Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் நம் வரம்புகளைப் புரிந்துகொள்கிறார்

கடவுள் நம் வரம்புகளைப் புரிந்துகொள்கிறார்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

கடவுள் நம் வரம்புகளைப் புரிந்துகொள்கிறார்

லேவியராகமம் 5:2-11

கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு ஒரு பெண் முயற்சி செய்தார்; “நான் எவ்வளவோ சிரமப்பட்டேன், ஆனாலும் அவரைப் பிரியப்படுத்திவிட்ட திருப்தி எனக்குக் கிடைக்கவே இல்லை” என்று அவர் சொல்கிறார். யெகோவா தேவன், தம்மைப் பிரியப்படுத்த தம்முடைய வணக்கத்தார் எடுக்கிற கடின முயற்சியில் பிரியப்படுகிறாரா? அவர்களுடைய வரம்புகளையும் சூழ்நிலைகளையும் கவனிக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, சில பலிகளைப் பற்றிக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பதைச் சிந்திப்பது உதவியாக இருக்கும்; ஆகவே, லேவியராகமம் 5:2-11 வசனங்களை இப்போது கவனிக்கலாம்.

திருச்சட்டத்தில், பாவங்களை நிவிர்த்தி செய்ய பல்வேறு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தும்படி கடவுள் கட்டளையிட்டிருந்தார். ஒரு நபர் எந்தெந்தச் சூழ்நிலைகளில் அறியாமலோ சிந்திக்காமலோ பாவம் செய்துவிடக்கூடும் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் காட்டுகின்றன. (வசனங்கள் 2-4) பாவம் செய்துவிட்டதை அவர் உணரும்போது அதை அறிக்கையிட்டு, குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டியிருந்தது; அதாவது, “ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியை” பலிசெலுத்த வேண்டியிருந்தது. (வசனங்கள் 5, 6) ஆனால், பலிசெலுத்த அவரிடம் ஓர் ஆடோ வெள்ளாடோ இல்லாதளவுக்கு அவர் ஏழையாக இருந்தால்? அவர் அந்த மிருகத்தைக் கடன்வாங்க வேண்டுமெனத் திருச்சட்டம் சொன்னதா? அல்லது, தானே உழைத்துச் சம்பாதித்து அதை வாங்கும்வரை பாவநிவிர்த்தி பலி செலுத்துவதை அவர் தள்ளிப்போட வேண்டியிருந்ததா?

இல்லை; “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்” என்று திருச்சட்டம் குறிப்பிட்டது. (வசனம் 7) இது, யெகோவாவின் கனிவையும் கரிசனையையும் படம்பிடித்துக் காட்டியது. இந்த வசனத்தில், “அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, “அவனுக்கு வசதியில்லாதிருந்தால்” என்றும் குறிப்பிடலாம். ஓர் இஸ்ரவேலர் ஆட்டைப் பலிசெலுத்த முடியாதளவுக்கு மிகுந்த வறுமையில் இருந்தால், அவருடைய வசதிக்கேற்ப இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ பலிசெலுத்த அனுமதிக்கப்பட்டார்; யெகோவா அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.

ஒருவேளை, அந்த இரண்டு பறவைகளைக்கூட பலிசெலுத்த அவருக்கு வசதியில்லாவிட்டால்? ‘பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான [எட்டு அல்லது ஒன்பது கிண்ணங்கள்] மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவரும்படி’ திருச்சட்டம் குறிப்பிட்டது. (வசனம் 11) பரம ஏழைகளுக்கு யெகோவா விதிவிலக்கு அளித்து, இரத்தமில்லாத பாவநிவாரண பலியைச் செலுத்த அனுமதித்தார். a ஆகவே, இஸ்ரவேலில், பாவநிவிர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பை அல்லது கடவுளோடு சமாதானமாகும் பாக்கியத்தைப் பெறுவதற்கு ஏழ்மை எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை.

குற்றநிவாரண பலிகளைக் குறித்த சட்டங்களிலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? அவர் தம்முடைய வணக்கத்தாரின் வரம்புகளைப் புரிந்துகொள்கிற பரிவும் கரிசனையுமுள்ள கடவுள் என்று தெரிந்துகொள்கிறோம். (சங்கீதம் 103:14) வயோதிபம், வியாதி, குடும்பப் பொறுப்பு, மற்ற பொறுப்பு எனக் கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் இருந்தாலும் அவரிடம் நெருங்கி வரவும் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்யும்போது யெகோவா தேவன் சந்தோஷப்படுகிறார் என்பதை அறிவது நமக்கு ஆறுதலளிக்கிறது. (w09 6/1)

[அடிக்குறிப்பு]

a பலிசெலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தமே பாவநிவிர்த்தி செய்தது; அந்த இரத்தத்தைக் கடவுள் பரிசுத்தமானதாகக் கருதினார். (லேவியராகமம் 17:11) அப்படியென்றால், ஏழை எளியோர் காணிக்கையாகச் செலுத்திய மாவு மதிப்பற்றதாக இருந்ததா? இல்லை. அவர்கள் மனத்தாழ்மையோடும் மனப்பூர்வமாகவும் அந்தக் காணிக்கைகள் செலுத்தியதை யெகோவா உயர்வாக மதித்தார். அதோடு, வருடாந்தர பாவநிவாரண நாளில் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தம், ஏழைகள் உட்பட அந்தத் தேசத்தார் அனைவருடைய பாவங்களையுமே போக்கியது.—லேவியராகமம் 16:29, 30.