Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2 கடவுளைத் திருத்தமாக அறிந்துகொள்ளுங்கள்

2 கடவுளைத் திருத்தமாக அறிந்துகொள்ளுங்கள்

2 கடவுளைத் திருத்தமாக அறிந்துகொள்ளுங்கள்

“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களை . . . அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.”—யோவான் 17:3.

சவால் என்ன? கடவுள் என்று ஒருவர் இல்லையெனச் சிலர் சொல்கிறார்கள். மற்றவர்கள், கடவுள் ஒரு நபரல்ல, ஆனால் எங்கும் வியாபித்திருக்கிற வெறும் ஒரு சக்திதான் எனச் சொல்கிறார்கள். அவர் ஒரு நிஜமான நபரென நம்புகிறவர்களோ, அவரையும் அவருடைய குணங்களையும் பற்றி முரண்பாடாகக் கற்பிக்கிறார்கள்.

சவாலைச் சமாளிப்பது எப்படி? கடவுளை அறிந்துகொள்வதற்கான ஒரு வழி, அவர் படைத்திருப்பவற்றைக் கவனிப்பதாகும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “காணமுடியாத அவருடைய [கடவுளுடைய] பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன. (ரோமர் 1:20) சுற்றியுள்ள படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம், படைப்பாளருடைய ஞானத்தையும் வல்லமையையும் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளலாம்.—சங்கீதம் 104:24; ஏசாயா 40:26.

என்றாலும், கடவுளுடைய ஆளுமையைத் திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருடைய புத்தகமான பைபிளை ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். ஆகவே, மற்றவர்கள் சொல்வதை முன்பின் யோசிக்காமல் அப்படியே நம்பிவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, பைபிள் தரும் இந்த அறிவுரையைப் பின்பற்றுங்கள்: “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிடுங்கள்; உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்; அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். (ரோமர் 12:2) உதாரணத்திற்கு, கடவுளைப் பற்றி பைபிள் சொல்கிற பின்வரும் உண்மைகளைக் கவனியுங்கள்.

கடவுளுக்கு ஒரு பெயர் உண்டு. கடவுளுடைய பெயர் மூல பைபிளில் ஆயிரக்கணக்கான முறை இடம்பெற்றுள்ளது. பல மொழிபெயர்ப்புகள் அந்தப் பெயரைச் சங்கீதம் 83:17-ல் குறிப்பிடுகின்றன; அது இவ்வாறு வாசிக்கிறது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணருவார்களாக.’

யெகோவா தேவனுக்கு உணர்ச்சிகள் உண்டு; மனிதருடைய செயல்கள் அவருடைய உணர்ச்சிகளைப் பாதிக்கின்றன. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை யெகோவா விடுதலை செய்த பின்பு, அவருடைய ஞானமான அறிவுரைகளை அவர்கள் அவ்வப்போது புறக்கணித்தார்கள். அவர்களுடைய கலகத்தனமான போக்கு அவருடைய மனதை ‘விசனப்படுத்தியது.’ அவர்களுடைய செயல்கள் ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தின,’ அதாவது வேதனைப்படுத்தின.—சங்கீதம் 78:40, 41.

யெகோவா நம் ஒவ்வொருவர்மீதும் கரிசனை காட்டுகிறார். இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆகவே, பயப்படாதீர்கள்: நீங்கள் அநேக சிட்டுக்குருவிகளைவிட மதிப்புமிக்கவர்கள்.மத்தேயு 10:29-31.

இனம், கலாச்சாரம் போன்ற பாகுபாடுகளைக் கடவுள் பார்ப்பதில்லை. அத்தேனே நகரிலிருந்த கிரேக்கர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: கடவுள் “ஒரே மனிதனிலிருந்து எல்லாத் தேசத்தாரையும் உண்டுபண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்திருக்கிறார்.” அதோடு, ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்றும் குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 17:26, 27) அப்போஸ்தலன் பேதுரு சொன்னதையும் கவனியுங்கள்: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.அப்போஸ்தலர் 10:34, 35.

வெகுமதி என்ன? சிலருக்கு “கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது . . . ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் அல்ல.” (ரோமர் 10:2) கடவுளைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறதெனத் தெரிந்துகொண்டால், பொய்யை நம்பி நீங்கள் ஏமாந்துபோகாமல் இருக்க முடியும்; அதோடு, ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியும்.யாக்கோபு 4:8. (w09 5/1)

கூடுதலான தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?” என்ற முதல் அதிகாரத்தைப் பாருங்கள். a

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 6-ன் படம்]

கடவுளை அறிந்துகொள்வதற்கான ஒரு வழி, அவர் படைத்திருப்பவற்றைக் கவனிப்பதாகும்