இயேசு கிறிஸ்து உங்கள்மீது அவரது தாக்கம்
இயேசு கிறிஸ்து உங்கள்மீது அவரது தாக்கம்
‘நானோ, அவர்கள் வாழ்வு பெறுவதற்காக, அதுவும் நீடிய வாழ்வு பெறுவதற்காக வந்திருக்கிறேன்.’—யோவான் 10:10.
இயேசு கிறிஸ்து முக்கியமாக, பெற்றுக்கொள்வதற்காக அல்ல, கொடுப்பதற்காகவே வந்தார். அவர் தாம் செய்த ஊழியத்தின் மூலம், விலைமதிப்புள்ள ஒரு பரிசை மனிதகுலத்திற்கு அளித்தார்; அதுதான், கடவுளையும் அவருடைய சித்தத்தையும் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும் செய்தி. அந்தச் செய்தியைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்கள் இப்போதே சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்; அதற்கு, லட்சக்கணக்கான உண்மைக் கிறிஸ்தவர்கள் சான்று அளிக்கிறார்கள். a ஆனால், எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பரிசு நமக்காக இயேசு கொடுத்த பரிபூரண உயிராகும்; அதுவே அவர் அறிவித்த செய்தியின் அடிப்படை அம்சமாகும். நம்முடைய நித்திய நலன், அவருடைய செய்தியின் இந்த அடிப்படை அம்சத்திற்கு நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம் என்பதைச் சார்ந்திருக்கிறது.
கடவுளும் கிறிஸ்துவும் கொடுத்தது இயேசு, எதிரிகளால் தாம் துடிதுடித்து இறக்கப் போவதை முன்னரே அறிந்திருந்தார். (மத்தேயு 20:17-19) என்றாலும், யோவான் 3:16-ல் காணப்படுகிற இந்த நன்கு அறியப்பட்ட வார்த்தைகளை அவர் சொன்னார்: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.” “அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்கு” தாம் வந்ததாகவும் அவர் சொன்னார். (மத்தேயு 20:28) அவர் ஏன் தம்முடைய உயிர் எடுக்கப்படும் என்று சொல்லாமல் கொடுக்கப்படும் என்று சொன்னார்?
கடவுள் ஈடிணையற்ற அன்பால் தூண்டப்பட்டு, மனிதரைப் பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளான அபூரணத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்காக ஏற்பாடு செய்தார். தமது ஒரே மகன் தியாக மரணம் அடைவதற்காக அவரைப் பூமிக்கு அனுப்புவதன் மூலம் கடவுள் அதைச் செய்தார். இயேசு அதற்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்து, தம்முடைய பரிபூரண மனித உயிரை நமக்காகக் கொடுத்தார். மீட்புவிலை என்ற இந்த ஏற்பாடு, மனிதகுலத்திற்குக் கடவுள் கொடுத்துள்ள மாபெரும் பரிசாகும். b இந்தப் பரிசே முடிவில்லா வாழ்வுக்கு நம்மை வழிநடத்தும்.
நீங்கள் செய்ய வேண்டியது அந்த மீட்புவிலை உங்களுக்கும் ஒரு பரிசாக இருக்கிறதா? அது உங்களைப் பொறுத்ததே. உதாரணத்திற்கு, ஒருவர் உங்களிடம் ஒரு பரிசைக் கொடுக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் கைநீட்டிப் பெற்றுக்கொண்டால்தான் அது உங்களுடையதாகும். அவ்வாறே, யெகோவாவும் மீட்புபலி எனும் பரிசை உங்களுக்குக் கொடுக்கிறார்; நீங்கள் அதை இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டால்தான் அது உங்களுடையதாகும். எப்படி?
இயேசு தம்மிடத்தில் ‘விசுவாசம் வைப்பவர்களே’ முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள் என சொன்னார். அவ்வாறு விசுவாசம் வைப்பது உங்களுடைய வாழ்க்கை முறையையும் உட்படுத்துகிறது. (யாக்கோபு 2:26) இயேசுவிடத்தில் விசுவாசம் வைப்பதென்பது, அவர் சொன்னவற்றிற்கும் செய்தவற்றிற்கும் இணங்க உங்கள் வாழ்க்கையை மாற்றுவதைக் குறிக்கிறது. இதற்காக, இயேசுவையும் அவருடைய தகப்பனையும் பற்றி நீங்கள் நன்கு அறிய வேண்டும். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 17:3.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு செய்தி உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இந்தச் செய்தியைப் பற்றியும், இதிலிருந்து நீங்களும் உங்களுடைய அன்புக்குரியவர்களும் இப்போது மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் எப்படி நன்மை அடையலாம் என்பதைப் பற்றியும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஆவலாய் இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து அறிவித்த செய்தி உங்களுடைய வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றலாம். பின்வரும் கட்டுரைகள் அவரைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். (w10-E 04/01)
[அடிக்குறிப்புகள்]
a கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்கிற எல்லாருமே கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுபவர் அல்ல. கடவுளையும் அவருடைய சித்தத்தையும் குறித்து இயேசு கற்பித்த சத்தியங்களுக்கு இசைவாக வாழ்கிறவர்களே அவரை உண்மையாய்ப் பின்பற்றுபவர்கள்.—மத்தேயு 7:21-23.
b மீட்புவிலையைப் பற்றி பைபிள் சொல்வதை விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில், “மீட்கும்பொருள்—கடவுள் தந்த மாபெரும் பரிசு” என்ற தலைப்பிலுள்ள 5-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.