Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

கடவுள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

கடவுள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

‘யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?’ aசங்கீதம் 10:1.

தலைப்புச் செய்திகளைச் சற்று நோட்டம் விட்டாலே போதும், நாம் ‘ஆபத்தான’ காலக்கட்டத்தில் வாழ்கிறோம் என்பது தெரியும். துயர சம்பவம் நம்மை இடியாய்த் தாக்கும்போது—வன்முறையோ கோர விபத்தோ அன்பானவரின் மரணமோ நம்மைத் தனிப்பட்ட விதமாக பாதிக்கும்போது—இதையெல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறாரா? கடவுளுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? கடவுள் உண்மையில் இருக்கிறாரா? என்று நாம் ஒருவேளை கேட்கலாம்.

ஆனால், கடவுளிடம் இப்படி எதிர்பார்ப்பதெல்லாம் ஒருவேளை நியாயமில்லாமல் இருக்குமோ என்று நீங்கள் யோசித்ததுண்டா? உதாரணமாக: அப்பா வேலைக்குப் போயிருப்பதால் பிள்ளை சோகமாகிவிடுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அப்பா இல்லாமல் அந்தப் பிள்ளை ஏங்குகிறது. அவர் உடனே வீட்டுக்கு வர வேண்டுமென அது ஆசைப்படுகிறது. கைவிடப்பட்டது போல் உணர்கிறது. “அப்பா எங்கே?” என நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அந்தப் பிள்ளையின் எதிர்பார்ப்புகள் நியாயமாக இல்லை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஏனென்றால், குடும்பத்தைப் பராமரிப்பதற்காகத்தான் அப்பா வேலைக்கே போயிருக்கிறார். அந்தப் பிள்ளையைப் போலவே, “கடவுள் எங்கே?” என்று நாமும் நியாயமில்லாமல் கேட்கிறோமா?

தப்பு செய்கிறவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கும் நீதிபதியைப் போல் கடவுள் இருக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கலாம். கேட்பதையெல்லாம் வாரிவழங்கும் அதிர்ஷ்ட தேவதையைப் போல் கடவுள் இருக்க வேண்டும் என்று இன்னும் சிலர் எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு வேலை, நல்ல வாழ்க்கை துணை, பம்பர் பரிசு. . . என கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த இரு சாராருடைய எதிர்பார்ப்பிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. கெட்டவர்களுக்கு உடனே தண்டனை அளிக்கவில்லை என்றால்... அல்லது கேட்டதை உடனே தரவில்லை என்றால்... நாம் படும் கஷ்டங்களைப் பார்த்துக்கொண்டு கடவுள் சும்மா இருக்கிறார், நம்மீது அவருக்கு அக்கறை இல்லை என்று முடிவுகட்டிவிடுகிறார்கள். இவை இரண்டுமே உண்மையல்ல? பார்க்கப்போனால், முழு மனித குடும்பத்தின் நன்மைக்காக இந்தக் கணம்கூட யெகோவா தேவன் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார், ஆனால் அநேகர் எதிர்பார்க்கும் விதத்தில் அல்ல.

அப்படியென்றால், கடவுள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள மனித சரித்திரத்தின் ஆரம்பத்தைச் சற்று பின்னோக்கி பார்க்கலாம். அந்தச் சமயத்தில் கடவுளோடு மனிதர் அனுபவித்துவந்த நல்லுறவில் பெரிய விரிசல் விழுந்தது—ஆனால் அது சரிசெய்ய முடியாத விரிசல் அல்ல.

பாவத்தின் பாதிப்புகள்

பல வருஷமாகப் பாழாய்க் கிடக்கிற ஒரு வீட்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். கூரை விழுந்திருக்கிறது, கதவுகள் பெயர்ந்திருக்கின்றன, அந்த வீடே நாசமாய் கிடக்கிறது. ஒரு சமயம் அந்த வீடு நல்ல நிலையில் இருந்தது, ஆனால் இப்போது படுமோசமாகக் கிடக்கிறது. அந்த வீடு இந்தளவு நாசமாய்க் கிடப்பதைப் பார்க்கும்போது அதைச் சரிசெய்வது சாமானிய விஷயமல்ல. அதையெல்லாம் ஒரே நாளில் செய்துவிட முடியாது.

கிட்டத்தட்ட 6,000 வருடங்களுக்கு முன் மனிதகுலத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் நாசத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது, ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆவி ரூபத்தில் இருந்த சாத்தான் அவர்களைத் தூண்டினான். அதற்கு முன் இந்த முதல் மானிட ஜோடி பூரண ஆரோக்கியத்துடன் இருந்தது; சாவில்லாமல் சதாகாலம் வாழும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடைய சந்ததியாருக்கும் இருந்தது. (ஆதியாகமம் 1:28) ஆனால், ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோதோ அவர்களுடைய வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை நாசமாகிவிட்டது எனலாம்.

அவர்களுடைய கலகத்தால் ஏற்பட்ட நாசம் கொஞ்சநஞ்சமல்ல. “ஒரே மனிதனால் [ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12) அவர்கள் செய்த பாவம் நமக்கு மரணத்தைக் கொண்டு வந்ததோடு நம் படைப்பாளரோடு நமக்குள்ள பந்தத்திற்கும் பங்கம் விளைவித்துவிட்டது. அதுமட்டுமா, உடல் ரீதியிலும் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நம்மைப் பாதித்திருக்கிறது. இப்போது நம்முடைய நிலைமையும் பாழடைந்த அந்த வீட்டைப் போல்தான் இருக்கிறது. உத்தமராய் வாழ்ந்த யோபு என்ற மனிதன் நம்முடைய நிலைமையைக் குறித்து இவ்வாறு சொன்னார்: மனித ‘வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாய் இருக்கிறது.’யோபு 14:1, ஈஸி டு ரீட் வர்ஷன்.

ஆதாம் ஏவாள் தவறு செய்த பின்பு மனிதகுலத்தை கடவுள் கைவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை! உண்மையைச் சொன்னால், அன்றுமுதல் இன்றுவரை மனித குடும்பத்தின் நலனுக்காக நம் பரலோக தகப்பன் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நமக்காக என்ன செய்துவருகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கு அந்த வீட்டைச் சரிசெய்வதற்கு செய்ய வேண்டிய மூன்று காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்போம்; அதோடு, மனிதகுலத்தை மீட்பதற்காகக் கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டோடு இந்த மூன்று காரியங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் பார்ப்போம்.

1 சீரழிந்த நிலையிலுள்ள வீட்டை நோட்டமிட்ட பிறகு அதைச் சரிசெய்வதா அல்லது இடித்துப்போடுவதா என்பதை அந்த வீட்டின் சொந்தக்காரர் தீர்மானிக்க வேண்டும்.

ஏதேன் தோட்டத்தில் கலகம் வெடித்த உடனேயே மனிதகுலத்தைச் சரிசெய்ய யெகோவா தேவன் நோக்கம் கொண்டார், அதைத் தெரிவிக்கவும் செய்தார். அந்தக் கலகத்திற்கு காரணமாக இருந்த சாத்தானை நோக்கி, “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் [வாரிசுக்கும்] அவள் வித்துக்கும் [வாரிசுக்கும்] பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்றார்.—ஆதியாகமம் 3:15.

இப்படியாக, ஏதேனில் கலகத்தைத் தூண்டியவனை அழிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தார். (ரோமர் 16:20; வெளிப்படுத்துதல் 12:9) அதோடு, வருங்காலத்தில் வரப்போகும் அந்த “வாரிசு” மனிதகுலத்தைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யுமென அவர் முன்னரே சொன்னார். b (1 யோவான் 3:8) இந்த விதத்தில் தாம் செய்யப்போவதை யெகோவா தெளிவாகக் குறிப்பிட்டார்; அதாவது சீரழிந்த மனிதகுலத்தை அழிக்காமல் அதைச் சரிசெய்யப் போவதாகக் குறிப்பிட்டார். ஆனால் இதற்கெல்லாம் காலம் எடுக்கும்.

2 கட்டிடத்தைச் சரிசெய்வதற்கான விவரங்கள் அடங்கிய வரைபடத்தைக் கட்டிடக் கலைஞர் தயாரிக்கிறார்.

இஸ்ரவேலருக்கு யெகோவா தேவன் சட்டதிட்டங்களை அளித்ததோடு, அவரை வணங்குவதற்காக ஓர் ஆலயத்தையும் வடிவமைத்துக் கொடுத்தார். ‘அவை வரப்போகிற காரியங்களுக்கு நிழல்’ என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 2:17) ஒரு வரைபடத்தைப் போலவே அவை மகத்தான ஒன்றுக்குப் படமாக இருந்தன.

உதாரணத்திற்கு, பாவ மன்னிப்பு பெற மிருக பலிகளைச் செலுத்தும் பழக்கம் இஸ்ரவேலருக்கு இருந்தது. (லேவியராகமம் 17:11) பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு செலுத்தப்படவிருந்த ஒரு மாபெரும் பலிக்கு—நிரந்தரமான விடுதலையைத் தரவிருந்த ஒரு பலிக்கு—அது நிழலாக இருந்தது. c இஸ்ரவேலரின் வழிபாட்டு கூடாரம் மற்றும் ஆலயத்தின் வடிவம், எதிர்காலத்தில் வரவிருந்த மேசியா செய்யப்போகும் காரியங்களுக்குப் படமாக இருந்தன; அதாவது, அவர் தம்மையே பலியாகச் செலுத்துவதுமுதல் பரலோகத்திற்குச் செல்லும்வரை படிப்படியாகச் செய்யும் காரியங்களுக்குப் படமாக இருந்தன.—பக்கம் 7-ல் உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.

3 அந்த வரைபடத்தைப் பயன்படுத்தி வீட்டை சரிசெய்ய கட்டிடம் கட்டும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா; இஸ்ரவேலர் பலி செலுத்திய முறையை மாதிரியாகப் பயன்படுத்தி, மனித குலத்தை விடுதலை செய்வதற்காக இயேசு தம்மையே பலியாகச் செலுத்தவிருந்தார். சொல்லப்போனால், “உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று இயேசுவைப் பார்த்து ஞானஸ்நானம் கொடுப்பவரான யோவான் சொன்னார். (யோவான் 1:29) அந்த வேலையை இயேசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். “என்னுடைய சித்தத்தைச் செய்வதற்கு அல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதற்கே பரலோகத்திலிருந்து நான் இறங்கி வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.—யோவான் 6:38.

இயேசுவைக் கடவுள் பூமிக்கு அனுப்பியதற்கான காரணங்கள்: இயேசு ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுக்க’ வேண்டும்; அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற சீடர்களுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும். (மத்தேயு 20:28; லூக்கா 22:29, 30) மனிதகுலத்திற்காகக் கடவுள் வைத்திருக்கும் நோக்கத்தை இந்த அரசாங்கத்தின் மூலமே அவர் நிறைவேற்றுவார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி “நற்செய்தி” என அழைக்கப்படுகிறது. பூமியின் விவகாரங்களைக் கண்காணிக்க பரலோகத்தில் ஓர் அரசாங்கத்தைக் கடவுள் நிறுவியிருப்பதால் அது உண்மையில் ஒரு நற்செய்தியே!—மத்தேயு 24:14; தானியேல் 2:44. d

சரிசெய்யும் வேலை தொடர்கிறது

பரலோகத்திற்குச் செல்வதற்கு முன் இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கட்டளையிட்டார்: “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; . . . இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20.

சீரழிந்த மனிதகுலத்தைச் சரிசெய்வதற்கான வேலை இயேசுவின் மரணத்தோடு முடிவடைவதில்லை. அந்த வேலை ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ வரை நீடிக்கும். அதாவது கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியின் மீது அதிகாரம் செலுத்தும் காலம் வரும் வரை அது நீடிக்கும். அந்தக் காலம் வெகு அருகில் உள்ளது. இது நமக்கு எப்படித் தெரியும் என்றால், ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ குறித்து இயேசு சொன்ன அடையாளங்கள் இன்று நிறைவேறிக்கொண்டு வருகின்றன. eமத்தேயு 24:3-14; லூக்கா 21:7-11; 2 தீமோத்தேயு 3:1-5.

இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை இன்று 236 நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகிறார்கள். சொல்லப்போனால், நீங்கள் வாசிக்கும் இந்தப் பத்திரிகை அந்த அரசாங்கத்தைப் பற்றியும் அது என்னவெல்லாம் செய்யப்போகிறது என்பதைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது. காவற்கோபுர பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் பக்கம் 2-ல் பின்வரும் குறிப்பை நீங்கள் பார்ப்பீர்கள்: “நிஜமான ஓர் அரசாங்கமாகப் பரலோகத்தில் செயல்படும் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் எல்லாவித அநியாய அக்கிரமங்களையும் நீக்கிவிட்டு, பூமியைப் பூங்கா போன்ற பரதீஸாக மாற்றும் என்ற நற்செய்தியால் [காவற்கோபுர பத்திரிகை] மக்களுக்கு ஆறுதல் தருகிறது. நாம் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக உயிரைக் கொடுத்தவரும் இப்போது கடவுளுடைய அரசாங்கத்தில் அரசராக இருப்பவருமாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க உற்சாகப்படுத்துகிறது.”

இப்போதுகூட தீவிரவாத தாக்குதல்கள் அல்லது இயற்கை பேரழிவுகள் பற்றிய செய்திகள் உங்களுடைய காதில் விழலாம்; அல்லது நீங்களே எதாவது சோக சம்பவத்தை வாழ்க்கையில் அனுபவிக்கலாம். ஆனால், மனிதகுலத்தைக் கடவுள் கைவிடவில்லை, சொல்லப்போனால், ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்பதை பைபிள் படிக்கும்போது தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள். (அப்போஸ்தலர் 17:27) அதோடு, நம்முடைய முதல் பெற்றோர் இழந்ததை மீண்டும் தருவதாக கடவுள் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்!—ஏசாயா 55:11. (w10-E 05/01)

[அடிக்குறிப்புகள்]

a கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.

b ஆதியாகமம் 3:15-ஐப் பற்றி விளக்கமாய் தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தில் 19-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c கூடுதல் தகவல்களுக்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 5-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

d கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 8-ஐப் பாருங்கள்.

[பக்கம் 7-ன் அட்டவணை/ படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

‘நிஜத்தின் சாயல்’ ஆசரிப்புக் கூடாரம் எதற்குப் படமாக இருக்கிறது?

பலிபீடம்

இயேசுவின் பலியை ஏற்றுக்கொள்ள யெகோவா விரும்பியது. —எபிரெயர் 13:10-12.

தலைமைக் குரு

இயேசு.—எபிரெயர் 9:11.

1 பாவ நிவாரண நாளில், மக்களின் பாவத்திற்காக தலைமைக் குரு பலி செலுத்தினார். —லேவியராகமம் 16:15, 29-31.

1 கி.மு. 33, நிசான் 14 அன்று நமக்காக இயேசு தம்மையே பலியாகக் கொடுத்தார்.—எபிரெயர் 10:5-10; 1 யோவான் 2:1, 2.

பரிசுத்த ஸ்தலம்

இயேசு பூமியிலிருந்தபோதே கடவுளுடைய ஆவிக்குரிய மகனாக மறுபடியும் பிறந்தது.—மத்தேயு 3:16, 17; ரோமர் 8:14-17; எபிரெயர் 5:4-6.

திரைச்சீலை

இயேசுவின் மனித உடல், பரலோக வாழ்க்கையிலிருந்து பூமிக்குரிய வாழ்க்கையைப் பிரித்த தடை.—1 கொரிந்தியர் 15:44, 50; எபிரெயர் 6:19, 20; 10:19, 20.

2 பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலிருந்த திரைச்சீலை வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் தலைமைக் குரு சென்றார்.

2 உயிர்த்தெழுந்த பிறகு, “கடவுளுக்குமுன் இப்போது நமக்காகத் தோன்றும்படி” ‘திரைச்சீலையைக் கடந்து’ பரலோகத்திற்குச் சென்றார். —எபிரெயர் 9:24-28.

மகா பரிசுத்த ஸ்தலம்

பரலோகம். —எபிரெயர் 9:24.

3 மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஒப்பந்தப் பெட்டியின்மீது பலிக்குரிய இரத்தத்தைத் தலைமைக் குரு தெளித்தார். —லேவியராகமம் 16:12-14.

3 தம்முடைய இரத்தத்தின் மதிப்பை அளிப்பதன் மூலம், நம் பாவங்களுக்கு உண்மையான நிவாரணத்தை அளித்தார்.—எபிரெயர் 9:12, 24; 1 பேதுரு 3:21, 22.