Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

எரேமியா ஊழியத்தை நிறுத்தவில்லை

எரேமியா ஊழியத்தை நிறுத்தவில்லை

‘இதற்குமேல் என்னால் முடியாது, இனி நான் ஊழியம் செய்ய மாட்டேன்’ என்று நீ எப்பொழுதாவது நினைத்ததுண்டா?— a நிறையப் பேர் இப்படி நினைக்கிறார்கள். இளைஞனாக இருந்த எரேமியாவும்கூட இவ்வாறு நினைத்தார். ஆனால், மற்றவர்கள் ஏதாவது சொன்னதற்காக அல்லது ஏதாவது செய்ததற்காக அவர் தன் ஊழியத்தை நிறுத்திவிடவில்லை. எரேமியா, எவ்விதத்தில் கடவுளுக்குப் பிரியமானவராய் இருந்தாரென்றும், அப்படியிருந்தும் அவர் ஏன் ஊழியத்தை நிறுத்திவிட நினைத்தாரென்றும் இப்போது பார்ப்போம்.

எரேமியா பிறப்பதற்கு முன்பே அவரை ஒரு தீர்க்கதரிசியாக யெகோவா தேர்ந்தெடுத்தார். எதற்காக? யெகோவாவுக்குப் பிரியமாய் நடக்காததைக் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக. பல வருடங்களுக்குப் பின் யெகோவாவிடம் எரேமியா என்ன சொன்னாரென்று உனக்குத் தெரியுமா?— “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று சொன்னார்.

இதற்கு யெகோவா என்ன பதில் சொன்னாரென்று நீ நினைக்கிறாய்?— அவர் அன்பாகவும் உறுதியாகவும் இப்படிச் சொன்னார்: ‘நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்.’ ஏன்? “உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று யெகோவா சொன்னார்.—எரேமியா 1:4-8.

அப்படியிருந்தும், ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி எரேமியா பிற்பாடு சோர்ந்துவிட்டார். ஏனென்றால், கடவுளுக்கு அவர் ஊழியம் செய்துவந்ததை மற்றவர்கள் கேலிகிண்டல் செய்தார்கள். ‘எல்லாரும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள்; தினமும் என்னைக் கேலி செய்கிறார்கள்’ என்று அவர் சொன்னார். இந்தக் காரணத்தினால் அவர் ஊழியத்தை நிறுத்திவிட நினைத்தார். ‘நான் அவருடைய பெயரை யாரிடமும் சொல்லப்போவதில்லை, அவருடைய பெயரில் எதையும் பேசப்போவதில்லை’ என்றார். ஆனால், அவர் ஊழியத்தை உண்மையிலேயே நிறுத்திவிட்டாரா?

‘கடவுளுடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதை அடக்கி வைத்து சோர்ந்துபோனேன்’ என்று அவர் சொன்னார். (எரேமியா 20:7-9) சில சமயங்களில் எரேமியா பயந்துபோனது உண்மைதான்; ஆனால், யெகோவாமீது அவருக்கிருந்த அன்பின் காரணமாக ஊழியத்தை அவரால் நிறுத்த முடியவில்லை. அப்படி நிறுத்தாமல் தொடர்ந்து ஊழியம் செய்தது அவரை எப்படிப் பாதுகாத்தது என்பதைப் பார்ப்போம்.

மக்கள் கெட்ட காரியங்கள் செய்வதை விட்டுவிடவில்லை என்றால், அவர்களுடைய ஊரான எருசலேம் அழிக்கப்படும் என்று அவர்களை எச்சரிக்கும்படி எரேமியாவிடம் யெகோவா சொன்னார். எரேமியா அவ்வாறு எச்சரித்தபோது அந்த மக்களுக்குக் கோபம் வந்தது. ‘இந்த மனுஷன் மரணத் தீர்ப்புக்கு உரியவன்!’ என்று சொன்னார்கள். என்றாலும், ‘உங்கள் தேவனாகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள்’ என்று அவர்களிடம் எரேமியா கெஞ்சினார். அதோடு, ‘நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், ஓர் அப்பாவி மனிதனைக் கொல்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்; ஏனென்றால் கடவுள்தான் உங்களிடம் பேசுவதற்கு என்னை அனுப்பினார்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு என்ன நடந்ததென்று உனக்குத் தெரியுமா?—

‘பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரணத் தீர்ப்புக்கு உரியவனல்ல; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திலே நம்மிடம் பேசினான்’ என்று சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. ஆகவே, எரேமியா மனிதர்களுக்குப் பயந்து ஊழியத்தை நிறுத்திவிடாமல் இருந்ததால் யெகோவா அவரைப் பாதுகாத்தார். அதே சமயம், இன்னொரு தீர்க்கதரிசியான உரியா அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டதால் அவருக்கு என்ன சம்பவித்தது என்பதை இப்போது பார்ப்போம்.

‘உரியா . . . எரேமியா சொன்னதைப் போலவே எருசலேமுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்’ என்று பைபிள் சொல்கிறது. ஆனால், யோயாக்கீம் ராஜாவுக்கு உரியாமீது கோபம் வந்தபோது உரியா என்ன செய்தாரென்று உனக்குத் தெரியுமா?— உரியா பயந்துபோய், கடவுளுடைய ஊழியத்தை நிறுத்திவிட்டு எகிப்துக்கு ஓடிப்போனார். அவரைக் கண்டுபிடித்துக் கொண்டுவரும்படி ராஜா தன்னுடைய ஆட்களை அனுப்பினார். அவர்கள் உரியாவைப் பிடித்துவந்தபோது, அந்தக் கெட்ட ராஜா என்ன செய்தார், தெரியுமா?— உரியாவை வாளால் வெட்டிக் கொன்றார்.—எரேமியா 26:8-24.

யெகோவா, எரேமியாவைக் காப்பாற்றினார், ஆனால் உரியாவைக் காப்பாற்றவில்லை; இது ஏன் என்று நினைக்கிறாய்?— உரியா பயந்ததைப் போலவே எரேமியாவும் பயந்திருப்பார்; ஆனால், யெகோவா கொடுத்த வேலையை விட்டுவிட்டு எரேமியா ஓடிப்போகவில்லை. அவர் ஊழியத்தை நிறுத்தவில்லை. எரேமியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?— சில சமயங்களில் கடவுள் சொல்கிறபடி செய்வது நமக்குக் கஷ்டமாகத் தெரியலாம்; ஆனால், நாம் எப்போதுமே அவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். (w09-E 12/01)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.