Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்

அவர் இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

அவர் இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்

யோனாவுக்கு யோசிக்க நிறைய நேரம் இருந்தது. அவர் 800 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பயணிக்க வேண்டியிருந்தது; அதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமோ அதற்கும் கூடுதலாகவோ எடுக்கவிருந்தது. அவர் முதலாவதாக, குறுக்கு வழியில் போவதா அல்லது பாதுகாப்பான சுற்று வழியில் போவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது; அதன்பின், கணக்குவழக்கில்லாத பள்ளத்தாக்குகள் வழியாகவும் மலைப்பாதைகள் வழியாகவும் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது. மிகப் பெரிய சீரியா வனாந்தரத்தின் எல்லையோரத்தையும், மாபெரும் ஐப்பிராத்து நதியைப் போன்ற நதிகளையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. சீரியா, மெசபடோமியா, அசீரியா ஆகிய இடங்களிலிருந்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் இரவில் தங்க இடம் தேட வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் பயணிக்க ஆரம்பித்தார்; அவர் நினிவே நகரை நெருங்க நெருங்க, அந்நகரம் அவர் கண்முன் வந்து அவரை மேன்மேலும் பயமுறுத்தியது.

ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் யோனா நன்றாக அறிந்திருந்தார்; ஆம், தன்னுடைய பொறுப்பை உதறித்தள்ளிவிட்டுத் திரும்பிப் போக முடியாது என்பதை மட்டும் அவர் நன்றாக அறிந்திருந்தார். ஏனென்றால், முன்னொரு முறை அதைத்தான் செய்யப் பார்த்தார். அச்சமயத்தில், அசீரியர்களின் அந்த மாபெரும் நகருக்குப் போய் நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிக்கும்படி யெகோவா அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்; யோனாவோ உடனடியாக ஒரு கப்பலில் ஏறி எதிர்த் திசையில் போக ஆரம்பித்தார். அதனால் யெகோவா ஒரு பெரிய புயல்காற்று வீசும்படி செய்தார்; தன்னுடைய தவறினால் கப்பலில் இருந்த அனைவருடைய உயிருமே பறிபோகவிருந்ததை யோனா சீக்கிரத்தில் புரிந்துகொண்டார். தைரியசாலிகளான அந்தக் கப்பல்காரர்களைக் காப்பாற்றுவதற்காக, தன்னைத் தூக்கிக் கடலில் வீசும்படி யோனா அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் தயக்கத்தோடு அவர் கேட்டுக்கொண்டபடி செய்தார்கள்; இனி சாவிலிருந்து தப்பிக்க முடியாதென யோனா நினைத்தார். என்றாலும், யெகோவா ஒரு பெரிய மீனை அனுப்பி யோனாவை விழுங்கும்படியும், கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பின்பு அவரைப் பத்திரமாகக் கரையில் கக்கும்படியும் செய்தார். பிரமிப்பூட்டும் இந்த அனுபவத்தினால் யோனா அதிகக் கீழ்ப்படிதலுள்ளவரானார். aயோனா, அதிகாரங்கள் 1, 2.

நினிவேக்குப் போகும்படி யெகோவா இரண்டாம் முறையாக யோனாவுக்குக் கட்டளையிட்டபோது, அவர் கீழ்ப்படிதலோடு கிழக்கு நோக்கி அந்தத் தொலைதூரப் பயணத்தை மேற்கொண்டார். (யோனா 3:1-3) என்றாலும், யெகோவா கொடுத்த சிட்சையில் அவர் அடியோடு மாறியிருந்தாரா? உதாரணமாக, யெகோவா அவருக்கு இரக்கம் காட்டி, கடலில் மூழ்கிப்போகாதபடி காப்பாற்றியிருந்தார், கீழ்ப்படியாமல் போனதற்காக அவரைத் தண்டிக்காமல் விட்டுவிட்டிருந்தார், கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற இரண்டாம் முறை வாய்ப்பளித்திருந்தார். அவர் இந்த எல்லாவற்றையும் செய்ததற்குப் பிறகாவது யோனா மற்றவர்களுக்கு இரக்கம் காட்டக் கற்றுக்கொண்டாரா? இரக்கம் காட்டக் கற்றுக்கொள்வது அபூரண மனிதர்களுக்குப் பெரும்பாலும் கடினமாக இருக்கிறது. யோனாவின் போராட்டத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியுமெனப் பார்க்கலாம்.

நியாயத்தீர்ப்பு செய்தியும் எதிர்பாராத் திருப்பமும்

நினிவேயை யெகோவா பார்த்த விதமாக யோனா பார்க்கவில்லை. “நினிவே . . . [“கடவுளுடைய பார்வையில்,” NW] மகா பெரிய நகரமாயிருந்தது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. (யோனா 3:3) “மகா நகரமாகிய நினிவே” என்று யெகோவா குறிப்பிட்டதை யோனா புத்தகத்தில் மூன்று இடங்களில் நாம் பார்க்கிறோம். (யோனா 1:2; 3:2; 4:11) யெகோவா ஏன் அந்நகரை மகா நகரமாக, அதாவது முக்கிய நகரமாக, கருதினார்?

நினிவே பழமையான நகரமாக இருந்தது; பெருவெள்ளத்திற்குப் பின்பு நிம்ரோது முதலில் கட்டிய நகரங்களில் ஒன்றாக அது இருந்தது. பல நகரங்கள் கொண்ட பெருநகரமாக அது பரந்து விரிந்திருந்ததால் அதன் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நடந்து செல்ல மூன்று நாட்கள் எடுத்தன. (ஆதியாகமம் 10:11, 12; யோனா 3:3) நினிவேயில் பிரமாண்டமான கோவில்களும் மாபெரும் மதில்சுவர்களும் மற்ற கட்டிடங்களும் இருந்ததால் அது எழில் கொஞ்சும் நகரமாக விளங்கியது. ஆனாலும், இப்படிப்பட்ட எந்தக் காரணங்களாலும் யெகோவா தேவன் அதை முக்கிய நகரமாகக் கருதவில்லை. அங்கிருந்த மக்களே அவருக்கு முக்கியமானவர்களாக இருந்தார்கள். அக்கால நிலவரப்படி நினிவேயின் மக்கள்தொகை மிக அதிகமாக இருந்தது. அந்த மக்கள் கெட்ட காரியங்கள் செய்தபோதிலும் யெகோவா அவர்கள்மீது அக்கறை காட்டினார். ஏனென்றால், அவர் மனித உயிரை உயர்வாக மதிக்கிறார்; அதோடு, மனிதர்கள் ஒவ்வொருவராலும் மனந்திரும்பி நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ள முடியுமென்பதை அறிந்திருக்கிறார்.

யோனா ஒருவழியாக நினிவேயை அடைந்தார்; 1,20,000-க்கும் அதிகமான மக்கள் அங்கு வசித்ததைக் கண்டு அவர் இன்னும் அதிகமாக மிரண்டுபோயிருக்கலாம். b அவர் ஒரு நாள் முழுவதும் நடந்தார்; தன் செய்தியை அறிவிக்க ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான ஓர் இடத்தைத் தேடி ஜனநெரிசலுள்ள அந்தப் பெருநகரின் மையப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த மக்களிடம் அவர் எப்படிப் பேசியிருப்பார்? அசீரிய மொழியை அவர் கற்றிருப்பாரா? அல்லது, அம்மொழியில் பேசும் அற்புதத் திறனை யெகோவா அவருக்கு அளித்திருப்பாரா? நமக்குத் தெரியாது. ஒருவேளை, தன் தாய்மொழியான எபிரெய மொழியில் அறிவித்த செய்தியை நினிவே மக்களிடம் மொழிபெயர்த்துச் சொல்ல இன்னொருவரை அவர் பயன்படுத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும், அவர் எளிமையான செய்தியை, மக்கள் விரும்பாத செய்தியை அறிவித்தார்; ஆம், “இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்” என்று அறிவித்தார். (யோனா 3:4) அதைத் தைரியமாகவும் திரும்பத் திரும்பவும் அறிவித்தார். இவ்வாறு, குறிப்பிடத்தக்க தைரியத்தையும் விசுவாசத்தையும் வெளிக்காட்டினார்; இந்தக் குணங்களே, என்றுமில்லாத அளவுக்கு இன்று கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்படுகின்றன.

நினிவே மக்கள் யோனா சொன்னதைக் கவனமாய்க் கேட்டார்கள். அவர்கள் தன் செய்தியைக் கேட்டுத் தன்னை வெறுப்பார்கள் என்றும் தன்னைத் தாக்குவார்கள் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஆச்சரியமான ஒன்று நடந்தது. மக்கள் அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு நம்பினார்கள்! அவருடைய வார்த்தைகள் காட்டுத்தீ போல் பரவின. விரைவிலேயே, யோனா அறிவித்த நியாயத்தீர்ப்பு செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது. யோனா எழுதிய பதிவின்படி, “அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்,” அதாவது, சாக்குத்துணி உடுத்திக்கொண்டார்கள். (யோனா 3:5) ஏழை பணக்காரர், பலம்படைத்தோர் பலவீனர், சிறியோர் பெரியோர் என அனைவருமே மனந்திரும்பினார்கள். இந்தப் பரபரப்பான செய்தி சீக்கிரத்தில் ராஜாவின் காதுகளை எட்டியது.

ராஜாவுக்கும் கடவுள் பயம் வந்துவிட்டது. அவர் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த ஆடம்பரமான ராஜ உடையைக் கழற்றிப்போட்டு, தன் மக்களைப் போலவே சாக்குத்துணியை உடுத்திக்கொண்டு, ‘சாம்பலிலே உட்கார்ந்தார்.’ மக்கள் உடனடியாக மனந்திரும்பி உபவாசம் இருந்ததை அறிந்த ராஜா, தன்னுடைய ‘பிரதானிகளுடன்,’ அதாவது அவையினருடன், சேர்ந்து அந்த உபவாசத்தை அரச கட்டளையாக்கினார். எல்லாரும், சொல்லப்போனால் வீட்டு மிருகங்களும்கூட, சாக்குத்துணி உடுத்த வேண்டுமென அவர் கட்டளையிட்டார். c தன்னுடைய குடிமக்கள் பொல்லாத, கொடுமையான காரியங்கள் செய்திருந்ததை அவர் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டார். உண்மையான கடவுள் தாங்கள் மனந்திரும்பியதைக் கண்டு இரக்கம் காட்டுவார் என்ற நம்பிக்கையுடன், “நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் . . . தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார்” என்று சொன்னார்.—யோனா 3:6-9.

நினிவே மக்கள் அவ்வளவு சீக்கிரம் மனந்திரும்பியிருப்பதற்கு வாய்ப்பில்லையென சில விமர்சகர்கள் சொல்கிறார்கள். என்றாலும், அப்படிப்பட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்த பூர்வகால மக்களின் மூடநம்பிக்கைகளையும் திடீர்திடீரென மாறும் இயல்பையும் கருத்தில் கொள்ளும்போது, இந்த மாற்றம் சாத்தியமே என்று பைபிள் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நினிவே மக்கள் மனந்திரும்பியதாக இயேசு கிறிஸ்துவே பிற்பாடு குறிப்பிட்டார். (மத்தேயு 12:41) அது உண்மையென அவர் அறிந்திருந்தார்; ஏனெனில், அந்தச் சம்பவம் நடந்தபோது அவர் பரலோகத்திலிருந்து அதைக் கண்கூடாகப் பார்த்திருந்தார். (யோவான் 8:57, 58) ஆனால், நினிவே மக்கள் மனந்திரும்பியபோது யெகோவா எப்படி நடந்துகொண்டார்?

இரக்கமான கடவுள், கறாரான மனிதர்

யோனா பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.”—யோனா 3:10.

அப்படியென்றால், நினிவேக்கு தாம் அளித்த தீர்ப்பே தவறாகிவிட்டதாக யெகோவா நினைத்தாரென அர்த்தமா? இல்லை. “அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்” என்று யெகோவாவைப் பற்றி பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4) ஆகவே, நினிவே மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த நியாயமான கோபம் தணிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். அந்த மக்கள் மனம் மாறியதை அவர் பார்த்தார்; ஆகவே, தாம் நினைத்திருந்தபடி இனி அவர்களைத் தண்டிக்க வேண்டியதில்லையெனத் தீர்மானித்தார். அது, அவர் இரக்கம் காட்டுவதற்கான நேரமாக இருந்தது.

மதத் தலைவர்கள் அடிக்கடி விவரிக்கிறபடி யெகோவா கறாரான, ஈவிரக்கமற்ற, கொடூரமான கடவுள் அல்ல. மாறாக, அவர் நியாயமானவர், வளைந்துகொடுப்பவர், இரக்கமுள்ளவர். பொல்லாதவர்களைத் தண்டிக்க அவர் தீர்மானிக்கும்போது, பூமியிலுள்ள தம் ஊழியர்கள் மூலம் முதலில் எச்சரிப்பு விடுக்கிறார்; ஏனென்றால், நினிவே மக்களைப் போல் பொல்லாதவர்கள் மனந்திரும்பி தங்கள் போக்கை மாற்றிக்கொள்வதைக் காண அவர் ஆவலாக இருக்கிறார். (எசேக்கியேல் 33:11) யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியான எரேமியாவிடம் இவ்வாறு சொன்னார்: “பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்ன மாத்திரத்தில், நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.”—எரேமியா 18:7, 8.

ஆகவே, யோனா முன்னறிவித்த செய்தி பொய்யானதா? இல்லை; யெகோவா நினைத்தபடியே அது மக்களை எச்சரித்தது. நினிவே மக்களுடைய பொல்லாத வழிகளைக் குறித்து அச்செய்தி எச்சரித்தது; அதைக் கேட்டு அவர்கள் அவ்வழிகளை விட்டுவிட்டார்கள். அவர்கள் மறுபடியும் அவ்வழிகளில் நடக்க ஆரம்பித்திருந்தால் கடவுளுடைய தண்டனையைப் பெற்றிருப்பார்கள். அதுதான் பிற்பாடு நடந்தது.—செப்பனியா 2:13-15.

தான் எதிர்பார்த்த சமயத்தில் அழிவு வராததைக் குறித்து யோனா எப்படி உணர்ந்தார்? ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவர் கடுங்கோபங்கொண்டார்’ என்று நாம் வாசிக்கிறோம். (யோனா 4:1) சர்வவல்லமையுள்ள கடவுளையே தட்டிக்கேட்பதுபோல் அவர் ஜெபமும் செய்தார்! தன்னுடைய ஊரிலேயே தான் இருந்திருக்க வேண்டுமெனச் சொல்லாமல் சொன்னார். நினிவேயை யெகோவா அழிக்க மாட்டார் என்பது தனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியுமெனச் சொன்னார்; அதற்காகத்தான் முதலில் தர்ஷீசுக்கு ஓடிப்போனதாகவும்கூட நியாயப்படுத்தினார். பின்பு, வாழ்வதைவிட சாவதே மேல் என்று சொல்லி, தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கடவுளிடம் கேட்டார்.—யோனா 4:2, 3.

எது யோனாவின் மனதை அலைக்கழித்தது? அவருடைய மனதில் இருந்ததெல்லாம் நமக்குத் தெரியாது; ஆனால், நினிவே மக்கள் எல்லாரிடமும் நேருக்கு நேராக அழிவின் செய்தியை அவர் அறிவித்திருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர்களும் அவர் சொன்னதை நம்பியிருந்தார்கள். ஆனால் இப்போது, எந்த அழிவும் வரவில்லை. ஆகவே, அவர்கள் தன்னைக் கேலி கிண்டல் செய்வார்கள் என்றோ தன்னைப் பொய்த் தீர்க்கதரிசி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்றோ அவர் பயந்தாரா? எப்படியிருந்தாலும், மக்கள் மனந்திரும்பியதைக் குறித்தோ யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டியதைக் குறித்தோ அவர் சந்தோஷப்படவில்லை. மாறாக, அவர் ரொம்பவே மனக்கசப்படைந்து, சுயபச்சாதாபங்கொண்டு, மானம் மரியாதையையே இழந்துவிட்டதுபோல் உணர்ந்ததாகத் தெரிகிறது. இரக்கமுள்ள கடவுள் அந்தச் சமயத்திலும்கூட, துவண்டுபோயிருந்த யோனாவிடமிருந்த நல்ல குணங்களைப் பார்த்தார். அவமரியாதையாகப் பேசியதற்காக யோனாவைத் தண்டிப்பதற்குப் பதிலாக, “நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” என்ற சிந்தையைத் தூண்டும் கேள்வியைக் கனிவாகக் கேட்டார். (யோனா 4:4) யோனா அதற்குப் பதிலளித்தாரா? பைபிள் அதைப் பற்றிச் சொல்வதில்லை.

யோனாவுக்கு யெகோவா பாடம் புகட்டிய விதம்

வெறுப்படைந்த அந்தத் தீர்க்கதரிசி நினிவேயைவிட்டுப் புறப்பட்டார்; ஆனால், நேராகத் தன்னுடைய ஊருக்குப் போவதற்குப் பதிலாக, நினிவேயைப் பார்த்தபடி கிழக்கே அமைந்திருந்த மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தனக்கென்று ஒரு கூரையைப் போட்டுக்கொண்டு, நினிவேக்கு என்ன நடக்குமெனப் பார்ப்பதற்குக் காத்திருந்தார். ஒருவேளை, அந்த நகரம் அழியுமென்று அப்போதுகூட அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். மன்னிக்க விரும்பாத அவருக்கு யெகோவா எப்படி இரக்கத்தைக் கற்றுத்தந்தார்?

யெகோவா இரவோடு இரவாக ஒரு சுரைக்காய் கொடியை வளரச் செய்தார். யோனா கண்விழித்தபோது, பெரிய இலைகளுடன் தளதளவெனப் படர்ந்திருந்த கொடியைக் கண்டார்; தான் போட்ட கூரையைவிட இந்தக் கொடி அதிக நிழல் தந்ததைக் கவனித்தார். அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை. கடவுளுடைய ஆசீர்வாதமும் அங்கீகாரமும் தனக்கு இருந்ததால்தான் அந்தக் கொடி அற்புதமாக வளர்ந்திருந்ததென யோனா நினைத்திருக்கலாம்; ஆகவே, அந்தக் கொடியைக் குறித்து ‘யோனா மிகவும் சந்தோஷப்பட்டார்.’ என்றாலும், யோனாவை வெயிலிலிருந்தும் தம்முடைய கடுங்கோபத்திலிருந்தும் மட்டுமே காப்பாற்ற யெகோவா விரும்பவில்லை. அவர் யோனாவின் மனதைத் தொட விரும்பினார். ஆகவே, ஒரு புழு அந்தக் கொடியை அரித்துப்போடும்படியும் அதனால் அது பட்டுப்போகும்படியும் செய்தார். பின்பு, “உஷ்ணமான கீழ்க்காற்றை” வீசச் செய்தார்; அந்தச் சூட்டினால் யோனா ‘சோர்ந்துபோக’ ஆரம்பித்தார். மறுபடியும் அவர் நொந்துபோய், தன் உயிரை எடுத்துவிடும்படி கடவுளிடம் கேட்டார்.—யோனா 4:6-8.

இம்முறை சுரைக்காய் கொடி பட்டுப்போனதைக் குறித்து யோனா எரிச்சலாயிருந்தார்; அப்படி இருப்பது நல்லதோ என்று யெகோவா மறுபடியும் அவரிடம் கேட்டார். யோனா மனந்திருந்துவதற்குப் பதிலாக தன்னையே நியாயப்படுத்திக்கொண்டு, “நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான்” என்றார். யெகோவா அவருக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரமாக அது இருந்தது.—யோனா 4:9.

யோனாவிடம் கடவுள் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்; ஒரே இரவில் வளர்ந்த ஒரு சாதாரண கொடி பட்டுப்போனதற்காக, அதுவும் அவர் நட்டு வளர்க்காத ஒரு கொடி பட்டுப்போனதற்காக, அவர் வருந்தியதைச் சுட்டிக்காட்டிவிட்டு, கடைசியில் இப்படிச் சொன்னார்: “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ.”—யோனா 4:10, 11. d

ஓர் உதாரணத்தினால் யெகோவா புகட்டிய பாடத்திலுள்ள முக்கியக் குறிப்பை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? யோனா அந்தக் கொடிக்காக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் யெகோவா, அந்த நினிவே மக்களுக்கு உயிர்கொடுத்து பூமியிலுள்ள மற்ற ஜீவராசிகளைக் கவனிப்பதுபோல் கவனித்துக்கொண்டார். 1,20,000 மனிதர்களையும் அவர்களுடைய எல்லா கால்நடைகளையும்விட ஒரேவொரு கொடிக்கு யோனா எப்படி அதிக மதிப்பு கொடுக்க முடிந்தது? அவர் தன்னைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்ததால்தான், அல்லவா? அந்தக் கொடி தனக்குப் பயனுள்ளதாய் இருந்ததால்தானே அது பட்டுப்போனபோது வருத்தப்பட்டார்? அதேபோல், நினிவே அழிக்கப்படாதபோது அவர் கோபப்பட்டதற்குக் காரணம் சுயகௌரவம்தானே? அதாவது, தனக்கு அவமானம் வரக் கூடாது, தான் சொன்னது பொய்யாகக்கூடாது என்ற சுயநல ஆசைதானே?

இது எப்பேர்ப்பட்ட அர்த்தம் பொதிந்த பாடம்! ஆனால், யோனா இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டாரா என்பதுதான் கேள்வி. அவருடைய பெயர் தாங்கிய புத்தகம், யெகோவா கேட்ட கேள்வியோடு நிறைவடைகிறது; அது இன்றுவரை பதிலளிக்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது. யோனா பதில் சொல்லவே இல்லையென சில விமர்சகர்கள் குறைகூறலாம். ஆனால் உண்மையில், அவர் பதில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகமே அவருடைய பதிலாக இருக்கிறது. யோனாதான் அவருடைய பெயரிலுள்ள புத்தகத்தை எழுதினார் என அத்தாட்சி காட்டுகிறது. இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: யோனா தன்னுடைய தாய்நாட்டிற்குப் பத்திரமாகத் திரும்பிப்போய் இந்தப் பதிவை எழுதுகிறார். அவருக்கு வயது கூடியிருக்கிறது, ஞானம் பெருகியிருக்கிறது, பணிவு அதிகமாகியிருக்கிறது. தான் தவறுகள் செய்ததையும் கீழ்ப்படியாமல் போனதையும் இரக்கம் காட்டப் பிடிவாதமாக மறுத்ததையும் பற்றியெல்லாம் எழுத எழுத வருத்தத்தோடு தலையசைக்கிறார். நிச்சயமாகவே, யெகோவா தந்த ஞானமான அறிவுரையிலிருந்து யோனா பாடம் கற்றுக்கொண்டார். அவர் இரக்கம் காட்டக் கற்றுக்கொண்டார். நாமும் அதைக் கற்றுக்கொள்வோமா? (w09 4/1)

[அடிக்குறிப்புகள்]

a “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றார்” என்ற கட்டுரையை ஏப்ரல் 1, 2009 தேதியிட்ட காவற்கோபுரம் இதழில் பாருங்கள்.

b யோனாவின் நாட்களில், இஸ்ரவேலின் தலைநகரமான சமாரியாவில் சுமார் 20,000 முதல் 30,000 பேர் வசித்திருக்கலாம்; இது, நினிவேயின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பாகத்திற்கும் குறைவு. நினிவே கொடிகட்டிப் பறந்த சமயத்தில் அது உலகிலேயே மிகப் பெரிய நகரமாக இருந்திருக்கலாம்.

c இந்த விவரம் சற்று விசித்திரமாகத் தெரியலாம், ஆனால் பூர்வ காலங்களில் இப்படி நடந்ததுண்டு. பண்டையகால பெர்சியர்கள் தங்கள் படைத்தளபதியின் மரணத்திற்காகத் துக்கம் அனுசரித்தபோது தங்கள் கால்நடைகளையும் சடங்குகளில் சேர்த்துக்கொண்டதாகக் கிரேக்க சரித்திராசிரியரான ஹிராடட்டஸ் குறிப்பிட்டார்.

d அந்த மக்கள் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாக இருந்தார்களெனக் கடவுள் குறிப்பிட்டபோது, ஒன்றும் அறியாத குழந்தைகளைப்போல் தம்முடைய நெறிமுறைகளை அவர்கள் அறியாதிருந்தார்கள் என்பதையே அர்த்தப்படுத்தினார்.

[பக்கம் 16-ன் சிறுகுறிப்பு]

நினிவே மக்களைப்போல் பொல்லாதவர்கள் மனந்திரும்பி தங்கள் போக்கை மாற்றிக்கொள்வதைக் காண கடவுள் ஆவலாக இருக்கிறார்

[பக்கம் 17-ன் சிறுகுறிப்பு]

கடவுள் ஒரு சுரைக்காய் கொடியைப் பயன்படுத்தி இரக்கத்தைப் பற்றி யோனாவுக்குப் பாடம் புகட்டினார்