Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய பிரச்சினை உலகளாவிய தீர்வு

உலகளாவிய பிரச்சினை உலகளாவிய தீர்வு

உலகளாவிய பிரச்சினை உலகளாவிய தீர்வு

உலகில் துன்பம் இல்லாத இடமே இல்லை; துன்பப்படுவோருக்கு அநேகர் பரிவோடு உதவுகிறார்கள். உதாரணமாக, வியாதிப்பட்டவர்களுக்கு அல்லது காயப்பட்டவர்களுக்கு உதவ மருத்துவமனைகளில் டாக்டர்களும் நர்ஸுகளும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், வழக்கறிஞர்கள், முதலுதவி குழுவினர் ஆகியோர் மக்களுக்குத் துன்பம் நேரிடாமல் காக்கிறார்கள் அல்லது மக்களுடைய துன்பத்தைத் தணிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வது, தனிப்பட்ட விதத்தில் மக்களுக்குப் பெருமளவு உதவுகிறது; ஆனால், உலகெங்கும் காணப்படும் துன்பத்தைத் தீர்ப்பதற்கு எந்தத் தனி நபராலோ அமைப்பாலோ முடியாது. மறுபட்சத்தில், கடவுளால் உலகளாவிய தீர்வைக் கொண்டு வர முடியும், அவர் அதைக் கொண்டு வரப் போகிறார்.

பைபிளின் கடைசி புத்தகம் இந்த உறுதியை அளிக்கிறது: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.” (வெளிப்படுத்துதல் 21:4) எத்தனை எத்தனையோ பேர் அந்த வாக்குறுதியால் பலனடையப் போவதை எண்ணிப் பாருங்கள். எல்லாத் துன்பத்தையும் தீர்ப்பதே கடவுளுடைய நோக்கம் என்பதை அது ரத்தினச் சுருக்கமாய் சொல்கிறது. பூமியிலிருந்து போர், பசி, வியாதி, அநீதி ஆகியவற்றை ஒழித்துக்கட்டி, கெட்டவர்கள் எல்லாரையும் அழிப்பதன் மூலம் கடவுள் எல்லாத் துன்பத்தையும் தீர்ப்பார். இதை எந்த மனிதராலும் செய்ய முடியாது.

கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து பிரபஞ்சத்திலேயே அதிக சக்தி படைத்த இரண்டாவது நபராக ஆனார்; அவர் மூலம் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார். சீக்கிரத்தில் பூமி முழுவதின் மீதும் அவர் ராஜாவாக ஆட்சி செய்யப் போகிறார்; அப்போது அவரை எதிர்க்க யாருமே இருக்க மாட்டார்கள். மனித ராஜாக்களோ ஜனாதிபதிகளோ அரசியல்வாதிகளோ மனிதர்களை ஆள மாட்டார்கள். ஆனால், கடவுளுடைய ஒரே அரசாங்கம் அவர்களை ஆட்சி செய்யும்; அதில் ஒரே ராஜா ஆட்சி செய்வார்.

அந்த அரசாங்கம் மனித அரசாங்கங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிடும். பைபிள் வெகு காலத்துக்கு முன்பே இவ்வாறு சொன்னது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [அதாவது, அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) கடவுளுடைய நீதியுள்ள ஒரே அரசாங்கத்தின் கீழ் பூமியிலுள்ள எல்லாரும் ஒன்றுபட்டிருப்பார்கள்.

இயேசு பூமியில் மனிதராக இருந்த சமயத்தில், அந்த அரசாங்கத்தைப் பற்றிப் பல முறை பேசினார். எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென அவர் தம்முடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த போது அந்த அரசாங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்; “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்று ஜெபம் செய்யும்படி சொன்னார். (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கத்திற்கும் பூமியில் கடவுளுடைய சித்தம் செய்யப்படுவதற்கும் தொடர்பிருப்பதாக இயேசு குறிப்பிட்டதைக் கவனியுங்கள்; பூமியெங்குமுள்ள துன்பத்தைத் துடைத்தழிப்பதே கடவுளுடைய சித்தமாகும்.

எந்த மனித அரசாங்கத்தாலும் தர முடியாத ஆசீர்வாதங்களைக் கடவுளுடைய நீதியுள்ள அரசாங்கம் தரும். மனிதர் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக யெகோவா தம்முடைய மகனை மீட்பு பலியாகக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அவருடைய அரசாங்கத்தின் அன்பான ஆட்சியில் மனிதர்கள் படிப்படியாகப் பரிபூரணத்தை அடைவார்கள். பின்பு? யெகோவா ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’—ஏசாயா 25:8.

‘கடவுள் ஏன் முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் எதற்காக இவ்வளவு காலம் காத்திருக்கிறார்?’ என்றெல்லாம் சிலர் கேட்கலாம். துன்பங்களையெல்லாம் நீக்குவதற்கு அல்லது தடுப்பதற்கு யெகோவா எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அவர் ஏதோ சுயநலத்திற்காக அல்ல, பூமியிலுள்ள தம்முடைய பிள்ளைகளின் நிரந்தர நன்மைக்காகவே அவற்றை இவ்வளவு காலம் அனுமதித்திருக்கிறார். ஏதாவதொரு கஷ்டம் தங்கள் பிள்ளைக்கு எதிர்காலத்தில் நன்மைகளைத் தருமென அன்புள்ள பெற்றோருக்குத் தெரிந்தால் என்ன செய்வார்கள்? அந்தக் கஷ்டத்தைப் பிள்ளை அனுபவிப்பதற்கு அவர்கள் விட்டுவிடுவார்கள். அதேபோல், மனிதர்கள் தற்காலிகமாகத் துன்பப்படுவதை யெகோவா அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன; அவை பைபிளில் விளக்கப்பட்டுள்ளன. சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரம், பாவம், யெகோவாவின் பேரரசுரிமை பற்றிய விவாதம் போன்றவை அந்தக் காரணங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. கொஞ்சக் காலத்திற்குக் கெட்ட தூதன் ஒருவன் இந்த உலகை ஆளுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பைபிள் விளக்குகிறது. a

அந்தக் காரணங்கள் எல்லாவற்றையும் இங்கு ஒருசில பக்கங்களில் விளக்க முடியாவிட்டாலும், இரண்டு உண்மைகள் நமக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. முதலாவது: நாம் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்திருந்தாலும் சரி, யெகோவா நம்மைப் பல மடங்கு அதிகமாக ஆசீர்வதிப்பார். அதோடு, “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்றும் கடவுள் உறுதியளிக்கிறார். (ஏசாயா 65:17) கடவுள் தீமையைத் தற்காலிகமாக அனுமதித்ததால் விளைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவர் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நீக்கிவிடுவார்.

இரண்டாவது: துன்பத்தைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான நேரத்தைக் கடவுள் தீர்மானித்திருக்கிறார். யெகோவா எவ்வளவு காலத்திற்குக் கொடுமையையும் சண்டை சச்சரவையும் அனுமதிப்பாரென ஆபகூக் தீர்க்கதரிசி கேட்டதை நினைத்துப் பாருங்கள். “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; . . . அது தாமதிப்பதில்லை” என்று யெகோவா பதிலளித்தார். (ஆபகூக் 2:3) அவர் ‘குறித்திருக்கும் காலம்’ சீக்கிரத்தில் வரவிருப்பதைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். (w09-E 12/01)

[அடிக்குறிப்பு]

a கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பதற்கான காரணங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.

[பக்கம் 7-ன் பெட்டி]

ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் வசனங்கள்

இனி போர்கள் இல்லை:

“மக்களே வாருங்கள், வந்து யெகோவாவின் செயல்களைப் பாருங்கள்; பூமியில் அவர் நடப்பிக்கிற வியத்தகு சம்பவங்களைப் பாருங்கள். பூமியின் கடையெல்லைவரை அவர் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”—சங்கீதம் 46:8, 9, NW.

இறந்த அன்பானவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள்:

“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.”—அப்போஸ்தலர் 24:15.

எல்லாருக்கும் உணவு கிடைக்கும்:

“பூமியில் ஏராளமான தானியம் விளையும். மலைகளின் உச்சியில் அது நிரம்பிவழியும்.”—சங்கீதம் 72:16, NW.

இனி வியாதி இல்லை:

“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.

இனி கெட்டவர்கள் இருக்க மாட்டார்கள்:

“துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.

நீதி நிலவும்:

“இதோ, ஒரு ராஜா [கிறிஸ்து இயேசு] நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.”—ஏசாயா 32:1.

[பக்கம் 7-ன் படங்கள்]

நாம் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்திருந்தாலும் சரி கடவுளுடைய அரசாங்கம் அதை நீக்கிவிடும்