Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அது உண்மையிலேயே ஏமாற்றுவேலையா?

அது உண்மையிலேயே ஏமாற்றுவேலையா?

அது உண்மையிலேயே ஏமாற்றுவேலையா?

“விபத்தைப் பற்றிக் கொஞ்சம் மாற்றி எழுதினால் போதும், வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.”

“வரித்துறை அதிகாரிகளுக்கு எல்லாத் தகவலையும் கொடுக்க வேண்டியதில்லை.”

“மாட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் முக்கியம்.”

“இலவசமாகக் கிடைக்கும்போது ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும்?”

பண விவகாரங்களில் நீங்கள் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால் ஒருவேளை இப்படிப்பட்ட பதில்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். சிலர் எல்லாவற்றிற்குமே புத்திசாலித்தனமான “தீர்வு” சொல்வது போலத் தோன்றலாம். ஆனால், அவர்கள் சொல்லும் தீர்வுகள் உண்மையிலேயே நேர்மையானவையா?

இன்றைய உலகில் நேர்மை என்ற குணத்தைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது; தண்டனையிலிருந்து தப்பிக்கவும், பணம் சம்பாதிக்கவும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவும் வேண்டுமென்றால் பொய் சொல்வதிலோ ஏமாற்றுவதிலோ திருடுவதிலோ எந்தத் தப்புமில்லை என மக்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். சமுதாயத்திலுள்ள முக்கியப் பிரமுகர்கள் நேர்மை என்ற விஷயத்தில் பெரும்பாலும் நல்ல முன்மாதிரி வைப்பதில்லை. ஒரு ஐரோப்பிய நாட்டில் மோசடி, கையாடல் சம்பந்தப்பட்ட வழக்குகள் 2005-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2006-ஆம் ஆண்டில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. இத்தனைக்கும், இந்தக் கணக்கில் சிறிய ஏமாற்று வேலைகள் சேர்க்கப்படவில்லை! அதோடு அந்நாட்டில், பெரிய தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஒரு மோசடியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வந்தது; அதாவது, தங்களுடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காகப் போலிச் சான்றிதழ்களை அவர்கள் பயன்படுத்தி வந்திருந்தது அம்பலமானது.

இந்த உலகில் பொய்யும் புரட்டும் மலிந்து காணப்பட்டாலும், நேர்மையாய் நடக்க விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். நீங்கள் கடவுளை நேசிப்பதால், அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய ஆசைப்படலாம். (1 யோவான் 5:3) “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறதென்று உறுதியாய் நம்புகிறோம்” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போல நீங்களும் உணரலாம். (எபிரெயர் 13:18) எனவே, “எல்லாவற்றிலும் நேர்மையாக” நடக்க விரும்புவோருக்குச் சோதனையாக அமையக்கூடிய சில சூழ்நிலைகளைக் கவனியுங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உதவக்கூடிய பைபிள் நியமங்களையும் கவனியுங்கள்.

விபத்துக்கு யார் பணம் கட்டுவது?

லிசா a என்ற இளம் பெண் கார் ஓட்டும்போது, மற்றொரு காருடன் மோதிவிடுகிறாள். அந்த விபத்துக்கு முழுக் காரணம் அவள்தான். யாருக்கும் காயம் ஏற்படுவதில்லை; என்றாலும், இரண்டு கார்களுமே சேதமடைந்துவிடுகின்றன. அவளுடைய நாட்டில், இளம் டிரைவர்கள் கார் இன்ஷ்யூரன்ஸூக்காக அதிக தொகையைக் காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அந்தத் தொகை ஒவ்வொரு விபத்திற்குப் பிறகும் உயர்ந்துவிடும். அச்சமயத்தில், லிசாவின் பெரிய அண்ணன் கிரெகர் அவளுடன் இருந்ததால், கிரெகர்தான் வண்டியை ஓட்டினாரெனச் சொல்லும்படி ஒரு நண்பர் ஆலோசனை கொடுக்கிறார். இந்த விதத்தில், லிசாவின் காப்பீட்டுக் கட்டணம் உயராது. நண்பர் சொன்னது ரொம்ப நல்ல ஆலோசனையாகத் தெரிகிறது. லிசா என்ன செய்வாள்?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள், தங்களுடைய பாலிசிதாரர்கள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணங்களிலிருந்துதான் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்கின்றன; கம்பெனியின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக அக்கட்டணங்களை உயர்த்துகின்றன. எனவே, லிசா தனது நண்பர் தந்த ஆலோசனையின்படி நடந்தால், அவள் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணத்தையும் காருக்கான இழப்பீட்டுத் தொகையையும் மற்ற பாலிசிதாரர்களின் தலையில் கட்டிவிடுவாள். இது, பொய்யான தகவலைத் தருவதாக மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பணத்தைத் திருடுவதாகவும் இருக்கும். அதே போலத்தான், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகையை வாங்குவதற்காகப் பொய்த் தகவலைத் தருவதும்.

இப்படிப்பட்ட ஏமாற்று வேலை அம்பலமானால் சட்ட ரீதியாக தண்டனை கிடைக்கும் என்று பயந்து சிலர் இவற்றைத் தவிர்க்கலாம். ஆனால், நேர்மையாய் நடக்க வேண்டியதற்கான மிக முக்கியமான காரணத்தை பைபிள் தருகிறது. “களவு செய்யாதிருப்பாயாக” என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதாக அது சொல்கிறது; இது அவர் தந்த பத்துக் கட்டளைகளில் ஒன்று. (யாத்திராகமம் 20:15) இந்தக் கட்டளையை அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: ‘திருடன் இனி திருடக்கூடாது.’ (எபேசியர் 4:28) இன்ஷ்யூரன்ஸ் விஷயத்தில் கடவுளுடைய வார்த்தைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அவர் கண்டனம் செய்கிற காரியத்தைத் தவிர்ப்பீர்கள். அதோடு, கடவுளுடைய சட்டத்தையும் சக மனிதரையும் நேசிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள் என்றும் காட்டுவீர்கள்.—சங்கீதம் 119:97.

“அரசனுக்குரியதை அரசனுக்கு”

பீட்டர் ஒரு தொழிலதிபர். வருமான வரி குறைய வேண்டுமானால் விலையுயர்ந்த கம்ப்யூட்டர்களை ‘வாங்கியதாகக்’ கணக்குக் காட்டும்படி அவருடைய அக்கௌண்டென்ட் ஆலோசனை சொல்கிறார். பீட்டரின் தொழிலுக்கு இப்படிப்பட்ட கம்ப்யூட்டர்களை வாங்குவது சகஜம்தான். பீட்டர் அவற்றை வாங்காவிட்டாலும்கூட, அரசாங்க அதிகாரிகள் விசாரிக்கப்போவது கிடையாது. அவற்றை வாங்கியதாகப் பொய்க் கணக்கு காண்பித்தால், அவர் கட்ட வேண்டிய வருமான வரி கணிசமான அளவு குறையும். அவர் என்ன செய்வார்? சரியான தீர்மானம் எடுக்க எது அவருக்கு வழிகாட்டும்?

அப்போஸ்தலன் பவுல் தம்முடைய காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதினார்: “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; . . . அவர்கள் அனைவருக்கும் நீங்கள் செலுத்த வேண்டியவற்றைச் செலுத்துங்கள்; யாருக்கு வரி செலுத்த வேண்டுமோ அவருக்கு வரி செலுத்துங்கள், யாருக்குப் பணம் கட்ட வேண்டுமோ அவருக்குப் பணம் கட்டுங்கள்.” (ரோமர் 13:1, 7) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறவர்கள் சட்டப்படி செலுத்த வேண்டிய எல்லா வரிகளையும் செலுத்துகிறார்கள். மறுபட்சத்தில், சில நபர்களுக்கோ தொழில்களுக்கோ அதிகாரிகள் வரிக் குறைப்பு அளித்தால், சட்டப்படி தகுதியுள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

வரி செலுத்துவதில் உட்பட்டுள்ள மற்றொரு சூழ்நிலையைக் கவனியுங்கள். டேவிட் என்பவர் ஒரு கடையை நடத்தி வருகிறார். ‘பில் இல்லாமல் இந்தப் பொருளை என்ன விலைக்குத் தருவீர்கள்’ என்று வாடிக்கையாளர் அவரிடம் கேட்கிறார். பில் இல்லாமல் வாங்கினால், அந்தப் பொருள் அவருக்கு மலிவு விலையில் கிடைக்கும். இந்த விற்பனைக்கு எந்தப் பதிவும் இல்லாததால் இருவருமே வரி செலுத்த வேண்டியிருக்காது. எல்லாருக்குமே லாபம் இருப்பதால் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், டேவிட் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவதால், பில் இல்லாத விற்பனையை அவர் எப்படிக் கருத வேண்டும்?

இப்படிச் செய்யும் நபர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளாவிட்டாலும்கூட, அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரியை ஏய்ப்பு செய்கிறார். “அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 22:17-21) வரியைச் செலுத்தும் விஷயத்தில் மக்களின் எண்ணத்தைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் இதைச் சொன்னார். அரசாங்க அதிகாரிகள் தங்களுக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய பணத்தைத்தான் வரியாக வசூலிப்பதாய்ச் சொல்கிறார்கள். எனவே, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எல்லா விதமான வரிகளையும் செலுத்துவதைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள்.

பரீட்சைகளில் காப்பி அடிப்பது

உயர் பள்ளியில் படிக்கும் மார்த்தா இறுதித் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். நல்ல மார்க் எடுத்தால்தான் அவளுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்பதால் மணிக்கணக்காக உட்கார்ந்து படிக்கிறாள். அவளுடைய வகுப்பு மாணவர்கள் சிலரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்—ஆனால், வேறு விதத்தில். அதிக மார்க் வாங்குவதற்காக அதிநவீன கால்குலேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்திக் காப்பி அடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மார்க் எடுப்பதற்காக “எல்லாரும்” செய்வதை மார்த்தாவும் செய்ய வேண்டுமா?

ஏமாற்று வேலை சர்வ சாதாரணமாகி விட்டதால், அதில் எந்தத் தப்புமில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். “மாட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் முக்கியம்” என்பது அவர்களுடைய கருத்து. ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட கருத்து இருப்பது சரியல்ல. காப்பி அடிப்பவர்களை டீச்சர் கவனிக்காவிட்டாலும்கூட வேறு ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்கிறோம் என்பது யெகோவா தேவனுக்குத் தெரியும்; நம்மிடம் அவர் கணக்குக் கேட்பார். “எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை; எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது; அவருக்கே நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்” என்று பவுல் எழுதினார். (எபிரெயர் 4:13) நாம் சரியானதைச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புவதால் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; இதை அறிந்திருப்பது, பரீட்சையில் காப்பி அடிக்காமல் இருக்க நமக்குப் பலமான தூண்டுதல் அளிக்கிறதல்லவா?

நீங்கள் என்ன செய்வீர்கள்?

லிசா, கிரெகர், பீட்டர், டேவிட், மார்த்தா ஆகியோர் தாங்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டார்கள். நேர்மையாய் நடப்பதன் மூலம் சுத்தமான மனசாட்சியையும் நல்லொழுக்கத்தையும் காத்துக்கொள்ளத் தீர்மானித்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்கள் சக பணியாளர்களும் சக மாணவர்களும் அக்கம்பக்கத்தவர்களும், பொய் சொல்வதையோ ஏமாற்றுவதையோ திருடுவதையோ பெரிய விஷயமாகக் கருதாமல் இருக்கலாம். சொல்லப்போனால், உங்களைக் கேலி கிண்டல் செய்தாவது அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுத்த முயலலாம். ஏமாற்று வேலையில் ஈடுபடும்படி வற்புறுத்தப்பட்டாலும் சரியான தீர்மானம் எடுக்க எது உங்களுக்கு உதவும்?

கடவுளுடைய விருப்பத்திற்கு இசைவாக நடந்தால் சுத்தமான மனசாட்சியையும் கடவுளுடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவோம். தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. . . . இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 15:1-5) ஆம், சுத்தமான மனசாட்சியும் கடவுளோடு உள்ள நட்பும், ஏமாற்று வேலையால் பெறும் எந்தவொரு லாபத்தையும்விட மதிப்புவாய்ந்தவை. (w10-E 06/01)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் சிறுகுறிப்பு]

‘திருடன் இனி திருடக்கூடாது.’

கடவுளுடைய சட்டத்தின் மீதுள்ள மதிப்பும் சக மனிதர் மீதுள்ள அன்பும் இன்ஷ்யூரன்ஸ் விஷயத்தில் நேர்மையாய் நடக்க நம்மைத் தூண்டும்

[பக்கம் 18-ன் சிறுகுறிப்பு]

“அவர்கள் அனைவருக்கும் நீங்கள் செலுத்த வேண்டியவற்றைச் செலுத்துங்கள்; யாருக்கு வரி செலுத்த வேண்டுமோ அவருக்கு வரி செலுத்துங்கள்.”

கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சட்டப்படி செலுத்த வேண்டிய எல்லா விதமான வரிகளையும் நாம் செலுத்துகிறோம்

[பக்கம் 19-ன் சிறுகுறிப்பு]

“எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது; அவருக்கே நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.”

நாம் காப்பி அடிப்பதை டீச்சர் பார்க்காமல் போனாலும் கடவுள் பார்ப்பார் என்பதால் நாம் நேர்மையாக இருக்க வேண்டும்

[பக்கம் 20-ன் பெட்டி/ படங்கள்]

‘கண்காணா’ திருட்டு

உங்கள் நண்பர் நவீன கம்ப்யூட்டர் புரோகிராம் ஒன்றை வாங்கியிருக்கிறார்; அதை வாங்க வேண்டுமென்று உங்களுக்கும் ஆசை. ‘ஏன் வீணாகப் பணம் கொடுத்து வாங்குகிறாய், இதிலிருந்தே ஒரு காப்பி எடுத்து விடலாம்’ என்று நண்பர் சொல்கிறார். இது ஏமாற்று வேலையா?

ஒருவர் கம்ப்யூட்டர் புரோகிராமை வாங்கும்போது, அதிலுள்ள லைசன்ஸ் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொள்கிறார். அவ்விதிகளின்படி, அந்தப் புரோகிராமை ஒரேவொரு கம்ப்யூட்டரில் மட்டும்தான் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். அப்படியானால், புரோகிராமை வேறொருவருக்காக காப்பி எடுப்பது லைசன்ஸ் ஒப்பந்தத்தை மீறுவதாக, சட்டவிரோதமானதாக இருக்கிறது. (ரோமர் 13:4) அதுமட்டுமல்ல, திருடுவதாகவும் இருக்கிறது; ஏனென்றால், காப்புரிமை உள்ளவர் நியாயமாகப் பெற வேண்டிய வருமானத்தை அவரிடமிருந்து தட்டிப் பறிப்பதாக இருக்கிறது.—எபேசியர் 4:28.

ஆனால், ‘இது யாருக்கும் தெரிய வராதே’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மைதான் என்றாலும், இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நாம் மனதில்கொள்ள வேண்டும்: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” (மத்தேயு 7:12) நம்முடைய வேலைக்கு மற்றவர்கள் நியாயமான ஊதியம் தர வேண்டும் என்றும், நம்முடைய உடைமைகளை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்றும் நாம் ஆசைப்படுகிறோம். எனவே, நாமும் அதேவிதமாக செய்ய வேண்டும். நாம் ‘கண்காணா’ திருட்டைத் தவிர்க்க வேண்டும். அதாவது, இசை, புத்தகங்கள், மென்பொருள் போன்ற காப்புரிமையுள்ள பொருள்களை காப்பி எடுக்கக்கூடாது, அவை அச்சிடப்பட்டவையாக இருந்தாலும் சரி டிஸ்குகளாக இருந்தாலும் சரி. வியாபார முத்திரைகள், தனியுரிமைகள், தொழில் ரகசியங்கள், விளம்பர உரிமைகள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.—யாத்திராகமம் 22:7-9.