Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பன்

தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பன்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பன்

யாத்திராகமம் 22:22-24

‘தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற [அதாவது, தகப்பனில்லாத] பிள்ளைகளுக்குத் தகப்பன்.’ (சங்கீதம் 68:5) யெகோவா தேவனுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், அவரைப் பற்றிய மனதைத் தொடும் ஒரு விஷயத்தை நமக்குக் கற்பிக்கின்றன; அதாவது, ஆதரவற்றவர்களின் நலனில் அவர் அக்கறையுள்ளவர் என்பதை நமக்குக் கற்பிக்கின்றன. தாயையோ தகப்பனையோ மரணத்தில் பறிகொடுத்த பிள்ளைகள்மீது அவருக்கு இருக்கும் கரிசனையை, இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த சட்டத்திலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். பைபிளில் யாத்திராகமம் 22:22-24 வசனங்களில்தான் ‘தகப்பனில்லாத பிள்ளை’ என்ற வார்த்தைகள் முதன்முதலாகக் காணப்படுகின்றன; இந்த வசனங்களை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.

‘தகப்பனில்லாத பிள்ளையை ஒடுக்காமல் இருப்பீர்களாக’ என்று கடவுள் எச்சரித்தார். (வசனம் 22) இது, மனிதாபிமானத்தைக் காட்டும்படி கடவுள் விடுத்த வேண்டுகோள் அல்ல, ஆனால் அவருடைய கட்டளையாக இருந்தது. பாதுகாத்துப் பராமரிக்க ஒரு தகப்பன் இல்லாமல் தவித்த பிள்ளை மற்றவர்களால் தவறாக நடத்தப்படும் ஆபத்தில் இருந்தது. அப்படிப்பட்ட பிள்ளையை எவரும் எவ்விதத்திலும் “ஒடுக்காமல்” இருக்க வேண்டியிருந்தது. “ஒடுக்காமல்” என்ற வார்த்தை மற்ற பைபிள்களில் “துஷ்பிரயோகம் செய்யாமல்,” “மோசமாக நடத்தாமல்,” “ஆதாயப்படுத்திக்கொள்ளாமல்” என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தகப்பனில்லாத பிள்ளைக்குக் கெடுதல் செய்வது கடவுளுடைய கண்ணோட்டத்தில் தவறாக இருந்தது. அப்படியென்றால், அது எவ்வளவு பெரிய தவறாக இருந்தது?

‘அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்பேன்’ என்று கடவுள் குறிப்பிட்டார். (வசனம் 23) மூல பைபிளில், 22-ஆம் வசனம் “நீங்கள்” என்ற பன்மை வடிவத்தைப் பயன்படுத்துகிறது; 23-ஆம் வசனமோ “நீ” என்ற ஒருமை வடிவத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே, இஸ்ரவேலர் தனிப்பட்டவர்களாகவும்சரி தேசமாகவும்சரி, கடவுளுடைய இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. யெகோவா எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்; தகப்பனில்லாத பிள்ளைகளின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்துக்கொண்டிருந்தார்.—சங்கீதம் 10:14; நீதிமொழிகள் 23:10, 11.

தகப்பனில்லாத பிள்ளைக்கு யாராவது கெடுதல் செய்து, அந்தப் பிள்ளை கடவுளிடம் கூக்குரலிட நேர்ந்தால் என்ன நடக்கும் என்று கடவுள் சொன்னார்? “[நான்] கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலை செய்வேன்” என்று அவர் சொன்னார். (வசனம் 24) “என் மூக்கு சூடாகும்” என்ற மரபுத்தொடரே ‘நான் கோபம்மூண்டவராகி’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; அந்த மரபுத்தொடர் கடுங்கோபத்தைக் குறித்ததென ஒரு புத்தகம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை இஸ்ரவேலிலிருந்த நீதிபதிகளிடம் யெகோவா விட்டுவிடவில்லை என்பதைக் கவனியுங்கள். ஆதரவற்ற பிள்ளையைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட எவரையும் யெகோவாவே நியாயந்தீர்த்தார்.—உபாகமம் 10:17, 18.

யெகோவா மாறாதவர். (மல்கியா 3:6) இன்றும் தாய் தகப்பனில்லாத அநாதைக் குழந்தைகளைக் கண்டு அவர் மனம் உருகுகிறார். (யாக்கோபு 1:27) ஆம், அப்பாவிப் பிள்ளைகள் பலிகடாக்களாவதைக் காணும்போது தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருப்பவர் நியாயமான கோபத்தில் கொதித்தெழுகிறார். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தீங்கிழைக்கிறவர்கள் ‘யெகோவாவுடைய உக்கிரகோபத்திலிருந்து’ தப்ப முடியாது. (செப்பனியா 2:1) ‘உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்கும்’ என்பதை அந்தத் துஷ்டர்கள் கற்றுக்கொள்வார்கள்.—எபிரெயர் 10:31. (w09 4/1)