வறுமை—கடவுளின் வெறுப்புக்கு அறிகுறியா?
வறுமை—கடவுளின் வெறுப்புக்கு அறிகுறியா?
‘எளியவன் உனக்குள் இல்லாதிருக்க வேண்டும்’ என்று பூர்வகால இஸ்ரவேலரிடம் கடவுள் சொன்னார். அதற்குக் காரணம் என்னவெனில், அவர்களுக்குக் கொடுத்த திருச்சட்டத்தில், ஏழை எளியவர்களைக் கவனிப்பது பற்றிய சட்டங்களும் கடன்களிலிருந்து அவர்களை விடுவிப்பது பற்றிய சட்டங்களும்கூட இருந்தன. (உபாகமம் 15:1-4, 7-10) இஸ்ரவேலரை யெகோவா ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருந்ததால் அவர்கள் மத்தியில் ஏழை எளியோர் இருந்திருக்கக் கூடாது. என்றாலும், அவர்கள் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்; அவர்களோ அதற்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்.
இருந்தாலும், வசதி வாய்ப்பற்றவர்கள் கடவுளால் ஒதுக்கப்பட்டவர்கள் என்றும் வசதி வாய்ப்புள்ளவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் அர்த்தமல்ல. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பலர் ஏழைகளாக இருந்தார்கள். ஆமோஸ் தீர்க்கதரிசி, ஏழை மேய்ப்பராகவும், அறுவடை காலத்தில் அத்திப் பழங்களைக் குத்திவிடுகிற கூலியாளாகவும் இருந்தார். (ஆமோஸ் 1:1; 7:14, NW) எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் வறட்சி நிலவியதால் வறுமையில் வாடிய ஒரு விதவையை அவர் சாப்பாட்டுக்காக அண்டியிருக்க வேண்டியிருந்தது. அவளிடமிருந்த அற்ப சொற்ப மாவும் எண்ணெய்யும் அந்தப் பஞ்சக் காலத்தில் அவர்களுக்கு அற்புதகரமாய் கைகொடுத்தது. எலியாவும் சரி, அந்த விதவையும் சரி பணக்காரர்களாகவில்லை; அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யெகோவா பார்த்துக்கொண்டார்.—1 இராஜாக்கள் 17:8-16.
எதிர்பாராத நிகழ்வுகள்கூட மக்களை வறுமையில் தள்ளலாம். விபத்து அல்லது வியாதி காரணமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வேலை செய்ய முடியாமல் போகலாம். மரணம் சிலரை அனாதைகளாக்கி விடலாம், சிலரை விதவைகளாக்கி விடலாம். இப்படிப்பட்ட விபரீதங்கள்கூட கடவுள் மக்களை ஒதுக்கிவிட்டதற்கு அறிகுறி அல்ல. ஏழ்மையில் தவிப்போரை யெகோவா அன்போடு பராமரிக்கிறார் என்பதற்கு நகோமி-ரூத் பற்றிய பதிவு நெஞ்சைத் தொடும் ஓர் எடுத்துக்காட்டு. நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்ததால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். என்றாலும், யெகோவா தேவன் அவர்களை ஆசீர்வதித்ததோடு அவர்களுடைய தேவைகளையும் கவனித்துக்கொண்டார்.—ரூத் 1:1-6; 2:2-12; 4:13-17.
வறுமை கடவுளின் வெறுப்புக்கு அறிகுறி அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆகவே, யெகோவா தேவனுக்கு உண்மையோடு இருக்கிறவர்கள் தாவீது ராஜா சொன்ன வார்த்தைகளை உறுதியாக நம்பலாம். அவர் சொன்னதாவது: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.”—சங்கீதம் 37:25. (w09 09/01)
[பக்கம் 8-ன் படம்]
நகோமியும் ரூத்தும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டாலும் கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார், அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டார்