Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலப்பு விசுவாசத்தைப் பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன?

கலப்பு விசுவாசத்தைப் பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன?

வாசகரின் கேள்வி

கலப்பு விசுவாசத்தைப் பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன?

▪ “உலகெங்கும் [ஏறக்குறைய] 10,000 மதங்கள்” இருப்பதாக உவர்ல்ட் கிறிஸ்டியன் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இவைகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் படுபயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், கலப்பு விசுவாசம் நன்மையளிக்கும் என கடவுள் நம்பிக்கையுள்ள அநேகர் நினைக்கின்றனர். பிளவுபட்டிருக்கும் இந்த உலகில் அது சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பைபிள் ஒற்றுமையை ஊக்குவிப்பது உண்மையே. அப்போஸ்தலன் பவுல், கிறிஸ்தவ சபையை ஒரு மனித உடலுக்கு ஒப்பிட்டுப் பேசினார்; ஒவ்வொரு உறுப்பும் “ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாய் இயங்குகின்றன.” (எபேசியர் 4:16) அதைப்போலவே, ‘நீங்கள் எல்லாரும் ஒரே சிந்தையுடன் இருங்கள்’ என்று சக விசுவாசிகளை அப்போஸ்தலன் பேதுரு ஊக்கப்படுத்தினார்.—1 பேதுரு 3:8.

பூர்வ கிறிஸ்தவர்கள் பலதரப்பட்ட கலாச்சாரங்களும் பலதரப்பட்ட மதங்களும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். இருப்பினும், கலப்பு விசுவாசத்தைப் பற்றிப் பேசும்போது பவுல் இவ்வாறு கேட்டார்: “விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் பொருத்தமேது?” பிறகு, “அவர்களைவிட்டு வெளியேறுங்கள்” என்று கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (2 கொரிந்தியர் 6:15, 17) இதிலிருந்து, கலப்பு விசுவாசம் கூடாதென பவுல் கூறியது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஏன் அவ்வாறு கூறினார்?

உண்மைக் கிறிஸ்தவரும், உண்மைக் கிறிஸ்தவர் அல்லாதவரும் ஒன்றுசேர்ந்து கடவுளை வணங்குவது பொருத்தமற்ற பிணைப்பு என்று அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். (2 கொரிந்தியர் 6:14, அடிக்குறிப்பு) இதனால், கிறிஸ்தவருடைய விசுவாசத்திற்கு தீங்குதான் ஏற்படும். உதாரணத்திற்கு, அக்கம்பக்கத்தில் வசிக்கும் சில பிள்ளைகள் மோசமாக நடந்துகொள்வதை அறிந்திருக்கும் ஒரு அப்பா எப்படிக் கவலைப்படுவாரோ அப்படித்தான் பவுலும் கவலைப்பட்டார். அக்கறையுடைய ஒரு அப்பா, தன் பிள்ளை சிலருடன் மட்டும்தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைப்பது சரியாக இருக்குமல்லவா? அவர் போட்ட கட்டுப்பாடுகளை மற்றவர்கள் விரும்பாதிருக்கலாம். இருப்பினும், இந்தச் சூழ்நிலையில் அந்தப் பிள்ளைகளுடன் சேராமல் இருப்பது தன் பிள்ளையைப் பாதுகாக்கும் என்பதை அந்த அப்பா அறிந்திருந்தார். அதைப் போலவே, மற்ற மதங்களுடன் சேராமல் விலகியிருப்பது அவர்களுடைய கெட்ட பழக்கங்களிலிருந்து கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் என பவுல் அறிந்திருந்தார்.

இப்படிச் சொல்வதன் மூலம் அவர் இயேசுவைப் பின்பற்றினார். சமாதானமாக வாழ மக்களுக்கு உதவுவதில் இயேசு சிறந்த மாதிரியாக இருந்தபோதிலும், அவர் கலப்பு விசுவாசத்தில் ஈடுபடவில்லை. அவர் பூமியில் ஊழியம் செய்த சமயத்தில், பரிசேயர்கள், சதுசேயர்கள் போன்ற நிறைய மதத்தொகுதியினர் இருந்தனர். சொல்லப்போனால், இயேசுவிற்கு எதிராக சவால் விடுவதற்கு இந்த மதத்தொகுதியினர் ஒன்று சேர்ந்தனர்; அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுமளவிற்கே சென்றனர். மறுபட்சத்தில், ‘பரிசேயர் சதுசேயருடைய போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி’ இயேசு அவரைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டார்.—மத்தேயு 16:12.

இன்றைய நிலைமை என்ன? கலப்பு விசுவாசத்திற்கு எதிராக பைபிள் எச்சரிப்பது இன்றைக்கும் பொருந்துமா? நிச்சயமாகவே பொருந்தும். ஒரு பானையில் எண்ணெயையும் தண்ணீரையும் ஒன்றாக ஊற்றினாலும் அவை சேராதிருப்பது போலவே, வித்தியாசப்பட்ட மதங்களின் நம்பிக்கைகளையும் கலப்பு விசுவாசத்தின் மூலம் ஒன்றுசேர்க்க முடியாது. உதாரணத்திற்கு, வித்தியாசப்பட்ட மதத்தினர் சமாதானத்திற்காக ஜெபிக்க ஒன்றுகூடி வரும்போது, எந்தக் கடவுளிடம் ஜெபிப்பார்கள்? கிறிஸ்தவ மண்டலத்தின் திரித்துவக் கடவுளிடமா? இந்து மதத்தின் பிரம்மாவிடமா? புத்தரிடமா? அல்லது வேறு யாரிடமாவதா?

“கடைசி நாட்களில்” எல்லா நாடுகளிலிருந்தும் வருகிற மக்கள், ‘நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்’ என்று சொல்வார்கள் என மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். (மீகா 4:1-4) இதன் விளைவாக, பூமி முழுவதிலும் சமாதானமும் ஒற்றுமையும் நிலவும்; எல்லா மதங்களுடைய விசுவாசமும் ஒன்று சேருவதால் அல்ல, மாறாக, எல்லா மக்களும் ஒரே உண்மையான விசுவாசத்தை ஏற்றுக்கொள்வதால்தான் இவை நிலவும். (w10-E 06/01)

[பக்கம் 13-ன் படம்]

2008-ல் நடந்த கலப்பு விசுவாச மாநாட்டில் கலந்துகொண்ட உலகின் முக்கிய மதங்களின் உறுப்பினர்கள்

[படத்திற்கான நன்றி]

REUTERS/Andreas Manolis