னைக் கொண்டு சென்றார்கள். அங்கே இருப்புப்பாதைப் பராமரிப்புப் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தேன். நாங்கள், கனமாயிருந்த தண்டவாளங்களை மாற்றினோம், அவற்றைத் திருகாணிகளால் இணைத்துப் பொருத்தினோம், தண்டவாளங்களுக்குக் கீழே மீண்டும் கற்களைப் பரப்பினோம். இப்படிப் பாடுபட்ட எங்களுக்குச் சாப்பிடக் கிடைத்தது என்ன தெரியுமா? காலையில் ஒரு கப் காபி, கொஞ்சம் ரொட்டி; மதியத்திலும் மாலையிலும் ஒரு கோப்பை சூப், அவ்வளவுதான். பிறகு, பக்கத்து நகரிலிருந்த சிறைக்கு மாற்றப்பட்டேன்; அங்கே செருப்புத் தைக்கும் இடத்தில் வேலை செய்தேன். பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஸ்விப்ரூக்கன் முகாமுக்கு அனுப்பப்பட்டேன்; இந்த முறை வயல்களில் வேலை செய்தேன்.

ஆகாரத்தினால் மட்டுமே உயிர்வாழவில்லை

சிறையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் நான் இருந்த அதே அறையில் போடப்பட்டிருந்தான். அவனுடைய மொழியை ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு என் மத நம்பிக்கைகளைப் பற்றி அவனிடம் பேசினேன். ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்தான்; ஆற்றில் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஞானஸ்நானம் பெற்றுத் தண்ணீரிலிருந்து அவன் கரையேறியதும் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “ஜோசஃப், நான் உங்களுடைய சகோதரன் ஆகிவிட்டேன்!” என்று சொன்னான். இருப்புப்பாதைப் பராமரிப்புப் பணிக்கு நான் திரும்பவும் அனுப்பப்பட்டபோது நாங்கள் இருவரும் பிரிய நேர்ந்தது.

இந்த முறை ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கைதி என்னோடு ஒரே அறையில் போடப்பட்டிருந்தான். ஒருநாள் மாலை அவன் ஒரு சிறுபுத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான், ஆம் அது ஒரு பைபிள்! இச்சமயத்தில்தான், ஒரு வார ரொட்டிக்காக இந்த பைபிளை அவன் எனக்குத் தர முன்வந்தான். நான், “தாராளமாக!” என்றேன். ஒரு வார ரொட்டியை அவனுக்கு விட்டுக்கொடுப்பது என் பங்கில் பெரிய தியாகமாக இருந்தாலும் அதற்காக நான் துளியும் வருத்தப்படவில்லை. “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்று இயேசு சொல்லியிருந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.—மத்தேயு 4:4.

இப்போது பைபிள் எனக்குக் கிடைத்துவிட்டது, ஆனால் அதை யார் கண்ணிலும் படாமல் வைத்துக்கொள்வது பெரும்பாடாய் இருந்தது. மற்ற கைதிகள் பைபிளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தாலும் யெகோவாவின் சாட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் போர்வைக்குள் மறைத்து வைத்துப் படித்தேன். பகல் வேளைகளில், நான் போட்டிருந்த சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டேன். சிறையிலிருந்த அறைகள் சோதனையிடப்பட்டு வந்ததால் அதை அங்கேயே வைக்காமல் என்னோடு எடுத்துச் சென்றேன்.

ஒருநாள் மறந்துபோய் பைபிளை அறையிலேயே வைத்துவிட்டுச் சென்றேன்; அட்டெண்டன்ஸ் எடுக்கப்பட்ட வேளையில்தான் அது என் நினைவுக்கு வந்தது. அன்று மாலை அவசர அவசரமாக என் அறைக்குப் போனேன், ஆனால் பைபிளைக் காணவில்லை. கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, சிறைக் காவலரிடம் போய், ‘என்னுடைய புத்தகத்தை யாரோ எடுத்துக்கொண்டுவிட்டார்கள், அது எனக்கு வேண்டும்’ என்று சொன்னேன். அவர் ஏதோ யோசனையில் இருந்ததால், ஒருவழியாக என் பைபிள் எனக்குக் கிடைத்துவிட்டது! மனப்பூர்வமாய் யெகோவாவுக்கு நன்றி சொன்னேன்.

இன்னொரு சமயம் என்ன நடந்ததெனச் சொல்கிறேன்: குளிப்பதற்கு என்னை அனுப்பினார்கள். அழுக்குத் துணிகளைக் கழற்றியபோது யாரும் பார்க்காதவாறு பைபிளைக் கீழே போட்டேன். காவலர் பார்க்காதபோது, நான் குளிக்கிற இடத்தின் பக்கமாக அதைக் காலால் தள்ளினேன். குளிக்கும்போது அதை ஒருபக்கமாய் மறைத்து வைத்தேன். குளித்து முடித்து வெளியே வந்ததும் யாரும் பார்க்காதவாறு அதைச் சுத்தமான துணிகளுக்குள் பழையபடி தள்ளிவிட்டேன்.

சிறைக்கால அவலமும் ஆறுதலும்

1943-ல் ஒருநாள் காலை, கைதிகள் எல்லாரும் மைதானத்தில் வரிசையாக நின்றிருந்தபோது ஆல்பினைப் பார்த்தேன், எனக்கு ஆச்சரியம் தாளவில்லை! அவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். என்னைப் பார்த்துவிட்டதற்கு அடையாளமாகவும், சகோதர ஐக்கியத்திற்கு அடையாளமாகவும் தன் கையை நெஞ்சில் வைத்தார். பின்னர், எனக்கு எழுதுவதாகச் சைகை காட்டினார். மறுநாள் அவர் என்னைக் கடந்து போனபோது ஒரு துண்டுச் சீட்டைக் கீழே போட்டார். அதைக் காவலர் பார்த்துவிட்டார்; அதற்குத் தண்டனையாக நாங்கள் இருவரும் தனிச்சிறையில் இரண்டு வாரம் அடைக்கப்பட்டோம். சாப்பிடுவதற்குக் காய்ந்துபோன ரொட்டியும் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீரும்தான் கிடைத்தன; போர்வை எதுவும் இல்லாமல் மரப்பலகைகளிலேயே படுத்துத் தூங்கினோம்.

அதற்குப் பிறகு, சிக்பர்க் என்ற இடத்திலிருந்த சிறைக்கு மாற்றப்பட்டேன்; அங்கே உலோகப் பட்டறையில் வேலை செய்தேன். பார்த்த வேலை என்னைச் சக்கையாய்ப் பிழிந்தெடுத்தது, கிடைத்த உணவு வாய்க்கும் வயிற்றுக்கும் போதவில்லை. இரவில் படுத்தால் விதவிதமான கேக்குகளையும் பழங்களையும் சாப்பிடுவதுபோல் கனவு வரும்; கண்விழித்தால் வயிறு ‘கடமுடா’ சத்தம் செய்யும், தொண்டை வறண்டு கிடக்கும். மெலிந்து குச்சிபோல் ஆகிவிட்டேன். ஆனாலும், என்னிடமிருந்த சிறு பைபிளை நாள் தவறாமல் படித்து வந்தேன்; இதனால் வாழ்க்கையில் எனக்குப் பிடிப்பு ஏற்பட்டது.

விடுதலை! விடுதலை!!

1945 ஏப்ரல் மாதத்தில் திடீரென ஒருநாள் சிறைக் காவலர்கள் கதவுகளைத் திறந்துபோட்டுவிட்டு ஓடிப் போனார்கள். நான் விடுதலை ஆனேன்! ஆனால், நேராக மருத்துவமனைக்குச் சென்று, அங்கே சில நாள் தங்கி, உடம்பைத் தேற்றிக்கொண்டேன். மே மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். நான் உயிரோடிருப்பேன் என்று என் பெற்றோர் துளிகூட எதிர்பார்க்கவில்லை. என்னைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அம்மாவின் கண்கள் குளமாயின; கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது. வருத்தகரமாக, என் பெற்றோர் கொஞ்ச நாட்களிலேயே இறந்துவிட்டார்கள்.

மீண்டும் டியாங்வில் சபையுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன். என் ஆன்மீகக் குடும்பத்தாரைத் திரும்பவும் சந்தித்தபோது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! எத்தனையோ கஷ்டங்களைச் சகித்திருந்தபோதிலும் அவர்கள் உண்மையாய் நிலைத்திருந்ததை அறிந்து பூரித்துப்போனேன். ஜெர்மனியிலுள்ள ரேகன்ஸ்பர்க் நகரில் என் அருமை நண்பர் ஆல்பின் இறந்துபோயிருந்தார். என் சித்தப்பா மகன் ஸான் ஹீஸிகா யெகோவாவின் சாட்சியாக ஆனதையும், ராணுவத்தில் சேர மறுத்ததால் கொல்லப்பட்டதையும் பின்னர் அறிந்துகொண்டேன். பாரிஸ் கிளை அலுவலகத்தில் என்னோடு சேவை செய்திருந்த ஸான் கெர்ரா என்பவரும் ஜெர்மானிய உழைப்பு முகாமில் ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டிருந்தார். a

நான் தாமதிக்காமல் மெட்ஸ் நகரில் மீண்டும் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில், மின்ஸானி தம்பதியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். அவர்களுடைய மகள் டீனா 1946, நவம்பர் 2-ஆம் தேதி ஞானஸ்நானம் பெற்றாள். அவள் பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்துவந்தாள்; அவளை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆகையால், 1947 டிசம்பர் 13-ஆம் தேதி அவளைத் திருமணம் செய்துகொண்டேன். 1967 செப்டம்பரில் டீனா முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தாள்; 2003 ஜூன் மாதம் 98-ஆம் வயதில் இறக்கும்வரை அவள் அந்த ஊழியத்தைச் செய்துவந்தாள். டீனா இல்லாத வாழ்க்கை எனக்கு ரொம்பவே வெறுமையாய் இருக்கிறது.

சோதனைகளைச் சகிக்கவும் சமாளிக்கவும் கடவுளுடைய வார்த்தை எனக்கு எப்போதுமே பக்கபலமாய் இருந்திருக்கிறது; அதை இன்றும், 90 வயதைத் தாண்டிய பிறகும்கூட உணருகிறேன். எத்தனையோ நாள் என் வயிறு பட்டினி கிடந்திருக்கிறது, ஆனால் ஒருநாள்கூட என் மனமும் இருதயமும் “பட்டினி” கிடந்ததே இல்லை; ஆம், கடவுளுடைய வார்த்தையை நான் படிக்கத் தவறியதே இல்லை. யெகோவா என்னைப் பலப்படுத்தியிருக்கிறார். அவருடைய ‘வாக்கு என்னை உயிர்ப்பித்திருக்கிறது.’—சங்கீதம் 119:50. (w09 3/1)

[அடிக்குறிப்பு]

a ஸான் கெர்ராவின் வாழ்க்கை சரிதையைத் தெரிந்துகொள்ள அக்டோபர் 1, 1989 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 22-26-ஐக் காண்க.

[பக்கம் 23-ன் படம்]

என் அருமை நண்பர் ஆல்பின் ரலவிட்ஸ்

[பக்கம் 23-ன் படம்]

மாரிஸ் அனஸையாக்

[பக்கம் 24-ன் படம்]

ஒரு வார ரொட்டியைத் தியாகம்செய்து வாங்கிய பைபிள்

[பக்கம் 25-ன் படம்]

1946, நான் திருமணம் செய்துகொள்ளவிருந்த டீனாவுடன்

[பக்கம் 25-ன் படம்]

மனைவி டிட்டிக்காவுடன் ஸான் கெர்ரா