Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

இயேசுவைப் பற்றி எழுதியவர்கள்

இயேசுவைப் பற்றி எழுதியவர்கள்

இயேசுவைப் பற்றி வாசிப்பதில் உனக்குச் சந்தோஷம்தானே?— a இயேசு பைபிளில் எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை என்று தெரிந்துகொள்ளும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இருந்தாலும், பைபிளை எழுதிய எட்டுப் பேர் அவரைப் பற்றி நமக்கு நிறையச் சொல்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார்கள்; அவர் என்ன கற்றுக்கொடுத்தாரோ அதை எழுதினார்கள். அந்த எட்டுப் பேர் யாரென்று உன்னால் சொல்ல முடியுமா?— அவர்களில் நான்கு பேர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான். அப்புறம் பேதுரு, யாக்கோபு, யூதா, பவுல் என்பவர்களும் எழுதினார்கள். இவர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?—

இவர்களில் மூன்று பேரைப் பற்றி முதலில் நாம் பார்க்கலாம்; இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் இவர்களும் இருந்தார்கள். இவர்களுடைய பெயர் உனக்குத் தெரியுமா?— இவர்களுடைய பெயர் பேதுரு, யோவான், மத்தேயு. பேதுரு இரண்டு கடிதங்களைக் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். இயேசு செய்த காரியங்களையும் சொன்ன விஷயங்களையும் அவர் அந்தக் கடிதங்களில் எழுதினார். இப்போது, உன்னுடைய பைபிளில் 2 பேதுரு 1:16-18–ஐ எடுத்துக்கொள்; பரலோகத்திலிருந்து யெகோவா தேவன் இயேசுவிடம் பேசியதைப் பற்றி பேதுரு அங்கு சொல்கிறார்; அதை வாசிக்கிறாயா?—மத்தேயு 17:5.

அப்போஸ்தலன் யோவான் பைபிளிலுள்ள ஐந்து புத்தகங்களை எழுதினார். இயேசு தம் சீடர்களோடு சேர்ந்து கடைசியாகச் சாப்பிட்டபோது, அவருக்குப் பக்கத்தில்தான் யோவான் இருந்தார். இயேசு இறந்தபோதும் யோவான் அவருடன் இருந்தார். (யோவான் 13:23-26; 19:26) இயேசுவுடைய வாழ்க்கையைப் பற்றி பைபிளிலுள்ள நான்கு புத்தகங்கள் சொல்கின்றன; சுவிசேஷங்கள் என்று அழைக்கப்படுகிற அந்தப் புத்தகங்களில் ஒன்றை யோவான் எழுதினார். வெளிப்படுத்துதல் என்ற புத்தகத்தைக்கூட அவர் எழுதினார்; அதில், இயேசு அவருக்குத் தெரிவித்த விஷயங்களையெல்லாம் பதிவு செய்தார்; அதோடு, யோவான் என்ற பெயரிலேயே பைபிளில் இருக்கிற மூன்று கடிதங்களையும் எழுதினார். (வெளிப்படுத்துதல் 1:1) இயேசுவின் அப்போஸ்தலராக ஆன மத்தேயுவும் பைபிளின் ஒரு புத்தகத்தை எழுதினார். அவர் வரி வசூலிப்பவராக இருந்தார்.

பைபிளை எழுதிய இன்னும் இரண்டு பேர் இயேசுவை விசேஷமான விதத்தில் தெரிந்து வைத்திருந்தார்கள். இவர்கள் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்; அதாவது, யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள். (மத்தேயு 13:55) ஆரம்பத்தில், இவர்கள் இயேசுவின் சீடர்களாக ஆகவில்லை. இயேசு தீவிரமாகப் பிரசங்கித்ததால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக்கூட இவர்கள் நினைத்தார்கள். (மாற்கு 3:21) இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?— ஒருவர் யாக்கோபு. இவர், யாக்கோபு என்ற பைபிள் புத்தகத்தை எழுதினார். மற்றொருவர் யூதாஸ். இவர் யூதா என்றும்கூட அழைக்கப்படுகிறார். பைபிளிலுள்ள யூதா புத்தகத்தை இவர்தான் எழுதினார்.—யூதா 1.

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி மாற்குவும் லூக்காவும்கூட எழுதியிருக்கிறார்கள். மாற்குவின் தாய் மரியாளுக்கு எருசலேமில் ஒரு பெரிய வீடு இருந்தது; அப்போஸ்தலன் பேதுருவும் அன்றிருந்த மற்ற கிறிஸ்தவர்களும் அங்குதான் கூடினார்கள். (அப்போஸ்தலர் 12:11, 12) பல வருடங்களுக்குமுன், இயேசு தம்முடைய அப்போஸ்தலருடன் கடைசியாக பஸ்கா பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்; அந்த இரவில் கெத்சமனே தோட்டத்திற்கு அவர்கள் போனபோது மாற்குவும் அவர்களுக்குப்பின் சென்றிருக்கலாம். இயேசு கைது செய்யப்பட்ட சமயத்தில், மாற்குவைப் படைவீரர்கள் பிடித்தார்கள்; ஆனால், அவர் தன்னுடைய அங்கியை விட்டுவிட்டு உள்ளாடையோடு ஓடிப்போனார்.—மாற்கு 14:51, 52.

லூக்கா பெரிய படிப்புப் படித்த ஒரு டாக்டராக இருந்தார்; இவர் இயேசு இறந்த பிறகு அவருடைய சீடராக ஆகியிருக்கலாம். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி இவர் கவனமாக ஆராய்ந்து, அதைத் தவறே இல்லாமல் தெளிவாக எழுதினார். பிறகு, அப்போஸ்தலன் பவுலோடு லூக்கா பயணம் செய்ய ஆரம்பித்தார்; அப்போஸ்தலர் என்ற பைபிள் புத்தகத்தையும் எழுதினார்.—லூக்கா 1:1-3; அப்போஸ்தலர் 1:1.

இயேசுவைப் பற்றி எழுதிய எட்டாவது எழுத்தாளர் பவுல். இவர் பிரபல வக்கீலான கமாலியேலிடம் கல்வி கற்றார். அப்போது இவர் சவுல் என்று அழைக்கப்பட்டார்; பரிசேயர்கள்தான் இவரை வளர்த்து, எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்கள்; இவர் இயேசுவின் சீடர்களை வெறுத்து, அவர்களைக் கொல்வதிலும் உடந்தையாக இருந்தார். (அப்போஸ்தலர் 7:58-8:3; 22:1-5; 26:4, 5) பவுல் இயேசுவைப் பற்றிய உண்மைகளை எப்படிக் கற்றுக்கொண்டார் என்று உனக்குத் தெரியுமா?—

ஒருநாள் இயேசுவின் சீடர்களைக் கைது செய்வதற்காக பவுல் தமஸ்குவிற்குப் போய்க் கொண்டிருந்தார்; அப்போது, வானத்திலிருந்து திடீரென ஒளி பிரகாசித்தது; அவருக்குக் கண் தெரியாமல் போய்விட்டது. “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற ஒரு குரலைக் கேட்டார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தவர் இயேசுதான்! தமஸ்குவிற்குப் போகும்படி பவுலிடம் இயேசு கூறினார். பிறகு, பவுலைச் சந்தித்துப் பேசும்படி தம்முடைய சீடரான அனனியாவிடம் சொன்னார்; பவுலும் இயேசுவின் சீடரானார். (அப்போஸ்தலர் 9:1-18) ரோமர் புத்தகத்திலிருந்து எபிரெயர் புத்தகம்வரை மொத்தம் 14 பைபிள் புத்தகங்களை பவுல் எழுதினார்.

இயேசுவைப் பற்றிய பைபிள் புத்தகங்களை நீ வாசிக்க ஆரம்பித்து விட்டாயா? அல்லது யாராவது உனக்கு வாசித்துக் காட்டுகிறார்களா?— நீ சிறு பிள்ளையாக இருக்கும் இந்தச் சமயத்திலேயே, இயேசுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம்; இதுதான், உன்னுடைய வாழ்க்கையிலேயே நீ செய்கிற சிறந்த காரியமாக இருக்கும். (w10-E 06/01)

a நீங்கள் பிள்ளையுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்குப் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.