உலகை மாற்றிய மாமனிதர்
உலகை மாற்றிய மாமனிதர்
இந்த மண்ணில் பிறந்து மறைந்தவர்கள் எத்தனை எத்தனையோ பேர். அதிலும் பெரும்பாலோர் கால வரலாற்றில் எவ்வித முத்திரையும் பதிக்காமல் போயிருக்கிறார்கள். ஆனால், சிலர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள்; சொல்லப்போனால், உங்கள் அன்றாட வாழ்க்கையிலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.
நீங்கள் காலையில் எழுந்து, வேலைக்குக் கிளம்புவதற்காகத் தயாராகிறீர்கள். ‘லைட்டுகளை’ போடுகிறீர்கள். பஸ்ஸில் வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தையோ பத்திரிகையையோ எடுத்துக்கொள்கிறீர்கள். சாப்பிட வேண்டிய ஆன்டிபையாட்டிக் மருந்தை ஞாபகமாக எடுத்து வைக்கிறீர்கள். உங்களுடைய நாள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது; அதற்குள்ளாக, புகழ்பெற்ற சில மனிதர்களின் சாதனைகளால் நீங்கள் ஏற்கெனவே பயனடைந்துவிட்டீர்கள்.
மைக்கேல் ஃபாரடே ஆங்கிலேயரான இவர் 1791-ல் பிறந்தவர்; இவரே மின்சார மோட்டாரையும் மின்சாரம் உண்டாக்கும் டைனமோ என்ற பொறியையும் கண்டுபிடித்த இயற்பியலாளர். இவருடைய சாதனைகளால்தான் மின்சாரத்தை மனிதர் அதிகமாகப் பயன்படுத்த முடிகிறது.
ஸை லூன் சுமார் 105-ஆம் ஆண்டில் காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்த பெருமை, சீனாவின் அரசவை அதிகாரியான ஸை லூனைச் சேரும்; இவருடைய கண்டுபிடிப்பு பெருமளவு காகிதம் தயாரிக்க வழிசெய்தது.
யோஹனஸ் கூட்டன்பர்க் ஜெர்மானியரான இவர் 1450 வாக்கில், எழுத்துக்களை அச்சுக்கோர்க்கும் முறையைப் பயன்படுத்தி அச்சிடும் இயந்திரத்தை முதன்முதலாக உருவாக்கினார். அதிகச் செலவின்றி அச்சிட இந்த இயந்திரம் உதவியாக இருந்தது; அதனால், எங்குமுள்ள மக்கள் பலதரப்பட்ட தகவல்களைப் படித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.
அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் ஸ்காட்லாந்து ஆய்வாளரான இவர் 1928-ல் பென்சிலின் எனப்படும் ஆன்டிபையாட்டிக் மருந்துபொருளைக் கண்டுபிடித்தார். இன்று பாக்டீரியா தொற்றுகளைக் குணப்படுத்துவதற்காக ஆன்டிபையாட்டிக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மனிதர் சிலர் படைத்த சாதனைகள், உடல் ஆரோக்கியத்தையோ வேறு நன்மைகளையோ பெற கோடிக்கணக்கானோருக்கு உதவியிருக்கின்றன.
என்றாலும், இந்தச் சாதனையாளர்கள் எல்லாரையும் முறியடித்தார் ஒருவர். அவர் விஞ்ஞானத் துறையிலோ மருத்துவத் துறையிலோ சாதனை படைத்தவர் அல்ல. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த அவர், நம்பிக்கையும் ஆறுதலும் தருகிற வலிமையான ஒரு செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். அந்தச் செய்தி பூமியெங்குமுள்ள மக்களின் வாழ்க்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அளவிட்டால், அவர் உலகையே மாற்றியவர் என்பதை அநேகர் ஒப்புக்கொள்வார்கள்.
அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் அறிவித்த செய்தி என்ன? அந்தச் செய்தி உங்களுடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்? (w10-E 04/01)